வீட்டில் யாருமற்ற தனிமை மனதை பிசைய சோபாவில் அமர்ந்திருந்தாள் அஞ்சலி. ‘அஞ்சு’ என செல்லமாய் கொஞ்சும் கணவன் ‘சஞ்சய்’ வெளியூர் சென்றிருந்தான், வேலை நிமித்தமாக. நாளை காலை வந்து விடுவான். இந்த இரவை துணிவாய் கடப்பது எப்படி? உதடுகளை கடித்தவாறு யோசித்தால் அஞ்சலி.
டி.வி பார்த்து, போன் பேசி பத்து மணி வரை நேரத்தை நெட்டித்தல்லியவள், தூக்கம் கண்களை சுலட்டவே படுக்கையில் விழுந்தாள்.
‘வீல்’ என்ற அலறலில் திடுக்கிட்டு விழித்தால் அஞ்சலி. மனம் தட்.. தட்…என அடித்துக்கொண்டது. விடிவிளக்கின் மெல்லிய வெளிச்சம் மட்டுமே துணை நிற்க நடுங்கும் பாதங்களை எடுத்து வைத்து நின்றாள் அவள்.
சூழ இருந்த அமைதியில் கடிகார முட்களின் சப்தம் கூட ‘டிக்… டிக்…’ என தெளிவாய் கேட்டது. தொண்டையில் அடைத்ததை விழுங்கியவள்,
‘யாரு’ என நடுங்கும் குரலில் கேட்டு முடிக்கவும், ‘படார்’ என ஓசை எழவும் சரியாய் இருந்தது.
‘ஐயோம்மா’ அவளறியாது துள்ளி குதித்தாள் அஞ்சு.
நெஞ்சம் வேகமாய் அடித்துக்கொண்டது. பக்கத்துக்கு வீட்டு சாந்தி சொன்ன பேய் கதை அப்படியே நினைவை ஆக்ரமிக்க உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட்டது.
‘தட்..தட்…தட்…’ இதயம் வேகமாய் துடித்தது. வெளியே குதித்து விடுமோ என அஞ்சியவலாய் நெஞ்சை இறுகப்பற்றியபடி அறையின் வெளியே காலடி எடுத்து வைத்தாள் அவள்.
பவர் கட். சட்டென இருள் சூழ்ந்தது….. ஒரே கும்மிருட்டு…. அடுத்த அடி அவள் எடுத்து வைக்க யோசித்து நிற்கையில், ஏதோ ஒன்று அவள் காலை பிடித்து இழுத்தது.
‘வீல்’ என அலறினாள் அஞ்சு.
ஒரு உருவம் அவள் மேல் பாய்ந்தது. வெகுவாய் போராடி, கலைத்து, ஓய்கையில் கரண்ட் வர, அந்த உருவம் எழுந்தது.
அது…. அந்த முகம்….
‘வீல் ‘ என அலறினாள் அவள். எவ்வளவு கோரமான முகம்… ரத்தம் வடிய…. அந்த கோரத்தை பார்த்தவள் இதயம் நின்று விட்டதோ. அவளிடம் அசைவில்லை.
கதவை தட்டும் சப்தம் கேட்டது.
‘நான் தான் செத்துவிட்டேனே’ யோசனையுடன் அசையாது படுத்திருந்தாள் அஞ்சலி.
‘அஞ்சுமா….கதவை திற…’
இது சஞ்சயின் குரல் அல்லவா? விருட்டென எழுந்தமர்ந்தாள் அஞ்சலி.
‘அப்போ நான் சாகலையா?’ தன்னையே ஒரு முறை கில்லி பார்த்தாள் அவள்.
‘ஆ’ வலிக்குதே முகம் சுளித்தவள், சிரித்தாள். ‘எல்லாம் கனவு….. ச்ச…’ வேகமாய் ஓடிச்சென்று கதவை திறந்தாள்.
‘அப்பாடா வந்துட்டீங்களா?’ கதவை திறந்தவுடன் கட்டிக்கொண்டழுத மனைவியை புரியாமல் பார்த்தான் சஞ்சய்.
ஒரு வழியாய் எல்லாம் சொல்லி முடிக்க, ‘ நீ படு அஞ்சு.. சரியா தூங்கி இருக்க மாட்ட….நானும் பொய் குளிச்சிட்டு வந்திடறேன்’ என குளியலறையில் புகுந்தான்.
‘அப்பாடா’ நிம்மதியாய் படுத்தாள் அஞ்சு.
‘ஏய்’ யாரோ தோளை தொட்டு அழைத்தும் அசையாது படுத்திருந்தாள் அஞ்சு.
‘ஏய்………’ வேகமாய் உலுக்கவும் பட்டென கண் திறந்தாள்.பக்கத்தில் யாரும் இல்லை. அப்போ கூப்பிட்டது யார்?
பயம் மீண்டும் முளைக்க எழுந்தாள் அவள்.
‘ஏங்க…’ கூப்பிட்டவாறு குளியல் அறை சென்றவள் கதவு திறந்திருக்கவே தள்ளினாள்
அங்கே அவள் கணவன் சஞ்சயை காணாமல் திகைத்தாள்.
சவர் திறந்திருக்க தண்ணீர் வலிந்து ஓடியது. நடுங்கிய விரல்களால் சவரை நிறுத்தியவள் அதிர்ந்தாள்.
சுவற்றின் மேலே திட்டு திட்டாய் ரத்தம்…… ஆமாம் அது ரத்தக்கறை தான்….
‘அஞ்சு’ முனகலாய் வந்த குரலில் திரும்பியவள் மேலும் அதிர்ந்தாள். கதவுக்கு வெளியே அவள் கணவன் சஞ்சய் முகமெல்லாம் ரத்தம் வழிய…
‘ஐயோ’ கதறியவள் சரிந்தாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
‘நான் தான் செத்துவிட்டேனே…..எத்தனை முறை தான் சாவது?’ ஏதேதோ எண்ணங்கள் தோன்ற அசையாது படுத்திருந்தாள் அவள்.
‘அஞ்சுமா கதவை திற’
இது சஞ்சயின் குரல் அல்லவா? அவனுக்கு ஒன்றும் இல்லையே…அப்படியானால்… அவை யாவும் கனவா? இது தான் நிஜமா?
எப்படி தெரிந்து கொள்வது? அப்போது கிள்ளியது வலிக்கத்தானே செய்தது.
‘அஞ்சு’ பொறுமையின்றி அழைத்தது கணவனின் குரல்.
ஐயோ, நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள் தோழிகளே இது நிஜமா? இல்லை கனவா?