ராசிக்கின் ரசனைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 9,179 
 

நாட்டு ஓடுகள் பொருத்தி, சற்று குழியும், மடிப்புமாக புறச் சுவர்கள் கொண்டு, தெற்கு நோக்கி ஒரு வாயிலும், கிழக்கு நோக்கி மறு வாயிற்புறமும் கொண்டிருந்து, இரு தெருக்களை இணைக்கும் முனையில் இருந்த அந்த வீட்டிலிருந்து வெளியேறினான், இருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க இளையோன் ஒருவன்.

வெந்நிற ஜீப்பா, தலையில் கருப்புத் துணியால் தலைப்பாகைக் கட்டு, தாடையிலிருந்து கட்டை விரல் அளவில் கீழ் நோக்கியிருக்கும் அடர்த்தியான தாடி, மஞ்சள் வர்ண முகம் கொண்ட ராசிக் என்பவன் அவன்.

சூரிய உச்சமான நேர, மதிய வேளை அவன் வீட்டிலிருந்து வெளியேறுகிறான். மேற்க்கூறிய உடை அணிந்து, தோளில் புள்ளிக் கோலமிட்ட சிவப்புத் துண்டு போட்டு, அக்தர் (வாசனை திரவியம்) பூசி, அவ்வளவு தோரனையாக அவன் அன்று வெளியேறினான். வீட்டிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் வளைவுப் பாதையில் சென்று கொண்டிருந்த அவன் முன்னால் சென்று கொண்டிருந்தார், ஏறத்தாள இவனது ஆடை வடிவமைப்புகள் ஒத்த, தடித்த மேனி உடைய ஒருவர். அவரைக் கண்டதும் இவன் வேகம் கூடுகிறது. பின்னோக்கி விழுந்த அவரின் நிழலினையும் இவன் அடைந்துவிட்டான், இருப்பினும் அவன் அவரிடத்தில் ஏதும் பேசவில்லை, அவ்வளவு வேகமாக வந்தவன், அவரைக் கடந்து செல்லவும் இல்லை. அந்தப்பக்கமாக ஒரு சிறுவன், அவ்விருவருக்கும் எதிராக வருகிறான். மிகச் சரியாக அச்சிறுவன், அந்த தடித்தவரைக் கடந்து, ராசிக் தோள் அருகே கடக்க முனைகையில், ராசிக் சப்தமாக அச்சிறுவனிடம் கேட்டான், “ஏன்டா தம்பி தொழுக வரலியாடா?” என்றவாறு. அச்சிறுவனோ மெல்ல புன்னகைத்து நகர்ந்தான், குளிச்சிட்டு வந்துருவேண்ணே என்று கூறி. இந்த உரையாடலின் ஒலியால் பின் திரும்பினார் அந்த தடித்தவர். அவரின் திரும்புதல் சரியாக முழுமையடையவில்லை, அதற்க்குள்ளாகவே தயராகிவிட்டான் ராசிக், “அஸ்ஸலாமு அலைக்கும்” (முகமன்) என்று கூறுவதற்கு. அவர் திரும்பியதும் அவன் அதனை வழிந்த புன்னகையோடு கூறினான். பதிலுக்கு அவர் இரு உதடுகளும் சற்றும் விலகாத ஒரு புன்னகை மட்டும் செய்து, தலையை கீழாக வெடுக்கென்று அசைத்தார். ராசிக் வீட்டிலிருந்து ஐந்து நிமிடங்களில் அடையக் கூடிய மசூதிகளுக்கிடைப்பட்ட இச்சம்பவம் நிறைவேற, தடித்தவரும், அவனும் மசூதியினுள் கால்களை எடுத்து வைத்தனர்.

அன்று வெள்ளிக் கிழமை, என்பதாலே ராசிக் இவ்வளவு தோரணை ஆடை அலங்கரிப்புகளோடு மசூதிக்குச் சென்றான். அவன் உள் நுழைந்து சென்றதும், ஏழு உயரப் படிகளை ஏறி, அதன் அடுத்தாய் இருந்த வராண்டாவில் இருந்த சதுர ஹவுலில் (நீர்த் தொட்டி) தனது கை, கால், முகத்தினை உளூச் (நீரால் சுத்தம் செய்தல்) செய்து கொண்டு, பின்னர் மசூதியின் உள் நோக்கி சென்றான். அங்கு சென்று இமாம் (தொழுகை நடத்துபவர்) அவர்களுக்கு அடுத்தாய் வரும் வரிசையில், அதாவது மக்கள் அமரும் முன் வரிசையில் அமர்ந்தான். அங்கு அமர்ந்த அவனுக்கு அநேகமாக, அன்றைய தின தொழுகை முழுமையடைந்திருக்காது என்றே கூறலாம். காரணம், அந்த தடித்தவரான இமாம், நின்று தொழுகை நடத்துவதற்க்காக விரிக்கப்பட்டிருந்த முஸல்லாஹ் (தொழுகை விரிப்பு) அவ்வளவு ஜொலிப்பாக, அதுவும் அவனுக்கு மிகவும் பிடித்த ‘பிங்க்’ வர்ணத்தில் போடப்பட்டிருந்தது. அதன் ஈர்ப்பு அவனை நிலைகுலையச் செய்தது. அவன் விருப்பமெல்லாம் அதில் அவன் நிற்க வேண்டும், உட்கார வேண்டும், இறுதிக்குத் தொட வேண்டும் என்பதாகவே இருந்தது. அன்றைய ஜீம்மா (வெள்ளிக்கிழமை சிறப்பு) தொழுகை முடிந்து எல்லோரும் வெளியேறிவிட்டிருந்தனர். மணி மதியம் 2:30-ஐக் கடக்க சில நொடிகளிலிருக்கும், ராசிக் மட்டும் வெளியேறவே இல்லை. அநேகமாக தொழுகை முடிந்து சென்றவர்களெல்லாம் இந்நேரம் சாப்பிட்டு உறக்கத்தை தொடங்கி இருப்பார்கள். எல்லோரும் சென்றாகிவிட்டது. ரொம்ப நேரமாக இருந்தவரும், கடைசியானவருமாக யூசுஃப் வாத்தியாரும் சென்றுவிட்ட நிலை, ராசிக் மனதுக்குள் வெற்றிச் சிரிப்பு. அவனது கரங்கள் மெல்ல அந்த முஸல்லாவினை நோக்கி நகர்ந்தது, சரியாக அவனது ஆட்காட்டி விரல் அதனை அடையும் நேரத்தில், பின்னால் இருந்து எழுந்த நடைச் சத்ததில் திரும்பினான். அப்போது மோதினார் (பணியாள்) காதர், வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்டதும், ராசிக் தனது முயற்சிக்கு இடைவெளி விட்டான். அவனைக் கடந்து சென்ற மோதினார், அந்த முஸல்லாவினை சுருட்டி எடுத்தார், அதன் பின்னர் வந்த பிற மோதினார்கள், மக்கள் நிற்பதற்க்காய் விரிக்கப்பட்ட பச்சை வர்ணக் கம்பளங்களை சுருட்டத் துவங்கினர். ராசிக்கிற்கு மனம் நொந்துவிட்டது. தர்மச் சங்கடத்தில் அம்மசூதி விட்டும் வெளியேறிவிட்டான். அவன் கேட்டிருந்தால் அம்மோதினார், தாரளமாக அனுமதித்திருப்பார். அது அவனுக்கும் தெரியும், ஆனால் கெளவரம் தடை விதித்தது.

********************************

நிற்க! சற்று ராசிக் குறித்து சிறு குறிப்பு.

அவன் தோற்றம் குறித்து முன்னரே பார்த்ததுதான். ராசிக் மிகவும் ஆண்மீக அடிப்படைவாதி. அவ்வளவு பேணுதலாக இசுலாத்தினை பேணுகிறவன். ஆனால் பிறரின் கருத்துக்களை அவமதிப்பவன், அலட்சியப்படுத்துபவன். பல விசயங்களை தெரிந்து வைத்திருந்தாலும், நேரத்திற்கு பயன்படுத்தும் திறனற்றவன்.

தங்கள் வீட்டில் எந்நேரமும், குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு இசுலாமிய போதனைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பான். அவன் வீட்டை விடவும் அவன் அதிகமிருப்பது அவனது நண்பன் இமான் வீட்டில்தான். அவனின் சகாக்கள் எல்லோரும், ஏன் இப்படி குழந்தைகள்கிட்ட நேரத்தை வீணடிக்கிற என்று கேட்டால் போதும், அதி கோபமாக சீறுவான். இசுலாத்தினை அவர்களிடத்தில் சொல்லிக் கொடுக்கிறேன், டி.வி. ஹராம்ல (தடுக்கப்பட்டது) அவங்களைப் போக விடாமல் நல்வழிப்படுத்துறேன், இது சமுதாயக் கடமை என கொட்டித் தீர்ப்பான். நண்பர்களோ, சரி அதனை விடவும் சமூகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றதே, அதெல்லாம் தீர்ப்பதும் நமது கடமைதானே, அது இசுலாத்தின் அடிப்படை தானே, என்று கேட்டால் ராசிக் முகம் சுறுங்கிவிடும். பின்னர் அவர்களருகில் ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்க மாட்டான், அதுவரை கள்ள மெளனியாய் இருந்துவிட்டு, சொல்லாமலே சென்றுவிடுவான்.

வீட்டில் குடும்பத்தினரிடம், டி.வி பார்க்கக் கூடாது, சினிமாப் பாடல்கள் கேட்க்கக் கூடாது என்று கடிந்து கொள்வான். ஆனால் இவன் அரேபிய மெளலீது (துதி) பாடல்களைக் கேட்ப்பான். இதற்க்காகவெ ராசிக்கின் அண்ணன், முஜி வம்படியாய் சினிமாப் பாடல்கள் கேட்ப்பான். ராசிக் இதனைத் தடுத்தாள், முஜி ஏன்? என்னவென? கேட்ப்பான். அதற்கு ராசிக், முஜியிடம், பாட்டுக் கேக்கறது ஹராம், இசை நமக்கு ஹராமென வியாக்கினம் கூறிடுவான். இவனின் இந்த பதில்களிலிருந்து, முஜி உடனே, அப்போ நீ மட்டும் மெளலீது பாட்டு கேட்க்கற அது ஹராம் இல்லையா? அதுல இசை இல்லையா என்று எதிர் வாதமிடுவான். சண்டை முற்றிக் கொள்ளும். சரி எதுதான் பார்க்கறதுடா டி.வி.-யில, உன்னோட பெரிய துன்பமா இருக்கு என முஜி சடைய, ஏன் நியூஸ் பாரு, அதெல்லாம் உனக்குத் தெரியாதே என இழுப்பு பதில் கொடுப்பான் ராசிக். சரி நியூஸ்தான் பார்க்கலாமென, முஜி பார்க்கும் நேரத்தில் கூட, ராசிக் தடை கூறுவான். எப்படியெனில், செய்தி வாசிக்கும் நபர் எதிர் பாலினமாக இருந்தால். ஏனெனில் அந்நியப் பெண்களை பார்ப்பது ஹராமென கூறி மேலும் முஜியினை கடுப்பேத்திடுவான்.

யாரேனும் ஊரில் பெரிய தாடி, ஜீப்பாவோடு வந்துவிட்டால் போதும், அவர்களோடு எப்படியும் ஒட்டிவிடுவான். இதனை யாரேனும் ஏனென்றுக் கேட்டால், அவர் இபாதத்தானவர் (ஆண்மீக நெறியாளர்) என்று சமாளிப்பான். ஏன் நம்ம ஊர்ல அப்படி யாருமே இல்லையானு, கேட்டாலோ, பெரிய இடம்னா ஒட்டிக்கறயேனும் யாரும் அவனிடம் கேட்டிடக் கூடாது. அப்படி கேட்பவர்கள், அந்நிய நபர் செல்லும் வரையில் எதிரியாய் இருப்பார் ராசிக் மனதில்.
அவ்வளவு முற்போக்கு பேசுவான், அரசியல் பேசுவான், இசுலாம் பேசுவான். அவன் கூறுவதில் எதிர் கூற்று வைத்தால் மழுப்பல் பதில்கள் கூட வராது. இருசக்கரம் வைத்திருக்கும் நண்பர்களோ, தெரிந்த நபர்களோ கிடைத்துவிட்டால் போதும் அவ்வளவு ஒரு ஆனந்தம் அவனுக்கு. அந்த வாகனத்திற்க்காகவே அவனுக்கு தலைக்கு மேலே வேலை வந்திவிடும். கொஞ்ச நேரம், ஒரு மணி நேரம், சாயங்காலம் வரைக்குமென நபர்களின் நெருக்கத்தினைப் பொருத்து அவனுடைய கெஞ்சுதல்கள் இருக்கும். இதற்க்காகவேயோ என்னமோ, அவனது ஊரான கீரனூரிலிருந்து, பழனி நகரில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென கூறிடுவான். ஒன்று அவனுக்கு உடல் சரியில்லை என்பான், இல்லை அவன் அம்மாவிற்கு, இல்லை உறவினர்களுக்கு, இல்லை வேறு நண்பருக்கு. இப்படி கேட்டு யாரிடமாது வாகனம் சிக்கிவிட்டால், தனது வட்டத்தில் உள்ள நபர்களின் தேவைகளை தாங்கிக் கொண்டு நிறைவேற்றுவான். பேருந்து இருக்கு அதுல போயிக்கறோமென்று கூறினாலும் விடாது வம்படியாய் இழுத்துக் கொள்வான். தனது குழந்தை வட்டாரங்களிடத்தில் வாகனத்தோடு சென்று அவன் போடும் கூத்து அவ்வளவு வேடிக்கையானது.

ஊரிலிருந்து எங்கேயேனும், வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பினாள் போதும், அவனுக்கு அவ்வளவு செருக்கு புகுந்துவிடும். அந்நியோன்யமாக செல்லும் இமான் இல்லத்திற்குக் கூட ரொம்பவும், வழிய வழியக் கூப்பிட்டவாறு சழித்தவனாகச் செல்வான். சென்றுவிட்டு பத்து நிமிடங்கள் அமைதியாய் இருந்துவிட்டு நகர்வான். இப்படியே இரண்டு தினங்களுக்கு அவன் நடவடிக்கைகள் அமையும். அடுத்த நாட்களிலிருந்து, செல் என்று சொன்னாலும் கூட இமான் இல்லத்தினை விட்டு நகர மாட்டான்.

*****************************

ஹேய் அதோப்பா பிறை தெரிது பாருங்க.. என்று பெரும் சப்தமிட்டார் உவைதீன்.
அட எங்கப்பா உவைது, எங்க?

அதோ அலாவுதீன் நல்லாப் பாரு தெரியுதுல… அட நல்லா மேற்க்கோட்டமாபா…
உம் ஆமா…ஆமா உவைது.

பிறை தோன்றிய விசயம் இமாமிடம் செல்கிறது. முன்னிரவுத் தொடக்கத்தில் மசூதிக் கடைத் தெருவினை சுற்றியிருந்த கூட்டம் மசூதிக்குள் நுழைந்தது. எல்லோரிடமும் அவ்வளோ ஆராவாரம், களிப்புகள்.

இமாம், பள்ளி முக்தவல்லி (தலைவர்) எல்லோரும் அமர்ந்து பேசிக் கொள்கின்றனர். ஊர் ஜமாத் (மக்கள்) பலரும் கூடியிருந்து அவர்களின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சரியாக மணி இரவு எட்டு இருக்கும். மசூதியில் இருந்து பெரும் சங்குச் சப்தம் ஒலிக்க அதன் பின்னர், ரமலான் நோன்பு பிறந்துவிட்டதென அறிப்பு வெளிப்படுகிறது..
ராசிக் மனசுக்குள் குதிக்கிறான். அன்று இரவே அவன் அந்த ஒரு மாதத்திற்க்கான ஆண்மீக வழிபாடுகள் குறித்த அட்டவனைகள் தயார்ப்படுத்தி விட்டான்.

***************************

ரமலான் மாதம் இருபது தேதிகளைக் தொட்டுவிட்டது. அன்று ராசிக் தனது கல்லூரியில் பத்து நாட்களுக்கு விடுப்புக் கடிதம் கொடுத்துவிட்டு, மகிழ்வோடு பழனியிலிருந்து கீரனூர் நோக்கி வருகிறான்.

அம்மாதத்தில் தினமும் பிடிக்கும் நோன்பினைப் போல் அவன் அன்றும் நோன்பு பிடித்திருந்தான். சூரியன் மேற்க்கில் மறைந்து, செவ்வானம் தோன்றும் அந்த இடைப்பட்ட தருணத்தில், மசூதியிலிருந்து அறிவிப்பு, ‘நோன்பு திறக்கும் நேரமாகிவிட்டது, எல்லோரும் நோன்பு திறக்கவும்” என்பதாக வெளிப்பட்டது. அந்த தருணம் ஊரில் உள்ள பலரையும் போல ராசிக்கும் பேரித்தம் பழத்தினைக் கடித்தும், சிறுது தண்ணீர் குடித்தும் விரதம் முடித்தான். பின்னர் அன்று இரவு சாப்பாடுகள் முடித்துவிட்டு, இரவுத் தொழுகையான இஷாத் (தொழுகைக்கான ஒரு பெயர்) தொழுகைக்குச் சென்றுவிட்டான்.

அவன் நோன்பு திறந்தற்க்கும், இஷா தொழுகச் சென்றதற்க்கும் இடையில், தனது துணிகளிலிருந்து இரண்டு லுங்கிகளையும், மூன்று சட்டைகளையும், ஜீப்பாவினையும் ஒரு பையில் எடுத்துத் தயார்படுத்திக் கொண்டான்.

இஷாவிற்க்கு முன்னதாக நடைபெறும் மஃரீப் தொழுகை முடிந்து, அவன் மசூதி முக்தவல்லியிடமும், இமாமிடமும், மசூதியில் மீதமுள்ள பத்து நாட்கள் இஃதிகாஃப் (மசூதியினுள் தங்கியிருப்பது) இருக்க சம்மதம் வாங்கி வந்துவிட்டான்.

இஷா முடிந்தது. வீடு திரும்பினான். உறங்கினான்.

காலை 3-மணிக்கெல்லாம் எழுந்திரித்து தஹஜ்ஜத் (ஒருவகைத் தொழுகை) தொழுதுவிட்டு. சாப்பாடு உண்டு நோன்பு பிடித்தான். பின்னர் 4:45-க்கு எழுந்த மசூதி பாங்கொலி கேட்டு மசூதிக்கு ஃபஜ்ர் (தொழுகையின் பெயர்) தொழுகைக்கு கிளம்பினான், கையில் அந்தப் பையுடன்.

*****************************

அன்றிலிருந்து பத்து நாட்களுக்கு அவன் இஃதிகாஃப் இருக்க ஆயத்தமானான். அவன் அந்த பத்து நாட்களில், மசூதிக்குள் ஒரு திரை கட்டி அதற்க்குள்ளே தங்கிக் கொள்வான். சாப்பாடு, மாற்று உடைகளைத் தருவதற்க்காக அவன் அண்ணன் வந்து போவான். ராசிக்கோடு இன்னும் இரண்டு நபர்கள் அப்படி இஃதிகாஃப் இருந்தனர். இவர்களோடும், தனது அண்ணனோடும் தவிர்த்து அப்படி இருக்கும் நிலையில் அவன் வெளியாட்களோடு பேசக் கூடாது. தன் திரைக்குள் வந்து பிரார்த்தனை செய்ய வேண்டிக் கொள்ளும் நபர்களிடத்தில் மட்டும் பேசலாம், அதுவும் இசுலாமிய விசயங்கள் மட்டும்தான், அது தவிர்த்து வெளி நடப்புகளைப் பேசக் கூடாது.

இப்படியாக, பத்தாவது நாள் வந்து விட்டது. ரமலானின் இறுதி நாள். அதற்க்கு முன்னரான 29-வது நாளிலே மக்கள் பிறை எதிர்பார்த்தனர், ஆனால் பிறை தெரியாததுனால், 30-வது நாளையும் பூர்த்தி செயதனர். அதன் பின்னர் பிறை தெரியாவிட்டாலும் கூட, அடுத்த மாதம் பிறந்துவிடும். ஆதலால் 30-வது நாளின் மஃரீப் தொழுகை முடிந்ததும், மசூதியிலிருந்து, நாளை “ஈத்துல் அல்ஹா” (ரமலான் நோன்பு நாள்) பெருநாள் என்று அறிவிப்பு வந்தது.

ராசிக்கோடு இஃதிகாஃப் இருந்த இருவரும் அன்றைய மஃரீபோடு முடித்துக் கொண்டு வீடு திரும்பினர். ஆனால் இவன் மட்டும் மறுத்துவிட்டான்.. பலரும் கூப்பிட்டுப் பார்த்தனர், ஆனால் இவனோ, நாளை ஃபஜ்ர் முடித்தப் பின்னர்தான் கிளம்புவேன், அதுதான் முழுமையாகும் அப்படி, இப்படி என்று பேசி மறுத்தான்.

மறுநாள் காலையும் வந்தது. ஃபஜ்ர் தொழுகை முடிந்தது. ஜமாத்தார்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி முஸஃபா செய்து கொண்டனர். ஒவ்வொருவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. இத்தொழுகை முடித்ததும், மக்கள் கூட்டம் நேரே செல்வது, கசாப்புக் கடைகளே. அங்கு கூட்டம் அடித்துக் கொண்டு அலை மோதும். காய்கறிக் கடை வீதியோ அவ்வளவு பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும். அந்நாளுக்காகவே ஒரு நாள் கடைகளும் முளைத்திருக்கும்.

ஃபஜ்ர் தொழுகைக்கு வந்த பெரும் பகுதியினர் தங்களது வீடுகளுக்கு அரசல் புரசலாக திரும்பிவிட்டனர். சிலர் மட்டும் மசூதியில் இருந்து, ராசிக் உடன் அவனது வீடு வரையிலும், தக்பீர் (முழக்கம்) கூறிக் கொண்டே கூட்டிச் சென்றுவிட்டனர். இஃதிகாஃப் இருக்கும் நபர்களுக்கு இத்தகு மரியாதைகள் கிடைக்கும்.

எல்லோரும் அவனை அழைத்த பொழுது அவன் பார்வை ஒரு அலமாரியின் மீது அழுத்தமாகப் பதிந்திருந்தது. பின்னர் அவன் மெல்ல அவர்களோடு மசூதிவிட்டும் வெளிப் பயணமான போது அவன் முகம் வாட்டமாய் இருந்தது. எல்லோரும் மகிழ்வாய் தக்பீர் கூறி வெளியேறினர்.

ராசிக்கின் கால்கள் ஒரு பெரும் தயக்கத்தோடும், இதுவே இம்மசூதிக்குள் வருவது இறுதி என்றதும் போலவே மெல்ல மெல்ல தயங்கி, தயங்கி வெளியேறினான்.

அவன் முற்றாக வெளியேறியதும், ஒரு முறை அந்த அலமாரி இருந்த மசூதியின் உட்ப்புற பரந்த அறையினை ஏக்கமாகப் பார்த்தான். மசூதியின் கிழக்கு நோக்கிய வாயிலில் இருந்து பார்த்தால், மசூதியின் உட்புறங்களை நன்றாக பார்க்க முடியும். அப்படி நீண்டதாய் நேராய் இருக்கும்.

ராசிக்கின் கழுத்து அந்த அலமாரி திசையிலிருந்து மெல்ல மாறியது. அவனுக்கு அந்த அலமாரி நன்றாகத் தெரியவில்லை என்றாலும், அதனுள் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ‘பிங்க்’ வர்ண முஸல்லா நன்றாகக் கண்ணுக்குள் குடிகொண்டிருந்தது.

இந்தப் பத்து நாட்களில் எவ்வளவு முயன்றும், அவனின் இந்த ஏக்கம் தீரவில்லை. ஊரே ரமலான் கொண்டாட்டத்தில் இருக்க ராசிக் மனது முஸல்லாவையே சுற்றிக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *