கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 171,852 
 
 

எங்கும் புகை மண்டலம், திடீர் திடீரென்று சீறிக்கொண்டு செல்லும் குண்டின் சத்தம், திடீரென்று பெரும் சூறாவளி சத்த்த்துடன் தலைக்கு மேல் பறந்து சென்று “டொம்” என்று விழுந்து பெரும் சத்தத்துடன் வெடிக்கும் பீரங்கி குண்டுகள். இடை இடையே தட தவென ஓடி வந்து கொண்டிருக்கும் பூட்ஸ் கால்களின் சத்தம்.

பதுங்கு குழிக்குள் இருந்த ராஜேஸ் தனது அதிகாரியும் நண்பனுமான ஹம்ஸாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறான், ஹம்ஸா, நாம் இப்ப எழுந்து அடுத்த பக்கம் ஓடிடலாமா?

வேண்டாம், குண்டு மேல பறக்கறதுனால எதிரிங்க பக்கத்துல வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்ப எழுந்து ஓடுனம்னா கண்டிப்பா சுட்டு தள்ளிடுவாங்க.

அவங்க நம்ம பக்கத்துல வந்துட்டாலும் அதையத்தான செய்யப்போறாங்க.

கொஞ்சம் பொறு, நம்மால அவங்களை தடுக்க முடியும்மான்னு முயற்சி செய்யலாம்.

அந்த பதுங்கு குழியிலிருந்து மெல்ல தலையை தூக்கி பார்த்த ராஜேஸ் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் பத்திருபது சிப்பாய்கள் படுத்துக்கொண்டு சுட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.

ஹம்ஸா சொன்னது உண்மைதான், இப்பொழுது நாம் வெளீயே போவது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. ஆனால் அவர்கள் இந்த பக்கம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று தெரிந்து கொண்டால் அவர்கள் குழு இந்த பதுங்கு குழி நோக்கித்தானே வரும். அப்பொழுது எதிர்த்து நாம் சுட்டாலும் அத்தனை பேரை சுடுவது சாத்தியமில்லை. இன்னும் முப்பது நிமிடங்களில் வந்து விடக்கூடும், அவன் மனது கணக்கு போட்டு பார்த்த்து.

நமது குழுவிலிருந்து எத்தனை பேர் கிளம்பினோம், ஐம்பதுக்கு மேல் இருக்கும். என்னவானார்கள்? எதிரிலிருக்கும் எதிரி சுட்டுக்கொண்டே இருக்கிறான், இவர்கள் பதில் தாக்குதலை ஆரம்பிக்காமல் இருக்கிறார்கள், மனதுக்குள் கவலை வந்து உட்கார்ந்து கொண்டது.

போர் ஆரம்பித்து ஐந்து நாள் ஆகிவிட்டது. ஹம்ஸாவும், ராஜேஸும், அந்த குழுவின் முன்னணி தாக்குதல் வீர்ர்கள். இவர்கள் வேகமாக முன்னேறி இந்த பதுங்கு குழிக்குள் நுழைய முற்படுவதை எப்படியோ எதிரிகள் பார்த்து சரமாரியாக சுட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இவர்கள் பின்னால் வரவேண்டிய வீர்ர்கள் வர முடியாமல், இப்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே தனியாக இந்த குழிக்குள் மாட்டிக்கொள்ள வேண்டியதாகி விட்டது.

எதிரிகள் இவர்கள் இருவர் மட்டும்தான் இந்த பதுங்கு குழிக்குள் இருக்கிறார்கள் என்று தெரியாததால், நிறைய வீர்ர்கள் இருக்கக்கூடும் என்று கருதி சரமாரியாக அந்த பதுங்கு குழிக்கு மேல் தோட்டாக்களை பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது அவர்கள் கொஞ்ச தூரம் முன்னேறி ஓடி வருவது அவர்களின் ஓட்டத்தின் அதிர்வில் இவர்களுக்கு உணர முடிந்தது.

ஹம்ஸா ராஜேஸை நோக்கினான். அவன் முகத்தில் தலைக்கவசைத்தாண்டி ஒரு இறுக்கம் இருப்பது பேச்சில் தெரிந்தது. இன்னும் பத்து நிமிசத்துல நம்ம கிட்ட வந்துடுவாங்க.

ராஜேஸ் பதட்டத்துடன் ஹம்ஸா பேசாம எழுந்து எதிர்த்து சண்டை போட்டுடலாம்.

ஹம்ஸா அவனை உற்றுப்பார்த்து எவ்வளவு நேரம் சண்டை போட்டு அவங்களை நிறுத்த முடியும்? நீ தலையை தூக்கின உடனே சுட்டு தள்ளிடுவாங்க.கொஞ்சம் யோசிச்சு பாரு அவங்க பதினைஞ்சு பேராவது இருக்கணும். நாம் இரண்டு பேரு. கொஞ்சம் யோசிக்க விடு.

ராஜேஸ் விரக்தியாய் புன்னகைத்தான். நீ ரொம்ப தைரிய சாலிதான், ஆனா இப்ப நாம துணிஞ்சு ஏதாவது செஞ்சாக்க்கூடிய கட்டாயத்துல இருக்கோம்.

எதிரிகளின் கொஞ்ச தூரத்து முன்னேற்றத்தை பாதுகாத்துக்கொள்ள, அவர்கள் தனது தாக்குதலை அதிகப்படுத்தினார்கள். இப்பொழுது சரமாரியாக குண்டு அவர்கள் பதுங்கு குழிக்கு மேல் பறக்க ஆரம்பித்த்து. .

அந்த நேரத்தில் ஹம்ஸாவின் நினைவுகள் பின்னோக்கி போக ஆரம்பித்தன. அவனுக்கு நிக்காஹ் போன மாதம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் நடப்பதாக இருக்கிறது. போர் திடீரென்று அறிவிக்கப்பட்டு, இவனின் நிச்சயம் முடிவு செய்த அடுத்த வாரமே கிளம்பி வர பணிக்கப்பட்டான்.

இவர்கள் குழு எதிரி படையை நோக்கி கிளம்பும் போது இவனுக்கு துணையாக ராஜேஸ் அனுப்பி வைக்கப்பட்டான். ராஜேஸ் இன்னும் திருமணம் ஆகாதவன்.இந்த ஐந்து நாட்களில் இருவரும் நட்பால் நெருங்கி விட்டனர். ராஜேஸ் ஹம்ஸாவின் திறமையை மதித்தான். ஒவ்வொரு முறையும் அவனது மூளை மிக வேகமாக வேலை செய்து இவர்கள் குழுவை முன்னேற்றி சென்றதை கண்டு வியந்து பாராட்டிக்கொண்டே இருந்தான். இந்த முறைதான் இவர்கள் இப்படி தனித்து மாட்டிக்கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்ட்து. இதுவே இறுதியாகவும் ஆகி விடுமோ என்ற அச்சம் ராஜேஸ் மனசுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டது.

இப்பொழுது எதிரிப்படை இன்னும் கொஞ்சம் முன்னோக்கி ஓடி வருவதை இவர்கள் நில அதிர்வின் மூலம் உணர்ந்து கொண்டனர். ஹம்ஸா ராஜேசிடம் நமக்கும் அவர்களுக்கும்

இருக்கும் இடைவெளி நூறடிக்குள்தான் இருக்கும். சொன்னவனை விழித்து பார்த்த ராஜேஸ் ஹம்ஸா இப்பொழுது தூரத்தை பற்றி ஆராய்ச்சி நமக்கெதுக்கு?. நாம் அவர்களுடன் சண்டையிட நீ அனுமதி கொடுத்தால் நான் எழுந்து விடுவேன். சொன்னவனை மெல்ல சிரிப்புடன் நாம் எழுந்து அந்த கூட்டத்தை முடித்து விட முடியும் என்றால் இதுவரை செய்யாமல் இருக்க மாட்டேன். ஆனால் அது மிகவும் ஆபத்து கூட. நான் என்னை பற்றி கவலை படவில்லை. நீ சிறுவன். இன்னும் வாழ்க்கை இருக்கிறது. இந்த இடைவெளி கூட நமக்கு உபயோகமாய் இருக்கலாம். பொறு. அவனது வார்த்தைகள் தெளிவாக கேட்காதவாறு அந்த இடைவெளீயை கைப்பற்றிய வேகத்தில் மீண்டும் அவர்கள் இருந்த பகுதியை நோக்கி துப்பாக்கி குண்டுகளால் சரமாரியாக சுட ஆரம்பித்து விட்டனர்.

ராஜேசின் மன நிலை, வாழ்வின் இறுதி நிலைக்கு வந்து விட்டது. எதிரிகளின் அடுத்த ஓட்டத்தில் நாம் முடிந்து விடுவோம்.போவதற்குள் ஓரிருவரை தீர்த்து விட்டு போய் விடுவோம். மனதுக்குள் உரமேற்றிக்கொள்ள ஆரம்பித்தான்.

இந்த பதுங்கு குழிக்குள் நிறைய பேர் உள்ளார்கள் என்று அவர்கள் நினைப்பதால்தான் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறார்கள். சொல்லி விட்டு சிரித்தான் ஹம்ஸா. ராஜேசுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த இக்கட்டான நேரத்திலும் எப்படி சிரித்துக்கொண்டிருக்கிறான்.

இன்னும் ஐந்து நிமிடம்தான் அவர்கள் அடுத்த “மூவ்” முன்னேற ஆரம்பிப்பார்கள்.நீ தயாராக இரு. கட்டளையுடன் சொன்ன ஹம்ஸாவிடம் எழுந்து சுட ஆரம்பித்து விடலாமா.

சொன்னவனை விழித்து பார்த்த ஹம்ஸா தயவு செய்து அப்படி எதுவும் செய்து விடாதே.

நான் சுடு என்றவுடன் வானம் பார்த்து சுடு. இரண்டு ரவுண்டு சுட்டவுடன் நிறுத்தி விடவேண்டும்.புரிந்ததா.

ராஜேசுக்கு புரியவில்லை. எதிரியை பார்த்து சுடுவதற்கு பதில் வானத்தை பார்த்து எதற்கு சுட சொல்கிறான்.ஆனால் அதற்கு நேரமில்லை. சுடு..சொன்ன ஹம்ஸா தனது துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட ஆரம்பித்தான். ராஜேசும் அதனை தொடர்ந்தான்.

இவர்கள் இரண்டு ரவுண்டுகள் சுட்டு அமைதியான அடுத்த நிமிடம் இவர்கள் பின்புறமிருந்து இவர்களின் எதிரிகளை நோக்கி துப்பாக்கி குண்டுகள் முழங்க ஆரம்பித்தன.

ஹம்ஸா அவனை பேசாமல் அப்படியே படுத்திரு. கட்டளையிட்டவன் அந்த குழிக்குள் படுத்துக்கொண்டான். இருபது நிமிடங்கள் ஆயிருக்கும். அவர்கள் குழிக்கருகே சத்தம் கேட்டது.

மெல்ல தலையை தூக்கிய ஹம்ஸா, இப்பொழுது எழுந்து வெளியே வா சொல்லி விட்டு வெளியே வந்தான். ராஜேசும் வெளியே வர அவர்கள் குழுவினர் நின்று கொண்டிருந்தனர்..

“ஸாப்” ஹம்ஸாவை பார்த்து சல்யூட் வைத்த குழுவின் தலைமையில் இருந்தவன் அவர்களை அப்படியே தூக்கி விட்டோம். பெருமையுடன் சொன்னான். குட்..சலோ..சொன்னவன்

எதிரிகள் இருந்த இடத்துக்கு சென்றான்.

கிட்டத்தட்ட இருபது பேர் கைதியாய் வைக்கப்பட்டிருந்தனர். சுற்றிலும் இவர்கள் வீர்ர்கள் துப்பாகியுடன் நின்று கொண்டிருந்தனர்.

இவர்களை மரியாதையுடன் கொண்டு செல்லுங்கள். சொல்லிவிட்டு நடந்து கொண்டிருந்த ஹம்ஸாவை தொழில் மரியாதையுடன் பார்த்து நின்றான். ராஜேஸ். எப்படி நடந்தது இது? தன்னை மீட்ட அந்த குழுவின் தலைவனை கேட்டான்.

ஹம்ஸா தனது திட்டத்தை முதலிலேயே சொல்லிவைத்து விடுவான். இந்த மாதிரி சூழ்நிலை ஏற்படும்போது நமது குழுவினர் ஒரு முக தாக்குதலை தாக்காமல் எதிரிகளை சுற்றி வளைத்து இறுக்க முயற்சிக்க வேண்டும். தேவையில்லாமல் இவர்கள் இருவரை காப்பாற்ற எதிர் சண்டையில் இறங்கும்போது தேவையற்ற உயிர் இழப்புத்தான் ஏற்படும். அதனால் கால நேர அவகாசத்தை அவர்களுக்கு கொடுத்து அவர்கள் தனது எல்லைக்குள் வந்து விட்டார்கள் சுற்றி வளைத்து விட வேண்டும்.என்று தெரிவித்திருந்தான். அதன்படியே நீங்கள் தனித்து விடப்பட்ட உடனேயே, அவர்களை முன்னேற வைத்து சுட விட்டு அவர்களை சுற்றி வளைத்தோம்.நீங்கள் தைரியமாக தாக்குதலை ஆரம்பிக்கலாம் என்று கேப்டன் வானத்தை நோக்கி சுட்டு சமிக்ஞை கொடுத்த்தும் நாங்கள் செயலில் இறங்கி விட்டோம். அவர்கள் எங்களை பின் புறமாக எதிர் பார்கவில்லை. அதனால் வேறு வழியில்லாமல் “சரண்டர்” ஆகி விட்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *