எல்லா பொறியியல் கல்லூரிகளையும் போல XXX கல்லூரியும் நகரத்தை விட்டு தள்ளி, நெடுஞ்சாலை ஓரம் தனியாக நின்றது. உள்ளே மின்னியல், மின்னணுவியல் என எல்லா இயல்கலும் தனி தனி கட்டிடங்களாக வீற்றிருக்க, சற்று தள்ளி நின்ற பெண்கள் விடுதி இரவு 8:30 மணிக்கு உச்ச ஸ்தாதியில் இயங்கி கொண்டிருந்தது.
அனைத்து பொறியியல்களும் ஒன்றாக கூடி பொரியலிலும் சாம்பாரிலும் குறை கண்டு பிடித்தனர்.
“அக்கா இந்த கிலியர அப்பளம் எங்க வாங்குறிங்க?” – மெஸில் வேலை செய்யும் பெண்ணிடம் ரேஷ்மி கேட்க, “போ கண்ணு” என்று அவர் வெட்க பட்டு அதை பாராட்டாக்கினார். குட்டி குட்டி கூட்டங்களாக மெஸ் அறையே கலைகட்டி இருக்க, அதில் அதிகம் சத்தமிட்டு கொண்டிருந்த ஒரு கோஷ்டியின் நடுவில் இருந்த என்னை, வழக்கம் போல் நடக்கும் கலாட்டாவில் பங்கெடுக்க விடாமல், டான் ப்ரௌன் இம்ஸித்துக்கொண்டிருந்தார். Angels and Demons-ல் கார்டினால்களை கடத்தி கொல்வது யாராக இருக்கும் என்பதிலேயே என் 60% மூளை ஆழ்ந்திருந்தது.
“இதெல்லாம் ரொம்ப ஒவெர்” இன்பா என் அருகில் வந்து சொன்னாள். இன்பா என்னோடு ஒரே அறையில் இருக்கும் என் ஆருயிர் தோழி. இன்பத்திலும் துன்பத்திலும் என் உடன் இருப்பவள். “என்ன ரீ.. என்னாச்சு?” என்றேன்.
“என்னவா? எரும இவ்வளோ நேரம் நான் சொன்னதே உன் காதுல ஏறலயா?” என்று என் முதுகில் ஒன்று வைத்தாள்.
“என்ன உன்னோட பெர்ஃபார்மன்சே சரி இல்லயே.. மூட் ஔட்டா?”என்று சரண்யா முடிப்பதற்குள்,
“ஆமா மூட் ஔட் ஒன்னு தான் கொரச்சல்… தேவியார் புக்ல மூழ்கி இருகாங்க” என்று இன்னொரு அடி வைத்தாள் இன்பா.
கிடைத்தது ஒரு சாக்கு என்று கோபமாக எழுந்து அறைக்கு சென்றேன். என்னவெல்லாம் செய்ய வெண்டி இருக்கு, ஒரு புக் படிக்க! என்று மீண்டும் A & D –ல் மூழ்கினேன்.
ஒரு வழியாக உணவு முடிந்து, விடுதி அதன் வழக்கமான அடுத்த கோலம் பூண்டது. சிஸ்டம்கள் எல்லாம் உயிர் பெற, ஒரு அறையில் கரீனா கபூர் ஷஹித் கபூரை வம்பிழுக்க, மற்றொன்றில் ஷாருக் கஜொலை சீண்டி கொண்டிருந்தார். என் மானிடர் திரையில் ஹெக்டர்(Hector)-உம் அக்கிலஸும் (Achilles) ஆக்ரோஷமாக சண்டையிட்டனர். அதை ஆறு பேர் பார்த்து கொண்டிருந்தோம் (A & D –லிருந்து எப்படி Troy-க்கு வந்தேன் என்று தானே கேட்கிறீர்கள்? அதற்கு தானே இன்பா இருப்பதே..) அக்கிலஸின் குதிங்காலில் அம்பு பாய்ந்து எல்லாம் முடியும் பொழுது மணி நள்ளிரவு 12:00 ஐ தொட்டிருந்தது. சிஸ்டம்கள் அடங்கி அலைபேசிகள் உயிர் பெற, மாடிப்படி சந்துகளிலும் காரிடர்களிலும் காதல் கசிந்தது.
அப்பாடா என்று மீண்டும் A & D –ஐ தொட்டேன். விளக்கை அணைத்தால் தான் ஆயிற்று என்றாள். மீண்டும் இன்பா தான்! பல நேரங்களில் நான் அவளை படுத்துவதற்கு இப்படி சில நேரங்களில் பழிவாங்குவாள். “உன்னோடெல்லாம் மனுஷி இருப்பாளா..” என்று முணு முணுத்து கொண்டு காரிடருக்கு வந்தேன்.
எங்களுடைய அறைக்கு பக்கத்தில் மெஸையும் எங்கள் அறையையும் பிரிதுக்கொண்டு ஒரு குட்டிச் சுவர் இருக்கும். அதில் சென்று A&Dயுடன் அமர்ந்தேன். ரபர்ட் லாங்க்டனுடன் ரோமின் வீதி வீதியாக, சர்ச் சர்சாக சுற்றி முடித்து நிமிர்ந்த போது மணி 3:30 -ஐ தாண்டியிருந்தது. அலைபேசிகளும் அதில் காதலித்தோரும் கூட உறங்கி இருக்க, மிரட்டும் நிசப்தத்தில், என் அறையின் மின்விசிறி மட்டும் அச்சுறுத்தும் வகையில் சத்தமிட்டு கொண்டிருந்தது.
த்ரில்லெர் படித்த பாதிப்பு வேறு சேர்ந்துகொள்ள, வேகமாக அறைக்கு சென்று இன்பா பக்கதில் படுத்து கொண்டேன். படி படியாக நான் உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருக்க, அப்போது தான் அந்த நடுங்க வைக்கும் ஒலி கேட்டது!!
உள்ளே சென்று படுத்து சற்று நேரத்தில் அந்த சத்தம் கேட்டது. தூரத்தில் ஒரு அலறல் சத்தம்!
திடுக்கிட்டு கண் விழித்தால், நிஜமா இல்லை பிரமையா என்ற குழப்பம். கனவு போலும் தெரியவில்லையே என்று எண்ணும் போதே அந்த அலறல் மீண்டும் கேட்டது. ஒரு பெண்ணின் அலறல்! சட்டென்று நான் எழுந்து அமர்ந்த வினாடி அறை விளக்கு போடப்பட்டது. இன்பா தான்! அமர்ந்திருந்த என்னை பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டு பின் தெளிந்தாள். “ஏதோ சத்தம்..” என்றாள். முகத்தில் பயம், குழப்பம், தூக்கம் எல்லாம் கலந்திருந்த்து.
இருவரும் ஜெஸ்ஸியை எழுப்ப திரும்பினோம். ஜெஸ்ஸி,என்னோடும் இன்பாவோடும் அறையை பகிர்பவள். இறுதி ஆண்டு மாணவிகளை அறைக்கு மூவறாக பிரித்திருந்தனர். இப்போது தான் ஜெஸ்ஸி விழித்திருப்பதை கவனித்தோம். கண்கள் திறந்திருக்க அசையாமல் படுத்திருந்தாள். முகத்தில் 100% பயம் மட்டுமே இருந்தது.
“ஜெஸ்ஸி… சத்தம் கேட்டுசில்ல? “ என்றேன். “ஆமா..”என்றாள். குரலில் லேசான நடுக்கம்.
பின், சட்டென்று “ஒரு வேள கனவா இருக்குமோ?” என்றாள் நம்பிக்கையோடு.
இன்பா ‘அப்படியா’ என்பது போல் என்னை பார்க்க, “லூசு.. மூணு பேருக்கும் ஒன்னாவா கனவு வரும்?” என்றேன் ஜெஸ்ஸியை பார்த்து. “அதானே..” என்றாள் இன்பா.
அடுத்த நொடி மூன்றாவது முறையாக அந்த அலறல் கேட்டது. இப்போது மிக அருகில்! என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை, எனினும் எதோ சொல்கிறாள். ஏதோ ஒரு வார்த்தை,பயத்தில் உயிரை பிடித்துக்கொண்டு கத்துவது போல் இருந்தது. பொறுத்தது போதும் என்று கதவை நோக்கி விரைந்தேன். அதனினும் வேகமாக இன்பாவும் ஜெஸ்ஸியும் என்னை அடைந்து, இருபுறமும் பற்றி தடுத்தனர்.
“என்ன பண்ண போற?” – இன்பா
“யாரோ பொண்ணு ரீ.. “
“பொண்ணு தான்னு யார் சொன்னா உனக்கு?” – ஜெஸ்ஸி
“பின்ன?! பேயா.. லூசா நீ?!” பின், இன்பாவை பார்த்து, “தெறக்கலாம் இன்பா.. யாராவது ஸ்டுடென்டா இருந்தா?” என்றேன் கண்டிப்பாக.
ஓரு முடிவுக்கு வந்தவளாய் இன்பா கதவை திறக்க,இருவரும் வெளியே வந்தோம். ஜெஸ்ஸி கதவருகில் நின்றாள். அதே நேரத்தில் இன்னும் இரண்டொரு அறைகள் திறக்க ஆங்காங்கே சிலர் காரிடரில் தெரிந்தனர்.
“யாரு கத்தினா திவ்யா?” தள்ளி நின்ற திவ்யாவிடம் சற்று உரக்க கேட்டேன்.
“தெரியல.. என்னனும் புரியல” என்றாள் கவலையாக.
விடுதியின் முன் பகுதி கட்டிடம், ஹெஃஸகன் வடிவில்,நடுவில் திறந்த மைதானமும், அதை சுற்றி ஆறு பக்கங்களிலும் பாதி சுவரும் க்ரில்லும் அடைத்த காரிடருமாய் இருக்கும். நுழைவாயிலுக்கு நேர் எதிர் திசையில் மெஸ், மற்ற நான்கு புறங்களிலும் வாயிலையும் மெஸ்ஸையும் இணைத்துக்கொண்டு மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவிகளின் அறைகள். மெஸ்ஸில் இருந்து இருபுறமும் பின் பக்கம் பிரிந்து சென்ற இறக்கை போன்ற கட்டிடத்தின் அறைகள் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
எங்கள் காரிடருக்கு நேர் எதிர் திசையில் இருந்து, “தீஃப் கர்ல்ஸ்.. ஜுனி கவிதா பாதிருக்கா..” என்றாள் இந்து. “இந்த ரனகளத்துலயும் இவ பீட்டர் கொரய மாடெங்குதே..” என்றேன் இன்பாவிடம். “அவள் தான் அப்ஸ்டெர்ஸ்ல இருந்து கதிடே ஒடி வந்திருக்கா..”என்றாள் இந்து தொடர்ந்து.
விஷயம் வேகமாக பரவ இப்பொது காரிடரில் கூட்டம் அதிகரித்தது. “திருடனா..” என்றும், இப்பொது அறைக்கு சென்று தாளிட்டுக்கொள்வதா.. இல்லை வெளியே செல்வதா என அனைவரும் காரிடரில் குழம்ப, “அப்பாடி.. திருடனா.. “ என்றாள் எனக்கும் இன்பாவிற்கும் பின்னால் நின்ற ஜெஸ்ஸி. இன்பா தலையில் அடித்துக்கொண்டாள்.
அதற்குள் க்ளெர்க் மேடம் (நாயகன் கமல் போல இவர் தான் இங்கு எல்லாம்! ) அனைவரையும் வெளியே செல்ல உத்தரவிட்டார். இந்து அங்கும் இங்கும் ஒடி “கெட் ஔட் ஒஃஃப் தி ஹாஸ்டெல்”என்று கத்தி கொண்டிருந்தாள். நானும் இன்பாவும் அவளுக்கு உதவியாக மெஸ்ஸுக்கு ஒடி, பின்புற கட்டிடத்திற்கு செய்தியை பரப்பி விட்டு திரும்பினோம். ஜெஸ்ஸி அறையை பூட்டிக்கொண்டு எங்களுக்காக காத்திருக்க, அவளோடு சேர்ந்து வெளியே நடந்தோம்.
ஏதோ தோன்ற பின்புறம் திரும்பிப்பார்த்தேன். அரைமணி நேரத்திற்கு முன் நான் அமர்ந்திருந்த குட்டிச்சுவர் என்னை பார்த்து சிரித்தது. என் பார்வையை தொடர்ந்த இன்பா “எப்போ வந்து படுத்த..“ என்றாள் நடந்து கொண்டே.
“அரமணி நேரம் இருக்கும்” என்றேன்.
“இடியட்.. அவன் இந்த பக்கம் வந்திருந்தா வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்” என்றாள் கோபமாக.
“கத்துனா என்ன பண்றதுனு குத்திருப்பான்.. கத்தி வச்சிருந்திருப்பான்ற? “ என்று சிரிக்க முயன்றேன்..
“பின்ன கடலமுட்டாயா வச்சிருப்பான்?” என்றாள் கடுப்பாக.
இதற்குள் நான்கு அறைகளை கடந்து என் வகுப்புத்தோழிகளின் அறையை அடைந்திருந்தோம். வனி, சாரு, சுஜி, லாவி –இவர்கள் அறை தான் அது. (இதில் மட்டும் என்ன நான்கு பேர் என்று தானே யோசிக்கிறீர்கள்? நான்கென்ன இதில் பல நேரங்களில் ஆறு பேர் கூட இருப்பார்கள். அதிகமாக ஆட்டம் போடும் கோஷ்டிகளில் முக்கியமானவர்கள். இவர்களோடு நானும் இன்பாவும் அடிக்கடி சேர்ந்துக்கொள்ள கலைக்கட்டும்.
பேசிக்கொண்டே நடந்த நான் முதலில் அதை கவனிக்கவில்லை. ஜெஸ்ஸி தான் முதலில் அந்த அறை முன் தயங்கி நிற்க, பின் நானும் இன்பாவும் அதை கவனித்தோம்.
வனிதாவின் அறை வெளியே பூட்டப்படவில்லை மாறாக உள்ளே தாளிட்டிருந்தது. ஜெஸ்ஸி முகத்தில் மீண்டும் பயம் குடியேற, இன்பா அந்த கதவை தயக்கத்துடன் தட்டினாள். உள்ளிருந்து எந்த சத்தமும் இல்லை, ஆனால் விளக்கு எரிவது தெரிந்தது.
நான் சென்று பலமாக கதைவை தட்டினேன் “வனி… சாரு..”. உள்ளே லேசான சலனம். இப்போது இந்தப்பக்க அறைகளில் அனைவரும் வெளியேறி இருக்க நாங்கள் மூவர் மட்டும் காரிடரில் நின்றிருந்தோம். இன்பா என் கையை பிடித்துக்கொண்டாள். பயத்தை விழுங்கிக்கொண்டு “தெறக்குறிங்களா இல்லையா இப்போ!..” என்று கோபமாக கதவை தட்டினேன்.
இப்போது தான் மற்றொரு விஷயம் உரைத்தது. பலமாக காற்று வீசினாலே ஆடும் அந்த அறை கதவு இப்பொது சிக்கென்று பிடித்திருந்தது. தட்டுவதை நிறுத்திவிட்டு விரல்களால் தள்ளிப்பார்த்தேன். “அந்தப்பக்கம் யாரோஓஓ..” இன்பா என் காதருகில் கிசுகிசுத்தாள். சென்று வாட்ச்மேனை அழைத்து வரலாமா என்று யோசிக்கும் வினாடி “ ஜென்ஸ்.. ஜெனி தானே..” என்றது மெலிதாக சாருவின் குரல்.
“ஆமா சாரு.. நான் தான்.. என்னாச்சு? மொதல கதவ தெற..”
அந்த கதவு திறக்க நாங்கள் கண்டக்காட்சி – மருந்திற்கும் தூக்கமில்லாத ஆறு முகங்கள்! (மீனுவையும் மதுவையும் சேர்த்து). எல்லா நெற்றிகளிலும் புதிதாக திருநீர்! ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றோம்.
“போலாம் வாங்க” என்று ஜெஸ்ஸி முன்னே விரைந்தாள்.
“திருடன்னு ஹாஸ்டலே அல்லோலக்கல்லோலப்படுது.. உள்ள என்னடி பண்றிங்க..” என்றேன் எரிச்சலோடு.
“வேறென்ன பூஜைதான் நெத்திகள பாத்தா தெரில..” என்று நக்கலாக கூறி இன்பா என்னை இழுத்துக்கொண்டு முன்னே நடக்க, “யாரும் கலாய்க்க தேவயில்ல” என்றாள் வனி எங்கள் பின் நடந்து கொண்டே.
ஒரு வழியாக வெளியே சென்றடைந்து மாணவியர் கடலில் கலந்தோம். பயம் தெளிந்து அனைவருக்கும் சுவாரஸ்யம் மட்டும் மிச்சமிருந்தது. பதட்டம் குறைய உடன் நின்ற ஆறு பேரையும் நிதானமாக பார்த்தேன். பின் இன்பாவை பார்த்தேன். என் பார்வையின் பொருள் புரிய அவள் குபீரென்று சிரித்தாள்.
“ஹல்லோ… யாரும் சிரிக்க தேவயில்ல்…” என்றாள் வனி வடிவேலு பாணியில்.
“சிரிக்காதரீ இன்பா.. நீங்க உங்க பூஜைய பத்தி சொல்லுங்கபா.. நைட் ப்ரேயரா?”
“நக்கலா.. திடீர்னு பேய்மாதிரி அலறுனா பயமா இருக்காதா.. அதான் ஒரு சேஃப்டிக்கு..” – சாரு
“அடிப்பாவிகளா.. அதுக்காக இப்டியா.. விப்பூதி வச்சுக்கிட்டு உள்ளயே இருந்தா திருடன் விட்றுவானா?”
“திருடன்னு கதவ தெறந்ததுக்கப்புரம் தானே தெரியுது.. நாங்க எனவோ ஏதோனு..” என்று சாரு முடிப்பதற்குள்,
“அதிருக்கட்டும், கதவ என்னடி பண்ணிங்க? அசைக்கவே முடியல..”என்றாள் இன்பா.
“இந்த ரெண்டு குண்டூஸும் இந்தப்பக்கம் முட்டுக்குடுக்கும் போது நீ அந்தப்பக்கத்துல இருந்து அசச்சுடுவியா..” வனியையும் சுஜியையும் சுட்டிக்காட்டி லாவி கலாய்க்க,
“எருமமாடே.. ஐடியா குடுத்ததே நீ தான்.. இப்போ கட்சி மாறியா”என்று அடித்தாள் வனி.
“முட்டுக்குடித்திங்களா?!” என்றோம் கோரஸாக. அடக்கமாட்டாமல் சிரித்த சிரிப்பில் கண்ணீரே வந்தது எனக்கும் இன்பாவிற்கும்.
“ஹல்லோ சிரிக்கறது ஈஸி.. நாங்க பட்டது எங்களுக்கு தான் தெரியும்.. எவ்ளோ நேரம் நானும் சுஜியுமே முட்டுக்குடுக்குறது.. இந்த மொட்டய (சாரு) நிக்க சொன்னா பாடீலாம் வெறப்பா இருக்கு பேஸ்மென்ட் ஆடுது.. வேஸ்ட் ஃபெல்லோ..” வனி தன் பராக்கிரமத்தைப் பற்றி பெருமை அடித்தாள்.
இன்னும் சில வகுப்பு தோழிகள் சேர்ந்து கொள்ள, அவர்களை மாறி மாறி கலாட்டா செய்து சிரித்துக்கொண்டிருந்தோம். அப்போது அஞ்சலி என்னிடம் ஓடிவந்தாள், “சௌமில்லாம் எங்க ஜென்ஸ்?” என்று கேட்டுக்கொண்டே.
திருடன் என்றவுடன் ஒருவழியாக அந்த ஆறு மகா தைரியசாலிகளுடன் வெளியே வந்தால் இன்னொரு அறை வாசிகள் மிஸ்ஸிங். சௌமி, உமா, சீதா, சுமி இவர்களைத்தான் இப்போது தேடவேண்டும். இவர்கள் நால்வரை பற்றி சொல்ல வேண்டுமானால், முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை ஒரே அறையில் ஒன்றாக குப்பைக்கொட்டும் இணைப்பிரியாத் தோழிகள். புத்தகங்கள் வாங்கவென்று இவர்கள் அறைக்கு செல்ல (பாட புத்தகம் என தயவுசெய்து என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள்.. ஆம், நாவல்கள் வாங்கவே சென்றேன்) அதே புத்தகங்களாலேயே நெருங்கிவிட்டோம்.
பொன்னியின் செல்வன் படித்த புதிதில் பல நாட்கள் இரவு உணவை மறந்து அருள்மொழித் தேவர் பற்றியும் சோழர்குல பெருமைப்பற்றியும் பேச்சு நடக்கும். சாண்டில்யன் துவங்கி சுஜாதா வரை, ப்ரைட் அண்ட் ப்ரீஜுடைஸ் முதல் கைட் ரன்னர் வரை அலசல். ஒருமுறை ‘நியூமரிக்கல் மெத்தட்ஸ்’ பரிட்சைக்கு முந்தைய நாள் இரவு பீஷ்மரின் தந்தை ஷாந்தனு முதலாய் ஹஸ்தினாபுர வம்சத்தின் வழித்தோன்றல்களை ஆராய்ந்தோம்! புத்தகங்களை படிப்பது சுகமென்றால் படித்தைப் பற்றிப பேசி அசைபோட்டு ரசிப்பது தனி சுகம்!! அனுபவிப்போர்க்கு மட்டுமே அதன் சுவை புரியும்!
இவர்களுமா பயந்துக்கொண்டு உள்ளே இருக்கிறார்கள்? அஞ்சலியுடன் சேர்ந்து மீண்டும் ஒருமுறை வெளியில் தேடியும் அவர்கள் இல்லை.
“உள்ளே போய் பாக்கலாம்”
“விளையாட்றியா? க்ளெர்க் உள்ள விடாது”
“அது கிட்டயே சொல்லுவோம் வா அஞ்சலி”
வாட்ச்மென் பின்புறம் சென்றிருப்பதாகயும் அவர்கள் வந்தவுடன் பார்க்க சொல்வதாகவும் சொன்னார் இடத்தைவிட்டு அசையாமல்! இது வேலைக்கே ஆகாது என “ஒரு நிமிஷம்க்கா.. ப்ளீஸ்” என்று அவர் பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடினேன், அஞ்சலியும் என் பின்னே வந்துவிட்டாள்.
ஓரளவிற்கு நான் எதிர்பார்த்தது போலவே அறை உட்புறம் தாளிட்டிருந்தது. மறுபடியும் மொதல இருந்தா?! என்றிருந்தது எனக்கு. கதவை தட்டினாள் அஞ்சலி, சலனமேயில்லை.
“உசுரோட தான் இருக்கோம்னு ஒரு வார்த்தை சொல்லிடுங்க போயிட்றோம்!”
என்ன நினைத்தாளோ, “எதுக்கும் வாட்ச்மேனை கூடிட்டு வரேன்” என ஆஞ்சலி ஒடினாள். “ஒன்னும் இருக்காது” என்று நான் காற்றுக்குத்தான் சொல்ல வேண்டியிருந்தது.
என்ன தான் தைரியம் இருந்தாலும் தனியாக அந்த நேரத்தில் காரிடரில் நிற்க கொஞ்சம்.. கொஞ்சமே பயமாக இருந்தது. “இந்த பொழப்புக்கு நீ திருடங்கிட்டயே மாட்டிருக்கலாம்” என்று சத்தமாக சொல்லிக்கொண்டேன்.
“சீதா.. உமா..” சும்மா நிற்பதற்கு தட்டுவோம் என்று தட்டினேன். முழுதாக இரெண்டு நிமிடம் தட்டிய பின், உள்ளிருந்து “வரேன்..” என குரல் கேட்டது! அந்தக்குரலில் பயமோ தயக்கமோ இருக்கும் என நினைத்திருந்தால் நான் ஏமாந்துதான் போனேன். அதில் சலிப்பும் எரிச்சலுமே இருந்தது.
கதவு திறக்க, அந்த பேருதவியை செய்த சீதா என்னை திரும்பியும் பாராமல் சென்று படுத்துக்கொண்டாள்! மீதி மூவறும் கண்ணையும் திறக்கவில்லை!!
“என்னப்பாத்தா எப்படிப்பா இருக்கு இவங்களுக்கெல்லாம்” என அழவேண்டும் போல் இருந்தது.
“எந்திரிங்கடீ எருமைகளா..”
“ஒரு மாடல் ப்ராக்டிக்கல்ஸுக்கு நீ இப்டி காலங்காத்தால படிச்சே ஆகனுமா?”
தலையைத்தூக்கி எரிச்சலுடன் உமா கேட்டக் கேள்வியில் அதிர்ந்துபோனேன்! பரீட்சைக்கு கம்பைன் ஸ்டடி பண்ண வந்தேன் என்றா என்னை இத்தனை நேரம் வெளியே நிற்க வைத்தார்கள்?!
“வந்து படுத்துகோடா செல்லம்” என்று கண்ணைத்திறக்காமல் அவள் பக்கத்தில் இடம்விட்டாள் சுமி. திருடனே வந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பாளோ?!
“அடச்சீ திருடண்டீ ஹாஸ்டல்ல”
“நம்ம ஹாஸ்டல்லயா?” -சௌமி
“இல்ல பாய்ஸ் ஹாஸ்டல்ல.. உன்னோட ஆளுக்கு பயமா இருக்காம் போறியா? அய்யோ வெளில வாங்க மொதல”
அவர்களுக்கு முன்னே நான் வெளியே செல்ல, வாசலில் இன்பா உள்ளே விடுமாறு க்ளெர்கிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள்! என்னை கொன்றுவிடுவது போல் பார்த்தாள்.
எனக்கு பின்னால் பார்வையை செலுத்தி, “என்னடீ பண்ணீட்டிருந்திங்க” சௌமியை கேட்டாள்.
“உலகத்தையே மறந்து தூங்கிட்டு இருந்தது இதுங்க.. நீ தூங்குனவங்கள விட்டுட்டு எழுப்புனவ மேல கோவப்படு.. களிகாலமப்பா இது..”
“தூங்குனிங்களா?!! எப்டிடீ அந்த அலறல் கூட கேக்கலையா?! அசிங்கமாயில்ல?”
“ரியலீ?! வேர் தே ஸ்லீப்பிங்க்? ஐ குட்டின்ட் பிலிவ் இட்” (ஜீ.எஸ். இந்துவே தான்)
“உடனே பீட்டர் விடுட்டு வந்துடுவியே.. சரி, திருடன் எப்டிடீ இங்க வந்தான்?”
“அடுத்த தடவ வரும்போது கேட்டு சொல்றேன்”
“ப்ரில்லியன்ட் ஆன்ஸர்.. கலாய்ச்சுட்டாலாமா.. அதுசரி, திருடன் திருடனு அரமணி நேரமா சொல்ற.. எதடீ திருடுனான்.. மாச கடைசி வேற.. அவனுக்கு பஸ் சார்ஜ் கூட கெடைக்காதே! ஜுவல்ஸ் எதாவது?”
அதையெல்லாம் அறிந்துகொள்ள எனக்கு எங்கே நேரமிருந்தது. ரூம் ரூமாய் தட்டவே பொழுது சரியாய் போயிற்றே. கேள்வியாய் இந்துவை பார்த்தேன்.
“மொபைல் ஃபோன்ஸ்!!”
“வாட்?!”
“யெஸ்.. ஹீ டுக் ஆல் மொபைல்ஸ் ஃப்ரம் த ரூம்ஸ் விச் வேர் நாட் லாக்டு”
“அடப்பாவி பயலே! 80% ஹாஸ்டலோட உயிரையே எடுத்துட்டு போயிட்டான்னு சொல்லு!! மக்கா சோறில்லாம கூட இருப்பாளுக செல் இல்லாம முடியாதே!!”
இந்து சீரியஸாக தொடர்ந்தாள், “அது மட்டும்னா பரவால்ல..”
உண்மையில் என்ன தான் நடந்தது என்று தெரிந்து கொள்ளவேண்டுமே. இந்து சொல்லத்துவங்கினாள்,
“கவிதாவ கத்தி வச்சு மிரட்டி கீழ கூடிட்டு வந்திருக்கான்”
“என்னது?!! அப்போ கவி அவன தூரத்துல பாத்து கத்தலயா??”
“ நோ! ஆக்சுவலி, லாக் பண்ணாத ரூம்ஸ்ல கவி ரூமும் ஒன்னு.. அவன் மொபைஸ் எடுக்கும் போது, ஷீ டர்ன்ட் இன் ஹெர் ஸ்லீப். முளிச்சுட்டானு நெனச்சு கழுத்துல கத்தி வச்சுட்டான்!
அவ அப்பதான் முழிச்சிருக்கா.. அவள எழுப்பி வெளிய கூட்டிட்டு வந்து செயின கலட்டி வாங்கிகிட்டு, கீழ வரைக்கும் அவள கூட்டிடே வந்திருக்கான் தப்பிக்க. சென்டர்ல இருக்க ஓப்பன் ஏரியாக்கு வந்தவுடனே அவன் அசந்த நேரம் கவி அவன் கையை கடிச்சிட்டு உள்ள ஓடிவந்துட்டே கத்திருக்கா.. கடிச்சு தள்ளும் போது கத்தி இவ கைல கொஞ்சம் கிழிச்சிடுச்சு!”
“எங்க”
“இங்க” புறங்கையை தொட்டுக்காட்டினாள்.
“தைரியமா ஆக்ட் பண்ணிருக்கால்ல..”
“இன்ஃபக்ட், அவன் பைப் பிடிச்சு மேல எறத்துக்குள்ள பிடிச்சுடலாம்னு கத்திருக்கா”
கதவை திறக்க யோசித்தது நினைவு வந்தது. கிட்டத்தட்ட அனைவர் முகங்களிலும் சில கணங்கள் இந்த சிந்தனை தான் ஓடியது என்று சொல்லலாம்.
“போலிஸ்க்கு இன்ஃபொர்ம் பண்ணியாச்சா?”
“ப்ரின்ஸி இன்ஃபொர்ம் பண்ணிட்டு வந்துட்டிருக்கார்”
இப்போது நன்றாக விடிந்திருக்க சோதனையெல்லாம் முடிந்து உள்ளே செல்லலாம் என உத்தரவு வந்தது. ப்ரின்ஸியும் வந்துருந்தார். முகத்தில் கவலையுடன் க்ளெர்க் அறையில் கவிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். வலது கையில் ஈரத்துணி சுற்றியிருந்தது. முகம் அழுது வீங்கியிருக்க இன்னும் அழுது கொண்டிருந்தாள். சிறிது அலட்சியத்துடன் தலை நிமிர்ந்து அவள் வகுப்புக்கு செல்வது நினைவு வந்தது. தைரியமான பெண். தன்னால் முடிந்தவரை நன்றாகவே சமாளித்திருக்கிறாள். அவள் தந்தைக்கு அழைத்து விவரம் சொல்லப்பட்டது.
சௌமி அன் கோவுடன் அறைக்கு வந்தோம். மூன்றாம் ஆண்டு மாணவி இன்னொருத்தி அழுதுகொண்டே அறையை கடந்தாள். காரணம் தெரிந்தாக வேண்டுமே நமக்கு! இந்துவை அனுகினோம்.
“அவளோடது காஸ்ட்லி மொபைலாம் அதுல 3000 ருப்பீஸ் பேலன்ஸ் வேற இருந்துச்சாம்”
“அந்த பேலன்ஸ்காகவே ரெண்டு சாத்து சாத்தனும்” என்றேன் அதன் விழைவு தெரியாமல்.
காலையிலேயே எஸ்.ஐ.யும் கான்ஸ்டபிஸ்ஸுமாக முதல் தகவலை சேகரித்துச்செல்ல, மதியம் எ.சி.பி வந்திருப்பதாக அனைத்து ரெப்புகளுக்கும் அழைப்பு வந்தது. அன்புச்செல்வன் ஐ.பி.எஸ். நினைவில் ஆர்வமாக சென்று நாற்பதுகளில் ஒருவரை கண்டு ஏமந்தோம்.
விடுதியில் தங்கியிருக்கும் அனைவத்து மாணவிகளின் கைப்பேசி எண்களும் அவர்கள் அடிக்கடி தொடர்புக்கொள்ளும் உறவினர் எண்களும் வேண்டும் என்றார். லிஸ்ட் எடுக்கும் பணியில் இறங்கினோம். ஏ.சி. கேட்ட லிஸ்டை அறிந்து விடுதுயே கலங்கிப்போனது!
“யார் யார்க்கு பேசினோம்னு ட்ரேஸ் பண்ணுவாங்களா?”
“மெஸேஜ் கூடவா ட்ரேஸ் பண்ணுவாங்க?”
என்பன போன்ற கேள்விகளை சமாளித்து லிஸ்டை முடித்து ஏ.சி.யிடம் கொடுத்து, எங்கள் பங்கிற்கு அவரிடம் கேள்விகளை கேட்டோம்.
“இந்த லிஸ்ட் எதுக்கு ஸார்?”
“லாஸ்ட் ஒன் வீக் கால்ஸ் ட்ரேஸ் பண்ண போறதா சொன்னிங்களே.. அப்படினா.. ஸ்டூடென்ட்ஸ சந்தேகப்பட்றிங்களா?”
“அவன் திருடின மொபைல்ஸ் எதையும் யூஸ் பண்ணலைன்னா?”
கேள்விகளை வாங்கிக்கொண்டு பொதுவாக விளக்கினார், “ஃபர்ஸ்ட், ஸ்டூடென்ட்ஸ சந்தேகப்பட்றோம்னு மொத்தமா சொல்ல முடியாது பட் அந்த ஆப்சனையும் செக் பண்ணிதான் ஆகனும். எதுவும் கன்ஃபிர்ம் ஆகாம யாரையும் எங்கொயர் பண்ணமாட்டோம். மிஸ்ஸிங்க் மொபைல்ஸ் எதாவது ஒன்ன யூஸ் பண்ணா ஈஸியா லொக்கேட் பண்ணிடலாம் தான், இல்லேனாலும் இந்த மாதிரி ராபரி எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் ட்ரேஸ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். வீ வில் கெட் ஹிம்.” என்று முடித்து கவிதாவிடம் அவன் அடையாளங்களை கேட்டுக்கொண்டு புறப்பட்டார்.
மணி மதியம் ஒன்றை தாண்டியிருக்க தட்டுகளை எடுத்துக்கொண்டு மெஸ்ஸுக்கு சென்றோம். மெஸ் நேற்று இரவுக்கு நேர் மாறாக கனத்த அமைதியை பூசிக்கொண்டிருந்தது. அலைபேசிகளை இழந்து உண்ணாவிரதம் இருக்கும் தோழிகளுக்கு உணவை அறைக்கு எடுத்துச்சென்றனர் சக மாணவிகள். ஆங்காங்கே அமைந்திருந்தோர் நேற்றைய இரவைப் பற்றி தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டனர்.
“பிடிச்சிடுவாங்களா இந்து?”
“ஹோப் ஸோ”
“பிடிச்சதும் அவன கூட்டிட்டு வரதாவா ஏ.ஸி. சொன்னாரு?”
“ஆமா.. டெமோ பண்ண வைக்க போறாராம்”
“அவன் என்ன வாக்கம் க்ளினரா விக்கறான் டெமோ பண்ண?”
“நம்ப அப்ப தான் நம்புவோம்னு நினச்சிருப்பாரு”
“பிடிச்சா சரி”
மறுநாள் காலை விடிந்தும் விடியாததுமாக 8 மணிக்கெல்லாம் ப்ரின்ஸியும் ஏ.ஸி.யும் வந்து ரெப்புகளை அழைத்தனர். ஏ.ஸி. அமர்ந்திருக்க ப்ரின்ஸி அமைதியற்று குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். எங்களை கண்டவுடன்,
“என்னம்மா நடக்குது இங்க?” என்றார் குரலில் கோபமும் அதிர்ச்சியும் தொனிக்க. கையில் கட்டாக காகிதங்கள் இருந்தன. எதை கேட்கிறார் என்று புரியாமல் விழித்தோம் நால்வரும்.’
ஏ.ஸி. மௌனத்தை கைவிட்டு, “நீங்க குடுத்த லிஸ்ட வச்சு அவனை ட்ரேஸ் ப்ண்ணமுடியும்ற நம்பிக்கையே எனக்கு குறைஞ்சிருச்சுமா” என்றார்.
“அத தான நம்ப குடுக்கும் போதே சொன்னோம்” சௌமி என் காதருகில் சொன்னாள்.
எங்கள் அறியாமையை போக்க என்னியது போல ப்ரின்ஸி சௌமியிடம் அந்த காகிதங்களை கொடுத்து, “நீங்களே பாருங்க.. எத்தன பேர் ‘அனானிமஸ்’ நம்பர்ஸ்க்கு கால் பண்ணிருக்காங்கனு. ஆல்மோஸ்ட் 75% ஒஃப் தி ஹாஸ்டல். கால் டியூரேஸன்ஸ பாருங்க.. 4 டு 5 ஹவர்ஸ் எத்தன கால்ஸ் பொயிருக்கு!! என்னம்மா இதெல்லாம்..உங்க கர்ல்ஸ் என்னமா பண்றாங்க?” கோபமாய் துவங்கி ஆதங்கமாய் முடித்தார்.
இது எங்கே கொண்டுவிடுமோ என்ற பயம் அனைவர் முகங்களிலும் ஒட்டிக்கொண்டது. முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு கேட்டேன், “நெக்ஸ்ட் இந்த நம்பர்ஸ் ட்ரேஸ் பண்ண போறிங்களா ஸார்?”
“டென் டு ட்வென்டி நம்பர்ஸ்னா அத செஞ்சுப்பாக்கலாம். இந்த லிஸ்ட பண்றது வேஸ்ட். இதுல அவன் இருக்க சான்ஸஸும் கம்மி. ஏன்னா மோஸ்ட் ஆஃப் தி நம்பர்ஸ் கேம்பஸ்குள்ள தானே இருக்கும்?” என்றார் ஏ.ஸி. கடைசி வரியில் குரலை தாழ்த்திக்கொண்டு கண்களில் கேலியுடன்.
ப்ரின்ஸி எங்களைப் பார்த்து, “ஆஸ் எ வார்டன், இட்ஸ் மை ரெஸ்பான்ஸிபிலிட்டி டு டேக் செர்டைன் டெசிஸன்ஸ். பட்… லெட்ஸ் ஃபினிஷ் திஸ் கேஸ் பிஃபொர் தட்” என்று ஃபைனல் டச் கொடுக்க இருவரும் புறப்பட்டனர்.
“இவரு எதுக்கு இப்போ இவ்வளவ்ய் டென்ஸன் ஆகறாரு? இவரு தெரிஞ்சு தான் கோவபட்றாரா இல்ல தெரியாம செய்யறாரா? எனவோ புதுசா எதையோ கண்டுபிடிச்ச மாதிரி சீன் எறக்குறாரே”
“அதுல பாரு சௌமி அவரு லிஸ்ட உன்னோட கைல குடுத்தாரு பாரு அதான் ஹைலைட்..”
“அது யென் சௌமி உன்ன்ன்ன பாத்து அந்த கேள்வி கேட்டாரு?”
“நிறுத்துறிங்களா.. நானே கொஞ்ச நேரந்தான் பேசறேன்..!”
அப்டியாஆஆஆ…”
அடுத்த இரெண்டு நாட்களுக்கு எந்த தகவலும் இல்லை. இதற்கிடையில், விடுதியில் சில மாற்றங்களை காணமுடிந்தது. மெஸ்ஸுக்கு என்றாலும் வேறு “அவசர வேலை”யாக இருந்தாலும் நான்கைந்து பேர் சேர்ந்து கூட்டமாகவே சென்றனர். இரவுகளில் காரிடர்களும் மாடிப்படி சந்துகளும் வெறிச்சோடியிருந்தது. காதலோ மோதலோ அறைக்குள்ளேயே நடந்தது. எவ்வளவு நேரமானாலும் அறைக்குள்ளேயே படிக்குமாறு கூறினாள் இன்பா (பாசக்காரப்புள்ள!). முக்கியமாக அனைத்து அறைகளும் இரவு 10 மணிக்கெல்லாம் உள்ளே தாளிடப்பட்டன.
சனி ஞாயிறு உற்சாகமில்லாமல் கழிந்தது. திங்களன்று வழக்கம் போல் வகுப்புக்கு கிளம்பி வெளியே வர, ப்ரின்ஸி உற்சாகமாக உள்ளே நுழைந்தார்.
என்னையும் சௌமியையும் கண்டவுடன், “பிடிச்சாசுமா உங்க திருடன” என்றார். மற்ற ரெப்ஸும் வர விவரம் சொல்ல துவங்கினார்.
“அவனை ஓசூர் பக்கதுல ஒரு கிராமத்துல பிடிச்சிருக்காங்க. ஒன் வீக் கலிச்சு சில மொபைல்ஸ்ச ஆன் பண்ணிருக்கான். உங்க கர்ல்ஸ் ஒருத்தரோட மொபைல ஹை பேலன்ஸ் இருந்திருக்கு. அதுல டெம்ப்ட் ஆகி யூஸ் பண்ணிருக்கான். ட்ரேஸ் பண்ணியாச்சு”
அழுதுகொண்டே சென்ற ரம்யா நினைவுக்கு வர, “எல்லாம் நன்மைக்கே” என்றேன்.
“சப்ப திருடனா இருக்கான்” என்றாள் இன்பா
ப்ரின்ஸி தொடர்ந்து, “லோக்கல் போலிஸ் அவன அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம். ஏ.ஸி. அவன இனிஷியல் ஃபார்மாலிடிஸ் முடிந்ததும் டெமோக்கு கூட்டிட்டு வரதா சொன்னார்” என்றார்.
மேலும் இரெண்டு நாட்கள் சென்றபின் அவனை அழைத்து வந்தனர். ஏதோ வீரப்பனை கூட்டிவந்திருப்பது போலவும் அவன் எங்கள் முகத்தை பார்த்துக்கொண்டால் பிணைகைதியாக பிடித்துக்கொண்டு போய்விடுவான் போலவும் அனைவரும் உள்ளே ஓடிவந்து கரிடரில் காய்ந்த துணிகளுக்கு பின்னால் பாதி முகத்தை மறைத்துக்கொண்டு பார்த்தனர். இன்பா என்னையும் காய்ந்த அவள் துப்பட்டவிற்கு பின்னால் மறைத்தாள். கண்களை மட்டும் வெளியே செலுத்தி பார்த்தேன்.
அவனா?! போலீஸ்க்காரர்களுக்கு நடுவே நடந்து வரும் அந்த அவனா திருடன்?! ஒரு பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதும் இவனே தானா? ஒரு பதினாறு அல்லது பதினேழு வயதிருக்குமா? இல்லை அதுபோல தோற்றமா? – தன்னை இத்தனைப்பேர் வேடிக்கை பார்க்க அவமானத்தால் தலையை தொங்கவிட்டுக்கொண்டு வந்தவனை பார்த்துவுடன் என் மனதில் தோன்றியவை இவை தான்.
“இன்பா.. என்ன வயசிருக்கும் இவனுக்கு? இவனுக்கு திருட வேண்டிய அவசியமனென்ன?”
“ஏன் ‘வானத்தைப் போல’ ஸ்டைல்ல வேலப்போட்டு குடுக்க போறியா..? இங்க என்ன விக்ரமன் படமா எடுக்கறாங்க..? ஓவரா ஃபீல் பண்றா.. வாடி உள்ள!”
– ஜனவரி 2013