சுரேஷ் அன்று பரவசமாய் காணப்பட்டான், அவனுடைய மகிழ்ச்சியை எப்படி சொன்னால் பொருத்தமாய் இருக்கும்? ம்.ம்.. முதன் முதலில் ஒரு இளம் பெண் ஒரு இளைஞனை அன்புடன் பார்க்கும்போது அந்த இளைஞனுக்கு ஏற்படும் ஒரு இன்ப அனுபவத்தை இதனோடு ஒப்பிடலாமா? அல்லது உறவினர் ஒருவர் ஏராளமான சொத்துக்களை இவன் பெயரில் எழுதி வைத்துவிட்டு போய் சேர்ந்துவிட்டார் என்று கேள்விப்பட்டவுடன் ஒரு மகிழ்ச்சி உள் மனதில் பரவுமே அந்த அனுபவத்தை இந்த மகிழ்ச்சியோடு ஒப்பிடலாமா? எந்த விதமான மகிழ்ச்சியை எடுத்துக்கொண்டாலும் சரி சுரேஷ் இன்று தலை கால் புரியாமல் சுற்றுகிறான் என்றால் அது மிகையான கற்பனை அல்ல !.எதற்காக இந்த சந்தோசம்?
இந்த நாற்பத்தைந்து வருடங்களில் அவனுடைய பள்ளிப்பருவத்தைவிட்டு விட்டு மிச்சமுள்ள முப்பது வருடங்களாக அவனுடைய கற்பனையை ஓட விட்டு பேப்பரில் எழுதி எழுதி கிழித்தது எவ்வளவோ? ஒரு முறை அவனுடைய கற்பனையில் ஒரு முதலையை தூண்டில் போட்டு பிடித்ததாகக் கூறி ஒரு கதை எழுதியிருக்கிறான், உண்மையில் முதலையை அவன் தன் இருப்பத்தைந்தாவது வயதில் பார்த்த பொழுது அவன் தூண்டில் போட்டு முதலையை பிடித்ததாக எழுதியிருந்ததை நினைத்துப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான், நல்ல வேளை யாரும் கேட்கவில்லை எதற்காக சிரித்தாய் என்று.ரயிலைக்கூட அதற்கப்புறம் தான் பார்த்தான்,ஆனால் அவன் கற்பனையில் எல்லா கதைகளிலும் இரயிலை சம்பந்தப்படுத்திவிடுவான், அதுவெல்லாம் அந்தக்காலத்தில் வெளிவந்த திரைப்படங்களின் உபயம். ரயிலை நேரில் பார்த்தவுடன் இவ்வளவு பெரிய உருவத்தை தன் கதைகளில் சர்வ சாதாரணமாய் உலாவ விட்டதற்காக தன்னையே பாராட்டிக்கொண்டான்.
முதலையை கூட சுருக்கு போட்டு பிடிப்பதாக தன்னுடைய கதையில் கொண்டு வந்தான்,உபயம் நேசனல் ஜியாகிரபிக் போன்ற தொலைக்காட்சிகள். இப்படியெல்லாம் இவன் தன் கற்பனையை ஓட விட்டு எழுதிய கதைகள் ஏன் பத்திரிக்கைகளிலோ அல்லது மற்றவைகளிலோ பிரசுரமாகவில்லை என்று மண்டையை உடைத்துக்கொள்வான். அப்போதைக்கப்போது தன் திறமையை புரிந்துகொள்ளாதவர்கள் இவர்கள் என மனம் சமாதானப்படுத்திக்கொள்வான்.
வருடா வருடம் அவன் அம்மாவும், அதன் பின் மனைவியும் இவன் கதை எழுதி சேமித்து வைக்கும் பேப்பர்களுக்கு ஏதேனும் அலுமினியம் அல்லது பிளாஸ்டிக் குடம் வாங்கிவிடலாம் என்று பெரு நம்பிக்கையோடு காத்திருப்பர் என்றால் இவன் எழுதித்தள்ளும் பேப்பர்களை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்களேன்.
உள்ளூரில் எழுதித்தள்ளிய கதைகளை பார்த்த இவன் நண்பர்கள் மாப்பிள்ளே ஒரு நாடகம் எழுதிக்கொடுடா என்று எல்லா திருவிழாக்களிலும் இவன் நாடகத்தை வாங்கிக்கொண்டு பின் இதை இப்படி மாத்திக்கொடு அப்படி
மாத்திக்கொடு என்று கடைசியில் இவனே நான் எழுதிய கதை இதுதானா என திகைத்து நிற்பான்.
நல்ல வேளை அவன் அப்பா புத்திசாலி! இவனை ஒரு குமாஸ்தா வேலைக்கு படிக்க வைத்து வேலையும் வாங்கிக்கொடுத்தார், காரணம் தன் செலவில் இவன் கதை எழுதி செலவு வைக்கும் பேப்பர் தொகை அவன் அலுவலக கணக்கில் மாறட்டுமே என்ற எண்ணம் கூட இருக்கலாம்.அதே போலவே அவனும் அலுவலகத்தில் கூட்டிப்பெருக்கும் பெண்ணிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். ஒரு பக்க வேஸ்ட் பேப்பர், மற்றும் கசங்கிய ஓரளவுக்கு எழுத முடிகிற பேப்பர்களை தனியாக எடுத்து அவனிடம் கொடுத்து விட வேண்டும், அவன் ரூபாய் பத்து கொடுத்துவிடவேண்டும், இப்படியாக இவன் கதை எழுதும் திறமையால் அந்த அலுவலகம் கசங்கிய பேப்ப்ர்கள் இல்லாமல் சுத்தமாக இருந்தது. இவன் ஒப்பந்தப்படி பெற்றுக்கொண்டு எழுதித்தள்ளிய பேப்பர்களை வீட்டிற்கு கொண்டு சென்று மனைவியிடம் காட்ட அவள் அதை பாத்திரக்காரனுக்கு போட்டு ஏதேனும் பொருளை பெற்றுக்கொள்வாள். பத்து ரூபாயில் இப்படு ஒரு வரும்படியை பார்த்தாள் அவன் மனைவி.ஆனால் அலுவலக செலவு கணக்கில் பேப்பர் கணக்கு எகிறியிருந்தது.
ஒரு சில நேரங்களில் இவன் தன்னை மற்றவா¢டம் அறிமுகப்படுத்திக்கொள்ளும் பொழுது தன்னை கதாசிரியர் என்று சொல்வான்,ஒரு சிலர் அப்படியா! என வியந்து அவனை மா¢யாதையுடன் பார்ப்பர், ஆனால் ஒரு சிலர் வம்புக்கென்றே நீங்கள் எழுதியது எந்த பத்திரிக்கையில் வந்துள்ளது என்று துருவி துருவி கேட்டு இவனை
இம்சைபடுத்துவர்.ஒரு கட்டத்தில் இவன் மனம் நொந்து கவிதைக்கு மாறலாம் என முடிவு செய்து கற்பனை குதிரையை ஓட்டிப்பார்க்க அது வேகமாக ஓடி பின் சுணங்கி பின் புறப்பட்ட இடத்துக்கே வந்துவிட்டது.கதாசிரியர் ஆவதுதான் இந்த இலக்கிய உலகத்துக்கு தான் செய்யும் பெரிய சேவை என பின்னர் முடிவு செய்துவிட்டான்.
ஆனால் இலக்கிய உலகம் தன்னை கண்டுகொள்ளவில்லையே என்று அவ்வப்பொழுது வருத்தப்பட்டுக்கொள்வான்.
இப்படியாகப்பட்ட எழுத்துலகில் இவன் சோகமயமாய் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த பொழுது இவன் கசங்கிய பேப்பரில் எழுதியிருந்த இவன் கதையை பார்த்த கணிணி நிபுணத்துவம் பெற்ற அலுவலக நண்பன் ஒருவன் இவன் கதையை கணிணியில் ஏற்றி வலைதள கதை பதிப்பகத்துக்கு அனுப்பி வைக்க அது பதினைந்து நாட்களுக்குள் வலைதளத்தில் வெளியிடப்பட்டது.இது தான் சுரேஷின் இந்த கரைபுரண்ட சந்தோசத்துக்கு காரணம்.
சுரேஷ் இப்பொழுது தன்னை ஒரு எழுத்தாளன் என்று தன்னை தைரியமாக சொல்லிக்கொள்கிறான். பத்திரிக்கையில் வெளிவந்துள்ளதா என்று கேட்பவர்களிடம் இது வலைதளத்தின் காலம். www…இந்த வலைதளத்திற்குள் சென்று என் கதையை படித்து பாருங்கள் என்று என்று தைரியமாக சொல்கிறான். இப்பொழுதெல்லாம் இவனை எங்காவது நீங்கள் பார்த்தால் யாரிடமாவது www… சென்று …என்று சொல்லிக்கொண்டிருப்பான்.பாதிப்பேர் இவனை கண்டு மிரள்வதாகவும் கேள்வி…
எல்லோருமே எழுதி எழுதி கிழித்து எழுத்தாளர்கள் ஆனவர்கள் தான். பாராட்டுக்கள்.
நானும் உன்னைப் போலத்தான் ‘எழுத்து’ தளத்தில் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
It motivates me and I feel relax from my work tension….thanks for your short story…thank you….keep motivating us ….all the best
உண்மையாகவே அற்புதமான படைப்புகள்… என் போன்ற பிற மாநிலத்தில் வேலை செய்பவர்களுக்கு தமிழ் மொழியை தொடர்ந்து வாசிக்க உதவுகிறது.