அதிர்ஷ்டசாலி! – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 26, 2022
பார்வையிட்டோர்: 18,573 
 
 

“அத்திம்பேரே!” என்று உரக்கக் கூப்பிட்டுக்கொண்டே மிகுந்த குதூகலத்துடன் ஓடி வந்தான், என் மைத்துனன் வைத்தி.

“போன காரியம் என்னடா ஆயிற்று? காயா, பழமா?” என்று நான் ஆவலோடு கேட்டேன்.

“பழம்தான், அத்திம்பேரே! ராமாமிர்தம் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தைப் பார்த்ததும் செட்டியாருக்கு ரொம்பத் திருப்தி! நாளைக்கே வேலைக்கு வந்து விடும்படி சொல்லிவிட்டார்!”

“நிஜமாகவா..?”

“பின்னே பொய்யா சொல்லுவேன்? இதோ பாருங்கள், அவர் கொடுத்த ‘வேலை உத்தரவு’. சம்பளம் மாதம் 100 ரூபாய் என்றும் தெரிவித்திருக்கிறார்.”

அதைக் கேட்டதும் எனக்கு உண்டான சந்தோஷம் இவ்வளவு அவ்வளவில்லை!

ராமாமிர்தம் யாரென்று சொல்லவில்லையே? திவால் கம்பெனியின் மானேஜர்தான் அவர். அவருடைய கம்பெனியில்தான் என் மைத்துனன் வைத்தியை வேலைக்கு விட்டிருந்தேன். ஒரு சமயம், உடம்பு சரியில்லை என்று என் மைத்துனன் ஒரு மாத லீவு கேட்டபோது, அவர் கோபித் துக்கொண்டு அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

அதற்குப் பிறகு, மைத்துனனுக்காக வேலை தேடி ஊரெல்லாம் அலைந்து திரிந்தேன். கடைசியில் என் நண்பர் ஒருவர் மூலமாக, ஒரு செட்டியார் கம் பெனியில் வேலை கிடைக்கும் போலிருந்தது. ஆனால், சிபாரிசுக் கடிதம் ஏதாவது கொண்டு வரும்படி சொன்னார்கள். முன்பு என் மைத்துனன் வேலை செய்து வந்த கம்பெனியிலிருந்தே கடிதம் வாங்கி வந்தால் ரொம்ப நல்லது என்றும் தெரிவித்தார்கள்.

ராமாமிர்தத்திடம் கேட்ட போது அவரும் மனமிரங்கி ஒரு லெட்டர் கொடுத்தார். அதிர்ஷ்ட வசமாக அந்த லெட்டருக்கு மதிப்பு வைத்து, செட்டியார் கம்பெனியில் என் மைத்துனனுக்கு வேலையும் கொடுத்துவிட்டார்கள். எனக்குச் சந்தோஷமாக இராதா? ராமாமிர்தத்திற்கு நன்றி செலுத்தவேண்டியதும் நியாயந்தானே? அதற்காகத்தான் அவரைத் தேடிக்கொண்டு உடனேயே ஓடினேன்.

ராமாமிர்தம் என்னைப் பார்த்துவிட்டு, முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டார். மறுபடியும் ஏதாவது என் மைத்துனனுக்கு வேலை வேண்டும் என்று நான் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டாரோ என்னவோ?

“அந்த சிபாரிசுக் கடிதம் கொடுத்தீர்களே… அந்த லெட்டரைப் பார்த்ததும், அவனுக்கு உத்தியோகம் கொடுத்துவிட்டார்கள், சார்! அதற்கு நன்றி சொல்லத்தான் நான் வந்தேன்” என்றேன்.

“என்ன! உத்தியோகம் கொடுத்து விட்டார்களா! ஆச்சரியமாக இருக்கிறதே! கடிதத்தை ஏதாவது மாற்றி எழுதிவிட்டானோ, உம் மைத்துனன்?” என்றார் அவர்.

“கடிதத்தில் அப்படி நீங்கள் என்ன ஸார் எழுதியிருந்தீர்கள்?” என்றேன் புரியாமல்.

“என்ன எழுதியிருந்தேனா? உம் மைத்துனனுடைய குட்டை நன்றாக வெளிப்படுத்தியிருந்தேன்! நன்றாக துரை மாதிரி டிரஸ் பண்ணிக்கொண்டு வரத் தெரியும்; துளி தலையை வலித்தாலும், உடனே கண்ணால் ஜலம் விட்டு அழுவான்; உடம்புக்கு ஏதோ பெரிய ஆபத்து வந்தது போலப் பாசாங்கு செய்வான். ஆசாமி வெறும் வேஷக்காரன்; அவனை நம்பவே நம்பாதீர்கள். நாடகமாடுவதில் சமர்த்தன் என்று எழுதியிருந்தேன்.”

“அப்படிச் சொல்லுங்கள்! அதனால்தான் செட்டியார் உடனேயே வேலை கொடுத்து விட்டார்! அவர் வைத்திருப்பது நாடகக் கம்பெனி, ஸார்! நடிப்பவர்கள் என்றால் அவருக்கு லட்டு மாதிரியல்லவா? அப்போதே சொன்னார்கள், என் மைத்துனன் அதிர்ஷ்டசாலி என்று!”

– ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. (இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *