(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாணிக்கராஜாவுக்கு ஆங்கிலம் பேச வேண்டும்: ஜீன்ஸ் போட வேண்டும் என்ற ஆசை குடிகொண்டிருந்தது.
அதனால் ஏ, பீ, சீ தொடக்கம் எக்ஸ், வை, சற் வரையும் அத்துடன் வண், டூ, திறி (ஒன்று, இரண்டு, மூன்று) வரை மனப் பாடம் செய்து கொண்டார்.
வெள்ளைக்கார கொம்பனி ஒன்றிற்கு ‘குக்’ (சமையல்) வேலைக்கு இன்ரவியூக்கு வரவே முதன் முதலாக ‘பெல்ஸ்’ போட்டுக் கொண்டார்.
பக்கத்து வீட்டுச் சின்னத்தம்பி ‘கிரிக்கட்’ விளையாடும் போது ஒரு பக்கம் முழங்கால் இடத்தில் கிழிந்ததால் அதை அப்படியே அரைவாசியாக கிழித்திருந்த அந்த ஜீன்ஸை (ஒரு பக்கம் நீளமாகவும், மறுபக்கம் கொட்டானாகவும் முழங்கால் வரை போட்டுக் கொண்டும்.
மாமாங்கத் தீர்த்தக்கரையில் பொறுக்கிய ஒற்றைச் சப்பாத்தை ஒரு காலுக்கும் வெசாக்கில் பொறுக்கிய இன்னொரு செருப்பை மற்றக் காலுக்கும் அணிந்து கொண்டு இன்ரர்வியூ இடத்தை நோக்கி நடந்தார் இன்றைய பாணியில்.
வெள்ளைக்காரச் கொம்பனியில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததனால், வெள்ளைக்காரன் ‘வட் இஸ் யுவ நேம்?’ (உங்கள் பெயர் என்ன?) என்று கேட்டபோது தனது பெயரையே ஆங்கிலப் பெயராக ம’ங்கிராஜா’ (குரங்கு ராஜா) என்றார்.
அவருக்கு குரங்குக்கு ஆங்கிலத்தில் என்ன சொல்வதென்று தெரியாதுபோலும். சிரித்துக்கொண்ட வெள்ளைக்காரர் பல கேள்வியைக் கேட்கவே எல்லாத்திற்கும் ‘யேஸ், நோ’ போட்டும் தலையை ஆட்டியும் ஒருவாறு வேலையைப் பெற்றுக்கொண்டார்.
வெள்ளைக்காரக் கொம்பனியில் வேலைக்குச் சேர்ந்த பின்பு பல புதிய ‘பிஷ்’ (மீன்), ‘வீவ்’ (மாட்டிறைச்சி) ‘மட்டின்’ (ஆட்டிறைச்சி) போன்ற சொற்களைக் கண்டு பிடிச்சதுடன், எழுத்துக் கூட்டியும் சொற்களை வாசிக்கக் கற்றுக்கொண்டார்.
வெள்ளைக்காரன் தினசரி மணச் சவர்க்காரம் போட்டுக் குளிப்பதை அவதானித்த அவருக்கு நாமும் போட்டுக் குளிக்கவேண்டும் என்ற ஆசை வரவே, மெதுவாக அச்சவர்க்காரத்தின் பெயரை எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டார்.
பின்பு அருகிலுள்ள கடைக்குச் சென்று கடைக்காரனிடம் ‘தம்பி எனக்கு ஒரு லுக்ஸ் தா’ என்றார்.
அதற்கு கடைக்காரனோ ஒரு ‘குக்கூசை’க் கொடுத்தான் அதற்கு அவர் ‘இல்லை தம்பி, நல்லா மணக்கும் அந்த லுக்ஸ்’ என்றார்.
இதைக் கேட்ட கடைக்காரன் ‘ஆ…அதுவா!’ என்று கூறி மணக்கும் சந்தனக் குச்சியை எடுத்துக் கொடுத்தார்.
மாணிக்கராஜாவோ ‘அது இல்ல நல்லா மணக்கும், நாம போட்டுக் குளிக்கிற சவர்க்காரம் லுக்ஸ்’ என்றார். விளங்கிக்கொண்ட கடைக்காரருக்கு சிரிப்புத் தாளவே முடியாமல் ‘லக்ஸ்’ சவர்க்காரமா என்று கேட்டுக்கொடுத்தார்.
அந்த கொம்பனி வளவினுள் பயிர்கள் நடப்பட்டு இருந்தன. ஒருநாள் பக்கத்து வீட்டு ஆடு புகுந்து எல்லாப் பயிர்களையும் அழித்திருந்தது.
இதை அவதானித்த வெள்ளைக்காரன் மாணிக்கராஜாவை அழைத்து “வட் ஹப்பன்ட்?” (என்ன நடந்தது?) என்று கேட்டார்.
குக் மாணிக்கராஜாவுக்கு அதை எப்படி, ஆங்கிலத்தில் விளங்கப்படுத்துவது என்று தெரியாமல் திண்டாடி. இறுதியில் “த ஆடு காடுக்க புகுந்து ஓல் பயற்றம் கொடி அன்ட் ஈற் த நாசம்” (ஆடு தோட்டத்திற்குள் புகுந்து எல்லாப் பயிற்றம் கொடியையும் சாப்பிட்டு நாசமாக்கிப் போட்டுது) என்று கூறினார்.
இதைக் கேட்ட வெள்ளைக்காரன் விழுந்து விழுந்து சிரித்தான்.
மாணிக்கராஜா மறுநாள் அதிகாலை எழுந்தவுடன் ஒரு பலகையில் ‘கேற்றை சாத்திவிடவும்’ என்று தமிழில் எழுதி அப்பலகையை கேற்றில் தொங்கவிட்டிருந்தார்.
அதைக் கண்ட வெள்ளைக்காரன் மாணிக்கராஜாவிடம் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்டான்.
அதற்கு மாணிக்கராஜா “மட்டின் (ஆட்டிறைச்சி) கம்மிங் (வருகிறது)’ என்றார்.
இதைக் கேட்டவுடன் வெள்ளைக்காரன் வாய் விட்டே சிரித்து விட்டான்.
ஏனெனில் அவருக்கு தெரிந்தது ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவை தானே.
***
வெள்ளைக்காரன் தினசரி பால் குடிப்பது வழக்கம். ஒருநாள் அப்பாவை பூனை குடித்துவிட்டது.
பால் குடிப்பதற்காக பாலைப் பார்த்தபோது பால் இல்லாமல் இருக்கவே மாணிக்கராஜாவை அழைத்து “வட் ஹப்பன்ட் மில்க்?” (பாலுக்கு என்ன நடந்தது?) என்று கேட்கவே, மாணிக்கராஜா கையைக் கட்டி கூனிக்குறுகி நின்று “பூனை றிங்” (பூனை குடித்தது) என்றார்.
அதற்கு “வட் இஸ் பூனை” (பூனை என்றால் என்ன) என்று கேட்டான். அதற்கு அவர் “4 கால் சேர் நடுவில் வால் சேர், மியாவ் மியாவ் சேர். மில்க் எல்லாம் றிங் சேர்’ என்று கூறவே,
அவருடைய தோளில் தட்டி வெள்ளைக்காரன் ‘யூ ஆர் ஏ கிளவர்’ (நீ ஒரு கெட்டிக்காரன்) என்று மெச்சினார்.
இந்தப் புகழாரத்தின் உச்சியில் ஏறிய மாணிக்கராஜாவுக்கு ‘லவ்’ பண்ண வேண்டும் என்று ஆசை வந்தது.
அதனால் அவ்வீதியால் குதி உயர்ந்த சப்பாத்து போட்டு வந்த ஒரு பெண்ணைப் பார்த்து புன்சிரிப்புச் சிரித்து “ஐ லவ் யூ” (நான் உன்னை விரும்புகிறேன்) என்றார்.
அந்தப்பெண்ணோ அவரைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து “ஐ லவ் யூ ரூ” (நானும் உன்னை விரும்புகிறேன்) என்றாள்.
மாணிக்கராஜாவுக்கு உச்சி குளிரவே அவள், ரூ சொல்லி விட்டாள் நாம் ‘திறி’ (மூன்று) சொல்லுவோம் என்று நினைத்து “ஐ லவ் யூ திறி” என்றார்.
இதைக் கேட்டதும் அப்பெண்ணுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரவே, செருப்பைக் கழற்றி எடுத்துக் கொண்டு மாணிக்கராஜாவுக்கு அடிப்பதற்காக நெருங்கினாள்.
மாணிக்கராஜாவோ என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி, என்னுடைய உடம்பு நல்ல திடகாத்திரமாய் இருக்குது. அதாவது ‘கெல்த்தி’யாக இருக்குது. நன்றாக அடி என்று கூறுவதற்கு பதிலாக உடம்பு நல்ல கெளுத்தி (மீன்)யாக இருக்குது நீ அடி என்றார்,
அந்த வார்த்தையைக் கேட்ட அப்பெண் அடிக்க வந்ததையே மறந்து சிரித்தே விட்டாள். அந்தச் சிரிப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது.
– ஓ. கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு