(தமிழகத்தில் இருந்து வெளிவரும் மூத்த பத்திரிகைகளில் ஒன்றான கலைமகள் சர்வதேச ரீதியாக நடத்திய அமரர் ராமரத்னம் நினைவுக் குறுநாவல் போட்டி – 2011ல் பரிசு பெற்ற குறுநாவல் இது.
கதைக்களம், எடுத்துக் கொண்ட பொருளில் வேறுபட்ட தன்மை இவைகள் நடுவர்களை வெகுவாகக் கவர்ந்தது. புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் மனக் குமுறல்கள் இவைகளை எல்லாம் வெளிப்படுத்தியதற்காக குரு அரவிந்தனின் ‘தாயுமானவர்’ குறுநாவலைத் தேர்வு செய்துள்ளதாக நடுவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பிரபல எழுத்தாளர்களான டாக்டர் லட்சுமி, திரு. பி. மணிகண்டன், திரு. ப. ஸ்ரீதர், ஆகியோர் இப்போட்டிக்கு நடுவர்களாகக் கடமையாற்றினர். தேர்வின்போது கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர், பதிப்பாசிரியர் திரு. ஆர். நாராயணசாமி ஆகியோரும் உடனிருந்து நாவலைத் தெரிவு செய்தனர்.)
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2
ஈழம் என்று அழைக்கப்பட்ட, இலங்கையின் வடபகுதில் உள்ள, கீரிமலைக் கடற்கரை சுனாமி வந்து போனது போல அமைதியாக இருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பைத்தவிர, அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. எங்கிருந்தோ பறந்து வந்த மீன் கொத்திப் பறவை ஒன்று சட்டென்று தண்ணீரில் மூழ்கி எதையோ கொத்திச் சென்றது. சுதந்திரமாய்ச் சிறகடித்து வானத்தில் பறக்கும் கடற்கொக்குகளைக் கூட இன்று காணக் கிடைக்கவில்லை. அஸ்தி கரைப்பதற்காக கீரிமலைக் கடலில் தலை மூழ்கி எழுந்தபோது இதுவரை அடக்கிவைத்த எனது துயரம் தன்னிச்சையாகப் பீறிட்டு வெடித்தது.
கிரிகைகள் செய்யும்போது துயரத்தை வெளிக்காட்டக் கூடாது என்பதால் கிரிகைகள் செய்த சமயாச்சாரியின் முன்னால் இதுவரை அடக்கி வைத்த துயரம் தண்ணீரில் ஒவ்வொரு முறையும் தலைமூழ்கி எழுந்தபோது என்னையறியாமலே வெடித்துச் சிதறியது. ஆற்றாமையின் வெளிப்பாடாய் இருக்கலாம், ஏனோ வடதிசையைப் பார்த்து ஓவென்று அழவேண்டும் போலவும் இருந்தது. என் கண்ணீரைப் பாக்குநீரணை தனதாக்கிக் கொண்டபோது, ஆர்ப்பரித்த ஓயாத அலைகளின் ஆரவாரத்தில் என் அழுகைச் சத்தமும் அதற்குள் அடங்கிப் போயிற்று.
இப்படித்தான் அன்று ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழ் மக்களின் மரண ஓலங்கள்கூட வடதிசையில் கடல் கடந்து சற்றுத் தொலையில் இருந்த உடன் பிறப்புக்களுக்குக் கேட்காமல் அரசியல் அலைகளால் அமுக்கப்பட்டிருக்குமோ என்று நினைக்கத் தோன்றியது. நினைவுகள் கரித்தது போல, வாயெல்லாம் உப்புக் கரித்தது. கரித்தது என் கண்ணீரா அல்லது வங்கக் கடல் நீரா என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாத அவலநிலையில் நானிருந்தேன்.
இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே இராணுவ நடமாட்டம் இருந்தது மட்டுமல்ல, முகம் தெரியாத பலர் பொதுமக்கள் போலச் சாதாரண உடையிலும் நடமாடினர். நான் பிறந்த மண் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் அடங்கிக் கிடந்ததால், வெளிநாட்டில் இருந்து வந்த என்னுடைய ஒவ்வொரு அசைவும் அவர்களால் கவனிக்கப்படலாம் என்பதால் என் துயரை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். நான் கவனமாக இருந்தேன் என்பதைவிட கவனமாக இருக்கும்படி நண்பர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தேன்.
நான் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு என்ன நடந்தது? ஏதோ ஒருவித பயங்கர அமைதி அங்கே நிலவுவதை என் உள்ளுணர்வு எடுத்துச் சொன்னது. இதே கடற்கரையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிற் தீர்த்தத் திருவிழாக்களின் போது நண்பர்கள், உறவுகள் புடைசூழ எவ்வளவு கலகலப்பாய் மகிழ்ச்சியோடு நீராடியிருக்கிறோம். கடற்கரை ஓரத்தில் இருந்த நன்னீர்க் கேணி என்பதால், நகுலேசுவரம் என்று அழைக்கப் பொற்ற கீரிமலைக் கேணி பிரசித்தி பெற்றிருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து வந்த சோழ இளவரசியான மாருதப்புரவீகவல்லி இந்தக் கேணியில் நீராடித்தான் குதிரைமுக நோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது முகத்தை அழகான முகமாக மாற்றியதாக வைதீகக் கதைகள் உண்டு. தனது நேர்த்திக் கடனைத் தீர்க்க, இளவரசியின் விருப்பப்படியே தென்னிந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காங்கேயன் சிலை, அருகே இருந்த இந்தக் கடற்கரைத் துறைமுகத்தில் இறங்கியதால் அத்துறை காங்கேயன்துறை என்ற பெயரைப் பெற்றது. குதிரை முகம் அழகிய முகமாய் மாறியதால் மா – விட்ட – புரம் என்ற பெயரும் எங்கள் ஊருக்கு அமைந்ததாக பாரம்பரியக் கதைகள் உண்டு.
உள்நாட்டுப் போர் என்றுதான் சொன்னார்கள். சர்வதேசமே வேடிக்கை பார்த்திருக்க, போரின் உச்சக்கட்டத்தில் யாருமே போர் நடந்த இடமான வன்னிப்பக்கம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பாவும், தங்கையும் அந்தப் பகுதிக்குத்தான் இடம் பெயர்ந்து தங்கியிருந்தார்கள். ஆனாலும் இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்கி இருந்தார்கள். இருவரும் வெவ்வேறு துருவங்களாய் இருந்தாலும், இருவருமே ஒரே மண்ணைத்தான் நேசித்தார்கள். மண்ணை மட்டுமல்ல, உடன் பிறப்புக்களான மக்களை, தாய்மொழியை, இயற்கையைக்கூட மனதார நேசித்தார்கள்.
போர்ச் சூழலில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபகுதியில் இருந்த எங்கள் கிராமமான மாவிட்டபுரத்தையும், அதனோடு இணைந்த காங்கேசந்துறையையும் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையமாக அறிவித்தார்கள். அதனால் அப்பகுதியில் வாழ்ந்தவர்களை வலுக்கட்டாயமாக அவர்கள் வாழ்ந்த பரம்பரை நிலத்தைவிட்டு வெளியேற்றினார்கள். விரும்பியோ, விரும்பாமலோ சூழ்நிலையின் கட்டாயத்தால் எங்கள் குடும்பமும் பரம்பரையாக வாழ்ந்த ஊரில் இருந்து இடம் பெயர்ந்து போகவேண்டி வந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கோட்பாட்டை அகிம்சைவாதியான அப்பாவும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதனால்தானோ என்னவோ பிறந்த மண்ணைப் பறிகொடுத்தாலும் கடைசிவரை தாங்கள் புகுந்த மண்ணைவிட்டுப் பிரிய இருவருமே முற்றிலும் மறுத்து விட்டார்கள்.
இருவரும் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் நான் புலம் பெயர்ந்த கனடிய மண்ணில் இருந்தேன். நாட்டின் போர்ச் சூழ்நிலையால் கடைசிக்காலத்தில் எந்தவித தொடர்பும் எங்களுக்குள் இருக்கவில்லை. உறவுகள் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நல்லதொரு ஒரு செய்திக்காகப் புலம் பெயர்ந்த மண்ணில் ஏங்கியபடி தவித்தவர்களில் நானும் ஒருவன். போர் ஓய்ந்த சில நாட்களின் பின்தான் அந்தத் துயரச் செய்தி வந்தது. போர் மேகங்கள் திரண்டு வந்து குண்டு மழையாய்ப் பொழிந்த ஒரு நாளில் அப்பாவின் மரணம் சம்பவித்ததாக தூரத்து உறவினர் ஒருவர் மின்னஞ்சலில் மடல் வரைந்திருந்தார். ஊர் சுமந்து போவதற்கு அந்த நேரத்தில் நான்கு பேர்கூட அங்கே கிடைக்கவில்லையாம். துப்பாக்கிச் சூடுகளுக்கும், ‘செல்’ அடிகளுக்கும் மத்தியில், முந்தியவனைப் பிந்தியவன் சுமப்பது என்ற நியதி போல, ஒரு தள்ளு வண்டியில் வைத்துத்தான் அருகில் இருந்த மயானத்திற்கு அப்பாவின் உடலை இருவர் தள்ளிச் சென்று சிதை மூட்டியதாகவும், அவரது அஸ்தியை எடுத்துக் கவனமாக வைத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஊர்மக்களால் விரும்பப்பட்ட ஒரு காந்தியவாதியாய், அகிம்சையின் பிறப்பிடமாய், தலைமை ஆசியராய், ஊராட்சி மன்றத் தலைவராய் இருந்த அவருக்குச் சாதாரண ஒரு நாளாக இருந்திருந்தால், அதற்குரிய அத்தனை மரியாதைகளுடனும் அவரது கடைசி ஊர்வலம் சென்றிருக்க வேண்டும். பிரித்தானியரிடமிருந்து கிடைத்த சுதந்திரத்தைத்தான் தமிழர்களுக்குக் கிடைத்த உண்மையான சுதந்திரம் என்று நினைத்து ஏமாந்தவர்களில் அப்பாவும் ஒருவர். பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும் பைந்தமிழின் ஓசை அங்கு கேட்க வேண்டும், ஓடையிலே தன் சாம்பல் கரையும் போதும் நம்தமிழின் ஓசையாங்கொலிக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்லிக் காட்டும் வார்;த்தைகளை நான் அடிக்கடி நினைவுபடுத்திப் பார்ப்பதுண்டு. இதெல்லாம் அவரது ஆசைகளாகவோ அல்லது கனவுகளாகவோ மட்டுமே இருந்தன. சாதாரண ஒரு நாளாக இருந்திருந்தால் இவை எல்லாம் நிறைவேறியிருக்கும். எப்படி எல்லாம் தனது இறுதி ஊர்வலம் நடக்க வேண்டும் என்று அப்பா எதிர்பார்த்தாரோ அதை எல்லாம் துறந்து கடைசிக் காலத்தில் அப்பா ஒரு அனாதைப் பிணமாய்ப் போய்விட்டாரே என்ற கவலை எனக்குள் குமைந்து கொண்டே இருந்தது.
எனவேதான் யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஊருக்குச் சென்ற என்னால், அப்பாவிற்கான திதியை மட்டுமே செய்ய முடிந்தது. பொதுவாக எங்க ஊரின்; வடக்கே, தென்னிந்திய கோடிக்கரையில் இருந்து பதினெட்டுக் கல் தெற்கே, கடற்கரை ஓரத்தில் இருந்த சடையம்மா மடத்தில்தான் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலையத்திற்குள் அந்த மடம் அகப்பட்டுக் கொண்டதால் வடமேற்குத் திசையில் சற்றுத் தள்ளி இருந்த ஈஸ்வரத் தலங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரத்திற்குச் சென்று அப்பாவின் திதியைக் கொடுத்தேன். ஈழத்தில் பஞ்சஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படும் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்து முக்கிய சிவ வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இவற்றில் சில கி.பி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயன்மார்களின் தேவாரப்பாடல் பெற்ற புகழ்பெற்ற ஈஸ்வரங்களாகவும் இருக்கின்றன. சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத் திருத்தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
அமைதியான தெளிந்த நீரோட்டம் போன்றிருந்த எங்கள் வாழ்க்கையில் விதி விளையாடத் தொடங்கியது. விதியே விதியே என்தாயை என்செய்தாய்? என்றது போல காலம் எதற்காகவும் காத்திருக்கவில்லை, ஆனால் விதி மட்டும் ஒவ்வொருவராகப் பலியெடுக்கக் காத்திருந்தது…!
– தொடரும்…
– தமிழகத்திலிருந்து வெளிவரும் மூத்த இதழான கலைமகள் ராமரத்தினம் குறுநாவல் போட்டி – 2011ல் பரிசு பெற்ற கதை. நன்றி: கலைமகள்.
இரண்டாவது பாகத்திற்கான இணைப்பினை இதனோடு சேர்த்து தர வேண்டும். அதுதான் அடுத்து அடுத்து படிக்க உதவியாக இருக்கும்.
இரண்டாம் அத்தியாயத்தின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம்-1 | அத்தியாயம்-2