சரஸ்வதி விஜயம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,014 
 

‘நாராயண… நாராயண… ’ – கர்ண கடூரமான குரலைக் கேட்டு டென்ஷன் ஆனார் தோட்டா தரணியின் வெள்ளைத் தாமரை இலை செட்டிங்கில் அமர்ந்துஇருந்த சரஸ்வதி. மனசுக்குள், ‘இந்தாளு வந்தாலே கெரகமாச்சே…’

‘உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்டுடிச்சி தாயே!’

‘ம்க்கும், வா நாரதா வா… பூலோகத்தில் என்ன விசேஷம்?’

‘வழக்கம்போல டாஸ்மாக்தான் விசேஷம் தாயே. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சோம பானம் ஆறாக ஓடியதாம். மொண்டு குடித்தவர்களுக்குத் தேர்தல் வரை போதை நிச்சயமாம்.’

‘தெரிந்ததுதானே? அதைக் கேட்கவில்லை நாரதா. சென்னையில் புத்தகக் காட்சி நடக்குமே? மக்கள் நிறையப் புத்தகங்கள் வாங்குகிறார்களா? எழுத்தாளர்கள் நிறைய எழுதுகிறார்களா? வர வர, சரஸ்வதி பூஜைக்கு வைக்கும் புத்தகங் களின் தரம் சகிக்கவில்லை. அதனால்தான் கேட்டேன்.’

‘என்ன தாயே இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? புத்தகத் திருவிழா கொண்டாட்ட முன்னேற்பாடுகளை நீங்களே பாருங்கள்!’

நாரதர், பாரதிராஜா மாதிரி இரண்டு கை களையும் சேர்த்து டி.வி. மாதிரி காட்ட, இராமநாராயணன் பட பாணியில் ரொம்பவும் மொக்கையான கிராஃபிக்ஸ் காட்சிகள் விரிகின்றன.

காட்சி-1

பாரு சரோதிதாவின் ‘மோகம்’ நாவல் வெளியீடு. மேடையில் அகிரா குரோசோவா இன்னும் 30 கிலோ வெயிட் போட்ட மாதிரி கறுப்புக் கண்ணாடி போட்ட சினிமா இயக்குநர் ஒருவர் மைக்கின் முன்னால், மந்தகாசச் சிரிப்பில், ‘இசை எதுல இருந்துடா வருது?’ லுக்கில் நிற்கிறார்.

‘என்னுடைய நண்பர் பாருவின் எழுத்துக்கள், இந்த நாவலில் எனக்கு துண்டு கட்டிய ஷகிலாவின் துண்டுப் படங்களை நினைவூட்டுகின்றன. சொல்லும்போதே ஜொள்ளு ஊற்றெடுக்கிறது. அட்டையைப் பார்த்தாலே டாஸ்மாக் ஞாபகம் வருகிறது. பாரு, செல்லம், நாம ரெண்டு பேரும் இப்பவே இங்கனயே ஒரு கட்டிங் போடலாமா?’ – பேன்ட் பின் பாக்கெட்டில் புடைப்பாகத் தெரிந்த ரெமி மார்ட்டினை தொட்டுக்கொண்டே கேட்டார்.

சூடான தோசைக் கல்லில் கைப்பிடி தண்ணீர் தெளித்து, விளக்குமாறால் பெருக்கித் தள்ளிய மாதிரி சொய்ய்ய்ங் சொரேலென இருந்தது உலக சினிமா இயக்குநரின் உற்சாகப் பேச்சு. ஆசிட் டில் குளித்த கோழிக் குஞ்சு மாதிரி நெளிந்துகொண்டு இருந்தார் பார் புகழும் பாரு.

‘புக் ரிலீஸுக்கு சினிமாக்காரனைக் கூப்பிட் டது தப்போ? இலக்கியவாதியைக் கூப்பிட்டாதான் புக்கை படிச்சுப்புட்டு, மொக்கைனு கண்டுபிடிச்சுடுறான். இந்த ஆளும் கண்டு புடிச்சிட்டானோ?’ – மனசுக்குள் நொந்துகொண்டார்.

புக்கில் ‘பிட்டு’ இருப்பதை இயக்குநரின் பேச்சில் அறிந்துகொண்ட வாசகர்கள் ஏகத்துக்கும் குஷியாகினர். அரங்குக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்த எழுத்தாளரின் கட் – அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்தனர்.

காட்சி-2

‘இங்கே புத்தகங்கள் சகாய விலைக்கு அடிச்சுத் தரப்படும்’ – போர்டு பார்த்து நுழைந்தார் கவிஞர் சூரியவெறியன்.

ஆறு வருடங்களாகக் கவிதைகள் எழுதி வருகிறார். சுனாமி வந்தபோது, சோகத்தில் சரக்கடித்துவிட்டு முதல் கவிதை எழுதினார். ‘ஏய், கடல் தாயே’.

அந்தக் கவிதைக்குப் பாராட்டுக் கடிதங்கள் பின்னூட்ட சுனாமியாகக் குவிந்தன. கடல் மீண்டும் பின்வாங்கியது. அடுத்த கவிதை தமிழகத்தை வெயில் வாட்டியபோது. ‘ஏய், சூரியத் தேவனே’. பின்னர், மழை வெள்ளத்தில் மக்கள் துன்பப்பட்டபோது, ‘ஏய், வருண தேவனே’. மூன்று கவிதைகள் எழுதிய பிறகு சூரியவெறியனுக்கு மொழி வசமானது.

2009-ல் இலங்கை அரசை எதிர்த்து நடந்த கவியரங்கில், ‘ஏய், ராஜ பக்ஷேவே’ என்று கவிதை வாசித்தார். அந்தக் கவிதை அவரைச் சர்வதேச தமிழ்ச் சமூகத்துக்குப் பரவல்ஆக்கியது.

சொந்தக் காசில் இரண்டு கவிதைத் தொகுப்புகள் ஏற்கெனவே கொண்டுவந்திருந்தார். ‘இந்த நூற்றாண்டின் முக்கியமான கவிதைத் தொகுப்பு இது’ என்று வேறு வேறு பெயர்களில், பல்வேறு மொக்கைப் பத்திரிகைகளில் இவரே இவரது நூலை விமர்சித்தார். அப்படியும்கூட சரக்கு போணி ஆகவில்லை. கையைச் சுட்டுக்கொண்டார்.

கடைசியாகத்தான் இந்த பதிப்பாளரைக் கண்டறிந்தார். ‘பாஞ்சாயிரம் வெட்டுங்க 600 காப்பி போட்டுத்தாரேன். 300 உங்களுக்கு. 300 எனக்கு. புக் ஃபேர்ல ஒரு ஸ்டால் எடுத்து இருக்கேன். உங்க போட்டோ போட்டு ஜம்முனு ஏழெட்டு ஃப்ளெக்ஸ் போர்டுகூட வாசல்ல ஒட்டிரலாம். வைரமுத்து, பா.விஜய், பக்கத்துல நீங்கதான். ஆனா ஒண்ணு, ஃப்ளெக்ஸ் செலவு உங்களோடதுதான்!’ – இந்த டீலிங் சூரியவெறியனுக்குப் பிடித்து இருந்தது.

‘சூரியனைக் கண்டு நாணும் நிலவு’ கவிதைத் தொகுதி ரெடி. முதல் கவிதை ‘ஏய், சூரியனே…’ என்று தொடங்கியது!

காட்சி-3

வருத்தம் இல்லா வாசகர் சங்கத்தின் பொதுக் குழு கூடியது.

தலைவர் கைப்புள்ள போதையில் இருந்தாலும், தெளிவாகப் பேசினார். ‘எவ்வளவு நாளைக்குத்தான் நாம் எல்லாம் வாசகர்களாவே இருக்கிறது. இன்னிலேர்ந்து நாமளும் எழுத்தாளன்தான். எவனும் நம்மளை ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டேன்னாலும், நாமளா போயி புக் ஃபேர் ஜீப்புல ஏறிரணும்.’

‘ஆமா, நாமளும் எழுத்தாளன்தான்… நாமளும் எழுத்தாளன்தான்’ – எக்கோ அடித்தனர் எல்லோரும். கண்களில் இலக்கிய வெறி குத்தாட்டம் போட்டது.

வ.இ.வா.ச-வின் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் பிளாக்கர்கள். கூகுள்காரன் இலவசமாக பிளாக் எழுதிக்கொள்ள இடம் கொடுத்ததுமே, இணையத்தில் துண்டு போட்டு இலக்கியத்துக்குள் குடிசை போட்டவர்கள். இன்டர்நெட்டில் டன் கணக்கில் எழுத்துக் குப்பை கொட்டுபவர்கள்.

இவர்களே ஒருவருக்கு ஒருவர் ‘எழுத்துச் சூறாவளி’, ‘இலக்கியச் சுனாமி’ என்று பட்டம் கொடுத்துக்கொண்டவர்கள். அவ்வப்போது, மொண்ணையாக ஏதாவது கூட்டம் போடுவார்கள். மைக் பிடித்து சப்பையாகப் பேசுவார்கள். இந்த இலக்கிய நிகழ்வுகளின் போட்டோக்களை இன்டர்நெட்டில் ஒரு ரவுண்டு ஓட்டுவார்கள்.

பாஞ்சாயிரம் பதிப்பகத்துக்கு, வருத்தம் இல்லா வாசகர் சங்கத்தின் தீர்மானம் காதுக்கு வந்தது. ‘புக்கு போட எங்கிட்டே வாங்க!’ என்று சங்க உறுப்பினர்களுக்கு மெயில் பறந்தது. அவரவர் பிளாக்கில் இருந்த ஓட்டை, உடைசல், தட்டுமுட்டுச் சரக்குகளை பென் டிரைவில் அள்ளிக்கொண்டு எல்லோரும் பாஞ்சாயிரம் பதிப்பகத்துக்கு நடையைக் கட்டினார்கள்.

‘நாரதா! போதும்… போதும்… இந்த ஆபா சத்தை எல்லாம் நிறுத்து’ – சரஸ்வதி தேவி அலறினார்.

‘நாராயண… நாராயண’ சொல்லிக்கொண்டே விர்ச்சுவல் டி.வி-யை ஆஃப் செய்தார் நாரதர்.

‘நாரதா! ஏன், பூலோகவாசிகள் இப்படி இலக்கிய எய்ட்ஸ் பிடித்து அலைகிறார்கள். எல்லோரும் எழுத்தாளன் ஆகிவிட்டால், யார் தான் வாசகனாக இருப்பது?’

‘தாயே! இதற்கே இவ்வளவு டென்ஷன் ஆனால் எப்படி? இன்னும் புலம்பெயர் எழுத்தாளர்கள், புண்ணாக்கு வியாபாரிகள், புரவலர்கள், புரட்சியாளர்கள், சாமியார்கள் என்று ஏகப்பட்ட காட்சிகளை உங்களுக்குக் காட்டலாம் என்று வைத்திருந்தேனே?’

‘அதை எல்லாம் நாமே புத்தகக் காட்சிக்குப் போய் நேரில் பார்க்கலாம் நாரதா. எனக்கு மக்கள் மீது கொஞ்சநஞ்ச நம்பிக்கை இன்னமும் இருக்கிறது!’

திருவிழா களை கட்டத் தொடங்கியது. நகரின் மத்தியில் இருந்த பெரிய மைதானம் பரபரப்பானது. தச்சர்கள் ஆணி அடித்துக்கொண்டே இருந்தார்கள். அடிக்கப்படும் ஒவ்வோர் ஆணியும் இலக்கியத்தின் மீது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஸ்டால் களுக்குள் நடந்துகொண்டே இருந்த எழுத்தாளர் கள் காலில் யாராவது ஆணியை அடித்துத் தொலைக்கக் கூடாதா என்று வாசகர்கள் சிலர் அங்கலாய்த்தார்கள்.

நடைபாதை எங்கும் எழுத்தாளர்களின் விதவிதமான போஸ்களில் விசித்திர பேனர்கள். ‘புத்தகத்தில் நீச்சல் அடிப்போம். நீச்சல் அடித்துக்கொண்டே புத்தகம் படிப்போம்’ என்று என்றோ ஓர் அரசியல்வாதி குன்ஸாக எங்கேயோ அடித்துவிட்ட சொல்லாட்சியை வைத்து, விளம்பரங்கள் செய்யப்பட்டன. உலகம் முழுவதும் இருந்து தமிழ் எழுத்தாளர்கள் குவியத் தொடங்கினார்கள். இவர்களில் முதல் முறை புக் போடும் எழுத்தாளர் (நன்றி: பாஞ்சாயிரம் பதிப்பகம்), ஆயிரம் தலைப்பில் கவிதை எழுதிய அபூர்வ கவிஞர், செக்ஸ் எழுத்தாளர், பக்தி எழுத்தாளர் என்று கலந்துகட்டி மிக்சராக இருந்தார்கள்.

நாரதரும் சரஸ்வதியும் மாறுவேடத்தில் வந்தார்கள். யாரும் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக நாரதர் தன் கன்னத்தில் மச்சம் ஒட்டி இருந்தார். சரஸ்வதியோ மாடர்னாக சுடிதாரில் வந்துஇருந்தார். அரங்குக்கு முன் இருந்த மேடையில், மல்லி சின்னசாமி பேசிக்கொண்டு இருந்தார். ‘இப்படித்தான் பார்த்தீங்கன்னா… 1968-லே நம்ம அமைச்சர்வாளை நான் தி.நகர்ல பார்த்தப்போ, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’னு சொன்னாரு. எப்படியாப்பட்ட தத்துவம்… எப்படியாப்பட்ட மனுஷன்.’ மல்லியும் ஒரு பார்ட் டைம் இலக்கியவாதிதான். பாரு முதலான எழுத்தாளர்களுக்குப் பண உதவி செய்ததாலேயே இலக்கியவாதி ஆனவர். அவரது பெயரில் ஐம்பத்துச் சொச்சம் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.

அடுத்ததாக கவிஞர் கோ கல்லூரி, கவிதை பற்றிப் பேச ஆரம்பித்தார். ‘கவிதைங்கிறது என்னன்னா, கவிதையா எழுதுறது’-பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்த சரஸ்வதிக்குத் தமிழின் எதிர்காலம் மீதான அவநம்பிக்கை அதிகமாயிற்று.

நாரதரோடு மெதுவாக ஸ்டால்களுக்குள் நகர ஆரம்பித்தார்.

அரங்க வாசலில், ‘நூறு இருநூறு, நூறு இருநூறு’ என்று முனகியபடியே ஒருவர் அங்குமிங்கும் நடந்துகொண்டு இருந்தார். என்னஎன்று விசாரித்துப் பார்த்ததில், பாருவின் ‘மோகம்’ சூப்பர்ஹிட் ஆகி, பிளாக்கில் விற்றுக்கொண்டு இருந்தது. விழாவுக்குப் பிறகு, இயக்குநரைத் திட்டி பாரு இன்டர்நெட்டில் எழுதியதற்குக் கைமேல் பலன்.

‘ஜருகண்டி ஜருகண்டி’ என்று நாரதரையும், சரஸ்வதியையும் தள்ளிவிட்டு, ஒரு கூட்டம் வெறித்தனமாக முன்னேறியது.

‘நாரதா! இவங்களுக்குள்ளே இவ்ளோ வாசிப்பு ஆர்வமா?’

‘நீங்க வேற தாயே… இவங்கள்லாம் எழுத்த£ளர் சுய மோகனின் ரசிகர் மன்றக் கண்மணிகள். முன்னால போறவருதான் சுய மோகன். சினிமாவுக்கு எல்லாம்கூட வசனம் எழுதுவாரு. அவரு ஓர் இலக்கிய டப்பாஸ். எப்பவுமே நாலு பேரு பின்னால இப்படித்தான் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ பாடிக்கிட்டே போவாங்க.”

‘சுமோ… சுமோ’ என்று பேக்ரவுண்டு வாய்ஸ் கேட்கிற மாதிரி இருந்தது சரஸ்வதி தேவிக்கு.

கோன் ஐஸைச் சப்பிக்கொண்டே புத்தகங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டுபோன கூட்டத்தைக் கண்டு, தேவி கொஞ்சம் அதிருப்தி அடைந்து இருந்தார். அதற்கு ஏற்றாற்போல ஒரு குண்டான பெண்மணி அலுத்துக்கொண்டே போனார். ‘இங்கன சுத்திப்பார்க்குறதுக்கு ஒண்ணுமே இல்லையே? இதுக்குப் போயி எதுக்கு அஞ்சு ரூவா வாங்குறானுங்களோ!”

”ச்சே! மக்களுக்கு அறிவு விருத்தி செய்துகொள்வதில் இவ்வளவுதான் ஆர்வமா நாரதா?’

‘அவர்களைக் குறை சொல்லியும் பிரயோசனம் இல்லை தாயே! இங்கே பாருங்கள்… இரண்டு புத்தகங்களை…’

‘ஒல்லியான நீங்கள் குண்டாவது எப்படி?’ ‘குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாவது எப்படி?’ – ஒன்று எடுத்தால் மற்றொன்று இலவசம் என்ற அறிவிப்போடு.

‘அறிவினைப் போதிப்பது என்பதை அரசாங்கமே வணிகமாக்கிவிட்ட நிலையில், இவர்களைக் குறை சொல்லி என்ன பிரயோசனம் நாரதா!’

திருவிழாவில் தொலைந்துபோன குழந்தைகள் மாதிரி முழித்துக்கொண்டு சிலர் வலதும், இடதுமாகப் பிரக்ஞை இன்றிப் பார்த்தவாறே போய்க்கொண்டு இருந்தார்கள். ‘நிச்சயமாக இவர்கள் பிளாக்கர்கள் தாயே. அடுத்த வருடம் எழுத்தாளர் ஆகிவிடுவார்கள். இன்டர்நெட்டில் தமிழ் வாழ்வதே இவர்களால்தான்.’

இரண்டு பிரக்ஞையற்றவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டார்கள்.

‘நீங்க… நீ… மம்பட்டியான்தானே?’

‘நீங்க… நீ… வெட்டியான்தானே?’ – இன்டர்நெட் எழுத்தாளர்களின் புனைபெயர்களுக்குப் பின்னால் கதையோ, காரணமோ எந்தக் கண்றாவியும் கிடையாது. ஆரத் தழுவிக் கொண்டார்கள். போட்டோ எடுத்துக்கொண்டார்கள். மறு நாள் இந்த சந்திப்பைப் பிளாக்கில் போட்டோவோடு போட்டு, விழா மாதிரி கொண்டாடுவார்கள்.

இப்படியாகவே பத்து நாட்கள் கழிந்தன. திருவிழா முடிவுக்கும் வந்தது. உழுதவர்கள் கணக்குப் பார்க்கத் தொடங்கினார்கள். வழக்கம்போல உலக்கைதான் எஞ்சியது. காசு கொடுத்து புக்கு போட்டவர்களுக்கு ‘எழுத்தாளர்’ பட்டமாவது மிஞ்சியது.

எது அதிகம் விற்றது என்று சரஸ்வதி தேவிக்கு ஒரு க்யூரியாசிட்டி. கண்காட்சி நிர்வாகியிடம் விசாரித்து வர நாரதரை அனுப்பிவைத்திருந்தார்.

திரும்பிய நாரதர் சொன்னார், ‘தாயே! இவ்வளவு பெரிய வெற்றியை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லையாம். மொத்தம் நான்கு லட்சத்து இருபத்து நாலாயிரத்து முன்னூற்றி பன்னிரெண்டு ‘வடை’கள் கேன்டீனில் விற்றுத் தீர்த்திருக்கின்றன!’

இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை ஒட்டுக் கேட்டுக்கொண்டு இருந்த ‘ஒல்லியாக இருக்கும் நீங்கள்’ பதிப்பாளர், அவசர அவசரமாக ஒரு டைட்டிலை நோட் செய்துகொண்டார். ‘வடை போடுவது எப்படி?’ அடுத்த வருடத்தில் சூப்பர் செல்லர்!

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *