கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 12,320 
 
 

அப்புசாமி ஒரு வெற்றுத் தாளையும் பேனாவையும் கொண்டு வந்து சீதாப்பாட்டியிடம் நீட்டினார். “உன் கையெழுத்தை மட்டும் போடும்மே” என்றார்.

வெற்றுக்காகிதத்தில் கையெழுத்துப் போட்டுத் தர சீதாப்பாட்டி முட்டாளுமல்ல. எம்.எல்.ஏ.வுமல்ல. ஆகவே, “எது எதை எப்போது செய்ய வேணும்னு எனக்குத் தெரியும். உங்க ட்யூனுக்கெல்லாம் ஐ கான்ட் டான்ஸ்” என்று கறாராக மறுத்துவிட்டாள்.

அப்புசாமி தனது கால்விதியை நொந்துகொண்டே நொண்டியவாறு படுக்கைக்குச் சென்றார். சில தினங்களுக்கு முன் அவருக்குக் காலில் ஒரு எதிர்பார்த்த விபத்து நடந்துவிட்டது.

விபத்துக்களில் இரண்டு ரகம் உண்டு. எதிர்பாராத விபத்து, எதிர்பார்த்த விபத்து.

நாய் மீது பையன் கல் எறிவது நாய்க்கு எதிர்பார்த்த விபத்து. ஆனால் நாம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும்போது அந்தக் கல் நம்மீது படுவது நாம் எதிர்பாராத விபத்து.

“சீதே! உங்க கழகத்திலே யாருக்காவது இது நடந்திருந்தால் நீ இப்படி அஸால்ட்டா இருப்பியாடி! ஜனாதிபதிக்கே ஈமெயில், எறும்புமெயில் கொசுமெயில் அனுப்பியிருப்பியே!”

“நீங்க வேடிக்கை பார்த்துகிட்டு நின்னது தப்பு. ஆஸ் யு ஸோ, ஸோ வில் யு ரீப்.”

“சீதேய்! இட்லின்னா சுடச்சுட இருக்கணும். விபத்துக் கேஸ்கூட அப்படித்தான். எனக்கு அடிபட்டதுக்கு ஒரு சர்ட்டிபிகேட்டோ எக்ஸ்ரேயோ எதுவும் இன்னும் தயார் பண்ணிக்கலையே.. நான் எப்படி நஷ்டஈடு வாங்கறது?
தெருவிலே போகிற கழுதைக்கு அடிபட்ட மாதிரி அலட்சியமா வுட்டுட்டியேடி.”

“ஸாரி ஸார். டோன்ட் இன்ஸல்ட் டாங்கீஸ். அதுகளெல்லாம் அந்த மாதிரி இடத்திலே உங்க மாதிரி நின்னு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்ற சீதாப்பாட்டி அடுத்த அறைக்குத் தனது மத்தியான நேரக் குட்டித் தூக்கம் போடப் போய் விட்டாள். சிறிது நேரத்தில் டெலிபோன் அடித்தது.

 “ஹலாவ்!” என்றவாறு அப்புசாமி டெலிபோனை எடுத்தார்.

மறுமுனையில் குரலைக் கேட்டதுமே குஷியாக, “ஏண்டா, யாரு. ரசகுண்டாடா? ஏண்டா குரல் ஒரு மாதிரியா இருக்கு? என்னை விட்டுட்டு ஐஸ்கிரீம் அடிச்சியாக்கும்?” என்றார்.

“நான் ரசகுண்டு இல்லே மாமா, கழகக் காரியதரிசி அகல்யா சந்தானம்.”

அப்புசாமி உற்சாகமாக, “ஓ, அகல்யா சந்தானமா? ஏன் குரல் ஆம்பிளைக் குரலாட்டம் ஆயிட்டுது? திடீர்னு ஆம்பிளையாயிட்டீங்களோ? ஹிஹி” என்றவர் “என்ன விஷயம்? செளக்யமா இருக்கியா, இருக்கீங்களா? ஹிஹி” உன்னை, ‘உன்னை’ என்கிறதா, ‘உங்களை’ என்கிறதான்னு எனக்குக் குழப்பம் வந்துடறது. நீ… நீங்க… ஹி… தப்பா நினைச்சிக்காதே… காதேங்கோ… காதே…”

“மாமா… நான் பிரசிடெண்ட்ஜியோடு அவசரமா ஒரு விஷயம் பேசணும் மாமா.”

“அவள் அந்த ரூம்ல இருக்கா… தூங்கறாளோ என்ன இழவோ… ஏன், என்கிட்டதான் சொல்லேன்… சொல்லுங்களேன்.”

“வந்து… மாமா… என் கையிலே எப்பவும் ரெண்டு காஸ் இருக்கும்” என்றாள் அகல்யா.

“ஆமாம்மா. மனுஷன் கையிலே ரெண்டு காசு இருந்தாத்தான் மரியாதி. என் மாதிரி ஓட்டாண்டியா, அன்னக் காவடியா இருந்தால் பெண்டாட்டிகிட்டே இடிபட்டுச் சித்திரவதைப்பட வேண்டியதுதான்.”

“தாத்தா… மாமா… உங்களைத் தாத்தாங்கறதா, மாமாங்கறதான்னு! எனக்குக் குழப்பம் வந்துடறது.”

“தாத்மா,” கூப்பிடேன்” என்றார் அப்புசாமி. “இல்லாட்டி ‘மாம் தா’ன்னு கூப்பிடேன். ஹிஹி! அப்படி ஒரு அரசியல் தலைவி இருக்கிறாளில்லையா? பொல்லாத பொம்பிளை. பொம்பிளைங்களே பொல்லாததுங்கதான். அதுலே இதுகளெல்லாம் ‘சிறப்புப் பொல்லாததுங்க.’ இப்ப எலக்ஷன் நடக்கப் போறதுகூட இந்தப் ¦sபாம்பிளைங்களாலேதான்…

வெடுக்கென அவரது கையிலிருந்த டெலிபோனை சீதாப்பாட்டி பறித்துக்கொண்டாள். “யார், அகல்யாவா? ஸாரி. எங்க
வீட்டுது ஏதோ பேத்தினது போலிருக்கு. நீ தப்பா எடுத்துக்காதே. ஜஸ்ட் ஒரு குட்டி ‘நேப்’ போடலாம்னு ரூமுக்குப் போனேன். என்ன விஷயம்? இன்னைக்கு ஈவினிங் ஸஹஸ்ரநாம் கிளாஸில் வதனா ஐ.ஏ.எஸ். பார்டிஸிபேட் பண்ணணும். ஞாபகமிருக்கில்லியா?

“பிரசிடெண்ட்ஜி!” என்ற அகல்யாவின் குரலில் ஒரு பதட்டம். “அவுங்களைச் சும்மா விடக்கூடாது பிரசிடெண்ட்ஜி. அநியாயம், அக்கிரமம், அடாவடி!”

சீதாப்பாட்டிக்கு அதிர்ச்சியாயிருந்தது.

“வாட்ஸ் ராங் வித் யூ அகல்யா? இவ்வளவு சூடாப் பேசறே? யாரு, என்ன செய்தார்கள், என்ன அக்கிரமம்… வதனா ஐ.ஏ.எஸ். வரமாட்டேன்னுட்டாளா?”

“நான் ரொம்ப அப்ஸெட் ஆயிட்டேன் பிரசிடெண்ட்ஜி. என்னை ரொம்ப மன்னிச்சுக்குங்க…”

“எதுக்கு மன்னிப்பு? ஒய் அப்ஸெட்? நிதானமாச் சொல்லு அகல்யா.”

“எனக்கு எப்படிச் சொல்றதுன்னே தெரியலே பிரசிடெண்ட்ஜி. இன்னிக்கு எனக்கு ஏற்பட்ட அவமானம் நம்ம கழகத்துக்கே ஏற்பட்ட அவமானம்” என்று படபடத்தாள் அகல்யா.

“வாட் ஹாப்பண்ட் அகல்யா? எதுக்கம்மா அழறே? ஸம்திங் ஸீரியல்? நான் புறப்பட்டு வரட்டுமா?”

 அகல்யா குரல் தழுதழுக்க, “பத்து நிமிஷத்திலே அங்கே வருகிறேன் பிரசிடெண்ட்ஜி. எனக்கு ஏற்பட்ட அவமானத்தை உங்களால்தான் துடைக்க முடியும். அது எனக்கு மட்டும் ஏற்பட்ட அவமானமல்ல. கழகத்துக்கே ஏற்பட்ட அவமானம்.”

சீதாப்பாட்டி அமைதிப்படுத்திக் கொண்டு, “காரை நிதானமாக டிரைவ் பண்ணிக்கொண்டு வா. ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… உனக்கு ஏற்பட்ட அவமானம், கழகத்துக்கு ஏற்பட்ட அவமானம். ஆனால் அது என்ன என்கிறதை நீ இன்னும் சொல்லலை.”

டெலிபோனைச் சீதாப்பாட்டி வைத்ததும் அப்புசாமி ஆவலுடன், “இன்னாவாம் அவளுக்கு?” என்றார். “கழகத்துக்கு அவமானமா? ஹிஹி… எனக்குச் சொல்லக்கூடாதா?”

“மைண்ட் யுவர் பிஸினஸ்” என்றாள். சீதாப்பாட்டி கடுமையாக. “உங்க அக்ளி நோஸை எங்க கழக அ·பேர்ஸிலே அனாவசியமா நீட்டாதீங்க…” சீதாப்பாட்டியின் கோபத்தினூடே கவலையும் ரகசியமாகக் கலப்படமாயிருந்தது.

அகல்யாவுக்கு நேர்ந்த அவமானம் என்ன? தெரிந்துகொள்ள வேண்டுமானால் நுங்கம்பாக்கம் ஸைரோடிலுள்ள சமையல் காஸ் ஸிலிண்டர். சப்ளை ஏஜன்சிக்குச் செல்ல வேண்டும்.

அங்கு கடாசப்பட்டுக் கிடக்கும் அழுக்குப் படிந்த காலி ஸிலிண்டர்களை ஒரு கண்ணோட்டம் விடவேண்டும்.

அந்த ஸிலிண்டர்களில் மகா அழுக்குடனும், தரையில் நிற்க வைத்தால் தஞ்சாவூர் குண்டு செட்டி பொம்மை மாதிரி சகல பக்கங்களிலும் ஆடுவதுமான ஒரு ஸிலிண்டரைச் சற்று ஆராய வேண்டும்.

அதோ, அந்த ஊனமுற்ற காலி ஸிலிண்டர்தான் அகல்யாவுக்கும் கழகத்துக்கும் அவமானம் ஏற்படுத்திய ஸிலிண்டர்.

சாதாரணமாக சமையல் காஸ் தீர்ந்தது என்றால் காஸ் ஏஜன்ஸி கம்பெனிக்குப் போன் செய்தால், அவர்கள் சொல்லுகிற ஏதோ ஒரு தினத்துக்கு காஸ் வந்து சேரும். ‘லோடு வரலை’ ‘லோடு வரலை’ என்று ஒரு மாதம். ‘லோடு வந்தாச்சு, போட்டு அனுப்பிடறோம்’ என்று மேலும் சில வாரங்கள். ‘ஆள் இல்லே… லயனிலே போயிருக்கார். வருவார்’ என்று இன்னும் சில தினங்கள்.

பூமியை அதிரச் செய்வது போன்ற இனிய ஓசையை ஏற்படுத்தியவாறு ஸிலிண்டர் நமக்கு வந்து சேர்வது என்பது நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. அதிலும் பார்க்க லட்சணமாகவும் உள்ள பளிச் ஸிலிண்டராகக் கிடைப்பது அரிது.

ஔவையார் பாடியது போல, அரிது அரிது ஸிலிண்டர் கிடைப்பது அரிது. அதனினும் கூன் குருடு செவிடு, கால் கை ஊனமில்லாத தரையில் நன்றாக அமரக்கூடிய ஸிலிண்டர் கிடைப்பது அரிதினும் அரிது.’

அகல்யா சந்தானம் ரொம்ப புத்திசாலித்தனமான காரியம் செய்வதாக நினைத்து, “காஸ் தீர்ந்துபோய் ஒரு மாசம் பத்து நாளாச்சு. லோடு வந்ததா இல்லையா? நான் கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்” என்று காஸ் ஏஜன்ஸியை மிரட்டியிருக்கிறாள்.

அவர்கள் இதுமாதிரி எத்தனை ஸிலிண்டர் மிரட்டலைப் பார்த்திருக்கிறார்கள். ஆகவே… “லோடு வந்துடுச்சி… ஆள் இல்லே, நாளைக்கு வரும்,” என்றார் நிர்வாகி.

 “இப்ப காலி ஸிலிண்டரை நானே கொண்டு வந்து ஸிலிண்டரை வாங்கிட்டுப் போகலாமா?”

“தாராளமா வாங்க” என்ற அவரது பேச்சை நம்பி அகல்யா தன் காரில் ஸிலிண்டரைப் போட்டுக்கொண்டு போனால்,

“காஸ் தரமுடியாது. உங்க ஸிலிண்டர் இப்படி தரையிலே உட்காரமலே ஆடுது. பாட்டம் போயிருக்குது. நாங்க இதை வாங்க முடியாது” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் ஏஜன்சிக்காரர்.

அகல்யா சந்தானம் திகைத்தாள். ஆச்சர்யப்பட்டாள், குழம்பினாள், தலைமுடியைச் சொறிந்து கொண்டாள். பித்துப் பிடித்தவள் மாதிரி சிரித்துக்கொண்டாள்: “நீங்க போன தடவை சப்ளை செய்த ஸிலிண்டர் இது. இப்ப வாங்கிக்கொள்ள மாட்டேன்னா… என்ன நியாயம்? இதுதான் கஸ்டமர் சேவையா?”

“கஸ்டமர் சேவையாவது, காராசேவையாவது.” பிடிவாதமான முரட்டுக் குரலில் “அதெல்லாம் தெரியாது. நீங்க ஹெட் ஆபீஸ¤க்குப் போயி ஸிலிண்டரை மாற்றிக்கிட்டு வாங்க.” என்றார் ஏஜன்சிக்காரர்.

“மிஸ்ட்டர்! நான் பா.மு. கழகத் காரியதரிசி. கொஞ்சம் பொறுப்போட பேசுங்க.”

“எந்த வெங்காயக் கழகமா இருந்தால் எங்களுக்கென்ன? இந்த மாதிரி ஸிலிண்டரை நாங்க வாங்கிக்க முடியாது.”

“கடவுளே! நாங்களாய்யா ஸிலிண்டரைச் செய்தோம்? இந்த மாதிரி முடம், மொண்டி ஸிலிண்டரை நீங்களே சப்ளை பண்ணிட்டு, காலி ஸிலிண்டரை நாங்க கொண்டுவந்தால். ஹெட் ஆபீஸ் போய் மாத்திகிட்டுவான்னு சொல்றது என்ன நியாயம்… எங்க கழகம் கேள்விப்பட்டால்…”

“என்ன கிழிக்கணுமோ அதைக் கிழிக்கட்டும்… உன் ஓட்டை ஸிலிண்டரைத் தூக்கிட்டு இடத்தைக் காலிபண்ணு.”

“ஸிலிண்டரை நான் தூக்கிட்டுப் போக முடியாது. நீங்க வேற ஸிலிண்டர் கொடுத்தாகணும். இல்லாட்டி எங்க கழகத்திலே சொல்லி…”

“நீ என்ன வேணும்னா செய்துக்க… உங்க கழகத்துனாலே என்ன செய்ய முடியுமோ செய்துக்கட்டும்.”

“நான் யார்னு காட்றேன்.”

“காட்டு, காட்டு… சாகப்போற கெழவி சாணி தட்டறா மாதிரி பேச வந்துட்டா..” சீதாப்பாட்டியைச் சந்தித்த அகல்யா தனது மூக்கு உடைந்த மேலே கண்ட நிகழ்ச்சியை உரிய கேவல்களுடன் சொல்லி முடித்தாள்.

அகல்யா தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லச் சொல்ல சீதாப்பாட்டியிடமிருந்து ‘அட்ரோஷியஸ்!’ ‘அன்பேரபிள்’, ‘அரொகண்ட்’ என்ற வார்த்தைகள் வெடித்தவாறிருந்தன. அப்புசாமி நொண்டி நொண்டிக் கதவருகே சென்று காதைக் கதவு மேல் அழுத்தி வைத்துக் கொண்டு கேட்டார்.

தடாரென்று எதிர்பாராதவிதமாக கதவை சீதாப்பாட்டி திறந்தாள்.

அப்புசாமி நிலை தடுமாறி  விழப்போனார்.

விழப்போனவர் மேல் சீதாப்பாட்டி ஒரு சின்ன வார்த்தைகூடச் சீறாமல், முன்வந்து தாங்கிக் கொண்டாள்.

“ஓ! டெரிப்ளி ஸாரி. நீங்க ஒட்டுக் கேட்பீர்களென்று தெரியாமலே போயிட்டது. ஸாரி… மன்னிச்சிங்கோங்க” என்றாள் மிகவும் தன்மையாக: “நீங்க போதுமான ரெஸ்ட் எடுத்துக் கொண்டாச்சோ? கூல்ட்ரிங்க் ஏதாவது சாப்பிடறீங்களா? வுட் யு ப்ரி·பர் பாதம் மில்க்?”

கனவுதானா என்று அப்புசாமி தலையில் ஒரு குட்டு போட்டுப் பார்த்தார் ஆ! வலி! ஆகவே கனவல்ல.

சீதாப்பாட்டி குளுகுளு முகத்தோடு, குளுகுளு பாதம் மில்க்கை நீட்டினாள். “ப்ளீஸ்… நீங்க சாப்பிட்டானதும்… ரெண்டொரு கேள்விக்கு நீங்க பதில் சொல்லணும்” என்றாள் கொஞ்சலாக.

“இன்னாடி இது… அதிசயமா கீது? வள்வள்ளுன்னு விழுறவள். ஜொள்ளு ஜொள்ளுன்னு உபசரிக்கிறே?”

“நீங்க என்னவோ என் கையெழுத்தைக் கேட்டீங்களே… பேப்பர் தர்றீங்களா… போட்டுத் தர்றேன்… ஸிங்கிள் ஷீட்லே போட்டுத் தந்தால் போதுமா? அகல்யா. மாமாவுக்கு இன்னும் ஒரு டம்ளர் பாதம் மில்க் எடு…”

அப்புசாமி சத்தம்போட்டு உறிஞ்சிக் குடிப்பதை சீதாப்பாட்டி சகித்துக் கொண்டாள். ஸ்டிராவை அம்புபோல விரலில் வைத்து மனைவிமீது ஏவினார்.

சீதாப்பாட்டி அவரது அபத்த விளையாட்டுக்களைச் சகித்துக் கொண்டாள். பிறகு புன்முறுவலுடன், “நீங்க கல்யாணத்துக்குப் போய் அழகாக வாசலிலே நின்று வீடியோவுக்கு போஸ் கொடுத்தீர்களே… அந்த வீடியோ காஸெட் நமக்குக் கிடைக்குமா? கல்யாண சத்திரத்துக்குப் பக்கத்துக் கட்டிடம்தானே காஸ் ஏஜன்ஸி?”

“ஆமாம் ஆமாம்.”

“நீங்க ஒரு காகிதத்திலே கையெழுத்துப்போட்டுத் தரச் சொன்னீங்களே… எத்தனையில் வேணும்னாப் போட்டுத் தர்றேன். ஆனால் அந்தக் கல்யாண வீட்டு காஸெட்டை யு ஷ¤ட் கெட் ·பர் மீ… வெரி வெரி அர்ஜண்ட்.”

“அய்த்தலக்கடி கும்மா” என்றார் அப்புசாமி மகிழ்ச்சியுடன். “நான் எப்படியெல்லாம் வீடியோவுல விழுந்துருக்கேன் என்று பார்க்க ஆசையாய் இருக்கா?”

சீதாப்பாட்டி சொன்னாள்: “நீங்க விழுந்ததைப் பார்க்க ஆசைப்படலே. உங்க கால்மேலே காஸ் ஸிலிண்டர் உருண்டு வந்து ஹிட் பண்ணித்துன்னீங்களே… அது ஒரு இம்பார்ட்டண்ட் விட்னஸ் ·பர் யுவர் கேஸ்…”

அப்புசாமி கல்யாணக்கார உறவுக்காரரிடம் கெஞ்சி வீடியோ காஸெட்டை வாங்கி வந்துவிட்டார்.

கன்ஸ்யூமர் கோர்ட் நீதிபதிகளின் முன்னே வீடியோப் படம் ஓடிக்கொண்டிருந்தது.

காஸ் ஸிலிண்டர்கள் கொண்ட டெம்ப்போ வந்து காஸ் ஏஜன்ஸி வாசலில் நிற்கிறது.

வேலையாட்கள் இரண்டு மூன்று பேர் வண்டியில் ஏறி, ஸிலிண்டர்களை அலக்காகக் தூக்கி தொப்பென்று தரையில் வீசிக் கடாசுகிறார்கள். ஸிலிண்டர்கள் உருண்டு ஓடி அங்குமிங்கும் நிற்கின்றன.

“என் கால்மீது சிலிண்டர் வந்து பட்ட காட்சியைக் காணோமே… சீதே! சீதே! அது இருந்தால்தானே நம்ம கேஸ் ஜெயிக்கும்.”

“டஸன்மேட்டர்” என்றாள் சீதாப்பாட்டி அலட்சியமாக: “உங்க கால் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன? ஸிலிண்டர்கள் நசுங்குவதற்கும், அதன் பாட்டம் பிய்ந்து போவதற்கும் காரணம் பொதுமக்களல்ல: ஸிலிண்டரைத் தூக்கித் தூக்கி எறியும் காஸ் கம்பெனி சிப்பந்திகளே காரணம் என்பது இந்த காஸெட்டைப் பார்த்தால் மாண்புமிகு நீதிபதிகளுக்கே தெரியும்…”

 “எஸ்! ஸிலிண்டர்களைக் கன்னாபின்னாவென்று கையாண்டு அவை நசுங்குகிற மாதிரி செய்வது சிப்பந்திகள்தான். ஆகவே பழைய ஸிலிண்டரைத் தலைமையலுவலகத்தில் சென்று மாற்றி வரச்சொன்னது பொறுப்பற்றதனம் என்று இந்த கோர்ட் பலமாகக் கண்டிக்கிறது ., மேற்படி நிர்வாகி மீது கம்பெனி மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்க சிபாரிசுசெய்கிறது. மேலும் புத்திசாலித்தனமாகவும், ஆதாரங்களுடனும் இந்த வழக்கை நீதிபதிகளுக்குச் சமர்ப்பித்த பா.மு.கழகத் தலைவி சீதா அம்மையாருக்கு எங்களது மனமார்ந்த பாராட்டும், இந்த மெமண்ட்டோவும் தருவதில்
பெருமைப்படுகிறோம்.”

அப்புசாமி பல்லை நறநறத்துக் கொண்டார்.

“காலை ஒடிச்சிகிட்டது நான். காமிராவும் பாராட்டும் உனக்கா?”

“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று கணவனை வாழ்த்தினாள் சீதாப்பாட்டி.

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *