கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 15,983 
 
 

முன்னுரை

1918 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ப்ளூ புக் மேகஸின் என்னும் பத்திரிக்கையில் மூன்று பகுதியாக வெளி வந்த புதினம் இது. எட்கர் ரைஸ் பர்ரோஸ் என்னும் எழுத்தாளர் எழுதிய கேஸ்பக் என்னும் பழைய உலகத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதிய மூன்று நூல்கள் கொண்ட தொகுப்பில் முதலாம் கதை இது.

முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்காவில் ஒரு மிகப் பெரிய கப்பல் கட்டும் தொழில் அதிபரின் மகன் ஒருவன் வேலை விஷயமாக பிரான்சிற்குக் கப்பலில் பயணம் செய்யும் போது ஜெர்மன் நாட்டுக் கப்பலால் தாக்கப்பட்டுத் தப்பிக்கிறான். பின் தாக்கிய அதே நீர் மூழ்கிக் கப்பலை மற்றோரு ஆங்கிலப் படகின் உதவியுடன் வளைக்கிறான். பின் அவர்கள் எதிரிகளுடன் எங்கெங்கோ அலைந்து திரிந்து புதியதோர் உலகிற்குப் பயணம் செய்கிறார்கள். அங்கு அவர்கள் கண்ட உலகம் மிகவும் வியப்படைய வைக்கிறது. அங்கு வாழும் விலங்குகள் தாவரங்கள் பறவைகள் என அனைத்தும் என்றோ பூமியில் வாழ்ந்து மறைந்தவை. அதற்கு நடுவில் பயணம் செய்ய வேண்டிய அவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள் என்பதைப் பலவிதத் திருப்பங்களுடன் மிக அருமையாக கதாசிரியர் புனைந்திருக்கிறார். மிகவும் விறு விறுப்பான பயணம்.

முடிந்தவரை தமிழ்ச் சொற்களைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்தி இருக்கிறேன். தமிழுக்கான ஆங்கிலப் பதங்களை இறுதியில் தொகுத்திருக்கிறேன். கடல் புறா போன்ற கதைகளைப் படித்திருந்தால் இன்னும் உதவியாக இருந்திருக்கும். ஏனெனில் அதுவும் கடல் பயணம் சார்ந்த தூய தமிழ்ச் சொற்களை எளிதாகப் பயன் படுத்த உதவி இருக்கும். இணையத்தில் இருக்கும் ஆங்கில – தமிழ் அகராதிகள் பெரும்பாலும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான சரியான பொருள் தருவதில்லை.

அத்தியாயம்:௧ | அத்தியாயம்:௨

வெற்றிடக் குடுவை

அந்தச் சம்பவம் நடந்த போது மத்தியானம் மூன்று மணி இருக்கும். அது ஜூன் 3, 1916 ஆம் தேதி மத்தியானம். நான் கடந்து வந்த சம்பவங்கள், அந்தக் கொடூரமான அனுபவங்கள் எல்லாம் இந்த மூன்று சிறிய மாதங்களில் தான் நடந்தனவா என்று நினைத்துப் பார்க்கும் போது என்னாலேயே நம்ப முடியவில்லை.

இந்தக் குறுகிய காலங்களில் என் கண்களால் நான் கண்ட மாற்றங்களும் பரிணாமங்களும் பல யுகங்களைப் பார்த்து வந்தது போல் தோன்றுகின்றன. வேறு யாரும் இதுவரை பார்த்திராத காட்சிகள். ஒரு பழைய இறந்த உலகத்தின் காட்சிகள். கேம்பிரியன் யுகத்தில் கடைசியாகப் பிறந்த உயிரினத்தின் சுவடுகளே இன்று எஞ்சியிராத அளவு மிகப் பழமையான உலகம் அது. உயர் வெப்பத்தால் உருகும் உள் அடுக்கினுள் எனது விதியும் புதைக்கப்பட்டது மனித அறிவிற்கே எப்போதும் எட்டாமல். ஆக நான் இங்கிருப்பது உண்மை. இங்கேயேதான் இருக்கப் போகிறேன் என்பது சுடும் உண்மை.

கையால் எழுதப்பட்ட அந்த விபரங்களைப் பார்க்கும் போதே தூண்டப்பட்ட என் ஆர்வம் இவ்வளவு தூரம் அதைப் படித்த பின் கொதி நிலையை நெருங்கிக் கொண்டிருந்தது. எனது மருத்துவரின் அறிவுரையின் படி நான் கோடை விடுமுறையில் கிரீன்லாந்து வந்திருந்தேன். படிக்கும் நினைப்பே இல்லாமல் நான் வாசிக்கும் புத்தகங்களை எடுத்து வர மறந்ததால் சிறிது நாட்களிலேயே போரடித்துக் கொன்று விட்டது. மீன் பிடிப்பதிலும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் வேறு எந்த பொழுது போக்கும் இல்லாததால் கிரீன்லாந்தின் தென் முனையிலுள்ள கேப் பெர்வெல்லில் எந்தவிதமான வசதிகளும் இல்லாத இந்தப் படகில் என் உயிரையே பணயம் வைத்திருக்கிறேன்.

நிற்க. இந்தக் கதை என்னைப் பற்றியதோ கிரீன்லாந்தைப் பற்றியதோ இல்லை. ஆதலால் இவைகளை விரைவில் கடந்து செல்வோம்.

ஒரு வழியாக படகு பரிதாப நிலையில் இருக்கும் அந்தத் துறையை அடைந்தது. இடுப்பளவு நீரில் நின்று கொண்டு உள்ளூர் ஆட்கள் உதவியுடன் நான் இறங்கிக் கொண்டிருந்தேன். கரையை அடைந்த பின் இரவு உணவு தயாராகிக் கொண்டிருந்த வேளை நான் உடைந்த பாறைகளின் மேல் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தேன். அலைகள் வாரித் தூவிய மணலால் தேய்ந்த க்ரானைட் பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் விட்டுக் கொண்டிருந்தன. மோதிக் கொண்டிருக்கும் அந்த அலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போதுதான் நான் அதை கவனித்தேன். அந்த இடத்தில் யாராவது ஒரு வங்காள புலியைப் பார்த்தால் எவ்வளவு ஆச்சர்யம் அடைவார்களோ அதை விட அதிகமான ஆச்சர்யத்தோடு நான் அதை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அது என்னவென்றால் ஒரு லிட்டர் அளவுள்ள வெற்றிடக் குடுவை. கிரீன்லாந்தின் தென் முனையிலுள்ள கேப் பெர்வெல்லில் அலைகளினால் இங்கும் அங்கும் அல்லாடிக் கொண்டிருந்தது. ஓடிச் சென்று அதை எடுத்தேன். எடுக்கும் வேளையில் முழங்கால்கள் வரை நனைந்தேன். மணலில் அமர்ந்து அதைப் பிரித்தேன். அந்தி சாயும் வேளையில் அந்தச் சிறு வெளிச்சத்தில் இறுக்கமாக மடிக்கப்பட்ட அந்த அழகான கையெழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.

அதன் முதல் பத்தியை நீங்கள் ஏற்கெனவே படித்து விட்டீர்கள். என்னைப் போல சிந்திக்கும் முட்டாளாய் நீங்களும் இருந்தால் மீதியையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். அதனால் அதை அப்படியே இங்கு தருகிறேன் மேற்கோள் குறிகளை எல்லாம் நீக்கி விட்டு. அதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்வது மிகவும் அரிது. இன்னும் இரண்டே நிமிடங்களில் நீங்கள் என்னை மறந்தாலும் மறந்து விடுவீர்கள்.

என் வீடு சாண்டா மாநகாவில் இருக்கிறது. என் அப்பாவின் நிறுவனத்தில் இளம் உறுப்பினராக இருக்கிறேன். இல்லை இருந்தேன் என்று சொல்வதுதான் சரி. நாங்கள் கப்பல் கட்டுபவர்கள். சமீப காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் செய்வதில் தேர்ச்சி பெற்றிருந்தோம். ஜெர்மனி இங்கிலாந்து பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டினோம். ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் முகத்தைப் போல நீர்மூழ்கிக் கப்பல்களை எனக்குத் தெரியும். சோதனை ஓட்டங்களில் நிறைய கப்பல்களுக்கு நான் தலைமை தாங்கி இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு விமானம் ஓட்டுவதில்தான் ஆர்வம் அதிகம். அதனால்தான் கர்டிஸ் கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி அடைந்தேன். தந்தையிடம் மிகப் பெரும் போராட்டத்திற்குப் பின் லபாயேட்டே எஸ்கேடிரில்லில் சேர அனுமதி வாங்கினேன். அதன் முதல் படியாக அமெரிக்க ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. அங்கிருந்து பிரான்ஸ் செல்ல வேண்டி இருந்தது. செல்லும் வழியில் அந்த மூன்று கிரீச்சென்ற ஊதல் சத்தங்கள் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டன. நான் எனது நாய் நாப்லர் என் கூட்டாளிகள் சிலருடன் கப்பல் தளத்தில் அமர்ந்திருந்தேன். அவர்களும் என்னுடன் அமெரிக்க ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் சேர்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த முதல் ஊதல் ஒலி கப்பலின் அமைதியையும் பாதுகாப்பையும் நொறுக்கியது. நீர்மூழ்கிக் கப்பல் வளாகத்தை நெருங்கியதில் இருந்தே நாங்கள் சூழிட நோக்கி எங்கிருக்கிறது என்று தேடியபடியே இருந்தோம். நாளைக் காலையில் பத்திரமாக பிரான்சில் கொண்டு போய்ச் சேர்க்க இருந்த விதி இப்படி விளையாடுகிறதே என்று எண்ணி நொந்து போய் இருந்தோம். இளம் வயதாய் இருந்ததால் கப்பல் பயணம் சாகசம் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணித்தான் வந்தோம். கடவுளாய்ப் பார்த்து அன்று ஒரு வாய்ப்பு வழங்கினார். ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது வெறும் பொம்மலாட்டம் போலத்தான் இருந்தது.

பாதுகாப்புக் கருவிகளை நோக்கிப் பாயும் பயணிகளின் வெளிறிப் போன முகங்களை என்னால் மறக்கவே முடியாது. இத்தனைக்கும் இன்னும் எதுவும் பயங்கரமானதாக நடக்கவும் இல்லை. நாப்ஸ் ஒரு மெல்லிய முனகலுடன் தலையை உயர்த்தியது. நானும் எழுந்து கப்பலின் பக்கவாட்டில் பார்த்தேன். இருநூறு காதத்திற்கும் குறைவான தொலைவில் இன்னொரு நீர்மூழ்கிக் கப்பலின் சூழிட நோக்கி தெரிந்தது. மேலும் கப்பலை நோக்கிச் சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்த வெடிக்கண்ணியின் வழித்தடம் ஒன்றும் தெளிவாய்த் தெரிந்தது. நாங்கள் பயணித்த கப்பல் அமெரிக்காவினுடையது. அதில் எந்தவிதமான போர்த் தளவாடங்களும் கிடையாது. தற்காத்துக் கொள்வது கூட எங்களால் இயலாது. இருந்தும் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல் எங்கள் கப்பலின் மீது வெடிக்கண்ணி ஏவப்பட்டது.

நான் அசையாமல் மூச்சுப் பேச்சில்லாமல் நின்று கொண்டிருந்தேன். அது கப்பலின் வலப்பக்கம் கிட்டத்தட்ட நடுவில் மோதியது. அப்போது கப்பல் ஆடிய ஆட்டம் ஏதோ மிகப் பெரிய எரிமலை ஒன்று வெடித்துக் கடலைக் கிழித்து விட்டதைப் போல் இருந்தது. நாங்கள் கப்பலின் மேல் தளத்திற்குத் தூக்கி எறியப்பட்டோம். காயம்பட்டுத் திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் போது நூறு அடிக்கும் மேல் ஒரு பெரிய அலை பலகைகள் இரும்புச் சாமான்கள் மற்றும் மனித உடல்களைச் சுமந்து சென்றது.

வெடிக்கண்ணி வெடித்து முடித்த பின் ஏற்பட்ட மயான அமைதியும் அதைப் போலவே மிகவும் பயங்கரமானதாக இருந்தது. அது ஏறக்குறைய இரண்டு விநாடிகள் நீடித்திருந்தது. பின் காயம்பட்டவர்களின் முனகல்களும் கூக்குரல்களும் ஆண்களின் சாபக் குரல்களும் கப்பல் அதிகாரிகளின் கட்டளைகளும் மாறி மாறி ஒலிக்க ஆரம்பித்தன. அவர்கள் அற்புதமாய்த் தெரிந்தார்கள். அவர்களும் அவர்களது குழுவினரும். நான் பிறந்த நாட்டை எண்ணி இப்போது பெருமைப் பட்டது போல் வேறெப்போதும் நடக்கவில்லை. கப்பலில் மோதி வெடிக்கண்ணி வெடித்த பின் அவ்வளவு கூச்சல் குழப்பங்களுக்கு நடுவிலும் எந்த அதிகாரியும் குழுவினரும் தங்கள் சுய அறிவை இழக்கவில்லை. யாரும் சிறிதும் பயப்படவோ பீதியடையவோ இல்லை.

நாங்கள் படகுகளை இறக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது கடல் நீரிலிருந்து வெளியே வந்த நீர்மூழ்கிக் கப்பல் எங்களை நோக்கித் துப்பாக்கிகளை நீட்டியது. அங்கிருந்த கப்பல் அதிகாரி எங்கள் கப்பலின் கொடியை இறக்கச் சொன்னார். ஆனால் அவர் மறுத்து விட்டார். அவர்களது கப்பல் எங்கள் கப்பலின் மிக அருகில் நின்று கொண்டிருந்ததால் படகுகளையும் இறக்க முடியாமல் இருந்தது. மேலும் பாதிக்கும் மேல் படகுகளும் வெடியினால் சேதமடைந்து இருந்தன. எஞ்சியிருந்த படகுகளில் முண்டியடித்துப் பயணிகள் ஏறிக் கொண்டிருக்கும் வேளையில் பக்கத்துக் கப்பலில் இருந்து எங்கள் மீது குண்டு போட ஆரம்பித்து விட்டார்கள். ஒரு குண்டு பெண்கள் குழந்தைகள் இருந்த பக்கத்தில் விழுந்ததைப் பார்த்த பின் நான் என் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டேன்.

நான் பீதியோடு அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது என் உணர்ச்சியில் சிறிதே மாறி ஏமாற்றம் பீறிடுவதை உணர்ந்தேன். ஏனெனில் அந்தக் கப்பல் எங்கள் துறையில் இருந்து கட்டப்பட்டது. அதில் அறையப்பட்ட ஒவ்வொரு ஆணியும் எனக்குத் தெரியும். நான்தான் அதன் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை இட்டவன். நான் அதன் இயக்குனர் மனையில் அமர்ந்து இருக்கிறேன். கீழே வியர்வைக்கு நடுவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலையாட்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைச் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன். வெயில் காயும் கோடை காலத்தில் பசிபிக் கடலின் நீரை அது முதன் முதலாய் கிழித்துப் பாயும் போது அதனுடன் பயணம் செய்திருக்கிறேன். என் உடல் மற்றும் மூளையின் உழைப்பில் உருவான இந்தக் கப்பல் இன்று என் முன்னால் ஒரு அசுரனாகி நிற்கிறது என்னையே கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்.

மேல் தளத்தில் இன்னொரு குண்டு வெடித்தது. அதிகமான ஆட்களை ஏற்றியிருந்த ஒரு படகு அபாயகரமான கோணத்தில் திரும்பியது. அதில் இருந்த பெண்களும் குழந்தைகளும் வாந்தி எடுத்தனர். இறுதியாக ஒரு முறை இங்கும் அங்கும் ஆடி விட்டு ஏற்கெனவே கடல் நீரில் தத்தளித்துக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது தொம்மென்று விழுந்தது.

சில ஆண்கள் கடலுக்குள் குதித்தார்கள். கப்பலே இப்பொழுது வேறொரு கோணத்தில் திரும்ப ஆரம்பித்தது. நாப்ஸ் தன் நான்கு கால்களையும் ஒன்றோடு சேர்த்து தான் வழுக்கி உள்ளே விழுந்து விடாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. என்னை ஒரு கேள்வி கேட்பது போல் முனகிக் கொண்டே பார்த்தது. நான் குனிந்து அதன் தலையை தடவிக் கொடுத்தேன்.

இங்கே வா என்று கத்தி கொண்டே நான் பக்கவாட்டில் ஓடி தலை கீழாகக் குதித்தேன். நான் மேலே வந்து பார்த்த போது நாப்ஸ் சிறிது தூரத்தில் வித்தியாசமாக நீச்சலடித்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் அதன் காதுகள் சிறிது மடங்கின. வாய் சிறிது கோணி மெல்லியதாய் முனகியது.

அந்தக் கப்பல் தன் கடமையை முடித்தது போல வடக்கு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. படகுகளை நோக்கி அது குண்டுகளை வீசிக் கொண்டிருந்த போது மூன்று படகுகளில் நிறைய பேர் அமர்ந்து இருந்தனர். ஆனால் அவைகளைக் குறி வைப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும். மேலும் ஜெர்மனிய படையில் குறி வைப்பவர்களின் திறமை இன்மையாலும் அந்தப் படகுகளில் இருந்தவர்கள் ஒருவாறு தப்பிக்க முடிந்தது. சற்று நேரத்தில் மிகப் பெரும் கரிய புகையைக் கிழக்கு அந்தி வானத்தில் உமிழ்ந்துவிட்டு அந்தக் கப்பல் கடலுக்கு அடியில் மூழ்கிச் சென்று விட்டது. இவ்வளவு நேரமும் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலை விட்டு சிறிய உயிர் காக்கும் படகுகள் எல்லாம் விசிறி அடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நான் உயிரை விட்டுக் கத்திக் கொண்டிருந்த போதும் ஒன்று அவர்களுக்கு காது கேட்டிருக்காது இல்லை அவ்வளவு கஷ்டப்பட்டு வந்து என்னைக் காப்பாற்ற வேண்டுமா என்று யோசித்திருக்கக் கூடும். அது ஒரு முறை புரண்டு முழுவதும் மூழ்கும் வேளை நானும் நாப்சும் சிறிது விலகிச் சென்றோம். நாங்கள் கொஞ்சம் உள்ளே இழுக்கப்பட்டு அதே அளவு தள்ளி விடப்பட்டோம். நல்ல வேளையாக அதற்கடியில் எங்களை இழுத்து விடவில்லை. பற்றிக் கொள்ள எதாவது கிடைக்குமா என்று என் கண்கள் அவசரமாகச் சுற்றிலும் துலாவின. நான் அந்தக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே நீருக்குள் மழுங்கடிக்கப்பட்ட வெடிப்பின் சத்தம் கூட பலமாகக் கேட்டது. அந்த இடத்தில் தண்ணீர் அவ்வளவு சூடாகியது. பின் கடலின் பேற்பரப்பில் இருந்து மனித உடல்கள் உடைந்த படகுகள் நீராவி கரி எண்ணெய் கப்பலின் ஒரு தளம் என்று அனைத்தும் மேலெழும்பின. மிகப் பெரிய நீர்த் தூண் போன்ற அந்த இடம் ஒரு தற்காலிக மயானம் போல் ஆகி விட்டது.

ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடல் சற்றுத் தணிந்த பின் உடைந்த பொருட்களையும் சடலங்களையும் தூக்கி எறிவது நின்ற பின் நான் எனது உடலையும் நாப்ஸின் உடலையும் தாங்குவதற்கு ஏற்றவாறு எதாவது கனமான பொருள் கிடைக்குமா என்று நீந்தித் தேட ஆரம்பித்தேன். நான் இடிபாடுகளுக்குப் பக்கத்தில் வந்த பொது திடீரன்று எனக்கு ஒரு பனிரெண்டு அடிக்கு முன்னால் ஒரு படகு எங்கிருந்தோ வந்து தொம்மென்று விழுந்து நீரை வாரி இறைத்தது. அதை ரொம்ப தூரம் கப்பல் இழுத்து சென்றிருக்க வேண்டும். அதனுடன் கட்டப்பட்டிருந்த ஒரே ஒரு கயிறும் கடல் நீரின் பலத்தால் ஒரு வழியாக அறுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் இவ்வளவு தூரம் எழும்பிப் பறந்து வந்திருக்காது. எதுவாக இருந்தாலும் அந்த நல்ல சூழ்நிலைக்கு நான் மிக்க நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இவ்வளவு களேபரங்கள் நடந்தாலும் அந்தச் சூழ்நிலையை நான் ஏன் நல்லதென்று சொல்கிறேன் என்றால், நான் செய்த அந்த நீர் மூழ்கிக் கப்பலை என்னால் காண முடிந்ததே. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் வேறெப்போதும் நான் அதனைக் கண்டிருக்க முடியாது. அந்த ஒரு சந்தோஷமாவது கிடைத்ததே.

கடல் கன்னி

ஆயிரமாவது முறையாக நான் என் விதிக்கு நன்றி சொல்லிக் கொண்டேன் அந்தப் படகை என் முன்னால் வீசியதற்காக. கண் முன்னால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பின் மேலே வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு அதனுள் இருந்த நீரை எல்லாம் துடைத்து விட்டு அழகாக என் முன்னே மிதக்க விட்டதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். உடனே அவசரமாக நான் அதில் ஏறிக் கொண்டு நாப்ஸை தூக்கிக் கொண்டேன். வெறிச்சோடிக் கிடந்த பிணங்கள் சூழ்ந்த அந்தக் கடல் பரப்பைப் பார்த்தேன். கப்பலின் இடிபாடுகளுக்கு நடுவில் பெண்களும் குழந்தைகளும் அலங்கோலமாகக் கிடந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த பாதுகாப்பு வார்கள் சில கிழிந்திருந்தன. சில அவர்களுக்கருகில் கடல் நீரில் மிதந்து ஆடிக் கொண்டிருந்தன. சிலரது முகங்கள் மிகவும் அமைதியாக இருந்தன. பலரது முகங்கள் பேயறைந்தது போல் இருந்தன. என் படகின் மிக அருகில் ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. அவளது முகம் மேல் நோக்கி இருந்தது. கரிய கூந்தலின் மீது படுத்துக் கிடந்தது போல் இருந்தது. அவள் மிக அழகாய் இருந்தாள். அதைப் போல் ஒரு அழகான வடிவங்களை நான் கண்டிருக்கவில்லை. தேவ கன்னியைப் போல், ஆனால் முற்றிலும் மனிதனாய். அவள் முகத்தில் முழுப் பெண்மையும் குடி கொண்டிருந்தது. அன்பை பாசத்தைப் பரிமாறிக் கொள்வதற்காகவே படைக்கப்பட்டது போல். அவள் கன்னங்கள் உயிர்த் துடிப்போடு இருந்தன. ஆனால் அவளிடம்தான் உயர் இல்லை. துக்கம் தொண்டையை அடைப்பது போல் இருந்தது. இவள் மரணத்திற்குப் பழி வாங்க வேண்டும் என்று மனதில் சபதம் இட்டுக் கொண்டேன்.

நான் திரும்பவும் கடல் பரப்பின் மீது என் பார்வை பதித்த போது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இறந்து கிடந்த அந்த பெண்ணின் கண்கள் திறந்தன. சிறு முனகலோடு உதவிக்கழைப்பது போல் ஒரு கையைத் தூக்கினாள். அவளுக்கு உயிர் இருக்கிறது. அவள் இறந்திருக்கவில்லை. நான் உடனே அவள் கையைப் பற்றிப் படகினுள் தூக்கிப் போட்டேன். அவளது பாதுகாப்பு வாரைக் கழற்றி எனது மேலங்கியை எடுத்து அவளுக்குத் தலையணை செய்து அதன் மேல் அவளைக் கிடத்தினேன். அவள் கைகளையும் கால்களையும் நன்றாகச் சூடு பறக்கத் தேய்த்து விட்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் ஒரு பெருமூச்சு விட்டாள். அதன் பின் அவளது கரிய பெரிய கண்கள் என் கண்களை ஊடுருவிப் பார்த்தன.

எனக்கு மிகவும் தர்ம சங்கடமாகி விட்டது. நான் பெண்களிடம் அவ்வளவாகப் பழகியதில்லை. பயங்கரக் கூச்ச சுபாவம். லேலண்ட் ஸ்டான்போர்டில் படித்துக் கொண்டிருக்கும் போது கூடப் பிள்ளைகளிடம் பேச நான் தயங்குவது கண்டு என்னை அனைவரும் கிண்டல் செய்வார்கள். ஆனால் பசங்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அவள் கையை நான் தேய்த்துக் கொண்டிருக்கும் போது அவள் கண் விழித்தாள். உடனே அவள் கையை உதறி விட்டேன் நெருப்பைத் தொட்டது போல். மெதுவாக மேலிருந்து கீழ் வரை என்னையே பார்த்தாள். பின் அடிவானத்தைப் பார்த்தாள். நாப்ஸைக் கண்டு புன்முறுவல் பூத்தபின் திரும்பப் பலவிதமான கேள்விகளோடு என்னைப் பார்த்தாள்.

“நான். நான்…” என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். அவளிடமிருந்து சிறிது விலகிப் படகின் தள்ளாட்டத்தால் தடுமாறி விழப் பார்த்தேன். அவள் உடனே “அய் அய் சார்” என்று மெலிதாகக் கூறினாள். அவளது உதடுகள் சோம்பின. “உன் உடம்பு சரியாகி விட்டதென்று நினைக்கிறேன்” என்று இறுதியாக நான் சொன்னேன்.

“உங்களுக்கு ஒன்று தெரியுமா” என்று ஒரு சிறிய இடைவெளிக்கு பின் சொல்ல ஆரம்பித்தாள். “நான் ரொம்ப நேரமாக விழித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கண்களைத் திறப்பதற்கு பயமாக இருந்தது. நான் இறந்து விட்டேன் என்று நினைத்து பயந்து கொண்டே இருந்தேன். நான் சாவதற்குப் பயந்தவள். கப்பல் மூழ்கிய பின் என்னவாயிற்று” என்று கேட்டாள். அதற்கு முன் என்ன நடந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மறக்கவே நான் விரும்புகிறேன்.” என்று சொல்லி அழ ஆரம்பித்தாள். “மிருகங்கள்” என்று சபித்தாள். “ஜெர்மன் கப்பல் படையில் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதை நினைத்தால்…” என்று தேம்பினாள்

அவள் நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள். “நான் கீழே மேலும் கீழே சென்று கொண்டே இருந்தேன். இது எப்போது முடியுமோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். திடீரென்று வேகமாக நான் மேலே இழுக்கப்பட்டேன். எனது நுரையீரல் வெடித்து விடும் போல் இருந்தது. எனது நினைவு அப்போது தப்பி விட்டதென்று நினைக்கிறேன். நான் கண் விழித்துப் பார்த்த போது என்னைச் சுற்றி இருந்தவர்கள் ஜெர்மன் நாட்டையும் ஜெர்மானியர்களையும் வார்த்தையால் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தனர். தயவு செய்து சொல்லுங்கள், அதன் பின் என்ன நடந்தது.”

பின் நான் அவளுக்கு என்ன நடந்ததென்று என்னால் முடிந்தளவு சொல்ல ஆரம்பித்தேன். ஜெர்மன் கப்பல் நமது படகுகளின் மீது குண்டு போட ஆரம்பித்ததில் இருந்து அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன். இவ்வளவு சிறிய இடத்திலாவது நமக்கு இடம் கிடைத்ததே அதிசயம் என்றாள். அப்போது என் நாக்கு நுனி வரை வந்து விட்ட வார்த்தையைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். அவ்வளவு தைர்யம் இல்லை என்னிடம். நாப்ஸ் வந்து அவளது மடியில் தன் மூக்கை வைத்து முட்டியது. அவள் குனிந்து தன் முகத்தை அதன் முகத்தோடு ஒற்றினாள். எனக்கு நாப்ஸை ரொம்பப் பிடிக்கும். இந்த நேரத்தில் நான் நாப்ஸ் ஆக இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கினேன். நாப்ஸ் அதை எப்படி எடுத்துக் கொண்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் என்னைப் போலவே அதற்கும் பெண்களிடம் பழக்கம் இல்லை. ஆனாலும் அதன் செயல்பாடுகள் அது மகிழ்ச்சியாக இருப்பது போல்தான் தெரிந்தது. அந்த விஷயத்தில் என் குறைபாட்டை அது நிவர்த்தி செய்வது போல் இருந்தது. இன்னும் வேண்டும் என்பது போல் அது அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. எனக்குள் பொறாமை தீயாய் எரிந்து கொண்டிருந்தது.

“உனக்கு நாய் என்றால் பிடிக்குமோ?” என்றேன்.

“இந்த நாயை எனக்கு மிகவும் பிடித்து விட்டது” என்றாள்.

அவள் என்ன நினைத்துச் சொன்னாள் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு மிகவும் குதூகலமாக இருந்தது.

அவ்வளவு விரிந்து பரந்த கடல் பரப்பின் மேல் தன்னந்தனியாக நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததால் நாங்கள் மனம் விட்டுப் பேசி மிகவும் நெருக்கமாகி இருந்தோம். எதாவது புகை எங்கிருந்தாவது கிளம்பும் என்று அடிக்கடி அடிவானத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தோம். ஆனால் சிறிது நேரத்தில் இருள் கவிழ்ந்தது. நீர் மேல் இருப்பதே தெரியாத வண்ணம் அனைத்தும் கன்னங்கரேலென்று ஆகி விட்டது.

எங்களுக்குத் தாகமெடுத்தது. பசியெடுத்தது. குளிர் வாட்டியது. நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது. எங்களது ஆடை காய்ந்து விட்டிருந்தது. ஆனால் அந்தப் பெண்ணும் மிகவும் துன்பப்பட்டிருப்பாள் இரவு முழுவதும் வசதிகள் ஏதுமில்லாத படகில் அரைகுறை ஆடைகளுடன் சாப்பாடே இல்லாமல். நான் படகில் இருந்த அத்துணை நீரையும் கைகளாலேயே அள்ளி வெளியேற்றி விட்டேன். மீதமிருந்ததைக் கைக்குட்டையால் ஒற்றி எடுத்துக் கடலில் பிழிந்து விட்டேன். மிகவும் மெதுவான முதுகை ஒடிக்கும் செயல் முறை. அதனால்தான் குறைந்த பட்சம் அந்தப் பெண்ணால் படகின் தாழ்வான பகுதியில் இருக்க முடிந்தது. கடல் காற்றிலிருந்து படகின் விளிம்புகள் கொஞ்சமாவது அவளைக் காப்பாற்றும் என்று நினைத்தேன். எனது ஈரமான கோட்டை அவள் மீது போர்த்தினேன். குளிரில் இருந்து காப்பாற்ற. ஆனாலும் அது பலனளிக்கவில்லை. நிலா வெளிச்சத்தில் அவளது இளம் உடல் நடுங்குவது தெரிந்தது.

“ஏதாவது நான் உதவி செய்ய வேண்டுமா?” என்று நான் கேட்டேன். “இந்தக் குளிரில் இப்படியே உட்கார்ந்து இருக்க முடியுமா? எதாவது சொல்லேன்” என்று கேட்டேன்.

அவள் இட வலமாகத் தலையசைத்தாள். “நாம் கொஞ்சம் பொருமலோடு எல்லாவற்றையும் பொறுத்துதான் ஆக வேண்டும்” என்று சிறிது நேரம் கழித்துச் சொன்னாள்.

நாப்லர் எனதருகில் வந்து அமர்ந்தது. எனது காலின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டது. ஒரு முட்டாள் போல் நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாளை காலைக்குள் அவள் இறந்து விடுவாள் என்று என் மனம் பதைத்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு பெண்ணையும் அவ்வளவு எளிதில் கொன்றிருக்கக் கூடிய அதிர்ச்சியையும் கொடும் பருவ நிலைகளையும் அனுபவித்த அந்தப் பெண் இவ்வளவு தூரம் தாங்கியதே அதிகம் என்று தோன்றியது. சிறிய மென்மையான ஆதரவற்ற அவளை நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது மெதுவாக என் மனதில் ஒரு எண்ணம் முளை விட்டது. இதுவரை அந்த எண்ணம் அங்கே தோன்றவில்லை. இனிமேல் அது அணையாது. அவளது நாளங்களில் குளிர்ந்து கொண்டிருக்கும் குருதியை எப்பாடு பட்டாவது சூடேற்ற வேண்டும் என்ற முனைப்பு என்னுள் வெறி ஏற்றியது. என் உடலே குளிர்ச்சியாகத்தான் இருந்தது. நாப்லர் என் கால்களில் வந்து அமர்வதற்கு முன் எனக்கும் கூட அது தெரிந்திருக்கவில்லை. திடீரென்று அது என் உடலில் பட்ட இடம் சிறிது வெது வெதுப்பான பின் தான் எனக்கே தெரிந்தது. ஒரு பேரொளியைப் போல் ஒரு பெண்ணின் உடலை எப்படிச் சூடாக்க வேண்டும் என்ற அறிவு தோன்றியது. உடனே நான் அவளருகில் குனிந்து கொண்டிருக்கும் போது எனக்கே சிறிது அவமானமாகத் தோன்றியது. நானே சொன்னாலும் அவள் அதை ஏற்றுக் கொள்வாளா என்று சந்தேகம் கிளம்பியது. அப்படி நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவள் தேகம் நடுங்கியது. வலிப்பு வந்தது போல் அவள் உடல் இழுத்துக் கொண்டது. வேகமாகக் குளிர்ந்து கொண்டிருக்கும் அவள் உடலைக் கண்டு பயந்த நான் உடனே அவள் அருகில் படுத்துக் கொண்டு அணைக்க ஆரம்பித்தேன்.

அவள் உடனே சற்று விலகி பயத்தில் மெலிதாக அழுதாள். பின் என்னைத் தள்ளி விட முயன்றாள்.

“என்னை மன்னித்து விடு” என்று எப்படியோ உளறி விட்டேன். “இதுதான் ஒரே வழி. இல்லையென்றால் குளிரில் நீ இறந்து விடுவாய். நாப்ஸ் இல்லையென்றால் நான் இந்த இருவர் மட்டுமே இப்பொழுது உனக்குக் கதகதப்பைக் கொடுக்க முடியும்.” நான் நாப்ஸைக் கூப்பிட்டு அவள் பின் புறம் அமர்ந்து கொள்ளச் செய்தேன். நான் அவளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டேன். என்னைப் புரிந்த பின் அவள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இரண்டு மூன்று முறை திணறிய அவள் மெல்ல அழ ஆரம்பித்தாள். என் கைகளில் முகத்தைப் புதைத்து கொண்டு அப்படியே உறங்கி விட்டாள்.

– தொடரும்…

தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *