ஆராவமுதனும் அவசர விளக்கும்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 18, 2012
பார்வையிட்டோர்: 13,498 
 
 

அந்தக்காலத்தில் அலாவுதீனுக்கு ஓர் அற்புதவிளக்கு கிடைச்சமாதிரி நம் ஆராவமுதனுக்கும் அவசரவிளக்கு ஒன்று கிடைத்தது.

ஆராவமுதன் தனது ஆபீஸுக்கு வந்து ஸ்டைலாக இங்கிலீஷ் பேசிய ஒரு ‘டை’மனிதனின் பேச்சுக்கு மயங்கி ‘ஐயோஐயையோ’ ( IOIIO ) பேங்கின் கடனட்டைக்காக அப்ளை செய்தான். அந்த கடன்கார அட்டையும் ( அட கிரெடிட்கார்டுங்கோ) ஒரே வாரத்தில் ஆராவமுதனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.

தலைகால் புரியாமல் அந்த கடன்கார அட்டையை முன்னும் பின்னும் புரட்டிப்பார்த்தான் ஆராவமுதன். தன் மனைவி வடிவாம்பாள் எனும் வடிவுடன் முதன் முதலாக எந்த சாமானை வாங்கி பிள்ளையார் சுழி போடுவது என்று ஒரு சிறிய சதுர மேஜை மாநாடு போட்டான்.

மிக்ஸியிலிருந்து அப்பளாக்கட்டி வரை தேங்காய்த்துருவியிலிருந்து கிரைண்டர் வரை வாஷின் மெஷினிலிருந்து அரிவாள்மனை வரை கம்ப்யூட்டரிலிருந்து கடப்பாரை வரை சகல சாத்தியக்கூறான சாமான்களையும் அலசி ஆராய்ந்த ஆராவமுதன் அண்டு கோ ( அட…ரெண்டே பேருதாங்க வீட்டுல. வடிவுக்கு இன்னும் வ்ளைகாப்பு போட நேரலை. அவள் வயிற்றில் இன்னும் ஒரு புழு பூச்சிகூட முட்டை போட்டுகுஞ்சு பொரிக்கலை…! ) கடைசியாக வீட்டுக்கு ஒரு மங்களகரமான விளக்கு வாங்குவதென தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றியது.

ஆராவமுதன் குடியிருக்கும் பகுதியில் இப்ப்போதெல்லாம் அடிக்கடி மின் வெட்டுகுத்து அதிகமாக இருப்பதால் கரண்ட் போனால் இருட்டில் துழாவ வேண்டி இருக்கும் அந்த அவலநிலையைப்போக்கும் விதமாக ஒரு ‘அவசர விளக்கு’ ( எமர்ஜென்சி லைட்டுங்கோ ) வாங்கத் தீர்மாணித்தான் ஆராவமுதன்.

இப்படியாக அவனது கடன்கார அட்டையின் கன்னி கழிக்கப்பட்டது…!
கடன்கார அட்டை மூலமாக வீட்டுக்குவந்து சேர்ந்த அந்த விளக்கு லட்சுமியை வடிவாம்பாள் சிவப்புக்கம்பளம் விரிக்காத குறையாக வரவேற்று உச்சிமுகர்ந்தாள்.

‘’இருங்க இருங்க இப்ப ‘ஆன்’ பண்ணிடாதீங்க ‘’ என்று கூச்சலிட்டு அந்த அவசர விளக்கை ஆன் செய்யப்போன ஆண்மகனைத் தடுத்தாள் வடிவாம்பாள்.

ஓடிப்போய் ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் கரைத்து குங்குமம் கலக்கி ரத்தச்சிவப்பான ஒரு திருஷ்டித் திரவத்தைச் சிருஷ்டித்த வடிவாம்பாள் அந்த விளக்குக்கு ஆரத்தி எடுத்து கண்திருஷ்டி போக்கி அதற்கு வீரத்திலகமிட்டு வரவேற்று ‘’ இப்ப ஆன் பண்ணுங்கோ ‘’ என்று கண்ணசைத்து பச்சைக்கொடிகாட்டினாள்.

இப்படியாக அந்த அவசர விளக்கின் திறப்புவிழா சிறப்புவிழாவாக நிறைவேறியது.

எல்லாமே நல்லபடியாக நடந்தால் கடவுள் நினைப்புதான் நமக்கு வருமா இல்லை ரிப்பேர் செய்து பிழைக்கும் தொழிலாளர் பிழைப்புதான் நடக்குமா?

அந்த அவசர விளக்கு வந்த யோகம்தானோ என்னவோ ஆராவமுதன் குடியிருந்த அந்த ஏரியாவில் அந்த வாரம் முழுதும் மின்வெட்டு என்பதே இல்லாமல் போய்விட்டது. புதுக்குடை வாங்கி வந்தபின் மழைக்காக ஏங்கும் அப்பாவி மனிதன் போல ஆராவமுதனும் அவன் அரைப்பாதியும் ( சகதர்மிணிங்கோ) கரண்ட் போகப்போகும் அந்த இருள்மயமான எதிர்காலத்துக்காக காத்திருந்தனர்.அப்போது தானே தெருவே இருளில் மூழ்கிக்கிடக்கும் போது இவர்கள் வீட்டில் மின்விள்ககு ஒளிகிடைக்கும் அதிசயத்தை ஊர்ஜனங்கள் வாய் பிளந்து பார்க்கும்?

அந்தப்பொன்னான தருணமும் வந்து சேர்ந்தது ஒரு நாள்.அந்தத் தெருவே பவர்கட்டில் மூழ்கிக்கிடக்க ஆராவமுதனின் வீட்டில் மட்டும் அந்த அவசர விளக்கு சீறிப்பாய்ந்து வெளிச்சத்தைக்கக்கியது.

இரட்டை ஆண்குழந்தைகளைப் பெற்ற சந்தோஷமும் பெருமையும் அவர்ளுக்கு உடனடியாக வந்து சேர்ந்து புள்காங்கிதம் அடையச்செய்தது.

அக்கம்பக்கத்துப் பெண்மணிகள் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று அவரவர் கைவேலைகளை அப்படியே விட்டுவிட்டு ( சிலர் தம் கணவர்தலையில் கட்டிவிட்டனர் ) வடிவை விசாரிக்க ஓடோடி வந்தனர்.

‘’ இது ஆட்டோமேட்டிக்காக்கும் ! கரண்ட் போயிட்டா உடனே தானே எரியும். கரண்ட் வந்துட்டா தானே ஆஃப் ஆயிடும். கரண்ட் வரும்வரைக்கும் 6 மணிநேரமாவது விளக்கு எரியும் ‘’ வடிவாம்பாளின் புருஷன் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சிநிலையத்தில் ராக்கெட்டின் செயல்பாடுகளை விரிவாக விளக்கும் விஞ்ஞானி ரேஞ்சுக்கு விளக்கம் தந்தான்.

திறந்த வாயில் கொசு நுழைவது அறியாமல் கேட்டுக்கொண்டு இருந்த பெண்மணிகளனைவரும் வாய்நிறைய பாராட்டும் நெஞ்சு நிறைந்த வயிற்றெரிச்சலுமாக கலைந்து சென்றனர்.

இப்படியாக வடிவின் மேல் பெட்ரோலே ஊற்றிக்கொளுத்திவிடலாம் என்கிற அளவுக்கு அக்கம்பக்கத்துப்பெண்மணிகளின் மனதில் பொறாமை எழும்படியாக அந்த அவசர விளக்கு அரங்கேறியது.

இதெல்லாம் ஒரு 12 நாள் தான் நீடித்தது. சரியாக 13ஆம் நாள் பவர்கட் ஆகும் போது எப்போதும் முந்திக்கொண்டு விடைசொல்லும் முதல் பெஞ்சு மாணாக்கன் போல எரியும் அந்த அவசரவிளக்கு கடைசி பெஞ்சு கலை போல திரு திருன்னு முழித்தது. இப்படியாக அந்த விளக்குக்கு காரியம் முடிந்த செய்தி கேட்டு அகக்ம்பக்கத்துல பெண்கள் எல்லாரும் துக்கம் விசாரிப்பது போல வயிற்றில் வார்த்த பால் ஏப்பம் அளித்திட வந்து குழுமினார்கள்.

’’அதெல்லாம் ஒண்ணுமில்லை சின்ன மைனர் ரிப்பேர் போல இருக்கு இப்ப அந்த கடை திறந்து தான் இருக்கும் போய் காட்டி என்னான்னு போயிட்டு வந்துடறேன் ‘’ தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர் போல் முகம் கருத்து இருந்தாலும் ஆராவமுதன் கலைஞ்ர் கருணாநிதிபோல் உடனே சமாளித்துக்கொண்டு பதிலளித்த சாதுரியத்தை முதன் முதலாக மெச்சிக்கொண்டாள் வடிவு.

அந்த இருட்டில் அந்த எமர்ஜென்சிவிளக்கை எடுத்து அப்படி இப்படி ஆட்டிப்பார்த்தான். ம்ஹூம் அது மதுரை அழகிரிபோல் அசைந்து கொடுப்பேனா என்றது.

இப்போது எல்லார் வீட்டிலுமே இருள். மைனாரிட்டி ஆட்சியை விமரிசிக்கும் அம்மா ரேஞ்சுக்கு ஆளாளுக்கு அந்த விளக்கை இவர்கள் காதுபடவே விமரிசித்தது ஆராவமுதனுக்கு கண்ணில் ரத்தம் வடியச்செய்தது.

போன் செய்து பார்க்கலாம் அதான் ஒரு வருஷம் கியாரண்டி இருக்கே என்று வைகோ போல சமாதானப்ப்டுத்திக்கொண்டாலும் ராமதாஸ் ரேஞ்சுக்கு முகம் கருத்திருப்பதைத் தவிர்க்க இயலவில்லை ஆராவமுதனால்.

அந்த விளக்கின் கியாரண்டி கார்டை தேடி எடுத்து சர்வீசுக்கு போன் செய்தான் ஆரா.

சர்வீசில் போனை எடுத்தவன் அந்த விளக்கின் ஜாதகம் தசையிருப்பு அங்க அடையாளம் எல்லாம் ஒரு பாட்டம் அழுது ஓய்ந்தபின் சரிங்க அடுத்த வாரம் ஆள் அனுப்புறோமுங்க என்று கூலாகச் சொன்னான்.

எல்லா ரிட் கேஸும் புஸ்வானமானபின்னும் சளைக்காத சுப்ரமணியம் சுவாமி போல ஆராவமுதன் சளைக்கவே இல்லை.

இதற்கிடையில் வடிவாம்பாளின் பொறுமை காணாமல்போய் மம்தா பாணர்ஜியை விட மோசமான வார்த்தைப்பிரயோகங்களுக்கு இறங்கிவிடுவாள் போன்ற பயங்கரமான முகத்துடன் தோன்றினாள் வடிவாம்பாள்.

அக்கம் பக்கத்திலிருப்பவர்களின் கேலிப்பார்வைகளை ஆற்றமாட்டாத வடிவு தன் கணவனைக்காய்ச்சி எடுத்தாள்.

’’நீங்க எதுக்குமே லாயக்கில்லை என்பது எனக்கு முன்னாடியே தெரிஞ்சு இருந்தாலும் இப்ப அது பைத்தகோரஸ் தியரம் போல தெளிவா விளங்கிடுச்சு ‘’ என்று அடிமடியில் கைவத்தாள்.

இதற்குமேலும் தன்மனைவியின் பொறுமையைப்பரிசோதிப்பது என்பது தமிழக மந்திரியின் பேச்சைக் கேட்காத போலீஸ்காரனின் நிலைமைக்கு நம்மைத்தள்ளிவிடும் என்பதை உணர்ந்த ஆராவமுதன் எதாவது செய்தே தீரவேண்டும் என்று துடித்தான். ஆனால் செய்வது இன்னதென்று அறியாமல் வருஷம் முழுக்க கல்லூரிக்கு மட்டம் போட்ட மாணவன் தேர்வு ஹாலில் முழிப்பதுபோல் முழித்தான்.
அந்த விளக்கை எப்படியும் சரி செய்தே தீருவது என்று பிரேஸ்லெட் போட்டுக்கொண்டு ( கங்கணம் கட்டிக்கொண்டுன்னு எத்தனை நாள்தான்யா எழுதுறது? ) அதனை எடுத்துக்கொண்டு அந்த இருட்டில் நடந்தான் ரிப்பேர் கடைக்காரனிடம். போகும் வழியில் ஒரு சுடுகாடு இருந்தது. அங்கே இருட்டில் போவ்தென்பது சாதாரணகாலத்தில் பயமாக இருந்த போதிலும் இப்போது வடிவின் ஆக்ரோஷ முகம் வந்து அந்த சுடுகாட்டுப்பயததை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. ( கல்யாணம் ஆனவங்களுக்கு மட்டும் இப்ப சொன்னது நல்லா விளங்குமுங்க !)

வழியில் அவசரமாக இயற்கை அழைப்பை தவிர்க்க முடியாமல் அங்கே இருந்த ஒரு மேடையில் விளக்கை வைத்துவிட்டு சிறுநீர் கழித்த ஆராவமுதனுக்கு அந்த விளக்கு சற்றே அசைந்தது தெரிய வாய்ப்பில்லை.

பிறகு எல்லைப்படையில் கன்ணிவெடிகளுக்கு இடையில் நடந்து செல்லும் போர்வீரனைப்போல் அந்த விளக்கை எடுத்துக்கொண்டு மெல்ல தடுமாறி நடந்து சென்று ரிப்பேர்காரனை அடைந்தான்.

கிருஷ்ணா ராமா எலக்ட்ரிகல்ஸ் கடை ஓனர் ஏதோ செத்த பூனையைக் கையில் எடுத்துப்பார்ப்பது போல அந்த விளக்கைத்தூக்கிப்பார்த்து என்ன பிராப்ளம் என்று கேட்டான்.

அது என்னமோ தெரியலைங்க சட்டுன்னு நின்னு போச்சு என்று கனிமொழியின் கவிதை கேட்ட சோக வாசகனைப்போலக் கூறினான் ஆரா.

சரி விட்டுட்டுப்போங்க ரெண்டு நாள் கழிச்சு வாங்க என்று தேர்தல் டிக்கட் கேட்டுப்போன அபேட்சகனிடம் அரசியல் தலைவர் கூறுவது போல் கூறினான் ரிப்பேர் காரன்.

உடனே சரி செய்து கொடுங்கைய்யா என்று பொதுக்கழிப்பிடத்தில் மூடிய கதவுக்கு வெளியே நின்று தவிப்பவன் போல கூறினான் ஆரா.

இதோ பாருங்க உங்கமுன்னால வந்த கஸ்டமருங்க பொருள்களை பார்ப்பதா இல்லை உங்களோடதை முதல்ல பார்ப்பதா என்று கம்ப்ளெயிண்ட் செய்ய வந்த பொதுமக்களிடம் போலீஸ் கூறுவதைப்போல கறாராகக்கூறியதைக்கேட்ட ஆராவமுதன் முகம் தொங்கிப்போய் இனி விதி விட்ட வழி விளக்கை இங்கே விட்டுப் போவதும் கில்லட்டினில் தலைவைத்துப்படுப்பதும் ( வடிவை நினைத்துப்பார்த்து யோசித்தான் ) ஒன்னுதான் என்று அந்த விளக்கை எடுத்துக்கொண்டு வரதட்சினை பேரம் படியாமல் பெண்ணின் தகப்பன் திரும்புவதைப்போல் சோகமாக திரும்பினான் ஆரா.

வீட்டுக்கு வந்து வடிவு கொஞ்சம் அசந்த நேரத்தில் விளக்குடன் தன் அறைக்குள் நுழைந்து கதவைச்சாத்திக்கொண்டான்.

ஆராவமுதனின் அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போய் இனி சர்வீஸ்காரன் வரும்வரைப்பொறுக்கவேண்டும் அல்லது தாமே வேற ரிப்பேர்காரன் கிட்ட போய் சரிசெய்துக்கனும் என்கிற இரண்டம்ச தீர்வுதான் என்ற வகையில் என்ன செய்வதென் விழித்துக்கொண்டு இருந்த ஆராவமுதன் 32 மார்க் கிடைத்த நிலையில் சார்சார் என்று கெஞ்சி ஒரு மார்க் போடமாட்டாரா என்று வாத்தியார் பின்னால் அலையும் மாணவனைப்போல அந்த விள்ககை எடுத்து அப்படியும் இப்படியும் ஆட்டினான் அசைத்தான். மெல்ல ஸ்விட்ச் பக்கமாக அழுத்தித்தேய்த்தான்….!

அப்போது….

ஜெயலலிதா பிறந்தநாளில் விடப்பட்ட மத்தாப்பு வானவேடிக்கைகள் உமிழ்ந்த வெளிச்சமும் புகையும் அந்த அறைக்குள் ஏற்பட்டு அங்கே ஒரு பூதம் நம்ம (கவுண்டமணி) செந்தில் உருவத்தில் நின்றது.

ஆராவமுதனும் அவசரவிளக்கும் – பூதம் புறப்பட்ட கதை

லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்ட அரசாங்க அதிகாரி போல அந்த செந்தில் பூதததைப் பார்த்ததும் ஆராவமுதனுக்கு கை கால் எல்லாம் உதறத் தொடங்கியது.

வடிவாம்பாளையே கடந்த 17 வருஷமாகச் சமாளித்துப்பழக்கப்பட்ட ஆராவுக்கு இந்த பூதம் ஜுஜுபி போலத்தான் அடுத்த கணம் பட்டது.

’’யாருய்யா நீ எப்படி நீ இங்க வந்தே? கதவு சாத்தி இருக்கு. வடிவாலேயே நுழையமுடியாத கதவுல நீ நுழைஞ்சது எபபடி? எங்க இருந்து இந்த பழங்கால காஸ்ட்யூம் எல்லாம் கிடைச்சது? பாக்க செந்தில் போலவே இருக்கியே அவருக்கு நீ ஒண்ணுக்கு விட்ட அண்ணனா?’’

இவ்வாறு சரமாரியாகக்கேள்விக்கணைகளைத் தொடுத்தவாறு தன் பயத்தை வாலுக்குக்கீழ் நுழைக்கப்பார்க்கும் ஞமலியைப்போல கம்பீரமாக நடுங்கிக் கொண்டே கேட்டான் ஆராவமுதன்.

ஆராவின் கேள்விகளால் ஸ்தம்பித்துப்போன செந்தில் பூதம் பேச ஆரம்பிச்சது.

’’யோவ் இத்தனை கேள்வியை இப்படி சரமாரியா எங்க பாஸ் விக்ரமாத்தன் கூட கேட்டது இல்லைய்யா! ஒண்ணொன்னா கேட்டுத் தொலை. அதுக்கு முன்னால என்னை அறிமுகப்படுத்திக்கிறேன் கேளு.

முன்னொருகாலத்தில் எங்க பாஸுக்கு அடங்கிய நல்ல பூதமாத்தான் இருந்து வந்தேன். அவருக்கு இஷ்டமான கொழுக்கட்டை வரவ்ழைச்சுக்கொடுக்கப்போக அதுல இருந்த பாழாப்போன கல்லு அவர் பல்லைப் பதம் பார்க்க என்னைப் பிடிச்சு அடைச்சு மேக்டவல் பாட்டிலுக்குள் அடைச்சு என்னை ஆற்றில தூக்கிப்போட்டுட்டார். அங்கயும் இங்கயும் உருண்டு அலைஞ்சு உங்க ஊருக்கு பக்கத்துல இருக்குற சுடுகாட்டுப்பக்கமா வந்து ஒதுங்கிக்கிடந்தேன். நீ கொஞ்ச நேரம் முந்தி ஒண்ணுக்குப்போனியே அப்ப அந்த நெடி தாங்காம நான் தும்மினேன். அப்ப பாட்டில் உடைஞ்சு நீ கொண்டுவந்த விளக்குல புகுந்துக்கிட்டேன். இப்ப நீ அதை உரசுனதும் உன் எதிரில் ஓடி வந்தேன். இன்று முத்ல் நான் உனக்கு அடிமை. நீ என்ன சொன்னாலும் செய்வேன். நீ கேட்பதை செய்யமுடியாத நிலை என்னைக்கு எனக்கு நேருதோ அன்னைக்கு நான் விடுதலையாகி போயிடுவேன். ஆனா நீ சொல்வதை செய்யமுடியும் என்ற் பட்சத்தில் நான் கண்டிப்பா செய்தே தீரணும். அப்படி செய்யலைன்னா என் தலை வெடிச்சி சிதறிப்போயிடுவேன்.’’

’’அப்பாடா இது என்னா பெரீய கதையா இருக்கு? நம்ம ஜெயலலிதாம்மா சொல்லும் கதையைவிட படு ஆச்சரியமா இல்ல இருக்கு? நான் சொல்வதெல்லாம் கேப்பியா? இப்போதைக்கு எனக்கு இந்த விளக்கு சரியாகனும். அப்பதான் என் வடிவு முகத்துல நான் முழிக்கமுடியும். முடியுமா? ’’

ஆராவமுதனுக்கு அவன் பிரச்சினை பெருசு இல்லையா? வடிவு மாதிரி மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரமாச்சே. அவ கிட்ட இருந்து இப்போதைக்கு தப்பிக்கனுமே.

‘’ அட இத்தனை எளிதான வேலையையா போனியா கொடுக்குறே. ததாஸ்து பிரம்மாதம் ததாஸ்து. ‘’ என்று பூதம் கண்னை மூடியபடி நயன் தாரா போல் முணுமுணுக்க உடனே அந்த அவசர விளக்கு ஜகஜ்ஜோதியாக எரிய ஆரம்பித்தது.

ஆஹா நம்ம பூதம் நிஜமாலுமே சக்தி வாய்ந்ததா தான் இருக்கு என்று அதிசயித்த ஆராவமுதன் கதவைத் திறக்கப்போனான். ’’ இரு இரு எது செய்தாலும் சொல்லிட்டு செய்துத்தொலைய்யா…! ‘’ என்று கூறிய பூதம் சின்ன உருவில் மாறி ஆராவின் சட்டைப்பாக்கெட்டுக்குள் நுழைந்தது. அங்கிருந்தே கிணற்றில் பேசுவது போல் பூதம் கூறியது ஆராவுக்குக் கேட்டது. ’’யோவ் பாஸ். நான் உன் பக்கத்துல தான் எப்பவும் இருப்பேன். எப்ப ஆபத்துன்னாலும் உடனே என் கிட்ட சொல்லு. தூங்கிக்கிட்டு இருந்தாலும் பாஸ் வரும்போது முழிச்சு எழும் பியூனைப்போல உடனே உதவி செய்வேன் உனக்கு. போய்யா இப்ப கதவைத்திற போ போ போய்யா’’ என்று சதா ஸ்டைலில் கூறிவிட்டு அமைதியானது செந்தில் பூதம்.

வாத்தியார் அடிச்சபிறகு அடுத்த நாள் தன் ரவுடி அப்பாவுடன் பள்ளிக்கு வரும் மாணவன் போல ரொம்பவே தைரியமாக வடிவை எதிர் நோக்க தன் கையில் எரியும் அந்த அவசர விளக்குடன் கதவைத்திறந்து வெளிப்பட்டான் ஆராவமுதன்.

சிம்னி விளக்கில் கத்தரிக்காயுடன் போராடிக்கொண்டிருந்த வடிவாம்பாள் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். தன் கணவன் கார்கில் போரில் பாகிஸ்தான் வீரர்களைப் புறமுதுகிட்டோடச்செய்த இந்திய ராணுவ வீரனைப்போல கம்பீரமாக கையில் விளக்குடனும் முகத்தில் புன்முறுவலுடனும் ( ரொம்ப நாளைக்குப்பிறகு வடிவுக்கு எதிரில் புன்னகை ) நின்றதைப்பார்த்த வடிவுக்கு ‘’ என்னங்க நீங்களே ரிப்பேர் செய்துட்டீங்களா… ? ‘’ என்று சந்தேகத்துடன் கேட்டாள். தன கணவனின் திறமை பற்றி அத்தனை அசகாய அவநம்பிக்கை அவளுக்கு.

‘’ ஆமாம் வடிவு.. நானு … நானு.. நானே தான் சரி செய்தேன் ‘’ என்று சொல்லி தன் பாக்கட்டைக் குனிந்து பார்த்து மன்னிச்சுக்க நண்பா என்று முனகிக்கொண்டான்.

பிரகாஷ் ராஜ் ஸ்டைலில் செந்தில் பூதம் ‘’ டேய் டேய் டேய் பாஸ். அசத்துறியே செல்லம்…’’ என்றது.

அதன் பிறகு வடிவு தன் பெரிய தக்காளிமூக்கில் விரல் வைத்து வியக்கும் படி நம்ம ஆராவமுதன் தன் அடிமை பூதத்துடன் சேர்ந்து தன் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் முதல் நகைகள் பீரோ ஃப்ரிட்ஜ்னு சகட்டுமேனிக்கு வாங்கித்தள்ளினான். பூதம் தன் பாக்கெட்டில் இருப்பதை வீட்டுப்பூதத்திடம் ( அதாங்க வடிவு ) சொல்லிக்கொள்ளவே இல்லை.

அக்கம்பக்கத்தில் அனைவரும் வாய்பிளந்து என்னாச்சு? திமுகமந்திரி மாதிரி ஒரே மாதத்துல இவ்ளோ சாமான் வாங்கிட்டானேன்னு வியக்கத் தொடங்கினாங்க.

அதுல எதோ ஒரு வயித்தெரிச்சல் பார்ட்டி இன்கம்டாக்ஸுக்கு போன் செய்து கம்ப்ளெயின்ட் செய்ததும் ரெய்டுக்கு வந்தவங்க நம்ம செந்தில் பூதம் செய்த மெஸ்மரிசத்தால காபி குடிச்சுட்டு கைகுலுக்கிட்டுப்போனதும் திராவிட கழகத்தின் பிரசாரம் போல புஸ்வானமாகிப்போனதும் எல்லாமே மளமளன்னு சங்கர் படம் போல ஆயிட்டுதுங்க.

எது கேட்டாலும் அசறாம வாங்கித்தருதே இது ரொம்ப நல்ல பூதம்ப்பா என்று வடிவேலு போல புளகாங்கிதம் அடைந்தான் ஆராவமுதன்.

எல்லா பூதக்கதைக்கும் ஒரு எண்ட் இருக்கும் தானே அது போல இங்கயும் ஒரு எண்ட் வந்தே போச்சுங்க.

எப்படின்னு கேக்குறீங்களா?

மதுரை அழகிரி போல நினைச்சதெல்லாம் சாதிச்சுட்டோமே இந்த பூதத்தின் உதவியாலன்னு நினைச்சு ஒரு நாள் பூதததை அழைத்து ‘’ பூதம் பாய் பூதம் பாய் …. நான் கேட்டதெல்லாமே செய்து தறீங்களே எனக்கு ஒரு பெரிய சஹாயம் செய்யமுடியுமா’’? ன்னு கேட்டான். அதாங்க சொல்றது நாக்குல சனின்னு. அப்படிதாங்க நம்ம ஆராவமுதன் நுனிநாக்குலயும் சனி வந்திச்சு.

’’ எல்லா உதவியும் செய்து எங்களை நல்லா வெச்சுக்கிட்டு இருக்கே பூதம் பாய். ஏன் நம்ம அசின் கூட கூட ஒரு டூயட ஆடிட்டேன் உன் தயவுல. என் பொண்டாட்டி வடிவு இருக்காளே… அவ ரொம்ப நல்லவதான் ஆனா அவ வாய்தான் எனக்கு பெரிய எமனா இருக்கு. நீங்க என்ன செய்றீங்கன்னா வடிவோட வாயை அடக்கி எனக்கு அடங்கின மனைவியா ஆக்கித்தரமுடியுமா…? ‘’

இதாங்க ஆராவமுதன் நாக்குல உக்காந்து சனி கேட்ட கேள்வி.

செந்தில் பூதம் இதோ உடனே என்று க்ரீம் ஓம் கரீம் சரீன் செரினா கரீனா என்று மந்திரம் சொல்லி வடிவு இருந்த பக்கம் ஊதிச்சுங்க.

அவ்ளோதான் ….. கிடு கிடுன்னு நடுங்கி ஆராவமுதனின் காலில் வந்து விழுந்து கெஞ்சினது வடிவு இல்லைங்க… நம்ம செந்தில் பூதம் தான்.

’’ ஐயோ பாஸ். நான் சொன்னமாதிரி என்னால முடியாத காரியம் நீங்க சொன்னீங்கன்னா என் அடிமைத்தனம் போயிடுமுங்க. இப்ப நான் எஸ் பி சேகர் மாதிரி விடுதலை ஆயிட்டேங்க. வரேன் மை டியர் எக்ஸ் பாஸ் ‘’

ஒரு வெளிச்சம் இல்லை மத்தாப்பு இல்லை புகை இல்லை. சத்தம் போடாம சின்னவீட்டுக்கு போற மைனர் போல காணாமப்போயிட்டார் நம்ம செந்தில் பூதம்.

இப்போ நம்ம ஆராவமுதனும் வடிவாம்பாள் என்கிற வடிவும் வசதி வாய்ப்போட இருந்தாலும் பழைய படி ஆராவமுதன் வடிவுக்கு அடிமையாகி சந்தோஷமா பவ்யமா காலம் கழிக்கிறான்.

முற்றும்.

பி. கு :

இக்கதை முத்தமிழ்மன்றத்திலும் தமிழ்மன்றத்திலும் மற்றும் யூத்ஃபுல் விகடன் இணையத்திலும் வெளியாகி பாராட்டைப் பெற்றது.

Print Friendly, PDF & Email

1 thought on “ஆராவமுதனும் அவசர விளக்கும்

  1. நல்ல நகைச்சுவை கதை.நல்ல வேளை ஆராவமுதன் பூத உதவியால் எம்.எல்.ஏ. ஆகி விடப்போகிறாரோ என்று பயந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *