விசுவின் திமிரும் உடலை கட்டுப்படுத்தி, கழுத்தை பின்னாலிருந்தபடி வசமாக கிடுக்கிப் பிடித்து நெரித்துக் கொண்டிருந்தது அந்த ஆஜானுபாகுவான உருவம். விசுவின் எதிரே அவன் வந்த குதிரை வேகமாக அவனை நோக்கி வருவது போலவும் பின்பும் மறைவது போலவும் உணர்ந்தான். அந்தக் குதிரை ஒரு வேளை ஒரு மாடர்ன் ஆர்ட்டாக இருந்தாலும் இருக்கலாம் என நினைத்தான். ச்சே… ச்சே! சோழர் காலத்தில் ஏது மாடர்ன்?! சரி! இதைப் பற்றியெல்லாம் இப்போது ஆராய விசுவிற்கு நேரமில்லை. அவன் இப்போது சோழ தேசத்துக் காவலாளியின் கைகளில், மரணத்தின் விளிம்பில் இருக்கிறான்.
அந்தக் காவலன் விசுவின் கழுத்தை நெரித்த நெரியில் அவன் கண்விழிகள் வெளியே வந்துவிடும்போல் இருந்தது. விசு, தனது முழு பலத்தையும் ஒன்று திரட்டி, அந்தக் கைப்பிடியைத் தளர்த்தி, காவலாளியின் காதுகளில் கம்மிய குரலில் கூறினான் “டாக்குமென்ட்ஸ… அ… அ… அரண்மனை பொக்கிஷப் பெட்டியில் வெச்சிருக்கேன். இந்தப் பொற்காசுகளை வைத்துக்கொண்டு என்னை விட்டு விடு!”
அந்த முறுக்கு மீசை உருவம் உடனடியாக பிடியைத் தளர்த்தி விட்டுவிட்டது.
சோழ தேசத்து ராஜவைத்தியர் அந்தக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி, “ம்… ம்… சீக்கிரம் நாளிகை கடக்கிறது” என்று அதட்ட, அவரை முறைத்த படியே குதிரை மீது ஏறி, முடுக்கினான் விசு. பின்னால் அமர்ந்திருந்த வைத்தியர், “ஆயில் போடுறதில்லையா, பாரு பின்னாடி குதிரை கரும்புகையைத் தள்ளுகிறது” என்று சுட்டிக் காட்ட, பதிலேதும் பேசாமல் மீண்டும் திரும்பிப் பார்த்து அவரை முறைக்கிறான் விசு.
“ஏய்… விஸ்வநாதா! எந்திரிடா. அஞ்சு மணிக்கு எந்திரிக்கணும்னு அலாரம் வச்சுட்டு எப்புடி தூங்கிக்கிட்டிருக்கான் பாரு! அலாரம்பாட்டுக்கு அடிச்சுகிட்டு இருக்கு.” என்று கோதை நாச்சியார் எழுப்ப, புரண்டு படுத்துக் கொண்டு மீண்டும் தூங்கினான் விசு. கனவும் தொடர்ந்தது.
“எட்டு மணி வரை அடுத்த ஒரு மணி நேரத்திற்கு விரும்பிக்கேட்டவை வலம் வரவிருக்கிறது” சரியான அலைவரிசையில் அமராத அந்த பண்பலை இரைந்து கொண்டிருந்தபோது, தூக்கம் விடைபெற, விழித்தான். பேண்ட் பாக்கெட், ஷ்ர்ட் பாக்கெட், அலமாரி என விசு தேடிக்கொண்டிருந்ததைக் கவனித்த சுந்தரபாண்டியன், “வண்டிச் சாவிதான… டிவி பக்கத்துல இருக்கு பாரு! என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
“தேங்ஸ் ப்பா” என்றபடி புன்னகைத்தான். அவரிடமிருந்து எந்தக் சமிக்ஞையும் இல்லை. “ஆஹா! வழக்கம்போல் ராமாயணம் பாடப் போறாரு…” என்று விசு மனதில் நினைத்து முடிப்பதற்குள், “ஆமா… நீ என்ன நெனச்சிகிட்டு இருக்க மனசுல?! ஒன்னு உயரமா இருக்குங்குற, இல்ல குள்ளமா இருக்குங்குற. இதக்கூடப் பொறுத்தக்கலாம், உயரமாவும் இல்லாம, குள்ளமாவும் இல்லாம இருக்குன்னு சொன்ன பாத்தியா அத மட்டும் பொறுத்துக்கவே முடியாது. இனிமே நீயும் உங்க அம்மாவுமே பொண்ணு பாத்துக்கோங்க. என்ன ஆள விடுங்க. நீ நெனக்கிற மாதிரி கனவுக் கன்னிய தேடி அலையறதுக்கு நா ஆளில்ல.”
கோதை நாச்சியாரும் விசுவும் பாண்டியரின் பேச்சை நக்கல் செய்வது போல் கண்களால் ஜாடைபேசினர். வாய்வரை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, பைக்கில் ஏறினான் விசு.
“ஏய்… ஒழுங்கா ஆஃபீஸுக்கு போ! அகழ்வாராய்ச்சி அது இதுனு அந்த அரவிந்த் பய கூட சேந்து சுத்திகிட்டு இருக்காத” கோதை நாச்சியாரின் குரல் பைக் சத்தத்திற்கிடையே தெளிவாக விசுவின் காதுகளில் விழுந்தது.
“அதெல்லாம் இல்லமா… அவன் ஊர்லயே இல்ல. பிஹெச்டி ரிசர்ச்சுக்காக குஜராத் வரைக்கும் போயிருக்கான்.”
விசு சொன்னது உண்மைதான் என்றாலும், இப்போதும் விசு ஆராய்ச்சியில்தான் இருந்தான். கடந்த சில மாதங்களாக அவனுக்கு வரும் கனவுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். நேராக அடுத்த தெரு முனையிலுள்ள கிளினிக்கில் பைக் நின்றது.
“ம்… உக்காருங்க! என்ன பண்ணுது?”
“டாக்டர்..! என்ன ஞாபகம் இல்லயா? போன மாசம் அந்தக் கனவப் பத்தி கேட்டிட்டு போனேன்ல…”
“ஓ… யெஸ், யெஸ்! நான்தான் அன்னிக்கே சொன்னேன்ல, இதப்பத்தியெல்லாம் நீங்க சைக்கியார்டிஸ்ட் கிட்டதான் கேக்கணும்னு.”
“இல்ல சார் அவங்கல்லாம் எதோ நோயாளியா நெனச்சுகிட்டு ட்ரீட்மென்ட் குடுக்கறதுலயே குறியா இருக்குறாங்க. உங்கள மாதிரி ஒரு அனுபவமுள்ள டாக்டர்கிட்ட வந்தாதான் இதுக்கு சரியா இருக்கும்.”
தன் வீட்டிற்கு பக்கத்தில் அந்த டாக்டரின் க்ளினிக் இருப்பதால் வேறு வழியில்லாமல் அவசரத்திற்கு ஆலோசனை கேட்க விசு அங்கு செல்கிறான் என்பதே உண்மை. எதிர்தரப்பை இப்படி அதிகப்படியாகப் புகழ்ந்து ஆஃப் செய்வது விசுவிற்கு கைவந்த கலை. டாக்டரும் அதற்கு ஒரு பலி.
“இப்போ…. போன மாசம் நீங்க கண்ட கனவுல, வந்தியத் தேவனா நீங்க இருந்ததாகவும், உங்கள பாண்டிய நாட்டு படைகள் சுத்தி வளைச்சுட்டதாகவும் சொன்னீங்க, ஆனா, அன்னிக்கு ராத்திரி கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல நைட்டு 1 மணி வரைக்கும் படிச்சிருக்கீங்க; அந்தக் கதைல ஒன்றிப்போய் படிச்சிருக்கீங்க. அதனாலதான் அந்த எண்ணங்கள் உங்க கனவா பிரதிபலிச்சிருக்கு. நேத்து வந்த கனவ வெச்சுப் பாத்தா, நைட்டு ஏதாவது சோழர் வரலாற்று நாவல் படிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்…!”
“இல்ல சார். அப்படியெல்லாம் இல்ல. நான் ஒருவாரமா சோழா ஹோட்டல் பக்கம் கூட போகல”
“அப்ப… சோழா பூரி கீரி சாப்பிட்டீங்களா?!” டாக்டரின் இந்த வறட்டு நையாண்டியை எதிர்பார்க்காத விசு, அசட்டுப் புன்னகை சிந்தினான்.
“இல்ல சார்… நான் சந்திக்கிற குறிப்பிட்ட சூழ்நிலை, பாக்குற குறிப்பிட்ட இடம் ஏற்கனவே என் கனவுல நான் பாத்ததா இருந்திருக்கு.. இப்படி நான் பல தடவ உணர்ந்திருக்கேன்”
“சரி! நீங்க ஒன்னு பண்ணுங்க! ம்… திருச்சில என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட் ஒருத்தர் சைக்கியார்டிஸ்ட்டா இருக்குறாரு. அவர்கிட்ட நான் அப்பாய்ன்மன்ட் வாங்கித் தர்றேன். நீங்க போய் பாருங்க. உங்களுக்கு கண்டிப்பா ஒரு விடை கிடைக்கும்.”
மறுநாள் காலை, மதுரையிலிருந்து பைக்கிலேயே திருச்சிக்கு செல்வது எனத் தீர்மானித்த விசு, வழக்கத்தை விட சீக்கிரமாக கிளம்பி, வழக்கம்போல் பைக் சாவியைத் தேடினான்.
“சாவி டிவி பக்கத்துல இருக்கு பாரு!” என்ற பாண்டியரின் குரலுக்கு தேங்ஸ் சொல்வதற்காக ஹாலிற்கு வந்தபோது, “இவர் என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் வைத்தியநாதன். நீ எதோ வேல விஷயமா திருச்சி வரைக்கும் போறயாம்ல..! இவரயும் உங்கூட கூட்டிட்டுப் போயிரு.”
விசு உடனே அடுப்பங்கறையிலிருந்த நாச்சியாரை முறைத்தான். “நான் திருச்சிக்குப் போறத அப்பாகிட்ட உடனே அப்டேட் பண்ணிடணுமா?!” என்ற குரல் அந்த முறைப்பின் வழியாக நாச்சியாரை சென்றடைந்தது. நாக்கைக் கடித்த படி, கண்டுகொள்ளாதவளாய் அடுத்த தோசையை ஊற்றினாள் நாச்சியார்.
பயண இடைவெளியில் அவ்வப்போது இழுக்கப்படும் புகைச்சுருள்கள் தன்னுடன் வரும் வைத்தியநாதனால் தடைபட்டுவிட்ட கடுப்பில், அவருடன் ஏதும் பேசிக்கொள்ளவில்லை விசு.
“தம்பி சின்ன வயசில உங்கள பாத்திருக்கேன். ரெம்ப துருதுருன்னு இருப்பீங்க. இப்போ இவ்வளவு அமைதியா இருக்கீங்க?!” விசுவிடம் பேச்சுக்கொடுத்தார் வைத்தி.
“இல்ல, பைக் ஓட்டும்போது எனக்கு துருதுருன்னு இருக்கத் தெரியாது!” என்று விசு கடுப்புடன் கூற, பின்னால் ஏதோ அசாதாரணமான சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் விசு. பின் சீட்டில் வைத்தியின் சிரிப்புச் சத்தம்தான் அது! இவன் ஏதும் பேசாமல் திரும்பிக்கொண்டான்.
அந்தக் கனவு ஏதும் செய்தி சொல்கிறதா? இல்லை வெறும் எண்ணங்களின் பிரதிபலிப்புதானா? டாக்டரை சரியான நேரத்தில் சந்தித்து விட முடியுமா? எனப் பலக் கேள்விகள் விசுவின் மனதில் வந்து சென்றன.
ஒரு பழுத்த மாங்கனி ஒன்று மரத்திலிருந்து விழுவது போன்ற கனவு வந்த மறுநாள், கொள்ளுப்பாட்டி அழகம்மாள் நாச்சியார் வைகுண்ட பதவியடைந்த செய்தி வந்ததும், அலங்காரம் செய்த அழகிய தேர் ஒன்று புதைகுழியில் சிக்கிக் கொண்ட கனவு வந்த இரண்டு நாட்களில், நண்பன் புது கார் வாங்கியதைக் கொண்டாட நண்பர்களுடன் கேரளா சென்றபோது, கார் பஞ்சராகி ஆளில்லா நடுக்காட்டில் மாட்டிக்கொண்ட நிகழ்வும், தன் கனவுகள் எதையோ சொன்னதாகவே விசு நினைத்தான்.
திருச்சி உட்கோட்ட எல்லைக்குள் நுழைந்தது விசுவின் பைக். “என்ன தம்பி எதுவுமே பேசமாட்றீங்க?” வைத்தியநாதன் மீண்டும் மீண்டும் பேச்சுக் கொடுக்க முகம் கொடுத்து பேசாமலேயே பைக்கை விரட்டினான்.
சில அடிதூரத்தில் வெள்ளைப் போலீஸ்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி உரிமங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.
“நிறுத்து! நிறுத்து! லெஃப்ட்ல ஓரங்கட்டு!” விசுவின் வண்டி மறிக்கப்பட்டது.
“ம்… லைசன்ஸும் இல்ல, டாக்குமன்ட்ஸும் இல்ல! மதுரைல இருந்த பக்குல கௌம்பியாச்சு!” அந்த வெள்ளைப் போலீஸின் கருத்த முகமும் பெரிய மீசையும் சற்று படபடப்பை ஏற்படுத்தியது விசுவிற்கு. இன்னைக்கு விட்டுட்டா டாக்டர் அப்பாய்ன்மன்ட் கிடைக்குறது ரொம்ப கஷ்டம்வேற. வைத்தியநாதன் கூலாக பத்தடி தள்ளி மரத்தடியில் நின்றிருந்ததைப் பார்த்ததும் இன்னும் டென்ஷன் எகிறியது.
“சார்… சார்! லைசன்ஸ வீட்லயே வச்சிட்டு வந்திட்டேன் சார்! இத வச்சுக்கோங்க சார்! சீக்கிரமா போகணும்.” விசுவின் தாழ்ந்த இடது கையில் ரகசியமாய் எட்டிப் பார்த்தது 100 ரூபாய் நோட்டு. முறுக்கிய முகத்தில் உடனே ஒரு திடீர் புன்னகை உருண்டது.
“எனக்கு அப்பவே தெரியும் அந்த போலீஸ்காரர் நீங்க பணம் குடுத்தா விட்டிடுவாருன்னு.” காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்த பைக்கின் சத்தத்திற்கிடையே சற்று கத்தினார் வைத்தியநாதன்.
“ஏன்… நீங்க என்ன ஜோசியரா?” கடுப்புடன் கேட்டான் விசு.
“ஒரு சைக்கியார்டிஸ்ட்டா ஒருத்தரோட அங்க மொழிகள வெச்சு அவங்களப் பத்தி என்னால சொல்ல முடியும்!”
சடர்ன் பிரேக்காகப் போடாமல் ஒவ்வொரு கியராகவே மாற்றி ஓரங்கட்டினான் விசு. ‘சார் டீ சாப்பிடுறீங்களா?!’ வைத்தியின் முகத்தை முதல் முறையாக நேராகப் பார்த்தான் அவன்.
இருவரும் ரோட்டோர டீக்கடைக்குள் சென்று அமர்ந்தனர்.
இந்த வைத்தியநாதனிடம்தான் தெருமுனை டாக்டர் அப்பாய்ன்மன்ட் வாங்கித் தந்திருக்கிறார் என்பதை அறிந்ததும் இன்னும் இன்னும் கூடுதலான ஆச்சரிய குறிகள் விசுவின் முகத்தில். தன் கனவுகளைப் பற்றியும் ஆராய்ச்சி பற்றியும் விளக்கமாகவே எடுத்துரைத்தான் விசு.
“அதாவது விஸ்வநாதன்…! கனவுல ரெண்டு வகை இருக்கு. முதல் வகை, மேல் மட்ட மனதில வரக்கூடியது. அது, டிவி பார்க்கிறது; புக் படிக்கிறது; சாங் கேக்குறது; பேசுறது; எழுதுறது இதுமாதிரி நாம அன்னைக்கு என்னென்ன பண்றோமோ அந்த செயல்களின் பிரதிபலிப்பா, அந்த பதிவுகளோட வெளிப்பாடா வரக்கூடியது. அதுக்கு எந்த அர்த்தமும் இருக்காது. ரெண்டாவது வகை, ஆழமான தூக்கத்தில, ஆழ்மனதில இருந்து வரக்கூடயது. அந்தக் கனவு, இனிமே நடக்கக் கூடியத ஒருவேளை உங்களுக்குக் காட்டலாம். ஆனா அந்த செய்தி நேரடியா இல்லாம, குறிப்பால உணர்த்துவது மாதிரி இருக்கும். நிறைய பேருக்கு அந்தக் கனவெல்லாம் காலைல எந்திச்சதும் மறந்திடும். உங்களுக்கு என்னவோ அதிசயமா ஞாபகம் இருக்குது. முந்தானாள் உங்களுக்கு வந்த கனவு இப்போ பலிச்சிக்கிட்டு இருக்குதுனு நினைக்கிறேன்.”
“எப்டி சொல்றீங்க சார்?!” விசுவின் கண்கள் ஆர்வம் மிகுதியால் கொஞ்சம் பெரிதாகின.
“கனவுல, உங்க கழுத்த நெரிச்ச உருவம் அந்த போலீஸ்காரர். பொற்காசு கொடுத்ததும் விட்டுட்டாரு.”
“அப்போ அந்த ராஜவைத்தியர்?”
“வைத்தியநாதன்… நான்தான்!” சொல்லிவிட்டு அந்த அசாதரண சிரிப்பை பதிவுசெய்தார்.
விடை கிடைத்துவிட்டாலும், இன்னும் ஏதோ பரபரப்பு விசுவிடம் இருந்தது. பைக்கை ஸ்டார்ட் செய்தான் விசு!
“ஆயில் போடுறதில்லையா, பாரு… வண்டி பின்னாடி கரும்புகையைத் தள்ளுது” என்று சொல்லியபடி வண்டியில் ஏறியமர்ந்தார் வைத்தி.
விசுவின் அங்க மொழிகள், நடக்கவிருக்கும் ஏதோ ஒன்றை அவன் அறிந்துள்ளதை வைத்திக்கு உணர்த்தியது.
“என்ன… விசு! இன்னும் கனவு பாக்கி இருக்கா? ஏதாவது நடக்கப்போகுதா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்! நான் இந்தக் கனவப் பத்தி தெரிஞ்சிகிட்ட த்ரில்தான்… கொஞ்சம் எக்ஸைட்டடா இருக்கேன்!”
“சரி…! உன்னோட அப்பாய்ன்மன்ட்தான் முடிசிருச்சில்ல?! எனக்குதான் இன்னும் நிறைய அப்பாய்ன்மன்ட்ஸ் இருக்கு. ஒன்னு பண்ணு, என்னோட ஃபேமிலி சென்னைல இருந்து வர்றாங்க. நீ ஜங்ஷன் போய் அவங்கள ரிசீவ் பண்ணு. டாக்டர் ஃபீஸ் அதான்!” வைத்தி இப்படிச் சொன்னதும் விசு இன்னும் ஆவலானான்.
வைத்தியை அவரது க்ளினிக்கில் விட்டு விட்டு, ஜங்ஷனுக்குப் பறந்தது பைக். S3 கோச் எங்கு நிற்கும் என்று விசாரித்து சரியாகவே நின்றிருந்தான் விசு.
இறுதி அறிவிப்பு வந்ததும், தூரத்தில் கேட்ட ரயிலின் சத்தம் ஏதேதோ கற்பனைக்கு இழுத்துச் சென்றது. S3 வழக்கமான இடத்தில் நிற்காமல் சற்று முன்பாகச் சென்றுவிட, விசு ஓடிப்போவதற்குள் நெரிசல் உருவானது. வேறு வழியில்லாமல் ப்ளாட்பார பெஞ்சில் உட்கார்ந்து காத்திருந்தான். பின்னர், வைத்தியநாதனின் மனைவிக்கு ஃபோன் செய்தான்.
“சார் அனுப்பிச்சாரு, எங்க இருக்கீங்க?!”
“இருப்பா ஏம்பொண்ணு கைல குடுக்கிறேன்! ஏய்… இந்தா அவர்ட்ட கொஞ்சம் அடையாளம் சொல்லு” என்ற குரலைப் பின் தொடர்ந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது.
“S3 கோச்சுக்கு முன்னாடி ஒரு புக் ஷாப் இருக்குல்ல?!”
“ஆமா…”
“அங்க ஒரு பொண்ணு அழகா, யெல்லோ சுடிதார் போட்டுக்கிட்டு இருக்குதா?”
“யெல்லோ சுடிதார் தெரியுது. ஆனா முகம் அந்தப்பக்கம் திரும்பி இருக்கே!”
சட்டென்று திரும்பி புன்னகைத்தாள் ஸ்வப்னா.
ராஜவைத்தியரின் வீட்டில் ஒரு அழகிய மானைக் கண்டு அதனுடன் மையல் கொண்ட அந்தக் கனவின் தொடர்ச்சியை வைத்தியநாதனிடம் விசு சொல்லவில்லை.
super sir
மிக அருமை நண்பா. ..
பிரமாதம்
அருமை. மிகவும் இரசித்தேன்.
அருமையான கதை..
Awesome.. awesome
Super story