கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 21,396 
 
 

அத்தியாயம்:௧ | அத்தியாயம்:௨ | அத்தியாயம்:௩

உதவி

பொழுது புலர்ந்த நிலையில் நான் உறங்கியிருக்க வேண்டும். இப்படியே எத்துணை நாட்கள் இருந்தேன் என்றே தெரியவில்லை. அவை மணிக்கணக்காக இருக்கும் என்று தோன்றவில்லை. இறுதியில் என் கண்களை விழித்துப் பார்க்கும் போது பகல் வெளிச்சம் முகத்தில் அறைந்தது. அவள் கூந்தல் என் முகத்தை மறைத்திருந்தது. அவள் மூச்சு இயல்பாய் இருந்தது. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். அவள் முகத்தைச் சிறிது திருப்பி இருந்திருக்க வேண்டும் இரவில். இப்போது என் முகத்துக்கருகில்தான் அவள் முகம் இருந்தது. அவள் உதடுகளும் என் உதடுகளை தொட்டுக் கொண்டிருந்தன.

நாப்ஸ்தான் கடைசியில் அவளை எழுப்பி விட்டது. அது எழுந்து தன் உடலை முன்னும் பின்னும் நீட்டி சோம்பல் முறித்தது. பின் அப்படியே படுத்துக் கொண்டது. அந்தப் பெண் கண் திறந்து என்னைப் பார்த்தாள். முதலில் கண்கள் அகல விரிந்தாலும் நடந்ததைப் புரிந்தவளாய் என்னைப் பார்த்து முறுவலித்தாள்.

“நீ ரொம்ப நல்லவன்” என்று என்னைப் பார்த்துச் சொன்னாள். நான் அவள் கையைப் பிடித்துத் தூக்கி விட்டேன். அவளை விட எனக்குத்தான் உதவி அதிகம் தேவைப் பட்டது. எனக்கு இடது புறமே செயல் இழந்தது போல் இருந்தது. அந்த ஒரு வாக்கியம் தவிர அவள் எதுவும் பேசவில்லை. அவள் நன்றியுணர்ச்சியோடு இருக்கிறாள் என்று மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அந்தத் தர்ம சங்கடமான சூழல்தான் அவளை மேலும் பேச விடாமல் தடுத்திருக்க வேண்டும்.

பொழுது விடிந்த கொஞ்ச நேரத்திலேயே ஒரு புகைப் படலம் எங்களை நோக்கி வருவதைக் கண்டோம். அது ஒரு இழுவைப் படகு என்பதைக் கொஞ்சம் அருகில் வந்தவுடன் உணர்ந்து கொண்டேன். கடலைத் தன் பிடியில் வைத்திருந்த இங்கிலாந்துக் கடற்படையின் ஒரு அங்கம் அந்தப் படகு. ஆங்கில பிரான்ஸ் துறை முகங்களில் அனைத்துக் கப்பல்களையும் இழுத்து வரப் பயன்படுத்தப் படுவதுதான் இந்த இழுவைப் படகு. நான் ஒரு பலகையில் நின்று கொண்டு எனது ஈரமான மேலங்கியை எடுத்துச் சுழற்றினேன். நாப்ஸ் இன்னொரு பலகையில் ஏறிக் குறைத்தது. அந்தப் பெண் கண்களைக் குறுக்கி அந்தப் படகையே பார்த்துக் கொண்டிருந்தாள். “அவர்கள் நம்மைப் பார்த்து விட்டார்கள்” என்று இறுதியாகச் சொன்னாள். “ஒருவன் உனது சைகைக்கு பதில் சொல்கிறான்” என்றாள். எனக்காக இல்லாவிட்டாலும் அவளுக்காக நான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். இன்னும் ஒரு நாள் அவளால் இதைப் பொறுத்துக் கொண்டு உயிரோடு இருந்திருக்க முடியாது.

அந்தப் படகு எங்கள் படகுக்கு அருகில் வந்தவுடன் ஒருவன் ஒரு கயிறைத் தூக்கிப் போட்டான். அவர்கள் ஒவ்வொருவராக இழுக்க ஆரம்பித்தார்கள். நாப்ஸ் யாருடைய உதவியும் இல்லாமல் சட்டென்று தாவி விட்டது. கரடு முரடாய் அவர்கள் தெரிந்தாலும் அந்தப் பெண்ணிடம் ஒரு தாயைப் போல் கரிசனம் காட்டினார்கள். கேள்விகள் கேட்டு எங்களைத் துளைத்த அவர்கள் என்னைக் கொதி கலன் இருக்கும் அறைக்கும் அவளை மீகாமனின் அறைக்கும் அழைத்துச் சென்றனர்.

அவளது ஈரமான உடையைக் களைந்து விட்டு மீகாமனின் ஒதுக்கிடத்தில் அமர்ந்து கதகதப்பாக்கிக் கொள்ளச் சொன்னார்கள். கொதி கலன் அறையில் இருந்ததால் என் உடையின் ஈரத்தைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை. என்னுடைய உடை வெகு வேகமாகக் காய்ந்து விட்டது. என் உடலின் ஒவ்வொரு நுண் துளைகளும் அந்த அறையின் வெப்பத்தை உள் வாங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் எங்களுக்குச் சூடான சூப் காபி போன்ற பானங்கள் கொடுத்தார்கள். பணியில் இல்லாதவர்கள் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார்கள். கைஸரையும் அவனது சந்ததிகளையும் வறுத்தெடுக்க ஆரம்பித்தார்கள்.

எங்களது உடைகள் காய்ந்த பின் அணியக் கொடுத்தார்கள் திரும்பவும் எதிரிகளால் எந்தப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதற்காக. நேற்று மதியம் அந்த மூன்று ஊதல் சத்தங்களால் சிதறடிக்கப்பட்ட என் நிம்மதி இவ்வளவு நேரமாய் அவள் அனுபவித்த கொடிய துன்பங்கள் எல்லாம் ஒருவாறு நீங்கி அந்தப் பெண்ணுக்குக் கதகதப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்த பின் தான் திரும்பவும் பரவியது.

ஆகஸ்ட் 1914 முதல் அந்தக் கடல் பரப்பில் அமைதி என்பது நிலையற்றதாய் இருந்தது. இன்று காலையே அது மீண்டும் உறுதி ஆயிற்று. நான் உடை மாற்றிக் கொண்ட சிறிது நேரத்தில் மீகாமன் மிக வேகமாகப் படகைச் செலுத்துமாறு ஒரு உத்தரவை கத்திப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொல்லி முடித்த மறு நொடி ஒரு மந்தமான வெடிச் சத்தம் கேட்டது. உடனே நான் படகின் மேல் தளத்தில் ஏறிச் சென்று பார்த்தேன். இருநூறு அடி தூரத்தில் ஒரு நீர் மூழ்கிக் கப்பலைப் பார்த்தேன். அவர்கள் நிறுத்துமாறு சைகை காட்டியதை மீறி நமது மீகாமன் படகைச் செலுத்த உத்தரவிட்டதால் அவர்கள் துப்பாக்கியைத் தூக்கி விட்டார்கள் நம் மீது. அவர்களது இரண்டாவது குண்டு மீகாமனின் அறையை உரசிச் சென்றதால் மீகாமன் பணிந்து போக நினைத்தார். வேகத்தைக் குறைக்குமாறு உத்தரவிட்டார். பின் சுடுவது நிறுத்தப்பட்டது. எங்களைக் கப்பல் நோக்கி வருமாறு உத்தரவிட்டார்கள். எங்கள் படகின் உந்தத்தால் எதிரிக் கப்பலைச் சிறிது தாண்டிச் சென்று விட்டதால் வட்டவடிவில் திரும்பி அதன் அருகில் நிறுத்தினோம். நான் இந்த நடவடிக்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் முழங்கையை யாரோ தொடுவது போல் தோன்றியது. திரும்பிப் பார்த்தால் அந்தப் பெண் நின்று எதோ கேள்வி கேட்பது போல் பார்த்தாள். “அவர்கள் நம்மை அழிக்காமல் விட மாட்டார்கள் போல் தெரிகிறது” என்றாள். நேற்று நமது கப்பலை மூழ்கடித்த அதே கப்பல் போல்தான் தெரிகிறது என்றாள்.

“அதேதான்” என்றேன் நான். “எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். நான்தான் அதை வடிவமைத்தேன். முதன் முதல் சோதனை ஓட்டத்தையும் நான்தான் செய்தேன்”

ஒருவித ஏமாற்றத்துடனும் ஆச்சரியத்துடனும் அவள் என்னிடமிருந்து சிறிது விலகி நின்றாள். “நீ அமெரிக்கன் என்றல்லவா நினைத்தேன். நீ அவர்களில் ஒருவனாய் இருப்பாய் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை” என்றாள்.

“நிச்சயமாக இல்லை” என்றேன். “அமெரிக்கர்கள் ரொம்ப காலமாய் எல்லா நாடுகளுக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அசுரனை அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பதில் நாங்கள் ஓட்டாண்டியாகி இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்”

நாங்கள் பாதி வேகத்தில் நீர்மூழ்கிக் கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தபோது அதன் மேல் தளத்தில் இருந்தவர்களை நன்றாக அடையாளம் காண முடிந்தது. ஒரு மாலுமி என் பக்கத்தில் வந்து குளிர்ந்த கனமான ஒரு பொருளைக் கையில் திணித்தான். நான் அதைப் பார்க்காமலேயே சொல்ல முடிந்தது அது ஒரு துப்பாக்கி என்று. எடுத்துப் பயன்படுத்து என்று மட்டும்தான் அவன் சொன்னான். எங்கள் படகின் முகப்பு நீர் மூழ்கிக் கப்பலை நோக்கி இருந்தது. இயந்திர அறைக்கு வேகமாகச் செல்லுமாறு ஆணை பிறப்பித்ததை என்னால் கேட்க முடிந்தது. துணிச்சலான அந்த மீகாமனின் தைரியமான முடிவு எனக்கு உடனே புரிந்து விட்டது. அந்த 500 டன் எடை கொண்ட கப்பலைத் துப்பாக்கி முனையில் மோத வேண்டும் என்று எடுத்த முடிவு. எனக்குள் பொங்கிய ஆர்வத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஜெர்மன் வீரர்களால் எங்கள் மீகாமனின் முடிவை உடன் புரிந்து கொள்ள முடியவில்லை. கடல் பிரயாணத்தில் அனுபவமில்லாதவர்கள் நடந்து கொள்வது போல் முதலில் அவர்கள் எங்களை நினைத்து விட்டார்கள். வேகத்தைக் குறைக்குமாறு திரும்பவும் கத்தினார்கள். இடது புறம் திரும்புமாறு மீகாமனிடம் கத்தினார்கள்.

நாங்கள் 50 அடி தூரம் அருகில் வந்த பிறகுதான் அவர்களுக்கு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதே உறைத்தது. அவர்களது துப்பாக்கி சுடும் வீரர்கள் சுதாரித்துக் கொண்டு ஒரு குண்டை எங்கள் தலைக்கு மேல் அனுப்பினார்கள். நாப்ஸ் எம்பிக் குதித்து அதைப் பார்த்துக் கோபமாகக் குறைத்தது. “இதோ வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டுக் கப்பலின் மேல் தளத்தில் இருந்த வீரர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தோம். அவர்களில் இரண்டு பேர் விழுந்து விட்டனர். மீதி இருந்தவர்கள் நீர்ப் பரப்பின் மீது குறி வைத்தார்கள். இன்னும் சிலர் எங்கள் படகோட்டி மீது குறி வைத்தார்கள்.

நான் அந்தப் பெண்ணை இயந்திர அறைக்குள் தள்ளினேன். பின் துப்பாக்கியை எடுத்து முதன் முறையாக ஒரு ஜெர்மன் வீரனை நோக்கிச் சுட்டேன். அடுத்த சில வினாடிகளில் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. நான் படகோட்டிக் கொண்டிருப்பவன் சக்கரத்தின் மேல் விழுந்ததைக் கவனித்தேன். அதனால் படகு தன் வழியை விட்டு வேகமாக விலகிச் சென்றது. நம் முயற்சி அனைத்தும் தோல்வி அடைவதாக உணர்ந்தேன். ஜெர்மன் கப்பலுக்குப் பதிலாக நமது படகின் மேல்தான் குண்டடி பட வேண்டும் என்று விதி இருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் எங்கள் மேல் எறிந்த குண்டு பயங்கர சத்தத்துடன் முகப்பில் வெடித்துச் சிதறியது. அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியை என்னால் உணர முடிந்தது.

நான் படகு செலுத்துமிடத்துக்கு வந்து படகோட்டியின் உடலுக்குப் பக்கத்தில் இருந்த சக்கரத்தைப் பிடித்ததை எல்லாம் என்னால் உணர முடிந்தது. எனது ஆற்றல் அனைத்தையும் திரட்டி வலது புறம் திருப்ப முயன்றேன். மீகாமன் இட்ட கட்டளையை முடிக்க வேண்டி. நீர் மூழ்கியின் பக்கத்தை உரசிச் செல்ல மட்டும்தான் என்னால் முடிந்தது. இயந்திர அறையில் யாரோ ரகசியமான உத்தரவிடுவதைக் கேட்க முடிந்தது. படகு அதிர்ந்தது. பின் உடனே வேகமாகத் திரும்ப ஆரம்பித்தது. முதல் முயற்சி தோல்வி அடைந்ததால் அந்தப் பைத்தியக்கார மீகாமன் என்ன செய்ய முயற்சித்தான் என்பதைப் பார்த்தேன்.

நீர் மூழ்கிக் கப்பலின் ஈரமான வழுக்கும் தளத்தில் ஓங்கிக் கத்தியவாறே எங்கள் கப்பலின் மீகாமன் பாய்ந்தார். அவர் பின்னாலேயே அவரது முரட்டு மாலுமிகளும் பின் தொடர்ந்து ஏறினர். நானும் படகோட்டும் அறையில் இருந்து வெளியேறி அவர்களைப் பின் தொடர்ந்தேன். தனியாகக் குளிரில் வாடுவதை விட அது சிறந்ததாகத் தோன்றியது. இயந்திர அறையில் இருந்து பொறியாளர்களும் உலையில் வேலை செய்பவர்களும் ஒவ்வொருவராகச் செங்குருதி சிந்திக் கிடந்த ஈரமான கப்பல் தளத்தில் கைகலப்பில் ஈடுபடுவதற்காக அவர்கள் பின் சென்றோம். என் பின்னால் நாப்ஸ் வந்தது. இந்த முறை அமைதியாக இறுக்கமாக இருந்தது. கப்பலின் உள் இருந்த ஒரு அறையைத் திறந்து ஜெர்மானியர்கள் சண்டையில் ஈடுபட ஓடோடி வந்தார்கள். முதலில் துப்பாக்கிகள் வெடித்தன. இடையிடையே ஆட்கள் திட்டிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்கு இடையில் மீகாமனின் ஆணைகளும் பறந்த வண்ணம் இருந்தன. இப்போது எல்லோரும் நெருக்கமாகக் கலந்து விட்டதால் எங்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த அவகாசம் கிடைக்கவில்லை. அதனால் கைகலப்பில் மட்டுமே ஈடுபட்டுக் கொண்டிருந்தோம், யார், கப்பலைக் கைப்பற்றுவது என்று.

எதிரிகளில் யாரையாவது ஒருவரைக் கடலில் தள்ளி விட வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஒரே நோக்கமாக இருந்தது. விதி வசத்தால் இன்று ஒரு ஜெர்மானியனுடன் நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவன் முகத்தில் ஏற்பட்ட பயங்கரமான உணர்ச்சிகளை என்னால் என்றும் மறக்க முடியாது. குனிந்து கொண்டு ஒரு எருதைப் போல் கத்திக் கொண்டு வேகமாக என் மேல் பாய வந்தான். உடனே பக்கவாட்டில் சென்ற நான் அவனது விரிந்த நிலையில் இருக்கும் கைகளிலும் அகப்படாமல் தப்பினேன். அவன் திரும்பி என் மேல் பாய வந்த போது அவன் கடைவாய் ஓரமாக ஓங்கி ஒரு குத்து விட்டேன். அந்த அடியில் அவன் கப்பலின் ஈரத் தளத்தில் போய் விழுந்தான். அவ்வளவு முரடனாக இருந்ததால் அவன் உடனே சுதாரித்துக் கொண்டான். குடிகாரன் போல் எழுந்த அவன் ஒரு நொடி அந்தரத்தின் விளிம்பில் நின்றது போல் தெரிந்தது. பின் உரக்கக் கத்தி கொண்டே கடலில் வழுக்கி விழுந்தான். அதே நேரத்தில் இரு கைகள் என்னை அலேக்காக பின்னாலிருந்து தூக்கின. நெளிந்தாலும் உதைத்தாலும் அவனைத் திரும்பிப் பார்க்கவோ என்னை அந்த முரட்டுப் பிடியில் இருந்து விடுவிக்கவோ முடியவில்லை. கப்பலின் பக்கவாட்டுத் திசையை மரணத்தை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்றான். அவனைத் தடுப்பவர் யாருமே இல்லை. என் கூட்டாளிகளும் கிட்டத்தட்ட மூன்று எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்தனர். ஒரு நொடி எனக்குள் பயம் வேகமாக பரவத் தொடங்கியது. பின் நான் கண்ட காட்சியால் என் பீதி இன்னும் அதிகமாகியது.

இன்னமும் எங்கள் படகு கப்பலின் பக்கவாட்டிலேயேதான் மோதிக் கொண்டிருந்தது. அதில் மோதி என் உயிர் போகப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்தப் படகின் தளத்தில் தனியாக நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன். படகின் பின் பகுதி அந்தரத்தில் உயர்ந்து கொண்டிருந்தது. முன் புறம் தன் கடைசிப் பயணத்திற்குத் தயாராவது போல் முழுகிக் கொண்டிருந்தது. முழுவதும் அறிந்த நான் நேசிக்கும் அந்தப் பெண்ணின் சாவையும் தடுக்க முடியவில்லையே என்று என் மனம் கலங்கியது.

அவளை விட ஒரு கணம் நான் அதிகமாக உயிர் வாழப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே என்னைத் தூக்கிக் கொண்டிருக்கும் முரடனின் பின்னால் வலியும் கோபமும் கலந்த ஒரு உறுமல் கேட்டது. உடன் அவன் தளத்தின் மீது ஏறி நின்று கையை வீசிய போது நான் விடுவிக்கப்பட்டேன். நான் தொம்மென்று கீழே விழுந்தேன். விழுந்த வேகத்தில் எழுந்து நின்றேன். அப்போது அவன் முகத்தைப் பார்த்தபோது இனி எப்போதும் என்னை மற்றுமில்லாமல் எவரையும் தொந்திரவு செய்ய மாட்டான் என்று புரிந்தது. ஏனெனில் நாப்ஸின் குரூரமான பற்கள் அவன் குரல் வளையில் அழுத்திக் கொண்டிருந்தது. உடனே நான் பக்கவாட்டிற்குச் சென்று மூழ்கிக் கொண்டிருந்த படகின் மேல் நின்று கொண்டிருந்த பெண்ணிற்கு மிக அருகில் சென்று கையை வீசினேன்.

“என் கையைப் பிடி” என்று கத்தினேன். என் கையை நீட்டி அவளைப் பிடிக்க எத்தனித்தேன். என் மேல் நம்பிக்கை உள்ளவளாய் உடனே அவள் படகின் பக்கவாட்டிற்கு வந்து கப்பலின் சாய்வான பகுதியில் தாவினாள். நான் மிகவும் பிரயாசைப்பட்டு அவளுக்குக் கையை நீட்டினேன். அதே நேரத்தில் படகின் பின் பகுதி செங்குத்தாக நின்று முழுவதுமாக கடலில் மூழ்கியது கண் முன்னே. என் கைக்கும் அவளது கைக்கும் ஒரு இன்ச் தொலைவே இருந்திருக்கும். அவளும் கடலுக்குள் விழ ஆரம்பித்தாள். அவள் கடல் நீரைத் தொடுவதற்கு முன்பே நானும் அவள் பின்னாலேயே குதித்து விட்டேன்.

மூழ்கிக் கொண்டிருந்த படகு எங்களை நீர் பரப்பிற்கு வெகு கீழே இழுத்துச் சென்றது. ஆனால் நீர்ப் பரப்பைத் தொட்டவுடன் நான் அவளைப் பிடித்து விட்டேன். அதனால் இருவரும் சேர்ந்தே மூழ்கிக் கொண்டிருந்தோம். பின் சேர்ந்தே மேலே வந்தோம். நாப்ஸ் முழு பலத்துடன் குறைத்ததுதான் எனக்கு முதலில் கேட்டது. என்னைக் காணாமல் தேடிக் கொண்டிருந்ததுதான் காரணம் என்று புரிந்தது. கப்பலின் தளத்தை பார்த்தவுடன் தெரிந்து விட்டது சண்டை முடிந்து நாம்தான் வென்று விட்டோம் என்று. எங்கள் கூட்டம் எதிரிகளைத் துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருக்க உள்ளே இருந்து மற்றவர்களும் சரணடைய ஆரம்பித்து விட்டிருந்தனர்.

நரகமே துணை

நான் கப்பலை நோக்கி அந்தப் பெண்ணுடன் நீந்திக் கொண்டிருக்கும் போது நாப்ஸின் இடைவிடாத குரைச்சலைக் கேட்டு எங்கள் ஆட்கள் சில பேர் எட்டிப் பார்த்துக் கைகளை நீட்டினார்கள். நான் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன் அடி ஏதும் பட்டிருக்கிறதா என்று. இரண்டாவது முறை கடலுக்குள் மூழ்கியது அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்று உறுதி அளித்தாள். அதே போல் அவளுக்கு அந்த அளவுக்கு அதிர்ச்சியாகவும் இல்லை. இந்த மெலிதான மென்மையான பெண்ணுக்குள் ஒரு போர் வீரனின் இதயமும் திடமும் இருக்கின்றன என்பதை எனக்கு உணர்த்தி விட்டாள்.

நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்த பிறகு ஒருவன் தப்பிப் பிழைத்தவர்களைக் கணக்கெடுக்க ஆரம்பித்தான். எங்களில் பத்து பேர்தான் மீதி இருந்தோம் அந்தப் பெண்ணைச் சேர்க்காமல். மீகாமனுடன் சேர்ந்து எட்டுப் பேரைக் காணவில்லை. மொத்தம் எங்களுடன் 19 பேர் இருந்தார்கள். ஜெர்மானியர்கள் 16 பேரில் ஒன்பது பேரைச் சிறைப் பிடித்து விட்டோம் மீகாமனுடன் சேர்த்து. அவன் உதவியாளன் கொல்லப்பட்டு விட்டான்.

“அவ்வளவு மோசமான நாள் இல்லை” என்று கணக்கை முடித்தவுடன் ப்ராட்லி சொன்னான். “மீகாமன் போனது மட்டும்தான் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர் ரொம்ப நல்ல மனுஷன். ரொம்ப.” என்று சொல்லிக் கெண்டே இருந்தான். எங்கள் படகில் பொறியாளனாக இருந்த ஓல்சன் எனக்கும் ப்ராட்லிக்கும் நடுவில் நின்று கொண்டிருந்தான். “ஆமாம். ஒரு நாள் வேலை முடிந்தது போல்தான் இருக்கிறது. நமக்கு இது கிடைத்தது மகிழ்ச்சிதான். ஆனால் இதை வைத்து என்ன செய்ய போகிறோம்” என்றான்.

“இதை நாம் அருகில் இருக்கும் ஆங்கிலத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்வோம்” என்றான் ப்ராட்லி. “பின் கரை திரும்பியபின் VC வாங்கிச் செல்வோம்” என்றான் கண்ணடித்துக் கொண்டே.

“எப்படி ஓட்டப் போகிறீர்கள்” என்று கேட்டான் ஓல்சன். “இங்கிருக்கும் டச் நாட்டுக்காரர்களை நம்ப முடியாது”

ப்ராட்லி தலையைச் சொறிந்தான். “நீ சொல்வது சரிதான்” என்று ஆமோதித்தான். “எனக்கும் நீர் மூழ்கியைப் பற்றி எதுவும் தெரியாது”

“எனக்குத் தெரியும்” என்றேன் நான். “இதன் மீகாமனை விட எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும்” என்றேன்.

இரண்டு பேரும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்ணிடம் சொன்ன அனைத்தையும் நான் அவர்களிடம் திரும்ப விளக்க ஆரம்பித்தேன். ப்ராட்லி ஓல்சன் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே எனக்குத் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வேறு எதாவது ஜெர்மானியர்கள் எங்கும் ஒளிந்து இருக்கிறார்களா கப்பலின் பாகங்கள் ஏதும் உடைந்திருக்கிறதா என்று பார்வை இட்டேன். யாருமில்லை. மேலும் கப்பல் பாகங்கள் எதுவும் சேதமடையவுமில்லை. பின் நான் சிறைப் பட்டவர்களின் கைகளைக் கீழிறக்கலாம் என்று சொல்லி விட்டு ஒருவனை மட்டும் அவர்களைக் கவனித்துக் கொள்ளச் சொன்னேன். சிறை பட்ட மீகாமனைத் தவிர்த்து எல்லோரும் கப்பலை ஆங்கிலத் துறைமுகத்திற்கு இட்டுச் செல்ல ஒத்துழைப்பு தருவதாக கூறினார்கள். ஆங்கிலச் சிறையில் இந்தப் போர் முடியும் வரை சவுகர்யமாக இருந்து கொள்ளலாம் என்று எண்ணி அவர்கள் ஒருவாறு நிம்மதி அடைந்ததால் எளிதாக எங்களுடன் உடன்பட்டார்கள். ஆனால் அந்த மீகாமன் மட்டும் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

அதனால் அவனைச் சிறையில் அடைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் அப்படி எண்ணிக் கொண்டிருக்கும் போது மேல் தளத்தில் இருந்து அந்தப் பெண் இறங்கி வந்தாள். அந்தப் பெண்ணும் அப்போதுதான் முன்னாள் மீகாமனைக் கப்பலில் ஏறியதில் இருந்து முதல் முறையாகப் பார்க்கிறாள். அவள் ஏணியில் இருந்து இறங்க நான் உதவி செய்து கொண்டிருந்தேன். அவளுக்கு உதவி தேவை இல்லாதபோதும் அவள் கைகளை நான் பற்றிக் கொண்டுதான் இருந்தேன். அப்போது அவள் அந்த ஜெர்மானியனை உற்றுப் பார்த்தாள். இருவரும் ஆச்சர்யத்தையும் கோபத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தினார்கள்.

“லிஸ்” என்று அழுதபடியே அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான். அவள் கண்கள் அகலமாக விரிந்தன. பின் கொஞ்சம் கொஞ்சமாக பயம் வந்து ஆக்கிரமித்துக் கொண்டபின் தன் உடம்பைக் குறுக்கி நின்றாள். பின் அவளது மெலிந்த தேகம் ஒரு ராணுவ வீரனைப் போல் விறைப்பானது. முகத்தை உயர்த்தி ஒரு வார்த்தையும் சொல்லாமல் திரும்பி நின்றாள்.

“இழுத்துச் செல்லுங்கள்” என்று நான் ஆணையிட்டேன். “சிறையில் தள்ளி விடுங்கள்” என்றேன்.

அவன் சென்ற பிறகு அந்தப் பெண் என்னைப் பார்த்துச் சொன்னாள் “நான் ஒரு ஜெர்மன் பற்றி உங்களிடம் சொல்லி இருந்தேனே. அது இவன்தான். அவன் பெயர் பரோன் வான் ஸ்சோன்வர்ட்ஸ்.”

நான் என் தலையைக் குனிந்து கொண்டேன். ஒன்றும் சொல்லவில்லை. அவள் அவனை விரும்பி இருக்கிறாள். அடி மனதில் இருந்து அவனைத் தூக்கி எறிந்து விட்டிருப்பாளா என்று தெரியவில்லை. சட்டென்று எனக்கு மிக பயங்கரமாக பொறாமை தலை தூக்கியது. அவனை எந்த அளவு வெறுக்க ஆரம்பித்தேனோ அந்த அளவு மகிழ்ச்சியும் என் உள்ளத்தில் குடி கொண்டு விட்டது.

அவன் மேல் உள்ள வெறுப்பைக் காட்டுவதற்கு எனக்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை. ஏனெனில் சூழிட நோக்கி வழியாகக் கவனித்து கொண்டிருந்த ஒருவன் மிக அருகில் கீழ்வானத்தில் புகை வருவதாகக் கத்தினான். உடனே நான் மேல் தளத்திற்கு ப்ராட்லியுடன் சென்று பார்வை இட்டேன்.

“அவர்கள் ஒத்துழைத்தால் பேசுவோம். இல்லையேல் மூழ்கடிப்போம். என்ன மீகாமன்” என்று சொன்னான்.

“சரிதான் லெப்டினன்ட்” என்றேன். இந்த முறை அவன் சிரித்தான்.

நாங்கள் யூனியன் ஜாக் கொடியைக் கப்பலில் ஏற்றி விட்டுத் தளத்திலேயே இருந்தோம். ப்ராட்லியிடம் கீழிருக்கும் ஒவ்வொரு கூட்டாளிகளும் தங்கள் பணியைச் செய்யச் சொல்லி அனுப்பினேன். ஒவ்வொரு ஜெர்மானியன் தலை மேலும் ஒரு ஆங்கிலேயனைத் துப்பாக்கி வைத்துப் பிடித்திருக்கச் சொன்னேன்.

“பாதி வேகத்தில் செல்லுங்கள்” என்று ஆணை இட்டேன்.

மிக வேகமாக அதன் பக்கத்தில் சென்றோம். அதுவும் ஒரு ஆங்கில வர்த்தகப் படகு என்பது அவர்களின் சிகப்பு நிறக் கொடியில் இருந்தே தெரிந்து விட்டது. நாங்கள் எதிரிக் கப்பலைப் பிடித்து வைத்திருப்பதைக் கேள்விப் பட்டால் மிகவும் பெருமைப் படுவார்கள் என்று நினைக்கும் போதே எனது இதயம் பெருமையில் விம்மியது. அந்த வேளையில்தான் அவர்களும் எங்களைப் பார்த்திருக்க வேண்டும். அவர்கள் சட்டென்று வடக்குப் பக்கமாகத் திரும்பினார்கள். சிறிது நேரத்தில் அந்தப் படகின் புகை போக்கி வழியாகக் கரும் புகை பெரிய அளவில் வெளியேறியது. எதோ ப்ளேக் நோயைக் கண்டது போல் கோணல் மாணலாக வண்டியைத் திருப்பி ஓடி விட்டார்கள். நாங்கள் செல்லும் வழியில் இருந்து சிறிது விலகி அவர்களைப் பின் தொடரச் சொன்னேன். ஆனால் அந்தப் படகு வெகு வேகமாக எங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டது.

மிகவும் கவலையோடு நான் திரும்பவும் பழைய வழியில் செல்வதற்கு ஆணை இட்டேன். திரும்பவும் நாங்கள் மகிழ்ச்சியாக இங்கிலாந்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் கிளம்பி மூன்று மாதங்கள் ஓடி விட்டன. இன்னும் நாங்கள் ஆங்கிலக் கடற்கரையைத் தொடவில்லை. என்றாவது அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையும் குறைந்து கொண்டே வந்தது.

அந்தப் படகு தந்தியடித்து எச்சரிக்கை ஒன்றை அனுப்பி இருக்க வேண்டும். அது சென்ற அரை மணி நேரத்தில் மேலும் புகை கக்கியபடி இருந்தது அடி வானம். இம்முறை வெள்ளை நிறக் கொடியுடன் கப்பல் படையின் கப்பல் ஒன்று வந்தது துப்பாக்கிகளுடன். அது வடக்கு நோக்கியெல்லாம் இம்முறை திரும்பவில்லை. நேராக எங்களை நோக்கி மிக வேகமாக வந்தது. நான் அவர்களுக்குச் சைகை காண்பிக்க எத்தனிக்கும் நேரம் அந்தக் கப்பலின் முன் பக்கமிருந்து தீ மின்னியது. சிறிது நேரத்தில் எங்கள் முன் இருந்த கடல் நீர் வெடிச் சத்தத்துடன் மேல் எழும்பியது.

ப்ராட்லி எனதருகில் வந்து நின்றான். “இன்னும் ஒன்றே ஒன்று இதே போல் வந்தால் நாம் அதற்கு இரையாகி விடுவோம்” என்றான். “நமது யூனியன் ஜாக்கைப் பார்த்த பின்னும் அவர்கள் நம்மை நம்பவில்லை”

இன்னொரு குண்டு எங்களைக் கடந்து சென்றது. அதன் பின் வேறு திசையில் பயணிக்கலாம் என்று உத்தரவிட்டேன். ப்ராட்லியைக் கீழே சென்று கப்பலை மூழ்குமாறு உத்தரவிட்டேன். நாப்ஸை அவனுடன் அனுப்பி விட்டு நான் மேல் கதவை மூடி விட்டுக் கீழிறங்க ஆரம்பித்தேன்.

இவ்வளவு மெதுவாக எப்போதும் இந்தத் தொட்டிகள் நிரம்பி இருக்காது என்று நினைக்கிறேன். எங்கள் தலைக்கு மேலே வெடி வெடித்தது. கப்பல் பலமாக ஆடியதால் நாங்கள் மேல் தளத்திற்கருகில் தூக்கி எறியப்பட்டோம். உடனே கடல் நீர் எந்நேரமும் உள் புகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்படி இல்லாமல் நாங்கள் மேலும் கீழ் நோக்கிப் பயணப் பட்டுக்கொண்டே இருந்தோம். நாற்பதடி தூரம் அழுத்தக் கருவி காட்டிய பின் தான் நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தேன். நான் கிட்டத்தட்ட புன்னகைக்க ஆரம்பித்தேன். கோபுரத்தில் இருந்த ஓல்சனை இறங்கி வந்து விடச் சொன்னேன். ஆங்கில நீர் மூழ்கிக் கப்பல்களில் ஏற்கெனவே அவன் பணி புரிந்திருந்ததால் அவனுக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் பரிச்சயமாக இருந்திருக்கும். ப்ராட்லி என் அருகில் இருந்தான். அவன் என்னைக் கேள்வி கேட்பது போல் பார்த்தான்.

“என்னதான் செய்யப் போகிறோம்?” என்று கேட்டான். “வணிகக் கப்பல் நம்மை விட்டு ஓடி விடும். போர்க் கப்பல் நம்மை அழிக்கும். யாரும் நமது நிறத்தை நம்பப் போவதுமில்லை. நமது நிலைமை என்னவென்று காது கொடுத்துக் கேட்கப் போவதுமில்லை. ஆங்கிலத் துறைமுகம் சுரங்கம் மீன் வலை எதன் பக்கம் சென்றாலும் நமக்கு மோசமான வரவேற்புதான் மிஞ்சப் போகிறது. நம்மால் முடியாது” என்றான்.

“நமது வாசனை போன பிறகு நாம் மீண்டும் முயற்சிப்போம்” என்று சொன்னேன். “நம்மை நம்பும் எதாவது ஒரு கப்பல் நிச்சயம் வரும்”

மீண்டும் முயற்சி செய்தபோது ஒரு பெரிய சரக்குக் கப்பல் எங்கள் மீது கிட்டத்தட்ட மோதி விட்டது. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் ஒரு போர்க் கப்பல் எங்கள் மீது சுட்டது. இரண்டு வணிகக் கப்பல்கள் எங்களை அடையாளம் கண்டு கொண்டு திரும்பி விட்டது. இரண்டு நாட்களாக நாங்கள் யாராவது செவி சாய்க்க மாட்டார்களா என்று அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தோம். நாங்கள் நண்பர்கள்தான் எதிரிகள் அல்ல என்று நிரூபிப்பதற்காக. யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. முதல் போர்க் கப்பல் எங்களைத் தாக்கிய பின் நான் தந்தி அடிக்கச் சொல்லி இருந்தேன். ஆனால் எங்களின் விதி அங்கும் விளையாடி விட்டது. செய்தி அனுப்பும் கருவிகளும் வாங்கும் கருவிகளும் மாயமாய் மறைந்து விட்டன.

“உங்களால் இப்போது ஒரே ஒரு இடத்துக்குத்தான் செல்ல முடியும்.” என்று பழைய ஜெர்மன் மீகாமன் சிறையிலிருந்து செய்தி அனுப்பினான். “அது கீல் என்னும் நகரம். உங்களால் ஆங்கிலத் துறைமுகத்தில் எங்கும் கால் பதிக்க முடியாது. நீங்கள் விரும்பினால் நான் உங்களை அங்கு கூட்டிச் செல்கிறேன். நீங்கள் வந்தால் உங்களை மரியாதையாக நடத்த நான் உத்திரவாதம் தருகிறேன்”

“இன்னொரு இடத்திற்கு நாம் செல்ல முடியும்” என்று நான் பதில் அனுப்பினேன். “ஜெர்மனி செல்லும் முன் நாம் அங்கு செல்வோம். அதன் பெயர் நரகம்”

– தொடரும்…

தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *