(2019ல் வெளியான சரித்திர மர்ம திகில் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 15 – 19 | அத்தியாயம் 20 – 22 | அத்தியாயம் 23 – 25
அத்தியாயம் 20
மாளிகையின் உட்புறம் சென்ற பிரபு சுற்றி பார்வையைச் செலுத்தினான் .
மாடம் அமைந்த மேற்புர கூரை வட்ட வடிவில் காட்சியளிக்க, கூரையின் காரை பெயர்ந்து எப்போது தலையில் விழுமோ என அச்சப்படும் வகையில் காட்சியளித்தது.
கீழே உள்ள சுவர்களில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே ஓட்டைகள் காணப்பட்டது.
கீழே தரை முன்ஹாலில் புதராக காட்சியளித்தது போல் இல்லாமல் மணலாக காட்சியளித்தது.
அந்த ஹாலின் நடுவில் மாடத்திற்கு செல்லும் வகையில் படிக்கட்டுகள் வெறும் கற்களாக காட்சியளித்தது.
அதன் மேல் ஏறிச்செல்ல யோசித்த பிரபு காலடி எடுத்து நகர முயன்றான். அப்போது, காலில் ஏதோ சுரீர் என்று குத்த ‘ ஆ ‘ வென்று அலறியபடி சற்றுத்தள்ளி பயந்து போனவன் காலை குனிந்துப் பார்க்க, காலின் பாதத்தின் அடியில் இரத்தம் வேகமாக வருவதைக் கண்டான்.
சட்டென்று நொண்டியபடியே அந்த படிக்கட்டில் சென்று அமர்ந்து காலைத் தூக்கி மற்றொரு தொடையின் மேல் வைத்து இரத்தத்தை தனது கர்சீப்பால் துடைத்தான்.
சிறிது நேரம் அழுந்தப் பிடித்துக் கொண்டிருந்தவன் மெல்லக் கையை எடுத்தான்.
இரத்தம் நின்றிருந்தது . மெல்ல எழுந்தவன் ஏதோ ஒரு உந்துதலால் காலில் குத்திய பொருள் என்னவாக இருக்கும் என எண்ணி அதை எடுத்துப் பார்க்க அங்கு சென்றவன், அங்கு கிடந்த குச்சி ஒன்றை எடுத்து மெல்லக் கிளறினான்.
ஏதோ தட்டுப்பட குனிந்து அந்த குச்சியாலேயே மணலைத் தள்ளி பார்த்தான்.
பொருள் ஒன்று தட்டுப்பட அதை கைகளினால் எடுத்தான்.
அதை எடுத்தவுடன் திடீரென்று காற்று வெளியிலிருந்து சுழன்றடித்து உள்ளே உள்ள மணலை வாரி அடித்தது . முகத்தில் பளிர்பளீரென்று மணல் அடிக்க தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டான். அப்போது திடீரென்று தூரத்தில் நரி ஊளையிடும் ஓசை கேட்டது . பிரபுவின் மனது திக் திக் என அடித்துக் கொண்டது.
தன் கையிலிருந்த பொருள் மண் படிந்து என்ன என்பது தெரியாமல் இருக்கவே கர்சீப்பினால் அதை அழுத்தி துடைத்தான்.
முகத்தருகே பெரிய வவ்வால் ஒன்று படபடவென அடித்தபடி வர, திடுக்கிட்ட பிரபு பயத்தினால் முகம் வெளிற வியர்வை வெளியேற, துடைப்பதற்கு கர்ச்சீப் சுத்தமாகஇல்லாதபடியால் தனது சட்டையை இழுத்து துடைத்துக் கொண்டான்.
இப்போது அந்த பொருளைப் பார்த்ததும் அது ஒரு கட்டாரி போல்தோற்றமளிக்கவே அதை திருப்பிப் பார்த்தான்.
அதில் ஏதோ எழுதி இருப்பது போல் தோன்ற அதை படிப்பதற்கு முயற்சி செய்தான்.
வட்ட எழுத்துக்கள் போல் இருக்க சில எழுத்துக்களை படிக்க முடிந்தது.
பாக்கியவார் என்பது மட்டும் புரிந்தது.
திவானைப் பார்க்க வேகமாக வந்த நிர்மலேஷ்வர் பாக்கியவார் அங்கே சுமார் அறுபது வயசிருக்கக் கூடிய உயரமாக தலைமுடிமுன்பக்கம்வெளுத்துக் காணப்பட்ட ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
இளைய ஜமீனைப் பார்த்தவுடன் கையை எடுத்து கும்பிட்ட திவான் விகற்ப வேலுக்குறிச்சியார் அமருங்கள் என்று ஜமீன் கூறவே எதிரில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.
“நானே உங்களை அழைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் . இளையதேவி பிறந்து பார்க்கவில்லையல்லவா… அதனால் அவளிடம் சிறிது நேரம் பொழுதைப் போக்கினேன்.”
“நல்லது. தாங்கள் இளையராணியை விட்டு நிறைமாதத்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது . மகாராணி அம்மங்காதேவி பிரசவ நேரத்தில் மிகவும் பயந்துவிட்டார்.
தாதி குழந்தை குறுக்காக போய்விட்டது . தாயோ சேயோ ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டாள்.
பெரிய உயிரை காப்பாற்றினாள் போதும் என மகராணி கூறிவிட்டார்.
நல்லவேளை நமது குலதெய்வம் காண்டியப்பதேவி அருளால் யாருக்கும் எந்தவித பாதிப்புமின்றி குழந்தை பிறந்துவிட்டாள்.”
“எப்போதும் கார்காலம் முடிந்து வசந்த காலத்தில் தானே வரிவிதிப்பு ஓலை மன்னரிடமிருந்து வரும். இந்த ஆண்டு ஏன் முன்கூட்டியே கோடைகாலம் முடிந்த உடனே ஓலை வந்தது?”
“பிரபு …! நாம் தங்களின் இரகசிய அறையில் அமர்ந்து பேசலாமா…? தங்களிடம் கூற வேண்டிய செய்தி நிறைய இருக்கிறது …” மெல்ல அருகில் வந்து இரகசியமாக திவான் கூறவும்;
“நல்லது . வாருங்கள் … அங்கேயேச் சென்று பேசிக் கொள்ளலாம் …” என்று கூறியவாறு தன்னுடைய இரகசிய அறை நோக்கிச் சென்றான்.
திவான் பின் தொடர்ந்து செல்ல அந்த அறையில் இருந்த ஆசனத்தில் இருவரும் அமர்ந்தனர்.
“பிரபு …! கருமலைத்தேசத்து மந்திரி பாலவராயரை திருக்கோட்டையூர் திவான் சங்கிலி குட்டவராயன் சென்ற திங்கள் சந்தித்து வந்திருக்கிறான் . அவன் அங்கு போய் வந்த பிறகுதான் பாலவராயர் எல்லா ஜமீனுக்கும் ஓலை அனுப்பியிருக்கிறார்.
அவரோட நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஜமீனின் உரிமைகளை இழக்கவேண்டுமென்று செய்தி இதற்கு காரணம் சங்கிலியின் குறுக்கு திட்டமே.”
“சங்கிலிக்கி இதனால் என்ன இலாபம். அவங்க ஜமீனும் இந்த புதிய வரியை கட்டவேண்டுமல்லவா …? ”
“அவர்கள் இப்போது எவ்வளவு வரியென்றாலும் தருவதற்கு சித்தமாக உள்ளனர் . அதற்கு பதிலாக மற்ற சிற்றரசுகள் ஒத்துக் கொள்ளாவிடில் அவர்கள் மேல் போர் தொடுக்க வேண்டியது . இதற்கு படைபலமும் வீரர்களின் உணவுக்கும் தாங்கள் பொறுப்பென்றும் அதற்கு ஈடாக சுற்றிலும் உள்ள ஜமீன்களின் கருமலைத்தேசத்தின் பிரதிநிதியாக நியமிக்க வேண்டுமென்று பேச்சு வார்த்தை. இதற்கு சம்மதித்து விட்டார் மன்னர்.
பிரபு மற்றொரு விசயம் . இவனுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது நமது ஜமீனிலிருந்து.” என்று கூறியதுதான் தாமதம் விருட்டென்று ஆசனத்தை விட்டு எழுந்து விட்டார் ஜமீன்.
“நமது ஜமீனிலிருந்து அந்தக் கயவனுக்கு ஆதரவா … யார்… ? இப்போதே அவன் தலையை சீவிவிடுகிறேன் ..” கோபத்தில் கண்கள் சிவந்தன நிர்மல் பாக்கியவாருக்கு.
“இதுமட்டுமல்ல பிரபு … தாங்கள் செல்லும் வழியிலேயே தங்களை கொல்ல சதியும் நடந்தது .”
மீண்டும் ஆசனத்தில் அமர்ந்தவன் “கூறுங்கள் எனக்குத் தெரியாமல் இந்த ஜமீனில் ஏழாம்படை இருக்கிறதா…?”
“ஆம் பிரபு … தாங்கள் நிர்மல் கோலக்கல் வழியாக செல்வதாகத்தானே நமது திட்டம் .”
“ஆமாம் . அந்த காட்டுவழியாகச் சென்றால் சிறுகேணி ஆற்றங்கரையோரமாகவே விரைவில் கருமலையை அடைந்து விடலாம். அதனால்தான் அவ்வழியைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் தாங்கள் நாங்கள் பாதி வழி செல்கையிலேயே ஓலை அனுப்பி காண்டியூர் வழியாகச் செல்லச் சொல்லிவிட்டீர் .
காரணம் தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நீங்கள் இந்த சுற்று வழியைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என நினைத்து அவ்வழியே படைகளைத் திருப்பினேன் . அதனால் பத்து நாட்கள் கூடுதலாகிவிட்டது பயணம் ”
“நீங்கள் இங்கிருந்து கிளம்பிய பிறகுதான் எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.
நிர்மல் கோலக்கல் காட்டுப்பகுதியில் வைத்து தங்களை தாக்க கும்பல் ஒன்று காத்திருப்பதாகவும், அது தோற்கடிக்கப்பட்டால் அதை அடுத்து வரும் வானவயராயன் காட்டுப்பகுதியிலும் ஆபத்து இருப்பதாக தெரிந்தது.
அதனால் உடனே உங்களுக்கு மெய்ப்படை உதவி மூலம் விரைவில் சேதி கிடைக்க ஏற்பாடு செய்தேன். சாலைப்பிரிவு வருவதற்குள் கொண்டு சேர்ப்பித்துவிட வேண்டும் என்பது என் ஆணை .
அவ்வீரனும் குதிரையின் வாயில் நுரை தள்ளுமளவிற்கு காற்றாய் பறந்து தங்களிடம் சேர்ப்பித்து விட்டான் ஓலையை”
“யார் இதற்கெல்லாம் காரணம் …? கூறுங்கள் இன்றுடன் இந்த உலகத்தில் அவன் வாழ தகுதி இல்லாதவனாக்கி விடுகிறேன்.”
“நீங்கள் இந்த விசயத்தில் அவசரப்பட்டால் மன்னருக்கு விசயம் தெரிந்து நமது ஜமீனின் வருங்காலம் கேள்விக்குரியாகி விடும்.
நான் கூறுவதை ரகசியமாக வைத்துக் கொண்டு அவர்களின் அழிவை திட்டம் போட்டு நம் மேல் பழி வராதவாறு செயல்படுத்தவேண்டும்.”
“சரி கூறுங்கள் … எனக்கு அவர்கள் யார் என்று இப்போதே தெரிய வேண்டும் ..”
திவான் எழுந்து ஜமீனின் அருகில் வந்து அவன் காதோரமாக ரகசியமாக கூற,
‘ஆ’ இவர்களா… ! துரோகிகள் . இப்பவே இவர்களை கத்தியால் முத்தமிடவேண்டும் என்று துடிக்கிறது மனசு.
நீங்கள் எனது கையை கட்டிப் போட்டுவிட்டீர்கள்.”
“பொறுமை பிரபு . சிறிது சிறிதாக காயை நகர்த்தி தான் நமது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் . “
“ஆகட்டும் திவான் . நீங்கள் கூறியபடியே செய்திடலாம்.”
திவான் விடைபெற்றுச் சென்றபின்பும் நீண்ட நேரம் அங்குமிங்கும் சிந்தனையோடு நடை பயின்று கொண்டிருந்தான்.
சிறிது நேரங்கழித்து தன் அறையில் இருக்கும் அழைக்கும் மணியை அதன் இரும்புக் குழாயை எடுத்து அடிக்க, காவலன் வந்து நிற்க ‘விஸ்வேஸ்வரா பாக்கியவாரை வரச் சொல் ” என்று கூற
“உத்தரவு பிரபு ” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
சிறிது நேரங்கழித்து சின்ன ஜமீன் விஸ்வா வந்து தலைவணங்கி நிற்க,
“உட்கார் விஸ்வா …” என்று கூற
எதற்காக தன்னை அழைத்திருக்கிறான் என்ற சந்தேகத்தோடே அமர்ந்தான்.
“பாலவராயர் நம்ம ஜமீனுக்கு போட்ட அதிகப்படியான வரியை விலக்கிட்டார். அதற்கு ஈடாக அவர் நமது படைப்பிரிவில் ஒருகலம் வீரர்களை கருமலையின் தென்பகுதிக்கு அனுப்பச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
நீ படையின் சேனாதிபதியாக அப்படையை வழி நடத்திச் செல். வரும் வைகாசி மாதத்தில் கிளம்புவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துக்கொள்.
உனக்கு வேண்டிய நிதியை கணக்காளரிடம் சொல்லி வாங்கிக் கொள் …” என்றதும் பிரமையுடன் நின்றான் சின்ன ஜமீன் .
‘சகோதரரே … அப்படைக்கு நான்தான் தலைமை ஏற்க வேண்டுமா…? வேறு யாரையாவது அனுப்பலாமில்லையா….” என்று கேட்க,
“ஏன் ..உனக்கு செல்ல மனமில்லையா…இல்லை வேறு பணி காத்திருக்கிறதா…?”
“வேறுபணி இல்லை . நான் எனது சிறிய மாமா கவிக்குளம் சீர்மாறரை சென்று சந்தித்து வரவேண்டும் என்று அம்மீ கூறியிருக்கிறார்”, என்று இழுக்க
“எதற்கு இப்பொழுது கவிக்குளம் செல்ல வேண்டும் . உனது மாமனுக்கு உடல்நலம் நலம்தானே …?”
“நலம்தான். ஆனால் அவரை சந்தித்தாக வேண்டும். மாமன் மகள் பூம்பாவையை பார்த்து விட்டு வரச் சொல்லியிருக்கிறார்.”
‘பூம்பாவையையா…ஏன் உன் மணம் பேச நாங்கள் இல்லையா…?, நீ எதற்கு அங்கு செல்ல வேண்டும் . இது முறையல்லவே …?”
ஏன் சிறு வயதிலிருந்து நாங்கள் பழகியவர்கள் தானே . இதில் என்ன தவறு ..?”
நீ மாமன்மகளை பார்ப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆனால் மணம் முடிக்க வேண்டும் என்று நினைக்கும் போது அங்கு செல்வது முறையல்லவே …?”
“நீங்கள் சொன்னால் நான் செல்லவில்லை. அம்மீயிடம் சொல்லிக் கொள்கிறேன்.”
“நல்லது. இன்னும் ஒரு திங்கள் இருக்கிறது. நீ அதற்குள் படையைப் பிரித்துக் கொள்.”
“உத்தரவு . நான் செல்கிறேன்.” வெளியேறிய விஸ்வேஸ்வரன் மடமடவென்று தன் அறைக்குள் சென்று கைகளால் தான் அமர்ந்திருந்த படுக்கையில் குத்தினான்.
உள்ளே நுழைந்த சின்ன மகாராணி தன் மகன் ஏகக்கோபத்தில் இருப்பதைப் பார்த்து அருகில் வந்து அமர்ந்தாள்.
மெல்ல அவன் தோளைத் தொட்டு “ஏன …எதற்கு இவ்வளவு கோபம் …?”
“என்னை இந்த ஜமீனிலிருந்து விலக்க நிர்மல் திட்டம் வகுத்து விட்டான் . ஒரு படைப்பிரிவை அழைத்துக் கொண்டு கருமலையின் தென்எல்லைக்குச் செல்ல வேண்டுமாம். அங்கு சென்றால் எத்தனை காலமாகுமோ திரும்புவதற்கு. என் வாழ்வின் சுகம் இத்துடன் முடிந்து விட்டது.” கோபத்துடன் பெருமூச்சு விட்டான்.
இதைக் கேட்டதும் வெகுண்டெழுந்த சின்னமகாராணி “யாரைக்கேட்டு என் மகனை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்கிறான். தனக்கு அதிகாரம் இருந்தால் தன் உறவுவரை வைத்துக் கொள்ளவேண்டும் . என் மகனிடம் இந்த அதிகாரத்தைக் காட்டக் கூடாது இப்பொழுதே செல்கிறேன் அம்மங்காவிடம் ”
சட்டென்று தன் அம்மாவின் கையைப்பிடித்தவன் “வேண்டாம் அம்மீ…இன்னும் ஒரு திங்கள் இருக்கிறது. அதற்குள் இவனின் கதை முடிந்துவிடும். நானும் மாமாவும் ஒரு இடத்திற்கு சென்று வருகிறோம்.
“எங்கு செல்லப் போகிறீர்கள். என்ன செய்வதாக திட்டம்…?”
“தெரியவில்லை. மாமாவுக்குத் தான் தெரியும். சரி … நான் செல்வது இரவு நேரமாக இருக்க வேண்டும். நிர்மல் நம்மை ஒற்றுப் பார்க்கிறான் என்று நினைக்கிறேன் . நீங்கள் கவனமாக எதையும் செயல்படுத்துங்கள் . கவனம்’ என மற்றொருமுறை கூறிவிட்டு வெளியேச் சென்றான்.
இரவு இரண்டாம் ஜாமம் தொடங்கியதும் விஸ்வேஸ்வரன், தனது தலையைச் சுற்றி முக்காடு போட்டுக் கொண்டு பின் படிக்கட்டு வழியாக கீழே இறங்கினான்.
குதிரையுடன் வீரன் ஒருவன் நின்றிருக்க குதிரையில் ஏறியவன் ஊர் உட்புறமாகச் செல்லாமல் ஏரிக்கரை ஓரமாகவே குதிரையைச் செலுத்தினான்.
அவன் செல்லும் திசையில் பின்புறமாக குதிரையில் ஓர் உருவம் பின் தொடர்ந்தது.
சட்டென்று திரும்பிய விஸ்வா பின்புறம் திரும்பிப் பார்க்க கும்மிருட்டு மட்டுமே தென்பட மீண்டும் குதிரையை விரைவாகச் செலுத்தினான் .
ஏரிக்கரை முடிவில் ஒரு மண்டபம் இருந்தது. அந்த மண்டபத்தில் மிகப் பெரிய காளி சிலை இருக்க காளி நன்கு அலங்கரிக்கப்பட்டு ஆக்ரோசமாக காட்சியளித்தது . அதன் முன்னால் ஒரு யாகக்குண்டம் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அதன் முன்னால் கழுத்தில் ருத்ராட்ச மாலைகளை அணிந்தபடி வெற்று மார்புடன் இடுப்பில் ஒரு சிறு துண்டு கட்டியபடி நெற்றி நிறைய விபூதி பூசியபடி ஒருவன் மந்திரங்களை கூறியபடி யாகக்குண்டத்தில் நெய் ஊற்றியபடி இருந்தான்.
குதிரையை விட்டு கீழே இறங்கிய விஸ்வா தன் காலனியைக் கழற்றி விட்டு அவன் எதிரே சென்று அமர்ந்தான்.
அவனைப் பார்த்த அவன் தலையை அசைத்து வரவேற்றான் . வாய் மந்திரங்கள் சொல்வதை நிறுத்தவில்லை.
சுமார் இரண்டு நாழிகை அளவில் நடந்த பூசை தீபாராதனையுடன் முடிவுற்றது.
தன்இருக்கையிலிருந்து எழுந்த இருவரும் அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்து நீரில் கையைக் கழுவிக் கொண்டு வேறு ஒரு இடத்தில் அமர்ந்தனர். ‘என்ன மாயவா … இன்னும் எத்தனை நாள் இருக்கிறது பூஜை முடிவடைய.
இந்த பூஜை முடிவடையும் நாளில் ஜமீனின் பட்டத்தை நான் சுமப்பேன் என்று கூறினாய். அந்த நாளை நான் ஆவலாக எதிர்பார்க்கிறேன் .”
“பிரபு … ஜாதக ரீதியா உங்கள் லக்ன பலன் அருமையாக ராஜ யோகம் பெற்றிருக்கிறது. இந்த பூஜை உங்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் அப்பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இன்னும் மூன்று தினங்களில் முடிவடைந்து விடும். ” ” நல்லது . மூன்று தினங்கள் . நிர்மலா … உன் சகாப்தம் முடியப்போகிறது . இனி நானே என் சந்நதியே இந்த ஜமீனை ஆளப் போகிறது.”
இவ்வாறு எண்ணியவன் ஏதோ நினைத்தவனாக “மாயவா…நிர்மலா சித்தர்கிட்ட வாங்கிய பொருள் இருக்கின்ற வரையில் அவனை யாரும் நெருங்க முடியாது என்று சொன்னாயே, எப்படி அவனை அழிக்கப் போகிறாய்…?” என்று கேட்க,
“அதற்குத்தான் அன்றே கூறினேன் அதை எப்படியாவது அவனிடமிருந்து பறித்து விடு … அல்லது தெரியாமல் எடுத்து உன்னிடத்தில் வைத்துக் கொள் என்று . ஆனால் நீ அதையெல்லாம் செய்ய இயலாமல் என்னையே கேள்விக் கேட்கிறாய் …?”
என்ன செய்வது … அது அவனிடத்தில் இருந்திருந்தாலோ அல்லது அவன் மனைவி, அல்லது அவன் தாயிடத்தில் இருந்திருந்தாலோ எப்படியாவது எடுத்திருப்போம் . ஆனால் அப்பொருளை எங்கே வைத்திருக்கிறான் என்றே தெரியவில்லை. எப்படி கண்டுபிடிப்பது என்றுதான் ஒரே சிந்தன .”
“சரி … நான் நாளை ஜமீனுக்கு வருகிறேன். வந்தால் என் சர்வ சக்தியால் அது மாளிகையில் எங்கே ஒளிக்க வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து விடலாம்.”
“நல்லது . நாளை நீ சாமியார் போல் வேடம் பூண்டு வா . அதற்குள் நான் அங்கு பூஜை செய்வதற்குரிய ஏதாவது ஒரு காரணத்தை என் பெரியம்மா பெரிய மகாராணியின் உத்தரவைப் பெற்றுத் தருகிறேன். அதன் பிறகு உனது சாமார்த்தியம்.”
“சரி … அவ்வாறே செய்துவிடுங்கள் . கவனம் அதை நாம் கைப்பற்றினால்தான் அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் ஏதும் செய்யமுடியும்.”
“இரவு மூன்றாம் ஜாமம் வந்துவிட்டது . யாரும் பார்ப்பதற்கு முன் அரண்மனை செல்லவேண்டும்” என்று கூறிவிட்டு வந்த பாதையில் செல்லாமல் ஊர்வழியாக குதிரையைத் தட்டினான்.
அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த மாயவன் ‘பைத்தியக்காரன். இவனுக்காகவா இந்த பூசை . மாளிகையில் மறைந்துகிடக்கும் பொக்கிசத்தை கைப்பற்றவும் சித்தரின் தகட்டை கைப்பற்றி சகல சர்வ வல்லமையும் பெற்று இந்த வையத்திலே சர்வ அதிகாரமாக நான் விளங்கிடவே செய்கிறேன். இவன் மூலமாகவே அந்தத் தகட்டைப் பெறத்தானே இவனிடம் வலியச் சென்று பழகினேன் .
இனி வருங்காலமே அனைத்து கிரகங்களும் எனது சொல்படிதான் கேடாக வேண்டும். ‘ என்று சொல்லியவாறு சத்தம் போட்டு ஹஹா ஹா என்று பயங்கரமாகச் சிரித்தான் .
ஊர் எல்லையில் கூடாரம் அமைத்து நாடோடிக்கும்பல் தங்கியிருந்தது . அமாவாசைக்காலமாக இருந்த காரணத்தால் கும்மிருட்டாக காட்சியளித்தது.
குதிரையை அதன் போக்கில் வேகத்துடன் ஓடவிட்டவன் சிந்தனையை சிந்தித்தவாறு வந்தவன் திடீரென்று ‘ ஐயோ … அம்மா …!
என்ற அலறிலில் குதிரையின் கடிவாளத்தை பிடிக்க அதற்குள் அங்கே சிலர் தீப்பந்தத்தை எடுத்து ஓடிவர. குதிரையின் காலடியில் கர்ப்பிணி பெண்ணொருத்தி இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
பிரபு அந்தக் கட்டாரியை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருக்கையில் அவன் நினைவில் ஏதேதோ நிழலாடியது .
அத்தியாயம் 21
வீல் என்ற பெண்ணின் அலறலில் தூங்கிக் கொண்டிருந்த நாடோடிக்கூட்டம் விழித்துக் கொண்டது.
தங்கள் இன கர்ப்பிணி பெண் குதிரையின் காலில் மிதிபட்டு வயிற்றுக்குழந்தை வயிற்றிலிருந்து வெளிவந்து கிடந்தது கண்டு பதறி அருகே ஓடினர் . அந்தப் பெண்ணின் தாய் கதறியபடி ஓடி அப்பெண்ணை தூக்கி தன் மடிமேல் கிடத்திக் கொண்டு கதறி கதறி துடிக்க ஆரம்பித்தாள் . நிமிர்ந்து குதிரையில் வீற்றிருந்த விஸ்வேஸ்வர பாக்கியவானைப் பார்த்து கோபத்துடன்,
ஏ கணவாணே …! பரியின் மீது அமர்ந்துவிட்டாள் காட்சிப்பிழை வந்துவிடுமோ …?
தவமாய் தவமிருந்து குலதெய்வம் கன்னிமாடத்தி அருளால் சூல் கொண்ட என் மகவு இன்னும் சில தினங்களில் தான் ஈனும் குழவியைத் தாலாட்ட அல்லும் பகல் காத்திருந்தாளே …
அடேப் பதரே ….! கண்ணிமைக்கும் நேரத்தில் ஈருயிரை காலனிடம் அனுப்பி வைத்து விட்டாயே … என்னிடத்தில் ஒப்படைத்து விட்டு எல்லைக்காவலுக்குச் சென்றிருக்கும் அவளின் கணவனுக்கு நான் என்ன பதில் சொல்வேன் . ஐயோ..! என் குலவிளக்கை அழித்துவிட்டாயே சண்டாளா….!
என் வயிறு துடிப்பது போல் உனை ஈன்ற தாயும் துடிக்க வேண்டும்.
என்குலம் விளங்காது சென்றது போல் உனைச்சேர்ந்த அத்தனை குலங்களும் அழிந்து போக வேண்டும்.
நீ அழிய உனக்கு எள்ளும் தண்ணீரும் தெளிப்பதற்கும் நாதி இன்றி மண்ணோடு மண்ணாக போக வேண்டும்.
நீ வாழும் பூமி கோட்டான்களும் வௌவால்களும் ஓநாய்களும் வாழும் மயான பூமியாக வேண்டும்.
நான் ஒருவனுக்கே துணைவி என்பது உண்மையானால் கன்னிமாடத்தி தாயே … இவன் குலநாசம் அடையவேண்டும் !”
அழுது புலம்பி அவள் சாபம் கொடுக்க,
குதிரையின் மேல் இதுகாறும் ஒருவித அதிர்ச்சியில் இருந்த விஸ்வா,
கண்கள் சிவந்து உதடுகள் துடித்து சட்டென்று தன் வாளை உருவினான்.
“ஏ .. நாடோடி நாயே ! உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் இந்த ஜமீனின் அடுத்த வாரிசுக்கு சாபம் கொடுப்பாய்.
அற்ப பதரே …! ஊரை விட்டு ஊர்வந்து பஞ்சம் பிழைக்க வந்த நீஎன்னையா ஏக வசனத்தில் அழைக்கிறாய் ? சாலையில் படுத்துறங்கினால் குதிரை மட்டுமல்ல, யானை, புலி, சிங்கம் என அனைத்தும் ஏறிக் கொல்லும்.
அவள் கணவன் வந்தால் பதில் என்ன சொல்வேன் என்றுதானே புலம்புகிறாய் ?
உன்மகள் சென்ற இடத்து காலன் உனையும் அழைக்கிறான் .
போய் அவளுக்கு அங்கே துணையாயிரு ..” என்று சொல்லி தன் வாளால் ஒரே சீவில் தலையைத் துண்டித்து தலையைத் தூர வீசி எறிந்தான்.
இதனைக் கண்ட மற்ற ஆண்கள் தங்களிடமிருந்து ஈட்டி, குத்துவாள், வேல் கம்பு போன்ற ஆயுதங்களை எடுத்து அவனைச் சுற்றி கோபாவேசமாக தாக்குவதற்கு நிற்க,
“என்ன… தாக்க வந்தீர்களா .! உங்களுக்கு இங்கு தான் கலம் போடப்பட்டுள்ளது போலும். இனி ஒருவரும் தலைநிமிரக் கூடாது.” என குரூரமாக
வாளைச் சுழற்றி சுழற்றி அனைவரின் தலைகளையும் கீழே மண்ணில் விழ வைத்தான்.
அப்போதும் ஆவேசம் அடங்காமல் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த பெண்களையும் வயோதிகர்களையும் பயத்தினால் இன்னதென்று புரியாமல் அழுதுக் கொண்டிருந்த குழந்தைகளையும் வெட்டி எறிந்தான்.
சற்று நேரத்திலே அப்பகுதியே பிணக்குவியலாகக் காட்சியளித்தது.
கழுகுகளும் வல்லாறுகளும் சுற்றிப் பறக்கத் தொடங்கின.
எங்கிருந்தோ ஓடிவந்த நரிக்கூட்டம் பிணங்களை குதறத் தொடங்கின.
இதுவரை இவற்றையெல்லாம் தூரத்தில் இருந்து விஸ்வாவை தொடர்ந்த உருவம் உடல் நடுங்கியபடி குதிரையில் அரண்மனைக்கு விரைந்தது.
நாடோடிப் பெண் சாபமிட்ட அதே நேரத்தில் கொடியக் கனவொன்று கண்டு திடுக்கிட்டு எழுந்த நிர்மலேஷ்வரன் வியர்வையினால் உடல் நனைந்து படபடப்புடன் எழுந்தான் .
அவனுடைய மனைவி மாதங்கி தன் குழந்தையின் வீரிட்ட அலறலில் எழுந்துவிட, திடிரென்று கோட்டான்களும் நரிகளும் ஊளையிடும் சத்தம் கேட்க,
அதற்குள் அரண்மனை விளக்குகள் ஏற்றப்பட அனைவரும் முற்றத்தில் குழுமி விட்டனர்.
எல்லோருக்குமே ஏதோ ஒரு துர் நிமித்திகம் தெரியவே கவலையுடன் எல்லோரும் ஒருவரையொருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நிர்மலேஷ்வரன் வெளியில் வந்து எல்லோரும் நின்றிருப்பதைப் பார்த்து
“ஏன் எல்லோரும் இங்கு நின்றுகொண்டிருக்கிறீர்கள் ?’ என்று கேட்க,
“பிரபு … என்னவென்று தெரியவில்லை. வெளியில் நிமித்தகம் சரியில்லை. ஏதோ சொல்லவெணா துயரம் நம் ஜமீனுக்கு நிகழப் போகிறதோ என கவலையாக இருக்கிறது .” என்று தலைக்கோல் தனாதிகாரி கூற,
அப்போது குதிரையின் வாய் நுரைதள்ளும் அளவுக்கு வந்து நின்ற வரகனேரி வாசல் கடைமடை வீரன் காளத்தி மூச்சிரைக்க வந்து நின்று ஜமீனுக்கு தலை வணங்கினான் .
என்ன காளத்தி… ஏன் இந்த நடுராத்திரியில் பிரவேசம் . ஏதாவது பிரச்சினையா …?”
” பிரபு….பிரபு ..” என்று வாய் குழறி கண்களில் கண்ணீர் வழிய கதற ஆரம்பித்தான்.
திடுக்கிட்ட அனைவரும் அவன் ஏதோ சொல்ல வருகிறான் என அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“காளத்தி..முதலில் கூற வந்ததைக் கூறு” வார்த்தைகளில் கடுமையைக் காட்டிக் நிர்மல் கேட்க, “பிரபு … திவான் அவர்களுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டதால் இந்த அரண்மனையிலிருந்து இன்று இரவு யாரோ வெளியில் செல்லப் போகிறார்கள்.
நீ அவனை பின்தொடர்ந்து சென்று அவன் எங்குச் செல்கிறான் என்பதைக் கண்காணித்து வந்துச் சொல்லவேண்டும் என்று கூறினார்.
அதன்படியே நான் இன்று இரவு முதல் சாமத்தில் இங்கிருந்து குதிரையில் சென்றவரை பின் தொடர்ந்துச் சென்றேன்.
பிறகு நடந்தவற்றையெல்லாம் விவரித்துக் கூறிவிட்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் திகிலடைந்து சிலை போல நின்றிருந்தனர் . நிர்மலேஷ்வரன் கண்களில் தீப்பொறி பறக்க அங்கிருந்த வீரனை அனுப்பி நடந்தவை உண்மைதானா என அறிந்து வர அனுப்பினான் . சிறிது நேரத்தில் அரக்க பரக்க ஓடிவந்தவன் “பிரபு … நமது எல்லையோரம் பிணக்குவியலாக இருக்கிறது . நாய்களும் நரிகளும் கூகைகளும் அங்கே நிரம்பிக் கிடக்கின்றன” எனக் கூற,
ஆரவார பேச்சினால் மகாராணி அம்மங்காதேவி, மாதங்கி, இளையராணி,
இறும்பூதியான், திவான் என அனைவரும் வந்து நிற்க மகாராணி திவானைப் பார்த்து
இந்த நடுசியில் ஏன் எல்லோரும் இப்படி அதிர்வுடன் நிற்கிறீர்கள் . திவான் என்ன நடக்கிறது இங்கு ?” என கேள்விக் கேட்க,
திவான் நடந்த விவரங்களை நடுக்கத்துடன் கூற
மகாராணி சற்று மயக்கம் வருவது போல் சாய ஓடிச் சென்று நிர்மலேஷ்வரன் தாங்கிக் கொண்டான்.
தன்னிலை மறந்தவர் போல் கதறத் தொடங்கினார் மகாராணி.
“ஐயோ….என் தெய்வமே …! நான் என்ன செய்வேன் . என் கண்முன்னே இந்த ஜமீன் ஒரு பத்தினிப் பெண்ணின் சாபத்தால் அழியப் போகிறதா…?
கோட்டையூர் மதாங்கினித்தாயே …!
நீ எங்கள் காவலதிகாரி ஆயிற்றே ..
நீ இருந்துமா எங்களுக்கு இந்த நிலை .
கயவன் ஒருவன் செயலால் பழியை நீ சுமந்துக் கொண்டாயோ ?
அநியாயமாக தஞ்சமாக இவ்வூரில் காலடி வைத்தவர்களை பழிபாவத்துக்கு அஞ்சாமல் எங்களை படுகுழியில் தள்ளி விட்டானே மாபாதகன் …!” மகாராணி கதறலில் மாளிகையே அதிர்ந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த இளையராணி தன் சகோதரனை கையைப் பிடித்து மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
“சகோதரா… இரவு மாளிகையில் இருந்து நீயும் விஸ்வாவும் தானே சென்றீர்கள். என்ன நடந்தது ?” என்று கேட்க,
“என்ன … நான் சென்றேனா …!, யார் அப்படிச் சொன்னது ?”
“ஏன் இப்படிக் கேட்கிறாய் …? விஸ்வா என்னிடம், மாமாவும் நானும் ஓரிடத்திற்கு இன்று இரவுப் போய் வருகிறோம் என்று தானே சொன்னான்”.
“இல்லை சகோதரி …! நான் அப்படி எதுவும் சொல்லவில்லையே . அதுவுமில்லாமல் இரவு வெகு சீக்கிரம் உறங்கச் சென்று விட்டேன் ஆமாம் விஸ்வா என்னிடம் கூட சொல்லாமல் அப்படி எங்குதான் சென்றிருப்பான் ? இன்னும் வரவில்லையோ ?”
எனக்கும் புரியவில்லை. அவன் போக்கு வரவர சரியில்லை. ஜமீனை வசப்படுத்த வேண்டுமென்றால் மக்களிடம் நாம் கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும்
அதை விடுத்து எதற்காக இப்படி ஒரு விபரீதத்தை கொண்டு வந்திருக்கிறான் .
நிர்மல் எது கிடைக்கும், அதைப் பிடித்து தொங்கலாம் என நம்மை அழிக்க நினைக்கிறான்.
இனி இதுதான் சாக்கு என நம்மை தீட்டி விடுவான் . என்ன செய்வது ?”
இதை அவன் தான் செய்தான் என்பதற்கு அந்த வீரன் கூறும் சாட்சி மட்டுமே ஆதாரமாக முடியுமா…?
நீதி சபையில் இதற்கான தகுந்த ஆதாரத்தை நிர்மல் காட்டினால் தான் குற்றம் நிரூபிக்கப்படும்.”
“அப்படி சொல்ல முடியாது . இந்த அரண்மனையில் இருந்து குதிரையில் சென்றதற்கான ஆதாரத்தை நிர்மல் கண்டுபிடித்து விட்டான்.
குதிரை லாயத்தில் இல்லை . மற்றொன்று விஸ்வாவும் அறையில் இல்லையென்று சேடிகள் கூறிவிட்டனர்.
அவனை பிடிப்பதற்கு திவான் வீரர்களை அனுப்பியதை நீயுந்தானே பார்த்தாய்.”
அதற்குள் முற்றத்தில் ஆவென்ற பலரின் அலறல் கேட்கவே இருவரும் ஓடினர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி வயிற்றில் பயத்தை ஏற்படுத்தியது.
மகாராணி கீழே கிடக்க நிர்மல் ஓடிவந்து அவரை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டு,
அம்மீ… அம்மீ என உரத்தக் குரல் கொடுக்க அவரிடம் எந்த சலனமும் இல்லை.
வைத்தியரை அழைக்க சிலர் ஓடினர் .
எல்லாம் முடிந்து விட்டது என வைத்தியர் கைவிரிக்க ஹோ வென்ற அழுகை குரல் தாதிகள் சேடிகள் காவலர்கள் எனகதற,
மாதங்கி தனது குழந்தையுடன் அவர் அருகில் அமர்ந்து
‘அத்தை… அத்தை ‘ எனக் கதறினாள்.
நிர்மல் தனது மடியிலிருந்த தாயை அணைத்துக் கொண்டு கதறினான்.
இளையராணி விசயம் இன்னும் விபரீதமாகி விட்டதை உணர்ந்து தனது சகோதரினடம் இரகசியமாக ‘விஸ்வா எங்கிருக்கிறான் என கண்டறிந்து இங்கு வரவிடாமல் அழைத்துக் கொண்டு கட்டியூர் மங்கலம் சென்று விடுங்கள்.
நான் சேதி சொல்லும் வரை அங்கேயே இருங்கள் . விரைந்து யாரும் பார்ப்பதற்கு முன் செல்லுங்கள் ” எனக் கட்டளையிட அங்கிருந்து நகர்ந்தான் இறும்பூதியான் அவன் சென்ற சில நாழிகையில் பத்து பதினைந்து வீரர்கள் ஈட்டி முனையில் விஸ்வாவை கைது செய்து அழைத்து வந்தனர்.
அவனைப் பார்த்தவுடன் கண்களில் கோபக்கனல் கொண்டு தனது தாயை மஞ்சத்தில் கிடத்தி விட்டு வேகமாக விஸ்வாவிடம் வந்தவன்
“இரவு நேரத்தில் எங்கே சென்றிருந்தாய் ?” எனக் கேட்க,
“ஏன் எங்கு செல்வதாக இருந்தாலும் ஜமீனின் உத்தரவு தேவையோ ?”
“உன் உடையெல்லாம் இரத்தக்கறை எப்படி வந்தது?”
“அமாவாசை இருட்டல்லவா…குதிரை பள்ளத்தில் கவிழ்ந்து உடலில் அங்கங்கே காயங்கள் . அதனால் வந்த குருதி ”
“உனது வாள் குருதியில் நனைந்ததுபோல் உள்ளதே… போருக்கு ஏதும் சென்றாயோ ..?”
“சகோதரரே … என் மேல் என்ன குற்றச்சாட்டு சுமத்துவதற்கு இத்தனை . வினாக்களை எழுப்புகிறீர். எதற்காக எனக்கு கைவிலங்கு எனத் தெரிந்து கொள்ளலாமா…?”
“நமது எல்லைப் புறத்தில் எதற்காக நாடோடி மக்களை கொன்று குவித்தாய். நீ சென்ற மாயக்காரன் மாயாவி நரபலி கேட்டானா…?”
“வீணாக என் மேல் பழி சுமத்துகின்றீர். வெகு நாட்களாகவே இந்த ஜமீனிலிருந்து என்னை வெளியேற்ற திட்டம் போட்டுக் கொண்டுதான் வருகிறீர், நீங்கள் நடத்தும் இந்த நாடகத்தைக் கண்டு அஞ்சுபவன் நானல்ல.
நான்தான் இந்த குற்றத்தை செய்தேன் என ஆதாரபூர்வமாக அறிவித்தால் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்.”
“திவான் அவர்களே… இவன் ஆதாரம் கேட்கிறான். நாளை மறுநாள் நீதி சபையில் ஆதாரம் தரப்படும். அதுவரையில் இவனை . காலாக்கிரகத்தில் அடைத்து வையுங்கள்.
நாளை அம்மீயின் இறுதிவீட்டு நிகழ்வுக்கு அனைவருக்கும் சேதி அனுப்புங்கள .” எனக்கூறிவிட்டான்.
அவன் கூறியதைக் கேட்ட இளையராணி வேகமாக விஸ்வாவின் அருகில் வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டு =,
“முடியாது . என் மகனை என்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது . நிர்மல்…நீ வேண்டுமென்றே யாரோ சொல்வதைக் கேட்டு என் மகனை குற்றவாளியாக்குகிறாய்.
அவன் இரவில் வெளியில் செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவன் திருமணமாகதவன். அதனால் தாசி வீதிக்குக் கூட சென்றிருக்கலாம் . மாளிகையில் இருந்து வெளி சென்றவர்கள் வேறு யாராக வேணும் இருக்கலாம் .
ஏன் என் மகனை இங்கிருந்து அனுப்புவதற்கு நீயே கூட இக்காரியத்தை யார் மூலமாவது செய்திருக்கலாம். வீணாக பழி சுமத்தி அவனை காலாக்கிரகத்தில் அடைக்காதே…”
அவளின் கோபச் சொற்களுக்கு செவி சாய்க்காத நிர்மல் “ம் … ஏன் நிற்கிறீர்கள். இழத்துச் செல்லுங்கள் இவர்களை…” என ஆணையிட்டு சென்று விட,
“நிர்மல் … இதற்கெல்லாம் நீ பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் . என் உடன் பிறப்புக்கள் உன்னை சும்மா விட மாட்டார்கள் . உன் தாய் சென்ற இடத்துக்கு கூடிய சீக்கிரம் செல்ல தயாராயிரு ” தன்னையும் கைதி போல் வீரர்கள் இழுத்துச் செல்வதை ஆவேசமாக எதிர்த்துப் போராடி கத்திக் கொண்டேச் சென்றாள் இளைய ராணி.
மறுநாள் மாலை தனது தாயின் ஈமக்கிரியைகளை முடித்து விட்டு களைப்புடன் தனது முற்றத்தில் அமர, திவான் மற்றும் சேனை தளபதி, எல்லை காவலதிகாரி அனைவரும் வந்து அவனிடம் ஜமீனில் மக்கள் எண்ணங்களை விவரித்துக் கூற,
தலையாட்டி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த நிர்மல் நாளை மக்கள் மன்றத்தில் நீதி சபையை கூட்டுவதற்கான பணிகளை முடிக்க பல ஆணைகளைப் பிறப்பித்தவன் இரவின் அமைதியில் தன் படுக்கை அறைக்குச் சென்றான்.
அங்கே படுக்கை அறையில் மாதங்கி தன் குழந்தையை அரவணைத்தபடி உறங்கிக் கொண்டிருக்க சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நிர்மல் கண்களில் நீர் வழிய அப்படியே அமர்ந்திருந்தான்.
நேற்றய இரவில் உறங்குவதற்கு முன் தன் அம்மியை சந்தித்து பேசி விட்டு வந்த நிகழ்வை தன் கண் முன்னே நிழலாக்கினான்.
‘வா நிர்மல் … உன்னைத்தான் எதிர்பார்த்தேன் . இரவு நீ வழக்கமாக என்னைப் பார்க்க வரும் நேரத்துக்காகதான் காத்திருக்கிறேன்”
“ஏன் அம்மீ…ஏதாவது விசயம் உள்ளதா அவசரமாக பேசுவதற்கு?’
“நீ இந்த ஜமீனின் தலைவன் . உனக்காக இந்த சமஸ்தானத்தில் பல பணிகள் இருக்கிறது. நீயும் அவற்றையெல்லாம் பொறுப்பாகவும் திறமையாகவும் நடத்திக் கொண்டு வருகிறாய்.
இப்பொழுது சில நாட்களாக நமது மாளிகையில் சிலர் கூடிகூடி பேசுகின்றனர்.
அவர்களின் செயல்பாடுகளும் மாறுபட்டு இருக்கிறது”
“தெரியும் அம்மீ …! நானும் கண்காணித்துக் கொண்டேதான் இருக்கிறேன் . எல்லாவற்றுக்கும் கூடிய விரைவில் விடை தெரிந்து விடும். கவலை வேண்டாம்”
“நான் கூற வந்ததே வேற விசயம் . சென்ற வாரம் நான் நமது குலசாமி கோட்டையூர் மதாங்கினி கோயிலுக்கு சென்றிருந்தேன் அல்லவா. அங்கே நமது சோதிடர் இருந்தார்.
அவர் என்னைப் பார்த்ததும் பாராதவர் போல் செல்ல முயற்சித்தார்.
அவரை அழைத்து ஏன் இந்த மாற்றம் ? என கேட்டேன். ‘அம்மாவின் முன் வர கஷ்டமாக இருந்தது. அதனால் தான் தங்களை நேருக்கு நேர் சந்திக்காமல் இருக்க விலகிச் சென்றேன்’ என்றார்.
எனக்கு குழப்பம் வரவே என்ன ஏது என்று விசாரித்ததில் அவர் கூறிய விசயம் எனக்கு அதிர்ச்சி அளித்தது .”
“என்ன விசயம் அம்மீ …? எதற்காக அதிர்ச்சி ”
“நம் ஜமீனுக்கு ஏதோ பிரச்சினைகள் வரப்போகிறதாம், ஜமீனின் வாரிசுகள் உயிருக்கு ஆபத்தும் ஏதோ ஒரு பெண்ணின் மூலமாக வரப்போகிறதாம்.
முக்கியமான இன்னொன்று நீ பித்ரு காரியம் செய்ய வேண்டிய நேரம் இருக்கிறதாம் …”
“பித்ரு காரியமா .. அப்படியென்றால் ?”
“நீ இனி யாருக்கு இக்காரியம் செய்வாய் …? இருப்பது நான் மட்டுந்தானே …”
இந்த வார்த்தையைக் கேட்டதும் முகம் மாறிய நிர்மல் ” அம்மீ … அப்படி ஏதும் நடக்காது . நடக்கவும் நான் விட மாட்டேன்” என தன் தாயின் கையை எடுத்து தன் கையோடு வைத்துக் கொண்டான்.
‘எனைப்பற்றிய கவலை இனி வேண்டாம். இது வாழ்ந்து முடிந்த உடல் . எனது கவலையெல்லாம் என் குடும்ப வாரிசு எந்தக் குறையுமில்லாமல் நன்கு வளர வேண்டும் என்பதே. நீ எனது மருமகள் அவள் வாரிசை எந்த ஆபத்தும் வராமல் காப்பாற்றி விடு”
“அம்மீ பயந்தது போலவே அவர் மரணம் நடந்து விட்டது . அப்படியென்றால் இவர்களுக்கும் ஆபத்து காத்திருக்கிறதா…?
ஆண்டவா… நான் இவர்களை எப்படி காப்பாற்றுவேன்.
திடீரென்று அவனுக்கு ஏதோ தோன்றவே தனது இரகசிய அறை நோக்கிச் சென்றான் .
பிரபு அந்த குத்துவாளை எடுத்தவுடன் தனது உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்கவே சட்டென்று அதை கீழே போட்டுவிட்டான். மெல்ல நடந்து மாடி செல்வதற்குரிய உடைந்து போன படிக்கட்டுகளின் மேல் கால் வைக்க, எங்கிருந்தோ பறந்து வந்த வௌவால் அவனது முகத்திற்கு அருகில் படபடவென்று பறந்துச் சென்றது . தனது கையால் தட்டிவிட்டவன் மணி என்னவாக இருக்கும் என்பதை அறிய தனது வாட்சைப் பார்க்க அது காலை ஆறுமணியளவிலேயே நின்று போயிருந்தது.
அதனால் பாக்கெட்டில் வைத்திருந்த தனது கைப்பேசியை எடுத்து ஆன் செய்ய அது சார்ஜ் இல்லாமல் நின்று போயிருந்தது.
அந்த மாளிகையில் பகலா இரவா எனத் தெரியாத நிலை இருக்கவே சோர்வு உடலில் தோன்றியது. நாம் வந்து வெகுநேரம் ஆகிஇருக்குமே ஏன் பசி தாகம் எதுவும் தோணவில்லை.
இங்கு இருக்கும் மர்மங்களில் இதுவும் ஓன்று என நினைத்து மேலேறிச் சென்றான்.
மேலே பல அறைகள் இருந்ததுக்கான அடையாளம் காணப்பட்டது.
ஒவ்வொரு அறையும் மிகப் பெரியதாக காணப்பட்டது. ஒரு அறையில் உள்ளே செல்ல அந்த அறை தனக்கு நெருக்கமான உணர்வைத் தர அந்த தரையில் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறினான்.
குழந்தை அழும் குரல் கேட்க அதன் அருகில் மங்கலான உருவம் அமர்ந்து இருப்பதுப் போல் தோன்ற மனதில் இனம்புரியாத சோகம் நிழலாடியது .
மீண்டும் எழுந்து பின்புறமாக செல்லும் படிக்கட்டு வழியாக இறங்க அது மாளிகையின் பின்பக்க முற்றத்திற்கு அழைத்துச் சென்றது அது நீண்ட தாவாறமாகச் சென்றது .
அதன் கடைசியில் வலது பக்கமாக ஒரு அறை இருக்க அது சிதிலமடைந்து பாதி சுவர் கூட இல்லாமல் வெட்ட வெளியாக காட்சியளித்தது .
அதன் ஒரு சுவற்றில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை அருகில் சென்று கவனித்தான்.
அந்த ஓவியம் வர்ணங்கள் இழந்து உருவம் சரிவரத் தெரியாவிட்டாலும் அதன் முகம் நன்றாக தெரிந்தது.
அதன் அருகில் சென்று அதன் மேல் இருந்த தூசிக்களை கைகளால் துடைக்க அந்த முகம் …. அந்த முகம் அவனது முகம் போலவே இருந்தது. அதிர்ச்சியுடன் அம்முகத்தை மீண்டும் பார்த்தான்.
ஆனால் அந்த முகத்தில் ராஜகளை தெரிய தலையில் கீரிடம் இருப்பது போல் தெரிந்தது.
சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல அந்த அறையைச் சுற்றி வந்தான்.
அறையின் தெற்கு மூலையில் புற்றுப் போல தெரிய அதன் அருகில் சென்று நின்றவனின் நினைவில் ஏதோ வந்து வந்து போனது.
திரும்பியவன் தன் காலை அங்கிருந்து எடுக்க முடியாமல் இருப்பதை உணர்ந்து கீழே ஏதாவது காலில் ஒட்டி இருக்கிறதா என குனிந்து பார்த்தான்.
எதுவும் இல்லை எனத் தெரிந்து மீண்டும் திரும்ப முடியவில்லை .
ஏன் இந்த நிலை ? ஏதோ ஒரு காரணம் இருக்கிறதோ என அங்கே அப்படியே அமர்ந்தான்.
அந்த தரையை உற்றுநோக்கியவன் தன் கையில் இருந்த சிறு பேனாக்கத்தியால் அந்த தரையை குத்தினான்.
மெல்ல மெல்ல அந்த தரையைத் தோண்ட ஆரம்பித்தவன் சிறிது தரை பெயர்ந்த உடனே அந்த மண்ணைக் கிளறினான்.
சிறிது நேரத்திலேயே அந்த இடத்தில் ஏதோ ஒரு தகடு போல தெரியவே அதை மண்ணில் பதிந்து கிடந்ததால் நன்றாக அதை கிளறினான்.
தகடு மண் ஏறி துருபிடுத்துக் காணப்பட அதை கையில் எடுத்தான்.
எடுத்தவுடனே காற்று உட்புறத்தில் பலமாக வீச, தடுமாறி கீழே விழப் போனான் பிரபு .
தன் மனைவி மாதங்கியையும் தன் வாரிசையும் எந்த வித தீங்கும் நேராமல் காக்க வேண்டும் என தன் இஷ்டத் தெய்வத்தைக் கையெடுத்துக் கும்பிட்டான் நிர்மல் தனது இரகசிய அறையில் தனது தந்தையின் ஓவியம் வரையப்பட்டிருந்த இடத்தில் தான் அமர்ந்து பேசும் அழகிய வேலைப்பாடுடைய ஆசனத்தை இழுத்து விட்டு கீழே உள்ள விரிப்பை எடுத்தான்.
அதன் கீழே திருகும் குமிழ் ஒன்று இருக்க அதை தன் கைகளால் வலதுபுறம் மூன்று முறையும் இடது புறம் மூன்று முறையும் சுழற்றினான்.
உடனே அந்த ஓவியம் இருக்கும் சுவர் திறந்துக் கொள்ள அதன் உள்ளே இருக்கும் படிக்கட்டு வழியாக உள்ளே இறங்கினான்.
கையில் இருந்த தீப்பந்தத்தால் வழி நன்றாகத் தெரிய நேராக படிக்கட்டில் இறங்கியவன் பின்பு சமநிலப்பகுதியில் இடது புறமாக வளைந்துச் சென்றான்.
கடைசி படிக்கட்டில் இறங்கியவன் படிக்கட்டின் பக்கவாட்டில் கையை வைத்து அந்த மரப்படிக்கட்டை முன்பக்கம் தள்ளிவிட பள்ளம் போன்ற பகுதியில் ஒரு சிறிய பேழை இருந்தது.
அதை எடுத்து திறந்தவன் அதில் உள்ள மயில் தோகைபோல் இருந்த திறவுகோலை எடுத்தான்.
அங்கே சிறிய அறை போன்று கம்பிகளால் பின்னப்பட்டு சிறிய மரக்கதவு போடப்பட்டிருந்தது.
அந்தக் கதவைத் திறக்க அந்த திறவுகோலை எடுத்து திறக்க உள்ளே குனிந்துச் சென்றான் . இருட்டாக அறை காட்சியளித்தாலும் அந்த அறை முழுவதும் பளபளவென்று மின்னியது .
அறையில் ஆளுயுர அளவுக்கு மலை போல் தங்க நகைகளும், வைரங்களும், வைடூரியங்களும் நிறைந்துக் காணப்பட்டது.
இந்த பொக்கிசங்கள் காலங்காலமாய் தனது பரம்பரைகளால் பாதுகாப்பாய் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஜமீனுக்கு முடிசூடியவர்கள் மட்டுமே இந்த பொக்கிசத்தை பராமரிக்க தகுதியானவர்கள். தனது மனைவிக்கு கூட இந்த இரகசியத்தை கூறக்கூடாது . தனது மரணம் திடீரென்று ஏற்பட்டால் தனது கைப்பட எழுதிய ஓலையை அரக்கு முத்திரையிட்டு ஜமீனின் வசத்தில் ஒப்படைத்திருந்த அதை வாரிசு முடிசூடிக் கொள்ளும் அன்று ஒப்படைப்பார் திவான்.
அதை வாங்கியவர்கள் தான் மட்டுமே படித்து விட்டு மீண்டும் அரக்கு முத்திரையிட்டு திவானிடம் ஒப்படைத்து விடுவார்கள் .
அதில் பொக்கிசத்தைப் பற்றிய தகவல்கள் இருக்கும்.
வயோதிகத்தால் இறக்கும்போது தனது முடிசூடும் வாரிசிடம் மட்டுமே அவர் கூறுவார். அப்போது அந்த ஓலைக்கு வேலையிருக்காது.
நிர்மல் பொக்கிசங்களின் நடுவில் இருக்கும் ஒரு ஆரத்தை எடுத்தான்.
அதன் நடுவில் இருக்கும் லாக்கெட் போன்ற டாலரை
திறக்க அதில் ஒரு பித்தளைத்தகடு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு காணப்பட்டது.
அதைக் கையில் எடுத்தவன் தனது இடுப்பு கச்சையில் பத்திரமாக சுருட்டி செருகிக் கொண்டான் .
மீண்டும் வந்த வழியே வந்தவன் தனது அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தான்.
தனக்கு அந்தத் தகடு கிடைத்த விவரத்தை நினைத்துப் பார்த்தான்.
தனக்கு திருமணமான புதிதில் மாதங்கியை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றிருந்த நிர்மல் தனது தோழன் கொடுங்கோளூர் காத்தவராயன் அழைப்பை ஏற்று அவன் ஆளுமைக்குட்பட்ட அதியங்காடு சென்றிருந்தான்.
அவன் மனைவி சித்ராங்கியை மாதங்கிக்கு மிகவும் பிடித்துவிட்டது .
இதனால் அவர்கள் இருவரும் இவர்களை மறந்துவிட்டு தனி உலகத்தில் பறக்க ஆரம்பித்தனர்.
இதனால் நிர்மலும் அவன் நண்பனும் தனியாக ஊரைச் சுற்றத் தொடங்கினர் .
ஒருநாள் குதிரையில் இருவரும் பக்கத்தில் இருக்கும் பர்வதமலையில் மேலேறிச் சென்றனர் .
அப்போது காத்தவராயன் தன் நண்பன் நிர்மலிடம் ” நண்பா … இந்த மலைமேல் சுனை ஒன்று இருக்கிறது. அந்த சுனைக்கு எதிர்புறத்தில் மலையைக்குடைந்து குகை ஒன்று உள்ளது .
அந்தக் குகைக்குள் சித்தர் ஒருவர் இருக்கிறார் . அவர் பௌர்ணமி நாளில் அங்கு வரும் பக்தர்களில் சிலரை மட்டும் அருகில் அழைத்து பிரசாதம் அளிப்பார் . அவரின் கடாட்சம் கிடைக்காதா என்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் காத்திருப்பர்.
இன்று பௌர்ணமி நாள் அல்ல நாம் எதற்கும் அந்த சுனைப்பக்கம் சென்று பார்ப்போம்.
அதிர்ஷ்டமிருந்தால் அவரை சந்திக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்கலாம் .” என்று கூறி அங்கே அழைத்துச் சென்றான்.
சுனை நீர் பரவலாக கொட்டிக் கொண்டிருந்தது. எங்கிருந்து நீர் வருகிறது என்று தெரியவில்லை. அந்த நீர் ஓடை போல் ஓடிக் கொண்டிருந்தது. குகைக்குள் செல்ல அந்த நீரைத் தாண்டிச் செல்லவேண்டும்.
அதனால் இருவரும் நீரில் இறங்கி எதிர்புறம் செல்லத் தொடங்கினர்.
ஆழம் குறைவாக இருந்ததினால் நடந்தே ஓடை எதிர்ப்பக்கம் வந்தனர்.
குகை வாசலில் சிறிது நேரம் நின்றவர்கள் தங்கள் காலணியை விட்டு விட்டு மெல்ல உள்ளே நுழைந்தனர்
உள்ளே இருந்து நறுமண வாசனை வந்தது . இன்னும் உள்ளே செல்ல அந்த குகையின் நடுநாயகமாக சிவலிங்கம் பூ அலங்காரம் செய்யப்பட்டு அருகில் அகல் விளக்கில் தீப ஒளி ஏற்றப்பட்டிருக்க,
இடுப்பில் வெள்ளைநிறத் துண்டு மட்டுமே அணிந்திருக்க வெண்தாடியுடன் சற்றுக் குள்ளமான உருவத்துடன் கூடிய உருவம் தியானநிலையில் அமர்ந்திருந்தது.
அவர் எதிரே இருவரும் அடக்கமாக கைகளை கட்டியபடி அமர்ந்தனர்.
சிறிது நேரத்தில் கண்களை மெல்லத் திறந்தவர் ஆண்டவனுக்கு மலரினால் அபிசேகம் செய்ய ஆரம்பித்தார் .
மீண்டும் கண்களை மூடி மந்திர உச்சாடனம் செய்தவர் கண்களைத் திறந்தார். அங்கிருந்த மண்குடுவையில் இருந்த நீரை உள்ளங்கையில் மூன்றுமுறை ஊற்றிக் குடித்தார்.
பின்பே எதிரில் இருக்கும் இருவரையும் பார்த்து மண்குடுவை நீரை அவர்களுக்கும் உள்ளங்கையில் ஊற்ற பக்தியுடன் இருவரும் பவ்யமாக வாங்கிக் கொண்டனர்.
இருவரையும் உற்றுப் பார்த்தவர் நிர்மலைப் பார்த்து ” நீ வருவாய் என எனக்குத் தெரியும் . அணங்கலேஷ்வரன் வாரிசுதானே நீ …?”, எனக் கேட்க,
இருவரும் வியப்புடன்அவரைப் பார்க்க,
என்ன வியப்பாக இருக்கிறதா … உனது தந்தை எனது பக்தன் . அடிக்கடி எனைத் தேடி வரும் அவன் நீ பிறந்த போது வந்து எனக்குச் சேதி சொல்லிவிட்டுப் போனான்
எனக்குத் தெரியும் அவன் மீண்டும் இங்கு வரமுடியாது என்று .”
‘ஆமாம் சுவாமி … என் இளவயதில் நோய்க்காரணமாக இறைவனடிச் சேர்ந்து விட்டார் தந்தை .” நிர்மலின் கூற்றுக்கு தலையசைத்த சித்தர் “
“தெரியும் … நீ இப்போது விவாகப் பந்தத்தில் இணைத்துக் கொண்டாய்.
உன் வருங்காலம் மிகவும் சிக்கலாகப் போகிறது . உன் குடிமையே உனது காலத்திலேயே முடிவுக்கு வரும் நிலமையில் உள்ளது .
நீ செய்யும் மாட்சிமைப் பொருந்திய ஆட்சியே உனைக் காப்பாற்றும் ” எனக் கூறி விட்டு உள்ளே சென்று வந்தவர் கைகளில் பித்தளை தகடு சிறிய அளவில் சதுர வடிவில் இருந்தது .
அதில் சிறிய கம்பி போன்ற கூர்மையான ஆயுதத்தால் ஏதோ எழுதினார்
பிறகு அதை லிங்கத்தின் பாதஅடியில் வைத்து அதற்கு பூவால் சில மந்திரங்களை கூறி கைகளால் அதை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டவர் நிர்மலிடம் ” கையை விரித்துநீட்டு ” எனக் கூற,
நிர்மல் தனது கையைவிரித்து காட்ட அவன் உள்ளங்கையில் சிறிது நீரை தெளித்து விட்டு அந்த தகட்டை வைத்தார்.
பின்பு அவனிடம் ” இது மிகவும் சக்தி வாய்ந்தது . இது உனக்கு பல சங்கடங்கள் வராமல் தடுக்கும். இதை வைத்திருக்கும் இடத்திலிருப்பவர்களை எந்த தீங்கும் அணுகாது . இந்த உலகில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதனாக விளங்க வைக்கும்.
இது நல்லவர்களிடம் இருந்தால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் .
ஆனால் தீயவர்களின் கையில் மட்டும் கிடைத்து விடக்கூடாது.
எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்கிறாயோ அவ்வளவு உனக்கு சிறப்புகள் சேரும்.
ஆபத்துக் காலங்களில் இது இருக்கும் இடத்தில் இருந்தால் ஆபத்து நெருங்காது.
இதை உனக்கு மட்டும் நான் வழங்கக் காரணம் உன் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதி நான் செய்த தவறு இப்போது என் பாவமாக காலைச் சுற்றி இருக்கிறது.
அந்த பாம்புகளால் என் வாரிசுக்கு ஏதும் ஆபத்துக்கள் வரலாம்.
தாங்கள் தான் அவனைக் காப்பாற்ற வேண்டும் என உன் தந்தை என்னிடத்தில் கதறி என்னிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.
எனக்குத் தெரியும் … நீ வாலிப வயசில் எனைத் தேடி வருவாய் என்று .
அதற்காகத்தான் இதை பாடம் போட்டு வைத்திருந்தேன்”
என்று கூறி அதை அவன் கையில் கொடுக்க,
அதை பயப்பக்தியுடன் கண்களில் நீர் மல்க வாங்கிக் கொண்டான் .
அவன் செல்வதையேப் பார்த்துக் கொண்டிருந்த சித்தர் ” பாவம் … நீ . வரும் வினைகளை சற்று தாமதப்படுத்த முடியுமே தவிர முற்றிலும் தடுக்க முடியாது . இது பூர்வீக வினை . இதை தடுக்க நான் யார் …?
ஆனால் இன்னும் சில காலத்தில் எனைத் தேடி நீ வருவாய் .., என மனதிற்குள் நினைத்துக் கொண்டார். இதை இவ்வளவு நேரமும் குகையின் வாயிலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த உருவம் அவர்கள் இருவரும் வெளிவருவதைக் கண்டு குகையின் அருகில் இருந்த பாறையின் மறைவில் மறைந்துக் கொண்டது.
அவர்கள் இருவரும் வெளிவந்து ஓடையைக் கடந்து செல்வதைக் கண்ட அந்த உருவம் மெல்ல குகையில் நுழைந்தது.
அந்த உருவத்தைக் கண்டவுடன் சித்தரின் முகம் மாறியது .
அவர் எதிரில் அமர்ந்த உருவம் அவரை நிமிர்ந்துப் பார்க்க கண்களில் கோபக்கனலைக் காட்டிய சித்தர் மாயவா … உன்னை இங்கு வரக்கூடாது என்று எத்தனை முறை எச்சரித்திருக்கிறேன் . மறுபடி மறுபடி ஏன் வருகிறாய் ..?”
‘ஏன் சாமி … எனக்கு செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு எவனுக்கோ அந்த தகட்டை கொடுக்கிறீரே இது நியாயமா…?
நானும் வருடா வருடம் அவ்வளவு தூரத்தில் இருந்து உன்னை தரிசிக்க வருகிறேனே … ஏன் எனக்கு அதை கொடுக்க மறுக்கிறீர் …?”
“ஏனென்றால் நீ நல்ஆத்மா கிடையாது உன்னிடம் அந்தப் பொருள் இருந்தால் நீ இந்த உலகை அழிவுப் பாதையில் கொண்டு செல்வாய் . இவ்வளவு நேரம் நீ மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தாய் அப்படித்தானே .”
“ஆமாம் சாமி . நான் உங்களைப் பார்க்க வந்தேன். நீங்கள் வேறு நபரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். அவர்கள் செல்லும் வரை காத்திருக்கலாம் என்று வாசலில் நின்றிருந்தேன்”.
பேச்சு என் காதில் தானாக வந்து விழுந்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது”
“நீ அதிகம் பேசுகிறாய். உன்னிடத்தில் எனக்கு வேலையில்லை . நீ செல்லலாம் .”
“இனி எனக்கு இங்கு என்ன வேலை . அதுதான் அந்த நபரிடம் இருக்கிறதல்லவா … அதை எப்படி பறிப்பது என்று எனக்குத் தெரியும்!”
அவன் கூறுவதைக் கேட்டவர் புன்சிரிப்பு சிரிக்க,
அது சரி . எனக்கு ஓன்று புரியவில்லை.
அவன் யார் … எதற்காக அவனுக்கு கொடுத்தாய். அவனை நான் இதற்கு முன் இங்குப் பார்த்ததாகவே நினைவில்லையே …”
“ஏன் … நீதான் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்ததாகக் கூறினாயே …?”
“இல்லையே … கடைசியாக தானே நான் வந்தேன். அவன் எந்த நாட்டுக்காரன்?”,
“ஏன் … நீதான் மந்திரக்காரனாயிற்றே … கண்டுபிடிக்க வேண்டியதுதானே…?”
என்னால் முடியாது என்று ஓன்று இல்லை. இப்பொழுதே அவனிடம் உள்ள பொருள் என்னிடம் வரவழைத்து விடுவேன் . பார்க்கிறியா …’ என்று சவால் விட,
‘இவன் முழுவதும் கேட்கவில்லை .. நல்லவேளை இவனிடமிருந்து நிர்மல் தூர சென்றிருப்பான் . ‘ என எண்ணிய சித்தர் அவனை தன் கண்களின் தீட்சண்யத்தால் எரித்து விடுவது போல் சித்தர் பார்க்க, அவன் மயக்க நிலை அடைந்து ஓடைக்கு அப்புறமாக தூக்கி எறியப்பட்டான்.
இது எதையும் அறியாத நிர்மல் தன் நண்பனுடன் குதிரையில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தான்.
மாளிகை மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கிவிட்டது .
அத்தியாயம் 22
காற்று சுழன்று சுழன்று அடிக்கவே பிரபு நிலைத் தடுமாறி அங்கிருந்த சுவற்றில் முட்டி நிற்க,
நெற்றி சிறிது வீக்கம் காண அதைப் பொருட்படுத்தாது கையில் இருந்த தகடை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.
காதில் ரகசியமான குரல் கேட்கத் தொடங்கியது . ‘நிர்மலேஷ்வரா… உன்னால் மீண்டும் இத்தனைக் காலங்களுக்குப் பிறகு எங்களால் மாளிகையின் உள்ளே வரமுடிந்தது.
உன்னுடைய மனோதிடம் எங்களின் புனர்வாழ்வுக்கு வழி வகுத்திருக்கிறது. இன்னும் சில பணிகள் காத்திருக்கிறது. அது உன்னால்தான் முடியும். இனி நீ பயமின்றி இங்கே செயல்பட நாங்கள் உறுதுணை. முன்னேறிச் செல் மாளிகையின் பின்புற அறைக்கு.’
இரவு முழுவதும் சரியாகத் தூங்காததால் நிர்மல் கோழி கூவியும் உறங்கிக் கொண்டிருந்தான் .
திவான் வந்து மாதங்கியிடம் ‘ இன்று மக்கள் மன்றத்தில் நீதிசபை நடத்தப்படவிருக்கிறது . பிரபு தயாரா இருந்தால் அழைத்துச் செல்லலாம் என்று வந்தேன் ‘ என்று கூற,
இன்னும் சில நாழிகைக்குள் வந்துவிடுவார் எனக் கூறி அனுப்பிய மாதங்கி தன் பதியை எழுப்பி விவரத்தைக் கூற
அவசர அவசரமாகக் கிளம்பியவன் தன் மனைவியிடம் ‘ கவனமாக மாளிகைக்குள் மட்டுமே நீ இருக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் நீயும் குழந்தையும் மாளிகையை விட்டு வரக்கூடாது . இது என் கட்டளை ‘ எனக் கூறிவிட்டு வெளியே காத்திருக்கும் ரதத்தில் புறப்பட்டான்.
சபையில் உள்ளே நிர்மல் நுழைய சபையின் இருபக்கங்களிலும் ஆசனங்கள் போடப்பட்டு வலதுபுறம் உள்ள ஆசணங்களில் மக்கள் மன்றத் தலைவர்களும், இடதுபுறம் உள்ள ஆசனங்களில் நீதிசபையின் உறுப்பினர்களும், நடுவில் உயரமேடையில் நீதியரசர் அவருக்கென அமைக்கப்பட்டிருக்கும் அழகிய வேலைப்பாடுடைய ஆசனத்தில் தலையில் வட்டவடிவ தலைப்பாகையுடன் அமர்ந்திருந்திருக்க அவர் அருகில் மற்றொரு ஆசனத்தில் நிர்மல் அமர்ந்திருக்க, முரசின் அறிவிப்பினைத் தொடர்ந்து விஸ்வேஸ்வரன் கையில் விலங்குடன்
சுற்றிலும் வீரர்கள் புடைசூழ அவர்களுக்கு எதிரில் இருந்த வட்டவடிவ மரப்பலகையின் மேல் நிற்க வைக்கப்பட்டான்.
அவன் கண்களில் குரூர வெறி காணப்பட தலையை சிலுப்பிக்கொண்டு வெறிபிடித்தவன் போல் நிற்க மன்றத்தின் வெளியே மக்களின் கூச்சல்.
அதிகமாக வீரர்கள் தங்கள் கைகளிலிருந்த ஈட்டியால் அவர்கள் முன்னேறி உள்ளே நுழைவதை தடுத்துக் கொண்டிருந்தனர்.
மக்கள் மன்ற உறுப்பினர் ஒருவர் எழுந்து “இன்று அவசரமாக மன்றத்தை வரவழைத்த காரணத்தை இவ்வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த இந்த மங்களாபுரி ஜமீனின் திவான் அவர்களை குற்றம் எதற்காக ஏன் யார் நிகழ்த்தினர் என்பதை இச்சபை கேட்க உத்தரவிடுகிறது. திவான் மன்றத்தின் மற்றொரு வட்டப்பலகை மீது நின்றார்.
“கூறுங்கள் ஜமீனின் இளைய வாரிசு ஏன் இங்கே குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறார் ?”
“இங்கே நின்றிருக்கும் ஜமீனின் இளைய வாரிசு நேற்று முன்தின இரவில் நமது ஜமீனின் எல்லைப்புற தெற்கு வாசல் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தங்கியிருந்த நாடோடிக் கும்பலில் உள்ள கர்ப்பிணிப்பெண்ணை குதிரையின் கால்களில் போட்டு மிதித்து வயிற்றிலிருந்த குழந்தையையும் சேர்த்துக் கொன்றுவிட்டார்.
அதைக் கேட்கப் போன அவளின் தாயையும் அவளுடன் வந்த கூட்டத்தினர் என சுமார் நூறு பேருக்கு மேல் தலை வேறு உடல் வேறு என வெட்டிச் சாய்த்துள்ளார் .
மேலும் தற்காத்துக் கொள்ளும் போராகவே இருந்தாலும் குழந்தைகளையும், வயோதிகர்களையும் நோயாளிகளையும் கொல்லக்கூடாது என்கின்ற விதியையும் மீறி அனைவரையும் கொன்று குவித்திருக்கிறார்.
வெளிஊரிலிருந்து தஞ்சம் என வந்தவர்களை வீழ்த்தி நமது ஜமீனுக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் .
இதன் தீவிரத்தை உணர்ந்து தாங்கள் தல்லதொரு தீர்ப்பை அளிக்க விழைகிறேன் .”
திவானின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து விவாதம் தொடங்கியது.
விஸ்வேஸ்வரன் தன் மீது கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்து பேச தனக்குள்ள உரிமையிலிருந்து தன்னை நீக்கவே நிர்மல் இதைச் செய்கிறான் எனக் கூற,
பிரபு எழுந்து அந்த வட்டப்பலகை மீது நின்று அன்று இரவு அவன் மாளிகையிலிருந்து எழுந்துச் சென்றதும் பின் தன் வீரன் அழுதபடி வந்து விசயத்தைக் கூறவும்
அது உண்மைதானா என தான் வீரர்களை அனுப்பி வைத்து உண்மையை அறிந்துக் கொண்டதும் அதன் பிறகு விஸ்வா இரத்தக்கறை படிந்த உடையுடனும் வாள் இரத்தம்படிந்தும் குதிரையில் வந்திறங்கியதும் தெரிய வந்தது எனக் கூற,
நீதிமன்றமும் மக்கள்மன்றமும் மாறி மாறி விவாதித்து , ஒரு முடிவை எடுக்க நீதியரசருக்கு விண்ணப்பம் வைத்தனர்.
மீண்டும் சிறிது நேரம் நீதிமன்ற தலைவர் விசாரிப்பு நடந்தது.
இறுதியில் விஸ்வா ஜமீனின் நலத்தைக் கெடுக்கும் வகையில் கொடூரமாக சிறிதும் இரக்கமின்றி நடந்துகொண்டதால் நூற்றுக்கணக்கானோர் பலியானதற்கு காரணமானவன் என்றும் அதற்கு கழுவேற்றுதல் ஒன்றே தீர்வு என சபை நீதி வழங்கியது.
விஸ்வேஸ்வரன் திமிறியபடி ‘ இது அநியாயம். என்னை அழிப்பதற்கு திட்டம் தீட்டிவிட்டீர்கள் . இதைக் கேட்டு எனது மாமன்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.
நிர்மல் … என் மரணம் உன் குடும்ப அழிவுக்கு காரணம் ஆகிவிட்டது … புரிந்துக் கொள் .’ என்று கத்தினான் .
மக்கள் இந்தச் சேதியைக் கேட்டதும் குதூகலத்துடன் பறைகொட்டிக் கொண்டும் ஆடிப்பாடிக் கொண்டும் கழுவேற்றும் இடம் நோக்கிச் சென்றனர்.
இந்த செய்தி அரண்மனைக்குள் பரவியது மாதங்கி வருத்தமடைந்தாள். நம் உறவுகள் ஒவ்வொரு விதமாகவா மறைவது .
ஆண்டவா … இது போன்ற நிகழ்வுகள் நல்லதில்லையே
இது எதில் போய் முடியுமோ தெரியவில்லையே …?” என்று அரற்றிக் கொண்டிருந்தாள்.
இளையராணி பாதாளச்சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவள் காதுக்கு இந்தச் செய்தி போய்ச் சேரவில்லை.
மாட்டுவண்டியில் கால்களை இருபிரிவாக பிரித்து கட்டி வைத்தும் கைகளை பிரித்தும் கட்டிவைக்கப்பட்டு
வீரர்கள் புடைசூழ இழுத்துச் செல்லப்பட்டான் விஸ்வா .
இதற்குள் தப்பி ஓடிவிட்ட அவன் மாமன் இறும்பூதியான் தன் சகோதரன் கவிக்குளம் சீர்மாறன் உடன் தீவிர ஆலோசனையில் இருந்தான் .
எப்படியாவது தங்கள் மறுமகனை காப்பாற்றிவிடவேண்டும் என்றும் தங்கள் சகோதரி என்னநிலையில் இருக்கிறாள் என்பதை அறிந்து வர அனுப்பிய வீரன் இன்னும் வரவில்லையே என பயத்துடன் அங்குமிங்கும் நடைபயின்றுக் கொண்டிருந்தான்.
வீரன் ஒருவன் மிக வேகமாக அங்கே வந்து நிற்க, “சொல் அங்கே நிலமை எப்படி …? விஸ்வாவுக்கு என்ன தண்டனை அளித்தார்கள் . சகோதரி எங்கே இருக்கிறார் ?”
இறும்பூதியான் அவசரமாக அவனைக் கேள்விக்கணைகளால் துவைக்க,
“பிரபு … ! நிலமை மீறிவிட்டது . நீதிமன்றமும் மக்கள்மன்றமும் இணைந்து நம் சிறிய ஜமீனுக்கு கழுவிலேற்றுதல் தண்டனை உறுதி செய்து கழுமரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இளையராணியை பாதாளச்கிறையில் அடைத்திருக்கிறார்கள்.
நல்லவேளை நீங்கள் மங்களாபுரி எல்லைக் காட்டில் வந்து இருந்ததனால் உடனடியாக வந்து சேதி சொல்ல முடிந்தது .”,
அவன் சென்றபிறகு சீர்மாறன் தனது சகோதரன் இறும்பூதியானுடன் ரகசிய ஆலோசனை நடத்தினான்.
நான் சொன்னபடி செய் . நீ யாரென்று தெரியாமல் மாறுவேடத்தில் செல்.
வீரர்கள் இருபது பேர் போதும் . அதிகமாகச் சென்றால் ஆபத்து நமக்கும் நிச்சயமாகிவிடும் . ம் … விரைந்து செல்’ என உத்தரவிட,
இறும்பூதியானுடன் இருபதுவீரர்கள் குடியானவர்கள் போல் வேடமிட்டு ஆயுதங்களை தங்கள் குதிரைகளின் மேல் தொங்கவிட்டபடி விரைந்தனர் .
விஸ்வேஸ்வரனை பாதுகாப்புடன் அனுப்பிவிட்டு நிர்மல் சேனைத்தளபதி, திவான், கோட்டை அதிகாரி மூவருடன் ஆலோசனை நடத்தினான்.
கண்டிப்பாக அவனுடைய மாமன்மார்கள் இதை முறியடித்து அவனை காப்பாற்றி அழைத்துச் செல்ல முயற்சிப்பார்கள்.
நாற்புர எல்லையையும் பலப்படுத்துங்கள். சந்தேகப்படும்படி யார் திரிந்தாலும் கைது செய்யுங்கள்.
மேலும் மக்களிடம் தண்டோரா மூலம் அறிவுப்புச் செய்துவிடுங்கள்.
யாரும் கழுமரம் இருக்கும் இடத்திற்கு வரக்கூடாது . மீறி வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று . மக்கள் இல்லாவிட்டால் அவனை நெருங்கும் எவரையும் நம்மால் வளைத்துவிட முடியும் . மேலும் கழுமரம் இருக்கும் இடத்தில் சுற்றிலுமுள்ள மரங்களில் வீரர்களை காவலுக்கு நிறுத்துங்கள். கண்டிப்பாக இறும்பூதியான் மாறுவேடமாக வரக்கூடும்.
அவனை உயிரோடவோ பிணமாகவோ பிடித்துவிடுங்கள் . அவன் நமக்கு எப்போதும் தலைவலிதான் ‘.
அவனுடைய கட்டளையை ஏற்று துரிதமாக செயல்படுத்த விரைந்தனர் .
கழுமரம் அருகில் வந்தவுடன் அவனை வளைத்து நின்ற வீரர்கள் அவன் கை கால்களை நீளமான கயிறுகளால் பிணைத்து மேலிருக்கும் இயந்திரத்தை கீழே இறக்கி அதில் கயிறுகளை பிணைத்துவிட,
ஏற்றம் போல் காணப்பட்ட மரப்பலகையை இரு வீரர்கள் விசைப்லகையைப் போல் இயக்க மெல்ல மெல்ல அவனை தூக்கியது.
களைத்துப் போய் காணப்பட்ட விஸ்வா துவண்டு கண்கள் சொருகி மயக்கநிலையில் இருந்தான் . அவனைத் தூக்கிய விசைப்பலகையில் இருபுறங்களிலும் நீளமான படுக்கை பலகை இருக்க அதில் ஏறி இருந்த வீரர்கள்
அவன் கைகளிலிருந்த கயிற்றை அதில் பிணைத்து இறுகிக் கட்டினார்கள்.
பின்பு சிறிது கீழிறங்கி கால்களைப் பிரித்து இருபுறமும் கட்டைகளில் இறுக்கிக் கட்டினார்கள் .
கை கால்கள் பிரிக்கப்பட்டதால் வலியில் துடிக்க ஆரம்பித்தான் விஸ்வேஸ்வரன்.
அந்த இடத்தில் வீரர்களும் அதிகாரிகளையும் தவிர மக்கள் வரவில்லை .
அதிகாரிகளின் அறிவிப்பால் பயந்து ஒருவரும் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.
ஊர் எல்லைப் பகுதியில் வந்த இறும்பூதியான் மற்றும் வீரர்கள் தூரத்தில் இருந்தமரங்களில் விடுவிடுவென்று ஏறியவர்கள் அருகருகே மரங்கள் இருந்ததால் கிளைகளை வளைத்து தாவி தாவி மறைந்து மறைந்து வரத் தொடங்கினர் .
கோட்டை வாசலின் மேல் காவலுக்கு இருந்த வீரர்கள் சுற்றி சுற்றி பார்வையை செலுத்தியவண்ணம் இருக்க,
மரங்களின் தாவி ஏறிய இறும்பூதியான் கோட்டை மதில் மேல் நூற்றுக்கணக்கான வீரர்கள் காவல் இருப்பதையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதையும் கவனத்தவன், கோட்டையைச் சுற்றியே அதிக காவலிருந்தால் உள்ளே கண்டிப்பாக அதிக காவல் இருக்கும்.
என்ன செய்வது …? நம்மிடம் இருப்பதோ இருபது வீரர்கள் மட்டுமே.
உஹும் … இதை வைத்துக் கொண்டு கோட்டைக்குள் நுழையப் பார்ப்பது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம் .
சிறிது நேரம் மரத்திலேயே இருப்போம் கொஞ்சம் அசந்தால் உள்ளே நுழைந்து விடலாம் எனநினைத்தான்.
சிறிது நேரத்தில் வீரர்கள் கலைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதைப் பார்த்தவன் இதுதான் சரியான சமயமென்று தன் வீரர்களைப் பார்த்து கையசைத்தான்.
உடனே ஒவ்வொரு மரங்களும் சாயத்தொடங்க, கடைசி மரத்திலிருந்து ஒவ்வொருவராக மதில் மேல் தாவிக் குதிக்கத் தொடங்கினர்.
அனைவரும் தூண் போன்ற மறைவான பகுதியில் குதித்ததால் யார் கண்களுக்கும் தெரிந்திருக்கவில்லை
சிறிது நேரம் அப்படியே நின்றவர்கள் மெல்ல தூணை விட்டு வெளியில் வர ஒருவனை அனுப்ப, வெளியில் மெல்ல வந்தவன் பார்க்க என்ன அதிசயம் . ஒரு வீரன் கூட இல்லாமல் வெற்றிடமாகக் காட்டியளித்தது மதில் .
கையைசைத்து வரச் சொல்ல, ஒவ்வொருவராக வெளி வரத்தொடங்கினர்.
இறும்பூதியானுக்கு சந்தேகம் தோன்ற கையை காட்டி நகர வேண்டாம் எனக் கூற அனைவரும் அப்படியே நின்றனர் .
பக்கவாட்டில் நகர்ந்து கீழே குனிந்துப் பார்த்தவன் அங்கேயும் யாருமில்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவன் ஏதோ நினைத்தவனாக வீரர்களை வேகமாக மீண்டும் வந்த வழியே திரும்ப சைகை செய்ய வேகமாக அனைவரும் திரும்ப எத்தனிக்க,
பக்கவாட்டு மறைவிடங்களிலிருந்து அம்புமழை பொழியத் தொடங்கியது.
திடீரென ஏற்பட்ட அம்பு விசையால் மடமடவென்று சிலர் உடல் சரிந்து கோட்டையைச் சுற்றி இருக்கும் அகழியில் மதிலிருந்து கீழே விழுந்தனர் .
மீதம் இருப்பவர்கள் சட்டென்று பக்கவாட்டில் சாய்ந்து இருந்த மரத்தில் குதிக்க,
அந்த மரங்களில் இருந்து வில்அம்புகள் அவர்களை நோக்கிப் பாய மிச்சமீதி இருந்தவர்கள் உயிரற்று மரத்தில் தொங்கினர் .
இப்பொழுதுதானே இந்த மரங்களிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தோம் அதற்குள் இவற்றை
ஆக்கிரமித்ததும் இல்லாமல் வீரர்களை கொன்று விட்டார்களே …! என கோபமுற்றவன் வருவது வரட்டும் என தன்னுடைய வாளை உருவி மீண்டும் கோட்டை மதில் மேல் ஓடத் தொடங்கினான்.
இப்பொழுது முன்புறம் பின்புறம் என வீரர்கள் சூழ்ந்துக் கொள்ள அவர்களிடமிருந்து தப்பிக்க வாளைச் சுழற்றி சில வீரர்களை வெட்டித் தள்ளினான்
கோட்டை படிக்கட்டு அருகில் வந்து விட்டவனை உள்ளே இருக்கும் மரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்த வீரர்கள் அம்பு வாரி இறைக்க, இறும்பூதியான் உடல் சல்லடைக் கண்களாய் அவைத் துளைக்க மேலிருந்து கீழே அகழியில் விழுந்தான். விழுந்தவுடன் அகழியில் சுற்றிக் கொண்டிருந்த முதலைகள் அவனைச் சூழ்ந்துக் கொண்டன .
விஸ்வா கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருக்க தலை தொங்கி மயக்கநிலையில் இருந்தான்.
மேலே சுற்றிக் கொண்டிருந்த வல்லூறுகளும் கழுகுகளும் அவன் தலையில் வந்தமர்ந்து அவன் உடலை தன் கூரிய மூக்கால் கொத்தத் தொடங்கின .
மயக்க நிலையில் இருந்தும் வலியினால் கத்தத் தொடங்கினான்.
உடலில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.
இதை தூரத்தில் இருந்து ஒரு உருவம் கவனித்துக் கொண்டிருந்தது.
இரவின் அமைதியில் ஊர் உறங்கிக் கொண்டிருக்க மறைந்திருந்தவன் மெல்ல விஸ்வாவின் உடல் தொங்கிய இடத்தில் அருகே வந்தான்.
தனது தோளில் தொங்கிக்கிடந்த பையிலிருந்து சிறிய குப்பி ஒன்றை எடுத்தவன் கீழே சிந்திக் கொண்டிருக்கும்
விஸ்வாவின் குருதியை அக்குப்பியில் நிரப்பி அங்கிருந்து அகன்றான் .
மாளிகையில் நிர்மல் அதிக சோகத்தில் இருந்தான்.
அங்குமிங்கும் நடைபயின்றுக் கொண்டே இருந்தவன் ஏதோ நினைத்தவனாக தன்னுடைய இரகசிய அறைக்குச் சென்றான்.
கதவைச் சாத்திவிட்டு தன்னுடைய தந்தையின் ஓவியத்திற்கு நேராக நின்று கையெடுத்துக் கும்பிட்டான்.
‘ தந்தையே …! இன்று நான் செய்த செயலால் மனம் குழம்பிக் கிடக்கிறது .
தாயின் மரணம் என்னை அநாதையாக்கிவிட்டது . சிற்றன்னை என் தாயைப் போன்றவள் என்றுதானே நான் அவளிடம் பாசம் காட்டியதில் பாரபட்சமின்றி நடந்துக் கொண்டேன்.
தம்பியை என் தோழனாகத்தானே நினைத்திருந்தேன். அவனுக்கு மணமுடித்து கீழ் மங்களாபுரியை அவன் வசம் ஒப்படைக்கத்தானே திவானிடம் எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லியிருந்தேன் . ஆனால் அவன் தன் மாமன்களுடன் இணைந்து இந்த ஜமீனைஅவர்களோடு பங்கு போட்டுக் கொள்ள திட்டம் தீட்டி, மந்திரவாதியுடன் சேர்ந்து என்னை அழிக்க அல்லவா விளையாடினான்.
அதுவே அவனுக்கு நான் தண்டனை கொடுக்க காரணமில்லையே .
அப்பாவி மக்களை கொன்று குவித்து இந்த ஜமீனின் அழிவுக்கும் காரணமாகிவிட்டானே.
தந்தையே … நீங்கள்தானே கூறியிருக்கிறீர்கள். இந்த மக்கள் நம் கண் போன்றவர்கள் . அவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை தண்டிக்கவேண்டியது இந்த ஜமீனின் ஆளுமைக்கு உரியவர்கள் கடமை . இதில் உறவுகளுக்கு இடமில்லை என எனக்கு பல அறிவுரைகளை எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறீர்கள்.
ஆனாலும் உறவுகளின் பிரிவுகள் என்னை தடுமாற வைத்திருக்கிறது.
நான் என்ன செய்வேன் ‘ என கண்ணீர் விட்டவன் கீழுள்ள நிலவறைக்குள் சென்றான்.
அங்கே தன் தந்தை தனக்காக எழுதி வைத்துவிட்டுப் போன ஓலைச்சுவடியை எடுத்தான்.
அதன் கூடவே ஒரு தாமிரத்தகடும் இருக்க அதை எடுத்துப் பார்த்தான்.
அதை தன் சிறிய பேழையில் எடுத்து வைத்துக் கொண்டு அந்த ஓலையையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான் .
திவான் காத்திருக்க என்ன விசயம் என்று கேட்க எல்லாம் முடிந்துவிட்டது . கீழே இறக்கிவிடலாமா … எனக்கேட்க,
‘இறக்கி இங்கே கொண்டு வராதீர்கள். அவன் தாயை அழைத்துக் கொண்டுபோய் நம் ஊர் எல்லைக்கப்பால் விட்டு விடுங்கள்.
அவனுடைய சாம்பல் கூட இந்த எல்லைக்குள் வரக்கூடாது . அவனுடைய அன்னையை என் அன்னையாக நினைத்தக் காரணத்தால் அவர்களை ஓன்றும் செய்யவில்லை.’
அவனுடைய உத்தரவை ஏற்று காரியங்கள் மடமடவென்று நடந்தேறின.
இளையராணி கத்திக்கொண்டு அரண்மனை வாசலில் மண்ணை வாரி இறைத்து சாபமிடத் தொடங்கினாள். ஊர் எல்லையில் விஸ்வாவின் சடலத்துடன் தனித்தே விடப்பட்ட இளையராணி தன் மகன் மேல் விழுந்து கதறினாள்.
அதற்குள் அங்கே மறைந்திருந்த சீர்மாறனின் வீரர்கள் அவன் சடலத்துடன் இளையராணியையும் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு கவிக்குளம் விரைந்தனர்.
தனது தாயின் அஸ்தியை எடுத்துக் கொண்டு சமுத்திரத்தில் கரைப்பதற்கு செல்ல ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தான் .
மாளிகை சோகத்தில் மயான அமைதியாக இருந்தது . மாதங்கியிடம் வந்த நிர்மல் தன் மனைவியின் அருகில் அமர்ந்து அவள் கையை தன் கையோடு இணைத்துக் கொண்டு அவள் தோள் மீது சாய்ந்தபடி கண்ணீர் விட்டு அழுக அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட மாதங்கி ‘நிர்மலேஷ்வரா ..( தனிமையில் இருவரும் இருக்கும்போது ஆசையுடன் அவள் அப்படித்தான் தன் கணவனை அழைப்பாள் )
ஏன் இந்த வாட்டம் . அத்தை அவர்கள் எங்கேயும் போய்விடவில்லை. நம்மைச் சுற்றிலும் அவரின் சக்தியாக உலாவிக் கொண்டிருப்பார்.
நீங்கள் அவரின் ஆத்மா சாந்தியடைய சமுத்திரத்தில் கரைத்துவிட்டு வாருங்கள் .
இந்த நேரம் நம் ஜமீனின் எதிர்காலமே உங்கள் கையில்தான் இருக்கிறது.
விரைவாக சென்று வாருங்கள்” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“மாதங்கி … நான் சென்று வர மூன்றுநாட்களாவது ஆகும். இப்போது இருக்கும் சூழலில் உன்னையும் நம் குழந்தையையும் தனியே விட்டுச் செல்ல தயக்கமாயிருக்கிறது
உன்னை உனது தந்தையிடம் ஓப்படைத்துவிட்டு செல்லலாம் என்றிருக்கிறேன் . கிளம்புவதற்கு தயார் செய் ” எனக் கூற,
“வேண்டாம் நிர்மலா … இந்த நேரத்தில் எனது தந்தையின் இல்லம் நோக்கி செல்வது நன்றாயிருக்காது
எனக்கு ஒன்றும் அச்சமில்லை. நானும் எல்லா வீரப்பயிற்சிகளும் பெற்றவள் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே .
வீரர்கள் உடன் இருப்பதால் எனக்கு கவலையில்லை . தாங்கள் தைரியமாக என்னை இங்கு விட்டுச் செல்லலாம்.
“ஆபத்து என்று வந்தால் சீர்மாறனால் தானே வரும் . பார்த்துக் கொள்கிறேன்”, என்று கூற
“இல்லை . தேவையில்லாமல் உன்னை சிக்கலில் மாட்டிவிட எனக்கு விருப்பமில்லை . என்னோடு கிளம்பு”
“அப்படியானால் ஒன்று செய்யுங்கள். எனது தந்தைக்கு ஆளனுப்பி எனக்குத் துணையாக வரச் சொல்லுங்கள். உங்களுக்கு வீண் சிரமம் வேண்டாம் .”
“சரி … அப்படியேச் செய்கிறேன். தெரியாத முகங்களை உள்ளே அனுமதிக்காதே… திவான் இருப்பார் . அவர் கவனித்துக் கொள்வார் . அப்புறம் நீ என்னுடைய ரகசிய அறையில் தங்கிக் கொள் . அங்கிருந்தால் உங்களிருவருக்கும் எந்த ஆபத்தும் நெருங்காது.
எக்காரணம் கொண்டும் நான் வரும் வரையில் அந்த அறையைவிட்டு நீ வெளிவரக் கூடாது”
“என்ன…ஏன் இத்தனை பாதுகாப்பு ஏதும் ஆபத்து வருமென்று நினைக்கிறீர்களா…?”
நமக்கு எந்த நேரத்தில் யார் ரூபத்தில் ஆபத்துகள் வருமென்று தெரியாது . அதனால் எந்நேரமும் நமது கண்களை உறங்கவிடாமல் மூன்றாவது கண்ணுடன் வலம் வர வேண்டும் .
இது உனக்கு தெரியாததல்ல. அதுவும் இப்போது இருக்கும் நிலை மிகவும் அசாதாரணமானது . நான் ஊரில் இல்லையென்று எதிரிகளுக்குத் தெரிந்தால் போதும். வளைப்பதற்கு நேரம் கிடைத்தது என்று குவிந்து விடுவார்கள் .”
அப்படியானால் உங்கள் பயணத்தை தள்ளி வையுங்கள். அத்தையின் அஸ்தியை பூசை அறையில் வைத்து வழிபடுவோம்.
இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்தபிறகு செல்லலாம் ‘
“இல்லை மாதங்கி . அஸ்தியை வீட்டில் வைத்திருக்கக்கூடாது . அது குலத்திற்கு ஆகாது. மேலும் அது கரைக்கப்பட்டால் தான் அம்மாவின் ஆத்மா இவ்வுலகைவிட்டு நீங்கும். அவர்கள் அமைதியில்லாமல் அலைக்கழிப்பது நமக்குத்தான் பாவம் .”
“சரி ஒரே மனதோடு சென்று வாருங்கள் . கொங்சநாட்களுக்கு முன்புகூட ஆறுதிங்களாய் நீங்கள் இங்கு இல்லாமல் தானே இருந்தீர்கள். அப்போது நான் இருந்தேனல்லவா…?”
அப்போது அம்மா இருந்தார்கள் . அவர்கள் ஆயிரம் வீரர்களுக்குச் சமம் . அதுவுமில்லாமல் அம்மா என்றால் எல்லோருக்கும் சிம்மசொப்பனம் ”
“இதோ இந்தாருங்கள் நெற்றித்திலகம். கவலையில்லாமல் சென்றுவாருங்கள். நீங்கள் திரும்பி வரும்போது வெற்றித்திலகத்துடன் வரவேற்க காத்திருக்கிறேன் !”.
மீண்டும் அவளை அந்த அறையைவிட்டு வெளிவரக்கூடாது என்று கூறிவிட்டு திவானுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி கேட்டுவிட்டு சேனைத்தலைவனிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு தன்னுடன் சில மெய்க்காப்பாளர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டான் நிர்மலேஸ்வரன் . அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம் மறுநாள் ஜமீனின் மாளிகை முன்பு வந்து நின்றது .
– தொடரும்…
– உள்ளே வராதே (திகில் நாவல்), துப்பறியும் செவென் ஸ்டார் சீரீஸ்.