அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 18,661 
 
 

‘ஒன்றியச் செயலா ளரே… எங்கள் மனதில் ஒன்றியச் செயலாளரே!’ என்று பேனர் வைத்த போதுதான் குமாரு, நம்ம ஒ.செ. கதிரேசனின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்றான். நீங்காத இடமே மங்காத இடமாக மாறப்போகும் சந்தர்ப்பத்துக்காகத்தான், மறுபடியும் அந்த இடத்தில் குமாரு உட்கார்ந்திருந்தான்.

அது அவரைக்குறிச்சியில் ஒரு கம்ப்யூட்டர் சென்டர். அதன் உரிமையாளனும் கணினிகளை இயக்குபவனுமாகிய ரமேஷ், அதற்கு ‘ஐ ஸ்பீடு கிராஃபிக்ஸ்’ எனப் பெயரிட்டு இருந்தான். ‘ஹை ஸ்பீடு’ எனப் பெயரிடாமல், ‘ஐ ஸ்பீடு’ எனப் பெயரிட்டது ஒருவகையில், அவனது குணநலன்களையும் எடுத்துக்காட்டுவதேதான்!

வேலை செய்யும்போது, அருகில் ஆட்கள் அமர்ந்து இருந்தால், ரமேஷ§க்குப் பிடிக்காது. தொணதொணப்பு ஆசாமிகள் அருகில் அமர்ந்துவிட்டால், வெறுமனே கணினித் திரையில் வெவ்வேறு வடிவ செவ்வகங்களை உற்பத்தி செய்துகாட்டி, ”நீங்க கொஞ்சம் வெய்ட் பண்றீங்களா?” என்று கேட்டு, ஆட்களை அப்புறப்படுத்திவிடுவான். ஆனால், அவன் உருவாக்கித் தருகிற ஃப்ளெக்ஸ் பேனர்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவும், காரில் போகும் ஆட்களை கியர்களைக் குறைக்க வைக்க வல்லதாகவும் இருந்தன. குமாரு, அவனிடம் அகலாது அணுகாது தீக்காய்வது போல வேலை வாங்கத் தன்னைத் தயார்செய்துகொண்டான்.

தனது ஊரான சால்ரப்பட்டிக்கு அண்ணன் மகள் ஒருத்தியின் பூப்பு நன்னீராட்டு விழாவுக்கு கதிரேசன் வருவதாக இருந்ததும், அவருக்கு பேனர் வைக்க முடிவெடுத்து, கணினி வல்லுனன் ரமேஷின் வலப் பக்கம் அமர்ந்திருந்தான்.

ரமேஷ் வாசகங்களை எழுதும்போது உடன் இருப்பது என்கிற புரிதலை குமாருக்குக் காலம் கற்றுத் தந்திருந்தது. கட்சித் தலைவர் ஒருமுறை வருகை தர இருந்ததால், கனத்த வேலைகளுக்கு இடையில் குமாரு, ரமேஷை அலைபேசியில் அழைத்து, ”தாய்க்குலங்கள் போற்றும் தலைவரே! வருக! வருக!’ன்னு நீயே அடிச்சுடு. அப்படியே ஃப்ளெக்ஸுக்குச் சொல்லி, தொக்குப்பட்டிப்புதூர் முக்கு ரோட்டுல கட்டச் சொல்லிரு” என்று ஆணையிட்டான்.

தலைவர் வருகிற நாளில் அந்த பேனர் முக்கு ரோட்டில், ‘தாய்க் குளங்கள் போற்றும் தங்கத் தலைவரே! வருக! வருக!’ என்று முச்சந்தி சிரித்தது. ஆகவே, வாக்கிய வடிவமைப்பின்போது, உடனுறைவது என்கிற கடப்பாட்டுக் குத் தன்னை ஆயத்தமாக்கிக்கொண்டான் குமாரு. அது தவிரவும், இனிமேல் தனது பார்வை படாமல் பேனர்கள் தார்ச் சாலைகளின் பார்வைக்குப் போகக் கூடாது என்கிற கதிரேசனின் ஆணைக்கும் ஆளானான்.

அப்படித்தான் கதிரேசனுக்காக ‘உலகத்தின் உரிமையாளரே!’ என விளித்து எழுதப்பட்ட வாசகத்தை கதிரேசன் பார்த்துவிட்டு,

”இந்த லெவல்ல போனீன்னா… என்னையக் கட்சியவிட்டுக் கட்டம் கட்டிருவாங்க” என்று தகுந்த சமயத்தில் தடுத்தாட்கொண்டுவிட்டு, அதே வாசகத்தைச் சரியான ஒரு தருணத்தில் பயன்படுத்திக்கொண்டார். சிறிது நாளில் அவரைக்குறிச்சியின் பிரதான வீதி ஒன்றில் ‘உள்துறை அமைச்சரே! உலகத்தின் உரிமையாளரே!’ என்கிற அழைப்பு காணப்பட்டது.

பூப்பு நன்னீராட்டுக்கு வருகிற ஒன்றியம் கதிரேசனுக்கு என்ன விதமான வாசகம் எழுதுவது என்று முடியைக் கோதி மூளையைக் குலுக்கினான் குமாரு.

சட்டென கதிரேசனின் தகப்பனார் ஆறுமுகத்தாரை நினைவுகொண்டு, ‘ஆறு முகத்தார் பெற்றெடுத்த நூறு களிறே!’ என்கிற வாசகம் தோன்றியதும் மலர்ச்சியானான். சிலர் பெற்றெடுத்ததாலும், சிலர் பெற்றெடுக் காததாலும், அரசியல்கள் வேறு வேறு கோணத்தை அடைவதை குமாரு அறிந்தே இருந்தான்.

ரமேஷ§க்கு கணினித் தாய் அருள் பாலித்த அளவு, கன்னித் தமிழ் பாலிக்கவில்லை. ரமேஷ் சரியாகத் தட்டச்சிப் போய்க்கொண்டு இருந்ததை மன மகிழ்வோடு பார்த்தவாறு இருந்தான் குமாரு. மகிழ்ச்சி கடைசிச் சொல்லில் இடறியது. கயிறே! என்று எழுதினான்.

”களிறேப்பா… களிறு… களிறு…’

அடுத்து ரமேஷ் ‘கலிரு’ என்று எழுதினான். நிறைய கலியுகக் கர்ணன்களை அச்சடித்து இருந்ததால், ‘க’-வை அடுத்து அவனுக்கு ‘லி’ வந்ததில் வியப்பு இல்லை.

”களீறுப்பா” என்றான் குமாரு அழுத்தமாக.

”களிக்குப் போடற ‘ளி’-யா?” என்று சாந்தமாக வலது பக்கம் திரும்பி குமாரைப் பார்த்துக் கேட்டான் ரமேஷ். சுர்ரென்றுவந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, ”ஆமாப்பா… களிறுன்னா, யானை” என்றான்.

”நூறு குளிரே அப்படின்னு இருந்தாக்கூட நல்லாத்தாண்ணா இருக்கும் இந்த சம்மர்ல’ என்றான் ரமேஷ். தொடர்ந்து, பேனர்களை டிசைன் செய்ததில், ஒரு மாதிரியான மீமெய்யியல் நிலையை அடைந்து இருந்தான்.

இறுதியில், பொன் முகபடாம் மாட்டிய யானை மத்தகத்தின் மேல் கதிரேசனின் படம் சூப்பர் இம்போஸிங்கில் சிரிக்க… அந்த ஃப்ளெக்ஸுகள் தயாராயின. நுண்ணுணர்வும் மாந்திரீக சித்திகளும் மிகுதியாக இருப்பின், கதிரேசனுக்கு அன்றைக்கே மூக்கு இருந்த இடத்தில் தும்பிக்கை முளைத்து இருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. குமாரு அவருக்கு மேலும் நெருக்கமானான். அடுத்து, மிகச் சீக்கிரம் நூறு களிறைப் பெற்றுப் போட்டவருக்காக பேனரும் போஸ்டரும் அடிக்க வேண்டிவரும் என குமாரு எதிர்பார்த்து இருக்கவில்லை.

அவரைக்குறிச்சியில் அல்லக்கை தங்கராசு வுடன், டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக்கொண்டு இருந்தான் குமாரு. அலைபேசி சட்டைப் பைக்குள் இருந்து ஒலித்ததும் எடுத்து, தீப்பெட்டி அகலத் திரையைப் பார்த்தான். ‘கதிர் ஒன்றியம்’ என்று ஆங்கிலத்தில் எழுத்து மின்னியது. காது அருகில் செல்போனை எடுத்து வைத்த குமாரின் முகத்தில், பொறுப்பு உணர்வும் விதவிதமான திட்டங்களும் ஓடும் மேகங்கள்போலக் கடந்தன. குரலில் துயர பாவனையோடு கதிரேசனிடம் பேசி முடித்துவிட்டு, அருகில் இருந்த தங்கராசு பக்கம் திரும்பினான்.

”தங்கம் நம்ம ஒன்றியத்தோட அப்பா மண்டையப் போட்டுட்டாரு. சட்டுனு வா. ஆக வேண்டியதைப் பாக்கணும்” என்றதும் தங்கராசு, டேபிளில் முன்னிருந்த முக்கால் டம்ளர் திரவத்தை விர்ரென்று உறிஞ்சினான். இருவரும் கடையைவிட்டு வெளியே வந்தனர்.

”அடுத்து ஸ்ட்ரெய்ட்டா மாலமேடு போக வேண்டியதுதானே?” என்றான் தங்கராசு.

”முதல்ல வண்டியில ஏறி உக்காரு!” என்று அவனை யமஹாவில் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஊத்தூர்ச் சாலையில் பைக்கை ஓட்டினான்.

பைக்கை ஓட்டிக்கொண்டே குமாரு, ”பெரிய ஆளாயிட்டா அதுக்குத் தகுந்த மாதிரிதான்பா சிந்திக்கணும். நம்ம நடவடிக்கைகளும் அப்படித்தான் இருக்கணும். ஒன்றியம் ஆயிட்டாலும் நம்ம அண்ணனுக்கு அது கொஞ்சம் பத்தறது இல்ல. அப்பா பாடியை ஒரு இருபத்தி நாலு மணி நேரமாவது கண்ணாடிப் பெட்டியில வெச்சிட்டு, அப்புறம் அடக்கம் பண்ணினாத்தான் நமக்கு மரியாதை. நான் கேட்டப்ப, வேணாம்னாரு. அப்புறம் வலியுறுத்திச் சொல்லவும், சரின்னுட்டாரு. நம்ம நாகம் பள்ளி எக்ஸ் எம்.எல்.ஏ அய்யனைக் கண் ணாடிப் பெட்டியில பாத்ததுமே, நான் முடிவு பண்ணிட்டேன். நம்ம செட்டுல யாருக்காவது இப்படின்னா, ஐஸ் பெட்டியில வெச்சுப் பாத்துடறதுன்னு. மந்திரிக எல்லாம் வந்தா, கண்ணாடிப் பெட்டியில இருந்தாத்தான மலர் வளையம்வைக்க சரியா இருக்கும்” என்றவாறு, ஓடும் வண்டியில் இருந்தே இடது கையால் போனை எடுத்து சரவணகுமாரிடம், ”மினிஸ்டர் யாரு… யாரு வர்றாங்க?” என வினவினான். சரவணகுமார், கதிரேசனுக்கு நெருக்கமான இன்னொருவன்.

நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி இருவரும் வர வாய்ப்பு உள்ளது என்றும், இருவர் லட்சியம்; ஒருவர் நிச்சயம் என்றும் பதில் தந்தான்.

அடுத்து, கதிரேசனுக்கே போன் செய்து, ஷாமியானா பந்தலுக்கும் சேர்களுக்கும் தானே சொல்லிவிடுவதாகச் சொல்லியவாறு, ஒரு கடையில் நிறுத்தி, உடனடியாக வண்டியும் ஏற்பாடு செய்து அனுப்பியவன், ”சமையலுக்கு என்ன ஏற்பாடு?” என அலைபேசியிலேயே கேட்டான்.

அவர் ”அது ஏற்பாடாயிருச்சு… நீ சீக்கிரம் வா!” என்றதும் வண்டியை அடுத்த கடைக்குச் செலுத்தினான்.

கடையின் பெயர்ப் பலகையில், ‘அமரர் தேகக் காப்பகம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. கடையில் சவப் பெட்டி வடிவில் மரத் தடுப்புகளுக்குப் பதிலாக கண்ணாடிச் சுவர்கள்கொண்ட பெட்டி ஒரு பெஞ்சின் மீது வைக்கப்பட்டு இருந்தது. அங்கே இருந்தவனிடம், ”உடனே, வண்டி பிடிச்சு இதை மாலமேடு ஒன்றியத்து வீட்டுக்குக் கொண்டுபோங்க. ஐஸ் வாங்கணுமா இல்ல… எதாவது ஆயில் கீயில் வாங்கணுமா… வேணும்கிறதை வாங்கிக்கங்க. பாடி அப்படியே இருக்கணும் பாத்துக்க…. எகிப்து மம்மி மாதிரி’ என்றான்.

உவமைகளில் ஆர்வம் இல்லாத கடைக்காரர், ”அட்வான்ஸு குடு குமாரு” என்றார். 500 ரூபாயை எடுத்து விசிறி அடிக்காத குறையாக அவரிடம் தந்தவன், ”முதல்ல யாரு என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு இப்படி எல்லாம் பேசிப் பழகுங்க!” என்று கோபம் காட்டினான்.

”எல்லாம் தெரியும். மணிக் கணக்குப் போட்டு குறிச்சுவெச்சிடுவேன். கரெக்டா காசைப் பைசல் பண்ணிறணும் ஆமா.”

”சரி, கொஞ்சம் சீக்கிரமாப் போங்கண்ணா. பாவம், பாடி அங்கேகிடக்குது. அவரு வீடு தெரியும்ல…”

”மொத்தம் அந்த ஊர்ல இருக்கறது முப்பத்திரெண்டு வீடு. அதக் கண்டுபிடிக்க முடியாதா? வண்டிக்குச் சொல்லிட்டுப் போ!”

”இல்லண்ணா, நீங்களே பாத்து அனுப்பிச்சிருங்க. எனக்கு வேற நிறய வேலை இருக்கு” என்றவன், வண்டியைக் கிளப்பிக்கொண்டு ஒரு முட்டுச் சந்தில் நுழைந்து தங்கராசை இறங்குமாறு கேட்டுக்கொண்டவன், வண்டியை கொஞ்ச தூரம் ஓட்டிச் சென்று, ஓர் ஓட்டு வீட்டில் ஒரு பெண்ணைப் பார்த்து கையில் 50 ரூபாயை எடுத்துவைத்தான்.

”இப்பவே மாலமேடு போ. நம்ம ஒன்றியத்தோட வீட்டுக்கு. அங்கே பெருசு மண்டையப் போட்டுட்டுது. எப்படியும் பத்துப் பதினாறு நாளைக்கு காப்பி சப்ளைக்கு ஆள் வேணும். யாரும் கேட்டா, நான் அனுப்பிச்சேன்னு சொல்லு.”

அந்தப் பெண் ஏதோ கேட்க முற்படவும், ”ஒண்ணும் பேசாத. இன்னும் ஒரு மணி நேரத்துல அங்கே இருப்பேன். எனக்கு முன்னாடி நீ அங்கே இருக்கணும். புரியுதா?” எனப் புன்னகைத்தவன், வண்டியைக் கிளப்பியவாறு, தங்கராசுவின் இடத்துக்கு வந்து அவனையும் ஏற்றிக்கொண்டு, நேராக ஐ ஸ்பீடு கிராஃபிக்ஸுக்கு முன்னால் நின்றான்.

”இங்கே ஏண்ணா நின்னுட்டீங்க?”

”தங்கராசு! அய்யன் செத்ததுக்கு போஸ்டர் அடிக்கணும்.’

”செத்தா தூக்கிப் போட்டுட்டுப் போறத விட்டுட்டு, போஸ்டர் எல்லாம் எதுக்குண்ணா?”

”உனக்குத் தெரியாது தங்கராசு. தட்டி… பெட்டி… புட்டி இதெல்லாம் இல்லாம அரசியல்ல ஒண்ணும் பண்ண முடியாது.”

”அவ்வளவுதானா… இன்னும் இருக்குதாண்ணா?” என்ற தங்கராசைக் கூர்ந்து பார்த்துவிட்டு, ”இன்னும் இருக்குது. அதெல்லாம் உனக்குப் புரியாது” என்றவன், ”போய் சிகரெட் வாங்கியா!’ என்றான்.

சிகரெட்டைப் புகைத்து முடித்த குமாருவின் முகம் மெதுவாகத் துலங்க ஆரம்பித்தது. வாக்கியங்களைக் கண்டுஅடைந்துவிட்டால், உண்டாகிற துலக்கம் அது. அடுத்து தங்கராசையும் கூட்டிக்கொண்டு ரமேஷைப் பார்க்க கணினி மையமாக விளங்கும் மாடிக்குச் சென்றான். அமைச்சர்கள் யார் வந்தாலும் அவர்களுக்குப் பொருந்துகிற மாதிரி, ‘அருமை அண்ணனின் தகப்பனார் ஆறுமுகத்தாரின் அஞ்சலிக்கு வருகை தரும் அமைச்சர் பெருமக்களே வருக! வருக!’ எனும் ஃப்ளெக்ஸ் போர்டைத் தயாரிக்கச் சொன்னான்.

அடுத்து, ஏதோ யோசித்தவன், போதுமான அளவு மோனை செயல் படாதது கண்டு ‘ஆறுமுகத்தாரின் அடக்கத்துக்கும் அஞ்சலிக்கும்’ என்று அதை மாற்றினான்.

அதை எங்கே கட்ட வேண்டும் என்கிற ஆலோசனையை ரமேஷ§க்குத் தந்துவிட்டு, ‘மரண அறிவிப்பு’ போஸ்டர் தயாரிப்பில் கவனம் செலுத்தினான்.

”அவரு படம் ஏதாச்சும் இருக்குதா?” என்று ரமேஷிடம் கேட்டான்.

”ஒன்றியத்தோட படம்தான் இருக்குது.”

”ஒண்ணு பண்ணு… நம்ம அண்ணன் படத்தைப் போட்டே போஸ்டர் அடிச்சிடு.”

”வேண்டாங்க. அது ரிஸ்க்குங்க!”

”அட, வர்றவன்லாம் அண்ணனுக்காகத்தான வர்றான். கிழவனுக்காகவா வர்றான்?”

”அண்ணன் சொல்றார்… அருணாசலம் செய்றான்” என்று முனகிவிட்டு, ரமேஷ் வால் போஸ்டர் டிசைனுக்குத் தயாரானபோது, ”அண்ணன் பேரை வேற கலர்ல போட்டுட்டு, அவரது தகப்பனாரான ஆறுமுகத்தார் அப்படிங்கறத மட்டும், கறுப்புல போட்டுரு. குழப்பம் வராது” என ஆலோசனை சொன்னவன், ஆறுமுகத்தாருக்கு என்ன அடைமொழி சேர்க்கலாம் என ஆலோசித்தான். ‘அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…’ என்றுதான் சிந்தனை ஓடியது. பின், திடீர் எனத் தூண்டப்பட்ட குமாரு கற்பனை ஒளியுடன், ” ‘அன்னாரது தகப்பனாரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமாகிய’ன்னு போட்டுக்க” என்றான்.

உண்மையில், சுதந்திர இந்தியாவின் முதலாவது இனிப்பு வழங்கலின்போது மிட்டாய் சாப்பிட்டதைத் தவிர, ஆறுமுகத்தாரின் பங்கு எதுவும் இல்லை. மகாத்மாவைப்போலவே மேலாடை உடுத்துவதைத் தீரமுடன் மறுத்து வந்தார். சாப்பாட்டு நேரம் போக, ஆட்டுக் கிடையில் கிடந்த அவர், ‘பெரிய மனுஷங்க வரப் போக இருக்கிற இடம். பனியனாவது போட்டுக்கங்கப்பா!’ என்ற மகனின் வேண்டுகோளையும் மறுத்து, வெற்று உடம்பு டன் உலவி வந்தார். அந்த அளவில் அவர் சுதந்திரப் போராட்ட தியாகியேதான். 100 போஸ்டர்கள் மிக விரைவில் அடித்துத் தருமாறு ரமேஷிடம் சொன்னவன், தங்கராசை அங்கேயே இருந்து வாங்கி ‘அவரை மாநகர்’ முதல் ஒன்றியத்தின் ஊர் வரை காணும் இடம் எல்லாம் ஒட்டிவிட்டுத்தான் வர வேண்டும் என ஏவி, கைச் செலவுக்குக் காசும் கொடுத்துவிட்டு, வண்டியைக் கிளப்பி, ஒன்றியச் செயலாளரைப் பார்க்கச் சென்றான்.

அவரது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸுக்கு போன் செய்தான். பாடை கட்டித் தூக்கிப்போவது வழக்கொழிந்து, இடுகாடு வரை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்கிற நடைமுறையை அமலாக்கத் துடித்தான்.

ஆறுமுகத்தாருக்கு வெற்றுடம்பில் சட்டை மாட்டி, கண்ணாடிப் பெட்டியில் உறையவைத்ததும் அவன்தான்.

மறுநாள் அடக்கம் என முடிவாயிற்று. அமைச்சர் நள்ளிரவில் வந்து ஒன்றியத்தைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டுப் போனார்.

மறுநாள் தங்கராசு ஒட்டிய போஸ்டர் மூலம் விநாடி நேரத்தில் செய்தியைத் தப்பாகக் கிரகித்த முன்னாள் ஒன்றியம், இழவு வீட்டில் கதிரேசன் உயிருடன் இருக்கக்கண்டு பதறி, வெலவெலத்து, மூளை குழம்பி, ”இப்படி அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டியே தம்பீ!” என்று கட்டிப்பிடிக்க, கதிரேசன் சுதாரித்து, ”நேத்து காலைலகூட நல்லாத்தானுங்க காட்டுக்குப் போயிட்டு வந்தாரு” என்றவாறே குமாரைக் கோபமாகத் தேடினான்.

மத்தியானத்துக்கு மேல் ‘அவரை’ இடுகாட்டுக்குக் கொண்டுபோக என்று இரண்டு ஆம்புலன்ஸுகள் வந்தன. மற்றொன்று, சரவணகுமார் போன் செய்து வரச் சொன்னது. அண்ணனுக்கு அடுத்த இடம் சரவணகுமாரா? குமாரா? என்கிற மறைமுகப் போட்டி அண்மையிலும் உண்மையிலும் நிலவி வந்தது.

சரவணகுமார் வரச் சொன்ன வண்டியைச் சரிக்கட்டி அனுப்பிவிட்டு, இறுதியில் ஆறுமுகத்தார், குமாரு பேசிவைத்த வண்டியில் யாத்திரைக்குத் தயாரானார். உடலை வண்டி யில் ஏற்றியதும் குமாரு, கதிரேசனிடம், ”வீலுக்கு எலுமிச்சம்பழம் வைக்கணுமாண்ணா?” என்றான்.

”உன் தலையை வையுடா” என்று கதிரேசன் பல்லைக் கடித்தபோது, சபையில் ஒருவர், ”எதாவது கோழிக் குஞ்சு ஒண்ண அறுங்கப்பா!” என்றார். நாழிகை நேரத்தில் ஒரு கோழியும் கத்தியும் சம்பாதித்து வந்த குமாரு, வண்டிக்கு முன்னால் அதைப் பலியிட்டு, ஆமைத் தலையை நினைவூட்டிய கோழிக் கழுத்தை வண்டியின் நான்கு மூலைகளிலும் தேய்த்து, ரத்தக் கறையாக்கினான்.

கோழியின் விரைவான ஆன்ம ஈடேற்றத்தைக் கண்ணால் கண்ட வண்டியோட்டி, வெள்ளை வண்டியில் கறை ஆனதை எதுவும் பேசாமல் சகித்துக்கொண்டான்.

அடுத்த மாதத்தில் புதிதாகக் கிளை ஒன்று தொடங்கியபோது, ஒன்றியம் அதற்கு குமாரைச் செயலாளராக நியமித்தார். குமாருக்கு சரவணகுமார் ஃப்ளெக்ஸ் போர்டுவைத்தான்.

‘புதிய கிளையின் புயலே! செயற்கரிய செயலே!’

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

1 thought on “அறுபது ஆடுகளின் ஓனரே… ஆறுமுகத்தாரே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *