கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: June 6, 2024
பார்வையிட்டோர்: 2,194 
 
 

(1963ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-10 | அத்தியாயம் 11-20

முன்னுரை

எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பதிலே போல ஈடுபாடு உண்டு. ஓரளவுக்கு மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாகச் சமீப காலத்தில் ஃபிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் பண்ணுகியார் என்பதைக் கவனித்த போது ஏன் அம்மாதிரிச் சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றிற்று. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே மர்ம நாவல்கள் எழுதி வந்திருக்கிறேன். சக்தி விலாசம், ஆயுள் தண்டனை, கந்தர்வ லோகத்தில் கொலை என்று பல தொடர்கதைகளாகப் பல பத்திரிகைகளில் வெளிவந்த பின் சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்குக் கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து ‘அவரவர் பாடு’ என்கிற நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை யுண்டு செய்யவேண்டும். – க.நா.சுப்ரமண்யம்.


அத்தியாயம்-1 

அந்த மாதத்துப் பத்திரிகையில் நான் எத்தனையோ நாட்களுக்கு முன் எழுதிய ‘கொலை பாதகன்’ என்கிற கதையை, “இதோ ஒரு நல்ல கதை” என்று பிரபலப்படுத்தித் திறம்படப் பிரசுரித்திருந் தார்கள். அதாவது மார்ச்சு மாதப் பத்திரிகையில். அந்தப் பத்திரிகை வெளிவந்து நாலைந்து நாட்களுக்குப் பிறகுதான் சின்னையா ஹோட்டலில் காபி சாப்பிடப் போனேன். 

சின்னையாவை எனக்கொரு பத்துப் பனிரண்டு வருஷங்களாக ஏன் அதிகமாகவே கூடத் தெரியும். என்னைக் கண்டதுமே, பெட்டியிலிருந்தபடியே ‘வாங்க வாங்க என்று சொல்லிவிட்டு, தன் பக்கத்தில் ஸில்க் ஜிப்பாவும், வைரப் பொத்தான் களுமாக, அமுத்தலாகக் கிராப்பை ஒருவாரு வாரி விட்டு ஒரு விசிறும் விசிறிவிட்டிருந்த மனிதனிடம் “அன்று படித்தீர்களே, அந்தக் கதையை எழுதியவர் இந்த ஐயாதான்” என்றான். 

எனக்கு எப்பொழுதுமே என் எழுத்தைப் பற்றிய விஷயங்களில் ஒரு பெருமிதம், பரவசம் உண்டு. ஆகவே முதலில் சரிவரக் கவனிக்காத அந்த ஸில்க் ஜிப்பா அமுத்தல் கிராப் ஆசாமியைச் சற்று நன்றாகக் கவனித்தேன். அந்த மனிதனின் முகத்திலே ஒரு தடித்தனம் இருந்தது சிவப்பாகத் தான் இருந்தான் ஆசாமி என்றாலும் அத்தோல் ஒரு காண்டா மிருகத்தின் தோல் மாதிரி இருந்தது. மூக்கும் சற்றுக் கட்டையாக குட்டையாகத் தடியாகத்தான் இருந்தது. உதடுகளும் சொற சொறப்பாகத் தடித்து இருந்தன. அந்த முகவாய்க் கட்டையிலே ஒரு பிடிவாதமும், அழுத்தமும் த்வனித்தன. உதட்டுக்கு மூன்று விரல் முகவாய்க் கட்டை முன்வந்திருந்தது என்று கவனித்தேன். புருவத்து மயிரும் தலை மயிரும் சேர்த்துப் பின்னலாம் போல இருந்தது. அடர்த்தியான புருவமயிர். நெற்றியே இல்லை என்று சொல்லக்கூடிய நெற்றி. ஆனால் அந்தப் புருவங்களுக்கடியில் மின்னிய கண்கள்தான் எப்படிப்பட்ட கண்கள்! குரூரம் நிறைந்த கண்கள். காட்டு மிராண்டிக் காலத்தில் பிறந்திருந்தால் அந்த மனிதன் சித்திரவதை செய்யும் அதிகாரியாக யாராவது ஒரு கொடுங்கோல் மன்னனிடம் வேலை பார்த்திருப்பான் என்று தோன்றியது எனக்கு. யார் என்ன கெஞ்சினாலும் அசைந்து தரும் சுபாவமற்ற மனிதன் அவன், நெஞ்சில் ஈரமேயில்லாதவன் அவன் என்று எனக்கு அவனைப் பார்த்த மாத்திரத்தில் தோன்றியது. 

அதே வினாடி அவன் ஒரு பெரிய கொலைகாரனாகவே இருக்கலாமோ என்றும் தோன்றிற்று எனக்கு. அப்படியானால் சின்னையா பாத்திரமறிந்துதான் என் கொலைபாதகன் கதையைப் பற்றிப் பேசினாரோ? 

எனக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. சின்னையாவின் அண்ணா ஒருவர் ஊரெல்லாம் அருவருக்குப் பெயர் சம்பந்தம் என்று சொன்னார்கள் 

ஒரு கொலைக் கேஸில் அகப்பட்டுக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டில் போதுமான ருஜுவில்லை என்று சென்ற மாதம்தான் விடுதலையானார் என்று கேள்விப் பட்டது எனக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. 

அத்தியாயம்-2 

“நீயும் என்னோடு உன் ஓட்டல் காபியைச் சாப்பிட வாயேன். உன் அண்ணா சம்பந்தம்தானே அது? வரச் சொல்லேன்” என்றேன் நான். எனக்கு எப்பவுமே என் எழுத்துப்பற்றித்தான் நினைவு. ஏதாவது விஷயம் கிடைக்காதா எழுதுவதற்கு என்று கழுகுக்கு வியர்க்கிற மாதிரி எனக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. சத்தியாக்கிரஹ நண்பரைப் பார்க்கப் போன இடத்தில், ஜெயில் வாசலில் பத்தடி தூரத்தில் ஒரு கொலைகாரனைப் பார்த்தேன் அப்போது அது 1942இல் அதை எழுதினேன். இப்போது வேறு ஒரு தினுசான கொலைகாரனை கோர்ட் அவன் மேல் போதுமான சாட்சியம் இல்லை என்று தள்ளி விட்டாலும் கூட அவன்தான் அந்த ராஜவேலுவைக் கொலை செய்தவன் அதில் சந்தேகம் இல்லை என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள். எனக்கென்ன அதற்குமேல் தெரியும்? அந்தக் கொலைகாரனை நெருங்கிக் காபி சாப்பிடலாமே, அதை ஒரு புது அனுபவமாக எழுதலாமே என்று எனக்கு நினைப்பு. 

“ஐயா அறிவாளி, கெட்டிக்காரர்னு நீ சொன்னது சரிதான் தம்பி” என்றான் சம்பந்தம்.”உடனேயே நீ 

ஒரு வார்த்தை அவரிடம் சொல்றத்துக்கு முன்னாடியே நான் யாருன்னு புரிஞ்சுக்கிட்டாரே. இப்படிப்பட்ட வங்ககிட்ட பேசறத்திலே ஒரு சொகம் இருக்குங்க. ஐயா தஞ்சாவூர்ப் பக்கமா?” 

“திருவாலூரு” என்றேன். 

“திருவாலூர் கமலத்தைத் தெரிஞ்சிருக்குமே?” 

“யாரு? எனக்குக் கோயில்லே குடியிருக்கிற கமலத்தைத்தான் தெரியும்” என்றேன் நான். 

“நான் சொல்ற கமலம் கோயில்லே குடியிருக்கிற கமலம் இல்லே. விஜயபுரத்திலே நாகப்பட்டினம் ரோட்டிலே யிருந்து ஓடம்போக்கி ஆத்துக்குப் போகிற வழியிலே இருக்கிற பொட்டுத் தெருவிலே குச்சிலே குடியிருக்கிற கமலம்தான் நான் சொல்ற கமலம்” என்றான் சம்பந்தம். 

“நான் 1922 முதல் 1924 வரையில் திருவாலூரில் படிச்சேன் ஒரு மூணு வருஷம். அதற்குப் பிறகு இன்னும் அந்தப் பக்கம் போகக்கூட இல்லை. சொந்த ஊருன்னு யாராவது கேட்டா திருவாலூரு என்று சொல்றதைத்தவிர எனக்கு அதுபற்றி அதிகம் ஒன்றும் தெரியாது” என்று அந்தக் கமலத்தைப் பற்றி என் அறியாமையை ஏற்றுக் கொண்டேன். 

அத்துடன் நிறுத்தாமல் “வாங்க. உட்கார்ந்து காபி சாப்பிட்டுக் கிட்டே பேசலாம்” என்று சம்பந்தத்தையும் உரிமையுடன் அழைத்தேன். 

ஹோட்டலிலே வியாபாரம் அதிகமாக ஆகிற சமயம் அது. கூட்டமாக இருந்தது. சின்னையாவுக்குக் கல்லாப் 

கல்லாப் பெட்டியை விட்டு எழுந்துவரத் தைரியம் இல்லை. “மணி! அவங்க ரெண்டு பேருக்கும்….” 

“மணிக்கு என்னைத் தெரியும்!” என்று சொல்லிக் கொண்டே திறந்த மாடியில் முல்லைக்கொடி படர்ந்திருந்த படலுக்குப் பக்கத்தில் இருந்த மேஜையில் போய் உட்கார்ந்தேன். 

அத்தியாயம்-3

வழக்கமாக மாலையில் காபி சாப்பிடப் போனால் அந்த ஆஸனத்தில்தான் உட்காருவேன். அதே மணிதான் எனக்கு ஒரு ஸ்வீட், சூடாக ஏதாவது ஒரு காரம், ஸ்டிராங்காக சக்கரை தூக்கலாக ஒரு கப் காபி எல்லாம் கொணர்ந்து தருவான். மாமூல்படி எல்லாம் வந்தது. சம்பந்தத்துக்கும் சேர்ந்து வந்தது. 

“சின்னையாவை உங்களுக்கு நல்லாத் தெரியும் போலிருக்கு” என்றான் சம்பந்தம். 

“பதினைந்து வருஷத்துப் பழக்கம்.’ 

“உங்களைப் பற்றி நேத்திப் பூராவும் சொல்லிக் கிட்டிருந்தான்.” 

“நேத்தே வந்துட்டீங்களா நீங்க! நான் பார்க் கல்லியே. வழக்கமா இந்த நேரத்துக்குத் தினமும் வருவேன். ஊரில் இருந்தால் நான் இங்கு வராத நாளே கிடையாது. அப்படி ஒரு பழக்கம்.” 

“நேத்து… நேத்து” என்று ஆரம்பித்துத் தயங்கிய சம்பந்தம் கடைசியில் தீர்மானத்துடன், “உங்கக்கிட்ட மறைப்பானேன்? போலீஸிலே ஒரு அவசர ஜோலியாகக் 

கூப்பிட்டனுப்பினாக. போய்க் கையெழுத்துப் போட்டு விட்டு வந்தேன். இந்தவூர் இன்ஸ்பெக்டர் ஐயா….” 

“யாரு ஃப்ரான்சிஸ்ஸா?” என்றேன். 

“ஆமாம். ஐயாவுக்கும் ஐயாவுக்கும் 

தெரியுமா அவரை? அவர் நமக்கு ரொம்ப வேண்டியவருங்க. ரொம்ப ரொம்ப வேண்டியவருங்க” என்றான் சம்பந்தம். 

“திருவாலூர் அல்லது விஜயபுரத்து மேட்டுத் தெருக் கமலத்தைப் பத்தி ஏதோ ஆரம்பிச்சீங்களே!” என்றேன் நான். எனக்குக் கதை எங்காவது போய்விடப் போகிறதே என்று பயம். 

“விட்டுத் தள்ளுங்க சவத்தை. அதைப்பத்திப் பேசினாலே பாவமுங்க!” என்றான் சம்பந்தம். 

அடேயப்பா! இந்தக் கொலைகாரனுக்கும் கூடப் பாவம் புண்ணியம் எல்லாம் உண்டா என்று மனத்திற்குள் வியந்து கொண்டே, “சின்னையா கடை ஹல்வான்னா ஹல்வாதான். இந்த ஊரிலே இது மாதிரி வேறு எங்கேயும் கிடைக்காது.” 

“இது சுமாரா யிருக்குங்க! ஆனாலும் அந்த நாளிலே தஞ்சாவூர் பரமேசுவரய்யரு ஹோட்டலிலே கிடைத்த அல்வா மாதிரி இப்போ இங்கெங்கே கிடைக்குது?” என்று நாக்கைச் சப்புக் கொட்டினான் சம்பந்தம். 

எனக்கும் பரமேசுவரய்யர் கடை ஹல்வாவையும், அவர் கடை ரவாதோசை சாம்பாரையும் எண்ணி நாக்கைச் சப்புக் கொட்டவேண்டும் போலத்தான் இருந்தது. இந்த மனிதன் கொலைகாரன் மட்டும் அல்ல நல்ல ரஸிகனும் கூட என்று எண்ணிக் கொண்டேன். சாப்பிடுவதிலே இத்தனை ரஸனை யுள்ளவன் கொலை காரனாக இருப்பானா என்கிற சந்தேகம் கூட வந்தது எனக்கு. “நீ தஞ்சாவூரிலேயும் இருந்திருக்கிறாயா?” என்றேன். 

“நான் எந்த ஊரிலே. இருந்ததில்லென்னு கேளுங்க?” என்றான் சம்பந்தம் அடக்கமாக. “அந்தப் பரமேசுவரய்யருக்குக் குழந்தை குட்டியில்லை.” 

“ஆமாம். எனக்குங்கூட அது நினைவிருக்கிறது” என்றேன் நான். 

அத்தியாயம்-4

பரமேசுவரய்யரைப் பற்றிய பேச்சிலும், வேறு பல சம்பந்த மில்லாத நினைவுகளிலும் பொழுதுபோய் விட்டால் கதை கிடைக்காது போய்விடப் போகிறதே என்று பயந்தான் எனக்கு. ஹல்வாவைப் பற்றிய நினைப்பு சுவைப்பதற்குப் போதாது. ஆகவே ஏதாவது கதைக்கான விஷயமாகப் பேச்சு வளரட்டும் என்று எண்ணியவனாக “உங்க கேசு நல்லபடியாக முடிந்துவிட்டது இல்லையா?” என்றேன். 

“ஜோசியர் ஐயா, பரமயோக்யர் அவர். கேசு ஆரம்பத் திலேயே இப்படித்தான் முடியும்னு சொன்னார்” என்றான் சம்பந்தம். “அதைச் சொல்லச் சொல்லத் தான் நான் என் வக்கீல் ஐயாவை வழக்காட ஒவ்வொரு தடவையும் தூண்டினேன்.” 

“யாரப்பா அவ்வளவு திடமாகச் சொன்ன ஜோசியன்?” என்றேன் நான். 

“அதான் கும்பகோணத்தில் பாலக்கரை ஜோசியரு. நீங்ககூடக் கேள்விப்பட்டிருப்பீங்க 

ரொம்பப் பிரபல மானவருங்க அவரு. பட்டணத்திலே ரேசுக்குப் போறவங்கல்லாம் அவரைக் கேட்டிண்டுதான் போறாங்கன்னு சொல்றாங்க.” 

“நல்ல ஜோசியராகத்தான் அவர் இருக்கவேணும்” என்றேன் நான். 

“மேட்டுத் தெருக் கமலத்தைத் துரத்திக்கிட்டு போறப் போதான் நான் முதல்முதலாக அந்தப் பாலக்கரை ஜோசியரைச் சந்தித்தேனுங்க. அதுக்குப் பிறவு நான் அவரைக் கேட்டுக்காம எதுவுமே செய்யறதில்லை” என்றான் சம்பந்தம். 

கடவுள் பக்தி, ஜோசிய பக்தி, கமலம் பக்தி, காபி பக்தி – இப்படி எத்தனை பக்திகள் ஐயா இந்தக் கொலைகாரனுக்கு என்று எண்ணியவனாக நான் சொன்னேன்: “இதோ பார்: நீ இப்படித் தாறுமாறாகச் சொன்னாயானால் எனக்கு ஒன்றும் புரியாது. ஒரே குழப்பமாக இருக்கிறது. வரிசைப்படுத்திக் கிரமமாகச் சொல்லு….” 

“வரிசைக் கிரமமாகச் சொல்றதானால் நான் கமலத்தின் தகப்பனைப் பத்திச் சொல்லணும். அந்த மீசைக்காரன் தஞ்சாவூர் ஹோட்டல் பரமேசுவரய்யர் கிட்டே க்ளீனராக இருந்தான்” என்றான் சம்பந்தன். 

“மீசைக்கார நடேசனா?” என்றேன் நான். எனக்கும் தெரிந்தவன்தான் அவன். 

“அவனே தானுங்க? அவனைக் கொன்னுட்டேன்னு தானே என் மேலே கேசு போட்டாங்க….?” 

“அப்படியா? நீ ஏன் அவனைக் கொன்னாய்?” 

“அவன் எங்கே செத்துப் போனானுங்க! அவன் தான் உயிரோடு கல்லாட்டமா இருக்கானுங்களே! அவனை என் வக்கீல் ஐயா கோர்ட்டிலே கொண்டுவந்து நிறுத்தினப்புறம் தானே நீதிபதி ஐயா ருஜுவில்லேன்னு என் கேஸைத் தள்ளிப் பிட்டாரு….” என்றான் சம்பந்தம். 

“ஆகவே மீசைக்கார நடேசன் சாகவில்லை. ஆனால் அவனைக் கொன்றதற்காக உன்னைக் கைது செய்து வரிகொடுப் போர் பணத்தையெல்லாம் வீணாக்கி, நாலைந்து வருஷம் கேசு நடத்தி, ருஜுவாகவில்லை என்று விட்டுவிட்டார்கள், இல்லையா! அப்படித் தானே?” என்று கேட்டேன். 

“மீசைக்கார நடேசன் சாகவில்லை. மீசைக்காரன்னு அவங்க முதல்லே நினைச்சாங்க. அப்புறம்தான் அது மீசையில்லாத நடேசன்னு தெரிய வந்துச்சுங்க…” 

“எது மீசையில்லாத நடேசன்னு தெரிய வந்திச்சு…?” 

“செத்துப்போனது….” 

“அப்படியானால் யாரோ ஒருவன் கொலை செய்யப்பட்டு இறந்தது உண்மை. அவனை நீ கொல்ல வில்லையா?” என்றேன். 

“மீசைக்கார நடேசனைக் கொன்னதாகத்தானே என் மேல் கேஸ் எடுத்தாங்க? அவன்தான் சாகவில்லை என்று ருஜுவாகி விட்டதே! உடனே என்னை விட்டு விட்டாங்க.” 

“செத்தவன்….?” 

“அவன் செத்துப் போனான். மீசைக்காரன் மட்டும் உசிரோடு இருக்கான். கதையெல்லாம் எழுதுறீங்க இது புரியல்லை எங்கிறீறங்களே!” என்றான் சம்பந்தம். நான் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னான்; கேலியாகச் சொல்லவில்லை. 

அத்தியாயம்-5 

காபியை ருசி பார்த்து உறிஞ்சிக் கொண்டே நான் யோசித்தேன். இப்படியே போனால் அவிழ்க்க முடியாத முடிச்சுக்கள் தான் அதிகமாகுமே தவிர, எதுவும் விளங்காது என்று எனக்குத் தோன்றிற்று. இன்னொரு கப் காபி ஆர்டர் பண்ணினேன். சம்பந்தமும் சளைக்காமல் இன்னொரு கப் காபி ஆர்டர் செய்தான். அவனுக்கு என்ன, முதலாளியின் அண்ணன்; காசா செலவு? 

எனக்கோ அவன் சொல்லக்கூடிய கதை தேவை. அவனோ சரிவரச் சொல்லமாட்டான் போல இருந்தது. என்ன செய்வது என்று மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. 

திடீரென்று “அந்தக் கமலம் எப்படியிருப்பாள்?” என்றேன். 

“லட்டு மாதிரி இருப்பாள்” என்று சுருக்கமாகப் பதில் அளித்தான் சம்பந்தம். அவள் அவனுக்கு இன்னமும் இனித்துத்தான் கிடந்தாள் என்பது எனக்கு நன்கு புரிந்தது. 

“இப்போது எங்கே அவள்?” 

“அவள்தான் செத்துப் போய் விட்டாளே?” 

“எப்போ? ஏன்? எப்படி?” என்று கேட்டேன். 

“உங்களுக்குப் புரியும்படியாக எனக்குச் சொல்லத் தெரியல்லைங்க” என்று ஒப்புக் கொண்டான் சம்பந்தம். “நான் என்ன கதை எழுதறவனா கோர்வையாகக் கதையைச் சொல்ல? எப்படியோ ஆரம்பிச்சு எப்படியோ முடிக்கிறேனுங்க.” 

“ஆரம்பி. முடிவு நோக்கி நகர்ந்து முடி பார்க்கலாம்” என்றேன். 

“என்னைப்பத்தி ஒரு பெரிய பொஸ்தகமே எழுதலாமுங்க” என்றான் சம்பந்தம். 

“எழுதறேன்” என்றேன். 

“எனக்குச் சுமாராப் படிக்கவருமுங்க அவ்வளவா பேசத் தான் வராதுங்க” என்றான். பின்னர் சட்டென்று “அந்தக் கமலத்தைப் பற்றி அவுங்க ஊர்க் கவிராயர் ஒரு பாட்டுக்கூடப் பாடினாருங்க. நீங்க பல புஸ்தகம் படிச்சிருப்பீங்களே, அதையும் படிச்சிருக்கீங்களா….?” 

“பாத்ததா நினைவில்லை!” என்றேன். 

“ஜோராகப் பாடலாமுங்க. வாய்விட்டு கைத் தாளம் போட்டுக்கிட்டுப் பாடினா ரொம்ப நல்லா இருக்குமுங்க….” 

“சரி. அவள் காவியத்து நாயகி. நீ வசன காவியத்து நாயகன்.” 

“அப்டின்னா என்னங்க?” என்று விசாரித்தான் சம்பந்தம். 

“உன்னைப் பற்றி ஒரு நாவல் நான் எழுத ஆசைப்படறேன். விஷயத்தைச் சொல்லமாட்டேன் என்கிறாயே!” என்றேன். 

அத்தியாயம்-6

“நம்ப சம்பந்தத்துக்கு எங்கே போனாலும் நல்ல காபி கிடைக்கிற இடம் தெரியும். இதோ… நம்மூர் கதாசிரியரோடு சிநேகம் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டானே! குட் ஈவினிங் ஸார்” என்று கூறிக் கொண்டே ஃப்ரான்சிஸ் என்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் மூன்றாவது நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு எங்கள் மேஜையண்டை உட்கார்ந்தார். “பையா, காபி கொண்டு வா” என்று உத்தரவு தந்தார். 

“சம்பந்தம் இந்த ஹோட்டல் முதலாளி சின்னையாவின் அண்ணா வென்று உங்களுக்குத் தெரியாதோ?” என்று கேட்டேன் நான் . 

“அப்படியா? சொந்த அண்ணாவா? தெரியவே தெரியாதே எனக்கு. நம்ப சின்னையாவுடைய புகழ் எல்லாம் இந்த நல்ல காபியோடு சரி என்று எண்ணி யிருந்தேன் நான். இப்படிப் பிரக்யாதி பெற்ற அண்ணன் ஒருவன் நமது சின்னையாவுக்கு இருப்பதே எனக்குத் தெரியாதே என்று உண்மையாகவோ, பொய்யாகவோ வற்புறுத்தி வற்புறுத்தி, ஒரு தடவைக் கிரண்டு தடவையாகச் சொன்னார் ஃபிரான்சிஸ். 

அவர் மஃப்டி யாயிருக்கும் போதும் இப்படிப் பொய் சொல்ல வேண்டியதில்லை என்று தான் எனக்குத் தோன்றிற்று. ஆனால் போலீஸ்காரர்களின் விரோதம் நமக்கெதற்கு என்று மனசில் இருந்ததை நான் அவரிடம் சொல்ல வில்லை.” 

சம்பந்தம் எழுந்து போய்விட யத்தனித்தான். ஆனால் நானும் விடவில்லை. கதையை வாங்கிக் கொள்ளாமல் விட்டு விட்டால் எழுத்தாளன் என்கிற பெயர் எனக்கு எப்படித் தகும்? ஃபிரான்சிஸ்ஸும் ‘இரு அப்பேன், போகலாம்! இன்னொரு கப் காபி சாப்பிடு. உன் தம்பி ஹோட்டல்தானே? பில்லில் போட மாட்டான்’ என்றார். 

‘தம்பியில்லாத போலீஸ்காரர்களுக்கும் கூடச் சின்னையா அழ வேண்டியிருந்ததே!’ என்று எண்ணிக் கொண்டேன், சொல்ல வில்லை. ஆனால் வாய் திறந்து, “சம்பந்தம் மீசைக்கார நடேசனையும், மீசையில்லாத நடேசனையும், மேட்டுத்தெரு லட்டுப் போன்ற கமலத்தையும் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். நீங்கள் வந்தீர்கள்” என்றேன். 

“அது புது அயிட்டம். ஆனால் சம்பந்தத்தின் கதையைப் புரிந்து கொள்ள நீங்கள் வார் டயத்துக்குப் போக வேண்டும். அதாவது 1941, 1942 வாக்கில் நீங்கள் திப்பிலியார் என்று ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ….?” என்றார் இன்ஸ்பெக்டர். 

“திப்பிலியார்… திப்பிலியார்…. இருங்கள்! இருங்கள். ஏதோ கேள்விப்பட்ட மாதிரித்தான் இருக்கிறது. அவர்தானே 1950லோ அதற்குச் சற்றுப் பின்னரோ ஏதோ ஒரு கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டதாக ஆமாம் செய்தித்தாளில் அந்தக் கேஸ் பற்றிப் பத்தி பத்தியாக வந்ததே!” 

“ஆமாம். அவரேதான்! அவருடன் சம்பந்தமும் கூட்டு. கொலையிலும் கூட்டு – அவர் அடித்த பணத்திலும் கூட்டு” என்றார் ஃபிரான்சிஸ். 

“அப்படி யெல்லாம் சொல்லாதே ஐயா போதுமான ருஜு இல்லை என்று நீதிபதியே சொல்லி விட்டாரே!” என்றான் சம்பந்தம். 

நீதிபதிகளைப் பற்றித் தன் மனசிலிருந்ததை யெல்லாம் சொல்லலாமா வேண்டாமா என்று ஒரு விநாடி தயங்கினார் ஃபிரான்சிஸ். சொல்லா திருப்பதே நல்லது என்று சொல்லா திருந்தார். 

“கதையை நீங்கள் தான் சற்றுத் தெளிவாகச் சொல்லுங்களேன்” என்றேன். 

“துப்பறியும் கதை மாதிரித் தலைகீழாக இன்று ஆரம்பித்து 1941இல் முடிக்கட்டுமா? அல்லது 1941இல் ஆரம்பித்து இன்று வரை சொல்லட்டுமா?” என்றார் ஃபிரான்சிஸ். 

“எப்படிச் சொன்னாலும் சரிதான்” என்றேன், கதையைக் கேட்கும் ஆவலில். 

அத்தியாயம்-7

“உலகத்தோடு ஒட்டிவாழ மறுக்கிற உங்களுக்கும் கூடத் தியாகராஜ திப்பிலியாரைப் பற்றித் தெரியும். கேள்விப் பட்டிருக்கீங்க இல்லையா?” என்று என்னையே க்ராஸ் கேள்வி கேட்டார் இன்ஸ் பெக்டர். 

“அவருக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?” என்றேன் நான், புரியாமல். 

“இந்த சம்பந்தம்தான் அந்த சம்பந்தம்” என்றார் ஃப்ரான்சிஸ். 

“ஆமாம்” என்று கல்யாணப் பெண் போல வெட்கத் துடன் தலை குனிந்தார் சின்னையாவின் அண்ணா சம்பந்தம். 

“அந்தத் திப்பிலியாரைப் பற்றி பதினைந்து ஆண்டு களுக்கு முன் ஏதோ கேள்விப்பட்டது நினைவுக்கு வருகிறது” என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு, காபியை ருசி பார்த்துக் கொண்டே சொன்னேன். “ஆமாம். 1943, அல்லது 1944-இல் இருக்கும் அவர் பட்டணத்திற்குப் போய் யாரோ ஒரு பெரிய சினிமா ஸ்டாரினுடைய பாகார்ட் காரை விலைக்கு வாங்கி வந்து அதில் அந்த சினிமா ஸ்டார் உட்காருகிற பக்கத்திலே, அந்த இடத்திலேயே உட்கார்ந்து சவாரி செய்து கொண்டு ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தார் என்று இளவட்டங்கள் பலர் அந்த நாளில் அவரைக் கேலி செய்தது எனக்கு நினைவுக்கு வருகிறது” என்றேன். அப்போது எனக்குக் கல்லூரி மாணவர்கள் பலர் சிநேகமாக இருந்த காலம். 

“ஆமாம். ஒன்றுக் கிரண்டாக, அதாவது சற்றேறக் குறைய ஒரு லக்ஷம் ரூபாய் வரையில் விலை கொடுத்து அவர் மந்திரிகுமாரி என்கிற பிரபல சினிமா ஸ்டாரின் பாகார்ட் காரை விலைக்கு வாங்கி வந்தார். அதிலே அவர் வலது புறத்து மூலையிலேதான் உட்காருவார் கூட யாராவது வந்தால் தவறிப் போயும் கூட அந்த வலது புறத்து மூலையில் உட்கார விட்டு விடமாட்டார் என்பதும் ஆறேழு மாதங்களில் ஊரெல்லாம் பிரசித்தியாகிவிட்டது” என்றார் ஃபிரான்சிஸ். “மந்திரிகுமாரி அங்கேதான் உட்காருவாள். அதே இடத்தில் தானும் உட்கார்ந்து சவாரி செய்வதால் ஒரு ஆனந்தம் ஏற்பட்டது என்பது அவரே கதை கட்டிவிட்ட ஒரு சமாசாரம். அவர் அந்த வலது பக்கத்தில் உட்கார்வதற்கு ஒரு காரணம் உண்டு” என்று அந்தக் காரணத்தைத் தான் சொல்லாமல் சம்பந்தம் சொல்ல வேண்டும் என்று எதிர் பார்ப்பவரைப் போல அவனைப் பார்த்தார். 

“ஆமாமுங்க. காரணமுண்டுங்க” என்றான் சம்பந்தம். “அந்த வலது பக்கத்துக் கதவுக்குள்ளுற ரகசிய அறை ஒன்று இருந்த துங்க. அதிலே ஒரு சிறு கைத் துப்பாக்கி எப்பவும் தயாராக இருக்குமுங்க. ஆனால் தியாகராஜத் திப்பிலியாருக்குத் துப்பாக்கி சுடவும் தெரியாது. அவருக்கு எது முன் பக்கம், எது பின் பக்கம் என்று கூடத் தெரியாது. துப்பாக்கியைக் கண்டாலே அவருக்குக் கைகால் நடுக்க லெடுத்து விடுங்க…” 

“நடுக்கலெடுக்காத ஆளுங்களாப் பின்னர் பத்துப் பேர் வந்து சேர்ந்தாங்க. அது பிற்காலத்தில். அப்போது அந்தப் பக்கம்தான் உட்காருவாரு அவர்.” 

“எதிரி கையில் தன் துப்பாக்கி அகப்பட்டுக் கொள்ளா திருக்கட்டும் என்பதற்காகவா?” என்று கூறிச் சிரித்தேன் நான். 

“அதுவும் சரிதானுங்களே!” என்றான் சம்பந்தம். 

“அது எப்படியோ! அவர் வலது பக்கத்தில் வருகிற வரைக்கும் அவருக்கு ஒரு தீங்கும் வரவில்லை. அந்தக்காரை வாங்கி, பத்தாவது வருஷம் ஒரே ஒரு தடவை அவர் வலது பக்கம் உட்கார முடியாமல் போய்விட்டது.”

“ஏன்?” என்றேன் நான். 

அத்தியாயம்-8

ஒரு விநாடி சம்பந்தம் ஏதாவது சொல்வானோ என்று அவனைப் பார்த்தேன். என்னிடம், “அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க” என்றான் சம்பந்தம். “கோர்ட் டிலேயே தான் ருஜுவாகவில்லீங்களே! இன்ஸ் பெக்டர் ஐயாக்கிட்ட ருஜு இருந்தால் கோர்ட்டிலே தாக்கல் செய்திருக்க மாட்டாங்களா?” என்றான். 

நான் ஃப்ரான்ஸிஸ்ஸைத் திரும்பிப் பார்த்தேன். அதை அது பற்றிய இடத்தில் விசாரிப்போம். இப்போது ஆரம்பத்திலிருந்து எனக்குத் தெரிந்த வரிசையில் கதையைச் சொல்றேன். 1943லே தியாக ராஜத் திப்பிலியார் பாகார்டு காரை வாங்கின போதே அதற்கெல்லாம் அவரிடம் காசு ஏது என்று ஊரில வதந்திகள் பல உலாவின.” 

“அந்த வதந்திகளில் சில என் காதில்கூட விழுந்தன. நம்ம ஊர் டாக்டர் ஒருவரும் அவருமாகச் சேர்ந்து புதுச்சேரியிலிருந்து கள்ளக் கடத்தல் செய்கிறார்கள் என்றும், ஸில்க், தங்கம், கடியாரங்கள், மது என்று பலவித சாமான்கள் கொணர்ந்து வந்து லாபமடிக் கிறார்கள் என்றும், வதந்தி உலாவியது. இதெல்லாம் காரணமாக அந்த டாக்டர் பெயர் ஊரிலே மிகவும் பிரபல மாகியது முனிசிபல் எலெக்ஷனிலே அவர் ஏராளமான வோட்டு வாங்கி முனிசிபல் கவுன்சிலரானார் 

பின்னர் முனிசிபாலிடி அங்கத்தினர்களுக்குக் குழாய்த் தண்ணிக்குப் பதில் புதுச்சேரி மது ஊற்றித் தருவதாக வாக்களித்து முனிசிபல் சேர்மன் தேர்தலில் பெரும் வோட்டுக்கள் பெற்றுச் சேர்மன் ஆனார் என்றும் கேள்விப்பட்டேன்” என்றேன். 

“ஆமாம். சரியாகவே கேள்விப்பட்டீங்க” என்றான் சம்பந்தம். 

“அந்த டாக்டருக்கும் திப்பிலியாருக்கும் போலீஸிலேயும் உள் கைகள் பல இருந்தனர். எப்போது எங்கே சோதனை போடுவார்கள் என்று அறிந்து அவர்கள் தப்புவது அதனால் சுலபமாக இருந்தது. நான் பெயர்கள் எதுவும் சொல்ல விரும்ப வில்லை” என்றார் ஃபிரான்ஸிஸ். 

“நியாயந்தான்” என்றேன் நான். 

“என் கிட்டவே வந்து அந்தப் பரமார்த்த ஐயன் அவன் தான் இந்த ஐயாவுக்கு முன் இன்ஸ்பெக்டராயிருந்தவன் தகவல் சொல்லுவான். நானே தியாகராஜத் திப்பிலியாரிடம் தெரிவித் திருக்கிறேன்” என்றான் சம்பந்தம். 

“பரமார்த்த ஐயன் அல்ல அவன் பேரு. பிரணதார்த்தி ஐயர். அது போகட்டும். அது வேண்டாம் இப்போ…..” என்றார் ஃபிரான்சிஸ் அவசரம் அவசரமாக. 

“எல்லோருக்கும் தெரிந்ததைப் பூராச் சொல்லுவது என்று ஆரம்பித்துவிட்டால் ஊரெல்லாம் நாறும் ஐயா” என்றான் சம்பந்தம். “ஊரெல்லாம் சாக்கடைகள்.’ 

“மொத்தத்தில் சம்பந்தம் சொல்றது உண்மை தான்” என்று போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஒப்புக் கொண்டார். “இந்த விஷயத்தில் என் கை கூட அத்தனை சுத்தமில்லைதான். நான் என்ன செய்வது? மேலதிகாரிகளின் உத்தரவுடன் விலைவாசிகள் ஏறுகிற போது நூறு இருநூறு கிடைத்தால் வேண்டாம் என்று சொல்ல மனம் வருகிறதா? கூட்டத்தோடு கோவிந்தாப் போட்டு ஒளிவதுதான் சுலபமாக இருந்தது.” 

“அப்படிச் சொல்லுங்க” என்றான் சம்பந்தம். “என்னையே மடக்கி அதட்டி, உருட்டி ஐநூறு ஆயிரம்னு வாங்கிப்பிட்டாங்க ஐயா. மகா சாமர்த்தியக்காரருங்க இவரு….” 

“அதெல்லாம் பழங்கதை இப்போது எதற்கு?” என்றார் ஃபிரான்சிஸ். “தவிரவும் இரைந்து பேசாதே. ஐயா கதை கேட்டாருன்னு சொல்ல வந்தால்….” 

“சொல்லுங்க கதையை!” என்றான் சம்பந்தம் ஒரு புதுத் தன்னம்பிக்கையுடன். அதையும் கவனித்துக் கொண்டேன் நான். 

அத்தியாயம்-9 

திப்பிலியார் கார் வாங்கி வந்தவுடனேயே போலீஸஷக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அதுவும் யுத்த சமயமா? எதிலே எப்படி ப்ளாக் மார்க்கட் பண்ணிச் சம்பாதித்தான் என்று கண்டுபிடித்தால் அவனிடம் யுத்த முயற்சிக்கு என்று பத்தாயிரம், ஐம்பதினாயிரம் என்று கறந்து விடலாமா என்று நம்ப கலெக்டருக்கு ஆசை. நிறைய ப்ரிட்டிஷ் சர்க்காருக்கு வசூல் பண்ணித் தந்தால் அவருக்கு ப்ரொமோஷன் ஆகும்…” என்றார் ஃபிரான்சிஸ். 

“அப்போ இங்கே விவேகானந்தன்தான் கலெக்டராக இருந்தார் இல்லையா?” என்றேன். 

“ஆமாம். அவரேதானுங்க. நானேதான் அப்போதும் இன்ஸ்பெக்டர். பதினேழு வருஷமாவுதுங்க நான் இன்ஸ்பெக்டராகி. ஒரு ப்ரொமோஷன் கிடைத்தது. அடுத்த ப்ரொமோஷன் எனக்குக் கிடைக்கவில்லை” என்று பெருமூச்சு விட்டார். 

“இப்ப விவேகானந்தன் ஹைகோர்ட் ஜட்ஜாகி விட்டார்” என்றான் சம்பந்தம். 

“திப்பிலியாரின் சொத்து விவரங்களைக் கண்காணித்து ரிப்போர்ட் அனுப்ப என்னைத்தான் நியமித்தார்கள். முதல் நாள் நான் போய் அவரைப் பார்த்துவிட்டு வந்த போது, முதல் தடவையாக சம்பந்தத்தையும் பார்த்தேன். இவருதான் அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து என்னை ஸ்டேஷனில் விட்டு விட்டுப் போனார்” என்றார் ஃபிரான்சிஸ். 

“அன்று ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்திலே உட்கார்ந்துக்கிட்டு வழி நெடுக வந்தீங்க. ஸீட்டிலே யாரோ நழுவ விட்டுவிட்டுப் போயிட்ட இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கூட உங்களுக்கு அகஸ்மாத்தாகக் கிடைத்ததுங்களே!” என்றான் சம்பந்தம், பல்லை இளித்துக்கொண்டு. 

“என்ன ஞாபக சக்தியடா உனக்கு?” என்றார் ஃபிரான்சிஸ். “ஊரிலே இருந்து நடமாடிய வதந்தி உண்மைதான் அவங்க புதுச்சேரியிலிருந்து சரக்குக் கொணர்ந்து விக்கிறாங்கன்னுதான் தோணுது. அதை நிரூபிக்க நம்ம போலீஸ் இலாகாவாலே முடியாது. ஸ்பெஷல் துப்பறியும் இலாகாதான் வரணும் என்று நான் ரிபோர்ட் எழுதிப் போட்டு விட்டு ஒதுங்கிக் கிட்டேன்.” 

“அப்பத்தான் ராஜகோபாலன்னு ஒத்தர் வந்தாரு. கொள்ளடத்துக் கரையிலே ஒரு ஆசிரமம் அமைத்துக் கிட்டு அவர் குடியேறினாரு. கிராமச் சீர்திருத்தம் செய்யறதிலே நெறியாக இருக்கிறதாகச் சொல்லி 
கிட்டாரு அவரு. ஆனால் அவரை ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு எங்க திப்பிலி யாரு ரைஸ் மில்லுக்குள்ளே பார்த்ததும் அவரைப் பற்றிச் சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. நான்தான் விஷயத்தை திப்பிலி யாருக்குச் சொன்னேன். ‘சம்பு’ அப்படி தான் என்னைக் கூப்பிடு வாரு திப்பிலியாரு. ‘என்னடா பண்றது? விஷயம் தெரிந்து போயிடுமோ?’ என்றார். ‘பயப்படாதீங்க திப்பிலியாரே? விஷயம் இருந்தான்னா தெரியறதுக்கு? செத்தவன் பிழைச்சு வந்தா பேசப் போரான்’ன்னு சொன்னேன்” என்றான் சம்பந்தம். 

குறையையும் அவனே சொல்லுவானோ என்று காத்திருந்து விட்டு ஃபிரான்சிஸ் சொன்னார்: ‘அத்துடன் சம்பந்தம் நிறுத்தி விட்டது சரிதான். ஆனால் அந்த ராஜகோபாலன் என்கிற போலீஸ் இன்ஸ்பெக்டர் கொள்ளிடக்கரையில் எங்கே சமாதியானான் என்று கண்டுபிடிக்க மறுபடியும் என்னைத்தான் அனுப்பினார் என் இன்ஸ்பெக்டர்.” 

“மொத்தமாக நம்ப ஐயாவுக்குத்தான் இதிலே லாபமுங்க” என்றான் சம்பந்தம். 

“மாடி வீடுதான் கட்டி விட்டேன் போயேன்” என்று குறைப் பட்டுக் கொண்டார் ஃபிரான்சிஸ். 

அத்தியாயம்-10

“வேவு பார்க்க வந்தவனைத் தீர்த்துக் கட்டிப் பிட்டீங்களாக்கும். அதிலே அதிகமான சந்தேகத்துக் கிடம் தரும்!” என்றேன் நான். 

“தீர்த்துக் கட்டிப்பிட்டாங்க என்று எப்படி யார் நிச்சயமாகச் சொல்வது? ஆளைக் காணோம். அவ்வளவு தான்! இன்று வரையிலும் காணவில்லை. பத்தாயிரம் இருபதாயிரம் கொடுத்து எங்கேயாவது ஓடிப்போய்த் தலை மறைவாக இருக்கச் சொல்லி யிருக்கலாமில்லையா? அல்லது பலாத்காரமாக ஏதாவது அவரைப் படகிலே ஏற்றி லங்கைத் தோட்டத்திலே வேலை செய்யச் செய்திருந்தாங் கன்னா….” 

“அப்படியெல்லாம் நடக்குமா இந்த நாளிலே! அதுவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாலுவிஷயம் தெரிந்தவராக இருப்பார். எந்த சந்தர்ப்பத்திலும் சமாளித்துக் கொண்டிருப்பாரே…..” என்றேன். 

“அதனால்தான் அவர் பணத்தை வாங்கிக்கொண்டு தானாகப் போயிருக்க வேண்டும், அல்லது கொல்லப் பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் இலாகா எண்ணிற்று. என்னை வேவுபார்த்து ஊரிலே தகவல் 

வதந்தி ஏதாவதுண்டா என்று விசாரித்து வர அனுப்பியது. போனேன்…. கொள்ளிடக் கரையில் கடலிலிருந்து எட்டு மைல் தூரத்திலிருந்த அந்தக் கிராமம் மிகவும் நல்ல கிராமம். அமைதி யான இடம். அந்தக் கோயிலும் படித்துறையும்! அந்தவூர் மனிதர்களும் பரமசாதுக்கள். ஐயா ஒருதரம் அந்தமாதிரி இடத்தைப் பார்த்துவிட்டு வரவேண்டும்” என்றார் ஃப்ரான்சிஸ் பரவசமாக. என்னையும் அங்கே ஆசிரமம் கட்டிக் கொள்ளச் சொல்வார் போல இருந்தது. 

சம்பந்தமும் அந்த ஊர்பற்றிப் போலீஸ் சப்இன்ஸ் பெக்டரின் கவிதையை அப்படியே ஆமோதித்தான். சம்பந்தம், “ஆமாமுங்க! போனால் திரும்பியே வர மாட்டீங்க…” என்றான். 

“ராஜகோபாலன் மாதிரியா?” என்று சிரித்தேன். 

“நல்லாப் பேசுகிறீங்க!” என்று சம்பந்தம் சொன்னான். “நீங்க அப்படியெல்லாம் அவரு மாதிரி தப்புத் தண்டாக் காரியங் களுக்குப் போகமாட்டீங்க. எங்க மில்லிலே நடுராத்திரியிலே அவருக்கு வேலை என்னங்க? எனக்கு என்னமோ அங்கே ஒரு பிசாசு சுத்துதுங்க என்று தெரியும். அதுதான் அவரைக் கடத்திக் கிட்டுப் போயிருக்கும் என்று தோணுதுங்க” என்றான். 

ஃபிரான்ஸிஸ் சிரித்தார். “அந்தப் பிசாசுக் கதையை அப்பவே நானும் கேள்விப்பட்டேன். அந்த ராஜ கோபாலனைப் பிசாசு தான் தூக்கிப் போய்விட்டது என்று கிராமத்தார் ஒரு இருபது பேராவது ஒரேயடியாகச் சாதித்தார்கள். அதுவும் அது பெண் பிசாசாம். இந்தப் புளியமரத்தின் மேலே தூக்கிப்போய் ஒரே தாவாகத் தாவி பேயுலகத்துக்குப் போயிட்டுதுங்க என்று சங்கிலித்தேவன் ஒரு மரத்தைக் கூடக் காட்டினான். அதிலே விசேஷம் என்னவென்றால் அந்த மரத்தின் உச்சியிலே அந்த ராஜகோபாலன் அன்று போட்டிருந்த கதர்ச்சட்டை கிழிந்து பறந்து கொண்டிருந்தது. உச்சாணிக் கிளையிலே…. அதற்கு மேல் அங்கு வேறு ஒரு தடயமும் கிடைக்கவில்லை’ என்று ஃப்ரான்சிஸ் சொல்லும்போது சம்பந்தம் குறுக்கிட்டு “ஐயா வுக்கு மட்டும் அந்தத் தடவை ஒரு ஆயிரம் கிடைத்தது” என்றான். 

“எத்தனையோ? நினைவில்லை. ஆனால் அதை எப்படியோ அறிந்துகொண்ட பிரணதார்த்திதான் தொகையை எண்ணுறதுக் குள்ளே அதைத் தட்டிக் கிட்டுப் போய்விட்டான்…. 

“அந்தக் கோபம்தானா உங்களுக்கு? அப்பவே கேட்டிருந் தீங்கன்னா இன்னொரு ஆயிரம், பாடாவதிக்குத் தெரியாமல் திப்பிலியார் தந்திருப்பாரே” என்றான் சம்பந்தம். “அப்ப வெல்லாம் பணத்துக்குப் பஞ்சம் ஏதுங்க. ஓசிக் காபி சாப்பிட எனக்கு மனமே வராதே. நாலுபேர் கூட இல்லாமே எந்தக் கடைக்கும் போக மாட்டேனே நான்.”

– தொடரும்…

– அவரவர் பாடு (மர்ம நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 1963, குயிலன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *