கதவு இலக்கத்தை வைத்துப் பார்த்தால் எங்கள் தெருவில் மொத்தம் இருபத்தியாறு வீடுகள் இருக்கவேண்டும்.
ஆனால் உண்மையில் இப்போது இருக்கும் வீடுகள் பதினைந்துதான். கால ஓட்டத்தில் சிற்சில வீடுகள் இடிந்து ஒரே வீடாகக் கட்டப் பட்டபோது வீட்டின் எண்ணிக்கைகள் குறைந்து போயின.
எங்கள் வீட்டின் கதவு இலக்கம் இருபத்தி நான்கு.
தெரு மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் கட்டப் பட்டிருக்கும் வீடு எங்கள் வீடு மட்டும்தான். கிழக்கு மேற்காக மிகவும் குறுகலாகச செல்கிற தெருவில் எங்கள் வீடு தெற்கு திசையைப் பார்த்து இருக்கிறது.
தெரு மட்டத்தில் இருந்து எங்கள் வீட்டிற்கு முதல் படியே ஒன்றரை அடி உயரம் கொண்டது. அதற்கு அப்புறம் ஒரு அடி உயரத்தில் அகல அகலமாக மூன்று படிகள். நான்காவது படிக்கு இரு புறமும் கைப்பிடி சுவர்களுடன் இரண்டு திண்ணைகள். ஐந்தாவது படி ஏறியதும் இரண்டு தூண்களோடு பளிங்குக் கற்கள் பாவிய நீண்ட ஆனால் அகலம் குறைந்த தாழ்வாரங்கள்.
அந்தத் தாழ்வாரத்தில் ஐந்தடி தூரம் நடந்தால் தேக்கு மரங்களால் ஆன உயரமான இரட்டைக் கதவுகள். கதவுகளுக்கு இரு புறமும் கிட்டத்தட்ட அதே உயரங்களுக்கு ஜன்னல்கள். இரட்டைக் கதவுகளில் ஒன்று மட்டும்தான் எப்போதும் திறந்து வைக்கப் பட்டிருக்கும். திறந்து வைக்கப் பட்டிருக்கும் ஒரு கதவைப் பிடித்தபடி ஹாலில் நின்று தெருவை சில சமயங்களில் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது உண்டு.
அம்மாதிரி ஒருநாள் முற்பகலில் அந்தக் கதவைப் பிடித்தபடி ஹாலில் நின்று கொண்டிருந்தேன். வீட்டின் உள்ளே என்னுடைய அப்பா பேப்பரில் ஆங்கிலச் செய்திகள் படித்துக் கொண்டிருந்தார்.
வீடு மிகவும் அமைதியாக இருந்தது.
வெளியில் வெயில் கடுமை அடைந்து கொண்டிருந்தது.
என் மனதில் எந்தச் சிந்தனையும் இல்லை. வெறுமே நின்று கொண்டிருந்தேன்.
திடும் என தெருவில் சரியாக எங்கள் வீட்டுக் கீழ் வாசலுக்குச் சற்றுத் தள்ளி கம்பீரமாக அது தெரிந்தது. மூன்றடி அகலத்திற்கு ஆறடிக்கு கொஞ்சம் அதிக உயரமாகவே அது இருந்தது. சற்றே பின்னுக்குச் சாய்ந்தாற் போல என்னைக் கம்பீரமாய் நோக்குவது போலிருந்தது. அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்த வினாடியே அது என்னவென்று தெரிந்து விட்டது.
அதுவும் என்னை நோக்கியது. நானும் அதையே பார்த்தேன். மிக நிசப்தமாக எனக்கும் அதற்கும் இடையே சொற்களே அற்ற, ஒலியே இல்லாத ஓர் பொருள் ஓட்டம் இல்லாமல் ஸ்தூலமாய் நிறைந்திருந்தது.
அது மழையை உள்ளடக்கிய கரிய மேகம்போல் இருந்தது. அல்லது ரயில் இஞ்சின் புகையால் வடிவமைக்கப் பட்டிருந்தது எனவும் சொல்லலாம். அதன் மேல் பாகம் அகலமான வடிவத்தில் கெட்டியான புகைச் சுருளால் அமையப் பட்டிருந்தது. அந்த வடிவத்தின் மையத்தில் கீழ் நோக்கி அதே மாதிரியான புகைச் சுருள் அகலமாகத் திரண்டிருந்தது. ஆனால் அந்தப் புகைத் திரட்சி தரையைப் போய்த் தொட்ட மாதிரி தெரியவில்லை. கீழ் நோக்கித் திரண்டிருந்த அந்தக் கரிய சுருள் எருமையின் முகம் போலவும் இருந்தது.
பல வினாடிகள் அது நிசப்தமாகத் தோற்றமளித்துக் கொண்டே இருந்தது. நானும் அசையாமல் இருந்தேன். அவ்வளவுதான். சட்டென்று அது மறைந்து போயிற்று.
ஓசையுடன் எதுவும் நிகழவில்லை என்றாலும் சப்தமில்லாமல் பிரளயம் கடந்து சென்றாற் போலிருந்தது.
முழு முதற் கடவுளின் மறு அவதாரமாக அதை மனிதர்கள் வணங்கினாலும், அதைத் திடீரென்று நேரில் பார்த்தால் பீதிதான் ஏற்படுகிறது. அதுவும் அது தன் கூட்டத்தோடு அல்லாமல் தனியாக, ஒற்றையாக அது வந்தால் கிலிதான்.
சில நிமிடங்களுக்கு கதவின் அருகிலேயே நின்றேன். எதுவோ நிறைவு அடையாததாகத் தெரிந்தது. மெதுவாக வராந்தாவைக் கடந்து திண்ணையின் சுவரைப் பிடித்தபடி தெருவின் வலது பக்கம் ஜாக்கிரதை உணர்வுடன் எட்டிப் பார்த்தேன். பின் இடது பக்கம் திரும்பிப் பார்த்தேன்.
எதிர் வரிசையின் மூன்றாவது வீட்டின் எதிரில் அது மீண்டும் தெரிந்ததைப் பார்த்ததும் என் உடம்பில் மின்சாரம் பாய்ந்தாற் போலிருந்தது,
தெரிந்த சில கணங்களில் அது மறுபடியும் மறைந்து விட்டது. அடுத்த ஓரிரு நிமிடங்களில் அந்த வீட்டின் உள்ளிருந்து பெண்கள் அலறியபடி அழ ஆரம்பித்த சப்தம் உரக்கக் கேட்டது…
அடுத்த வினாடி அந்த வீட்டின் கூரை சரேலென இடிந்து விழுந்தது.
அது வெளியே வந்து திரும்பி என்னைப் பார்த்து முறைத்தபடி ஒரு கணம் நின்றது. எனக்கு உடம்பு சில்லிட்டது. பின்பு தன் தலையைத் திருப்பி இன்றைய வேலை முடிந்து விட்டது என்பது போல் விரைந்து சென்று என் கண்களில் இருந்து மறைந்தது.
நான் பயம் அகலாமல் என் வீட்டினுள் சென்றேன்.