பேய் வீட்டில் விழுந்த செல்போன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 16,282 
 
 

இந்த ஏரியாவுக்கு வந்தது மகா மடத்தனம் என்று குடித்தனம் வந்த அடுத்த நாளே மனம் புழுங்கினார் உதயச்சந்திரன்.சொந்த வீட்டுக்காரர்கள்தான் இங்கு நெடுநாள் தாக்குப்பிடிப்பார்கள்.

அங்கும் இங்குமாக சில வீடுகள்.கட்டிமுடிக்காத பாதியில் நிற்கும் வீடுகள் சில.குறுகலானத் தெருக்கள்.மழை பெய்தால் ஏரியா ரொம்ப மோசமாகிவிடும்.அடுத்து இரவு 8 மணிக்கு ஏரியா அடங்கிவிடுகிறது.

அந்த பெரிய வீட்டைப் பார்த்தார். 12A,சோலைமலை நிவாஸ்.அதற்கு பிறகு ரோடு கிடையாது. Dead end. தெருவின் முனையில் தனியாக இருந்தது.தன் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளித்தான் இருந்தது.

ஆட்கள் புழங்காததால் முன்னும் பின்னும் செடிகொடிகள் காட்டுத்தனமாக வளர்ந்திருந்தது.வெளிச்சுவர்கள் பெயிண்ட்கள் உதிர்ந்து காறைப் படிந்திருந்தது.வீட்டின் வெளிஜன்னல் கதவுகள் இரண்டொன்று திறந்திருந்தன.உள்ளே ஒரே இருட்டு.கிரில்கள் துருப்பிடித்து இரும்புத் தெரிந்தது. வாசல் கிரில்கேட் துருபிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தது.ஷன்ஷேடுகளில் முழுவதும் புறா/காக்கை எச்சம்.

கிணறை நோக்கிப் போகும் சிமெண்ட் பாதை நிறைய இடத்தில் பெயர்ந்து புல் முளைத்திருந்தது.கிணறும் பாழடைந்து அதன் சுற்றுச் சுவர்களில் நிறைய காக்கை புறா எச்சங்கள்.

”என்ன சார்..! அந்த வீட்டையே பாக்குறீங்க? ஏரியாவுக்குப் புதுசா?”

”ஆமாம். எம் பேரு உதயச் சந்திரன்.அடுத்த தெருவுலதான் குடி வந்துருக்கேன் ஒரு பிரைவேட் கம்பெனில ஜி.எம்..நீங்க”

“நானும் இதே ஏரியாதான்..ஐ ஆம் சுதாகர் ராவ்.ரொம்ப வருஷமா இருக்கேன்..”

“நேத்து என் பொண்ணு வாக்கிங் வரும் போது என் செல்போன இந்த வீட்டு உள்ள தூக்கிப்போட்டுட்டா.பிளாக் பெர்ரி.விலை நாப்பாதியிரம் ரூபாய்.”

”நாப்பாதாயிரம் ரூபாய்யா? ஐய்யய்யோ… இந்த வீட்லயா?”மிரட்சியாக உதயச் சந்திரனைப் பார்த்தார்.

“அவ மூள வளர்ச்சி கம்மியான பொண்ணு.விளையாட்ட….! ஏன் உள்ளப் போய் எடுக்க முடியாதா?”

“சார்.. இது பேய் வீடு சார்.It is a haunted house. இந்த வீட்ல குடியிருந்த கீதா அப்பறம் வினோதினி அதுக்கு அப்புறம் லஷ்மி என்ற பொண்ணுங்கெல்லாம் தூக்கு மாட்டிச் செத்துடிச்சுங்கோ. ராத்திரில பேய் நடமாட்டம் இருக்கு.அதற்கு பிறகு யாருமே
ரெண்ட்டுக்கு வரதில்லை.ஓனர் இந்தப் பக்கம் தல வச்சுப் படுக்கறது இல்ல. பயந்திட்டுப் பூட்டியே வச்சுட்டாரு”

”தூக்குப்போட்டுக்கிட்டாங்களா…? ஜனங்க கத வுடுவாங்க சார்…”

“ஏரியாக்காரங்கிறதனால கீதா,வினோதினி,டீச்சர் லஷ்மி மூணு பேர் சாவுக்கு சுடுகாடு வரை போனவன் சார்.கீதா என் தூரத்து உறவு சார்”

”இடிச்சுட்டு ஒரு பூஜை பண்ணிட்டு வாஸ்து வச்சு திருப்பிக் கட்டலாமே?”

சுதாகர் ராவ் நமுட்டு சிரிப்போடு அவரைப் பார்த்தார்.

”ஒரு சின்ன வயசு காண்ட்ராக்டர் தையரிமா டீல் பேசினாரு. அடுத்த வாரம் தூக்கு மாட்டி இறந்துட்டாரு.அதற்கு பிறகு ரெண்டு பேர் வந்து பிளாட் போடலாம்னு இறங்கினாங்க. ரெண்டு பேரும் ஆக்சிடெண்டல போயிட்டாங்க. ஒரு மாஜி எம் எல் ஏவும் இத மாதிரியே போய்ட்டாரு.ஓனர் பயந்து அப்படியே வுட்டுட்டாரு.முனிசிபாலிடி ஆளுங்க குப்ப அள்ள திரும்பிக்கூட பார்க்கமாட்டாங்க”

”அதெல்லாம் தற்செயல்.இதுக்கும் அதுக்கும் கனெக்‌ஷன் இல்ல.ஜனங்க நெறைய ஸ்டோரி சொல்லுவாங்க..”

”நீஙக புதுசு.ஒண்ணும் தெரியல.உள்ளப் போன ஒரு பசுமாடு,ரெண்டு நாய் எல்லாம் செத்துடிச்சு.நீங்க செல்லெடுக்க உள்ள போய் ஏடாகூடமா எதுவாது ஆயிடப்போவுது.
போவாதீங்க”

”சார்.. செல்லோட வெல 40 ஆயிரம் ரூபாய்”

பேய்யைப் பார்ப்பதுப் போல் உதய சந்திரனைப் பார்த்து மிரண்டுவிட்டு “நைஸ் மீட்டிங்” என்று சொல்லிவிட்டு சுதாகர் ராவ் மறைந்தார்.

மணிபார்த்தார். மாலை 6.30. மெதுவாக இருட்ட ஆரம்பித்தது. சோலைமலை நிவாஸை நெருங்கினார்.நெருங்க நெருங்க இதயம் மெதுவாக படபடக்கஆரம்பித்துவேர்த்துக்கொட்டியது.
40 ஆயிரம் ரூபாய் செல்போன்! விட மனசில்லை.கேட்டில் கைவைத்த போது”ஜிவ்”வென்று உடம்பு முழுவதும் பரவி விறைத்துப்போனார்.

கீதா….வினோதினி…. டீச்சர் லஷ்மி…?

மீண்டும் படபடப்பு.வியர்வைக் குளியல்.போய் விடலாமா? ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிவிட்டது.தன் கையில் இருந்த இன்னோரு செல்(நோக்கியா) போனில் மணி பார்த்தார். 7.15.பயந்து பயந்து கேட்டை நெருங்க இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா?வீட்டில் கூட சொல்லவில்லையே?டார்ச் லைட்டாவது எடுத்து வந்திருக்கலாம்.

வியர்வையைத் துடைத்துக்கொண்டு ஆசுவாசமாகி ஒரு குண்டு தைரியத்துடன் கேட்டை தாண்டி எகிறி குதித்தார். முட்களும் புல் செடிகளும் காலில் நெருடியது.நாலாவது பெட்ரூமின் ஜன்னலை நெருங்கினார்.அதனுள்தான் செல்போன் விட்டெறிந்தாள் தன் பெண் பூர்ணிமா.கால்கள் படபடப்பில் ஒல்லிக்குச்சியாகி எலும்பு வலித்தது.

”வொய்ங்ங்”மேல் கதவைத் கஷ்டப்பட்டுத் திறந்தார்.நாய் இறந்த வாடை குடலைப் புடுங்கியது. முக்கை மூடியவாறுப் பார்த்தார். இருட்டு.தட்டு முட்டுச் சாமான்கள் நிழலாக தெரிந்தது. தன் செல்போனில் அந்த நம்பரைக் கூப்பிட்டார்.

”அனல் மேலே பனித்துளி…அலை பாயும் ஒரு கிளி..மரம் தேடும்…..”

உள்ளே டேபிள் மேல் சார்ஜ் வைக்கப்பட்டு செல் பளிச் பளிச் என்று ஒளிர்ந்தது.பாட்டு ஹாலில் எதிரொலித்து திகிலைக் கூட்டியது. ஒட்டிய உதடைப் பிரிக்க முடியாமல் படபடத்தார்.

ஐய்யோ…? இது என் செல் டியூன் இல்லையே?நம்பரைப் பார்த்தார்.தன் நம்பர்தான்.ஏன் வேறு டியூன்?உள்ளங்கை ஈர பிசுபிசுப்புடன் நிறுத்திவிட்டு மீண்டும் அடித்தார்.

”ஆயிரம்….! மலர்களே…! மலருங்கள்! அமுத கானம் பாடுங்கள்…நீங்களோ”

இதுவும் தன் செல் டியூன் அல்ல.

மீண்டும் செல்லில்தன் நம்பரை உறுதி செய்கையில்…உள்ளேகுரல் கேட்டது.

”ஏய்…. கீதா! ரெண்டாவது வாட்டி செல்லு ரிங்க் ஆகுது எடுடி..”

”என் கைல மருதாணி இட்டுட்டுருக்கேன்…லஷ்மிய எடுக்கச்சொல்லுடி வினோ…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *