கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: February 21, 2023
பார்வையிட்டோர்: 9,124 
 
 

அத்தியாயம்: ௯ | அத்தியாயம்: ௧௦

திருமணம்

ஒரு நாளைக்கு ஒரு முறை நான் அடிவாரத்திற்கு இறங்கி வந்து வேட்டையாடுவேன். அங்கிருக்கும் குளிர்ந்த ஓடையில் வயிறு முட்டத் தண்ணீர் அருந்துவேன். என்னிடம் இருந்த மூன்று குடுவைகளில் இரவு நேரத்தில் குடிப்பதற்காக நீரை எடுத்துச் செல்வேன். கல்லில் இருந்து ஒரு ஈட்டி உருவாக்கினேன். வில் அம்புகளும் உண்டாக்கி வைத்தேன், துப்பாக்கிக் குண்டுகள் தீர்ந்து விடும் என்பதால். எனது உடைகள் நூல் நூலாகப் பிரிந்து விட்டன. நாளை அதனை எறிந்து விட்டுச் சிறுத்தையின் தோலால் செய்யப்பட்ட உறுதியான கதகதப்பான ஆடையை உடுத்திக் கொள்வேன். அதை நான் பதப்படுத்தித் தைத்து வைத்திருக்கிறேன். இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. அதன் முன் குனிந்து உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இங்கு பாதுகாப்பாக இருக்கிறது. எந்தவொரு உயிரினமும் இந்தக் குளிர்ந்த மலை உச்சிக்கு வருவது கிடையாது. பாதுகாப்பாக தனியாக இருக்கிறேன் என்னுடைய கவலைகளுடன். சில நேரம் மகிழ்ச்சியான தருணங்களை எண்ணிக் கொண்டு. ஆனால் சிறிதும் நம்பிக்கை என்பதே இல்லாமல். நம்பிக்கைதான் பலம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் எனக்கு அது சிறிதும் இல்லை.

கிட்டத்தட்ட முடித்து விட்டேன். இதை எல்லாம் மடித்து வைத்து அந்த வெற்றிடக் குடுவையில் அடைத்து விடலாம். பின் அதனை நன்றாக மூடி எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கிக் கடலில் எறிந்து விடலாம். காற்று அவ்வளவாக இல்லை. அலைகளும் குறைவாகவே இருந்தன. கடலில் இருக்கும் பலவித நீரோட்டங்களில் ஒவ்வொரு கம்பத்திற்கும் கண்டத்திற்குமாக இது அடித்துச் செல்லப்பட்டு எதாவது ஒரு மக்கள் வாழும் கரையில் சேர்க்கப்படலாம். விதிக்கு என் மேல் கருணை இருந்தால் இது நடந்தால் தயவு செய்து வாருங்கள் என்னை விடுவிக்க.

முந்திய பத்தியை நான் ஒரு வாரத்திற்கு முன் எழுதினேன். அத்துடன் கேப்ரோனாவில் எனது வாழ்க்கையின் எழுதப்பட்ட அத்தியாயம் முடிந்து விடும் என்றுதான் நினைத்திருந்தேன். அதில் ஒரு புள்ளியை இடுவதற்கு முன் சற்று நிறுத்தி மையைக் கலக்கிக் கொண்டிருந்தேன். அந்த மை பெர்ரி பழங்களைக் கசக்கி நீரிட்டு நானே தயாரித்திருந்தேன். அதன் பின் கையொப்பம் இடலாம் என்று எண்ணி இருந்தேன். அப்போது வெகு தொலைவில் மலையின் கீழிருக்கும் பள்ளத்தாக்கில் சந்தேகமில்லாமல் ஒரு சத்தம் மெலிதாகக் கேட்டது. அதைக் கேட்டதும் ஆனந்தத்தில் நடுக்கத்துடன் எழுந்து நின்றேன். எனது இருப்பிடத்தில் இருந்து கீழே எட்டிப் பார்த்தேன். அந்தச் சத்தம் என் வாழ்க்கையில் எவ்வளவு அர்த்தம் கொடுத்திருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது ஒரு வெடிச் சத்தம். அந்த நிலப் பரப்பை முழுவதுமாகக் கண்களால் அளந்து கொண்டிருந்தேன். அப்போது நான்கு உருவங்கள் மலை அடிவாரத்தில் தெரிந்தன. ஈயோசீன் காலத்திய மூன்று ஹையநோடான் எனும் ரத்தம் குடிக்கும் கொடூரமான காட்டு நாய்கள் ஒரு மனிதனைச் சுற்றி வளைத்திருந்தன. நான்காவதாக ஒரு மிருகம் கீழே இருந்தது. இறந்திருக்கலாம் அல்லது இறந்து கொண்டிருக்கலாம்.

என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை மேலிருந்து பார்த்ததால். இருந்தாலும் அது லிஸ்ஸாக இருக்குமோ என்றெண்ணி ஒரு இலையைப் போல் நடுங்கினேன். எனது குருட்டு நம்பிக்கை உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. அந்த உருவத்தின் கையில் துப்பாக்கி இருந்தது. அதாவது என் லிஸ் ஆயுதம் ஏந்தி இருந்தாள். சட்டென்று முதலில் ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியும் வடிந்தது. ஏனெனில் அவளின் விதியும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஒரு மிருகத்தை அவள் கொன்றது 100 சதம் அதிர்ஷ்டம்தான். எவ்வளவுதான் கனமாக இருந்தாலும் என் துப்பாக்கி கேஸ்பக்கின் சிறிய மாமிச பட்சிணியைக் கொல்வது கூடக் கடினம்தான். இன்னும் சற்று நேரத்தில் அந்த மூன்று விலங்குகளும் அவள் மேல் பாயும். அவள் பக்கத்தில் வரும்போது பலனில்லாத ஒரு சூட்டினால் எதாவது ஒரு விலங்கைக் கோபப்படுத்த மட்டுமே முடியும். பின் அந்த மூன்று விலங்குகளும் அவளைக் கூறு போட்டு விடும்.

அது லிஸ்ஸாக இருக்கலாம். என் இதயம் அப்படியே நின்றது அதை நினைக்கும்போது. ஆனால் மனதும் உடலும் உடனடியாக நான் எடுத்தாகவேண்டிய முடிவைச் செயல்படுத்தக் களத்தில் இறங்கின. ஒரே ஒரு சிறு நம்பிக்கை மட்டுமே இருந்தது. ஒரே ஒரு வாய்ப்பு. அதை நான் எடுத்தேன். எனது சுழல் துப்பாக்கியைத் தோளில் மாட்டினேன். கவனமாகக் குறி பார்த்தேன். நீண்ட தூரச் சுடல்தான். ஒரு ஆபத்தான சுடல். அதில் அனுபவம் இல்லை என்றால் நீண்ட தூரச் சுடல் என்பது ஒரு ஏமாற்று வேலையாகி விடும். எனது குறிவல்லமையில் எதோ ஒன்று இருக்கிறது. அதை எந்தவித அறிவியிலாலும் விவரிக்க இயலாது.

வேறெந்தக் கோட்பாடுகளாலும் விவரிக்க இயலவில்லை அப்போது என் குறிவல்லமையை. மூன்று முறை என் துப்பாக்கி பேசியது. மூன்று சிறிய வேகமான மரண அசைகள். முற்றிலும் முழுதான தன் உணர்வோடு நான் சுடவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு சூட்டிலும் ஒரு மிருகம் கீழே விழுந்தது.

என்னுடைய குகையில் இருந்து கீழே செல்ல ஆயிரம் அடிகளுக்கு மேல் ஆபத்தான பயணம் செய்ய வேண்டும். முதல் மனிதக் குரங்கு அதன் இடையில் இருந்து உருவாகிய என் வம்சம் அதனை விட வேகமாக இறங்கினேன். கரடுமுரடான செங்குத்தான சரிவில் கிட்டத்தட்ட நான் விழுந்தேன். கடைசி இருநூறு அடிகள் சின்னச் சின்னக் கற்களால் ஆன செங்குத்தான மலை. அதை அடைந்து கொண்டிருக்கும் அந்த வேளை எனக்கு ஒரு அபயக் குரல் கேட்டது. “போவென், போவென், சீக்கிரம் என் காதலே, சீக்கிரம்”

கீழிறங்குவதில் இருக்கும் ஆபத்துகளில் எனது முழு கவனமும் இருந்ததால் தலைகுனிந்து கீழே பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த அழுகைச் சத்தம் நிச்சயமாக அது லிஸ்தான் என்று உறுதி செய்தது. அவள் இன்னும் அபாயத்தில் இருக்கிறாள் என்பதால் சட்டென்று அவளைப் பார்த்தேன். நிறைய முடிகள் கொண்ட பருத்த ஒரு முரட்டு மிருகம் அவளை இழுத்துக் கொண்டு காட்டுக்குள் நுழைந்தது. ஒரு ஆடு போல் ஒவ்வொரு பாறையிலும் தாவித் தாவிக் காட்டுக்குள் லிஸ்ஸைத் தேடிச் சென்றேன்.

அது என்னை விட மிகவும் பெரிதாக இருந்தது. அது தூக்கிச் சென்ற கனத்தில் இழுக்கப்பட்டதால் நான் அதைச் சுலபமாக எட்டிப் பிடிக்க முடிந்தது. ஒரு வழியாக உறுமியபடியே அது என்னைத் திரும்பிப் பார்த்தது. அது திசாவின் இனத்தைச் சேர்ந்த கோ, ஒரு கோடரி மனிதன். அவன் என்னை அடையாளம் தெரிந்து கொண்டான். லிஸ்ஸை எறிந்து விட்டு என்னிடம் வந்தான். “அவள் எனக்குச் சொந்தம்.” என்று கத்தினான். “நான் கொல்வேன். நான் கொல்வேன்” என்று கத்தினான்.

நான் மேலிருந்து கீழே விழும்போது எனது துப்பாக்கியை விட்டுவிட்டு வந்தேன். இப்போது என்னிடம் வேட்டையாடும் ஒரு கத்தி மட்டுமே இருந்தது. அதை உறையில் இருந்து உருவினேன் அவன் என் முன் பாயும்போது. அவன் பெரிய மிருகம் போலிருந்தான். பூமியில் முதல் உயிரினம் தோன்றிய காலத்தில் இருந்தே ஆண்களைச் சண்டை போட வைக்கும் உந்து சக்தி அவனின் குருதி முழுவதும் பரவியது ரத்தம் குடிக்க உயிரைக் கொல்ல. அதே உந்து சக்திதான் எனது குருதியிலும் கலந்திருந்தது. நிகழ் கால மனிதனும் பழங்கால மனிதன் போன்ற ஒன்றும் காலத்தின் தொடக்கத்தில் இருந்து வழி வழியாக மாறாமல் கொண்டு வரப்பட்ட முடிவில்லாத ஒரு முடிவு வரை நீளும் சாவே இல்லாத அதே முனைப்புடன் இரண்டு மிருகங்கள் உலகின் மிகப் பழமையான மலைச் சாரலில் அடுத்தவன் கழுத்தைக் குதறிடத் தயாராய் இருந்தன, அந்தப் பெண், உயிரின் அழிவில்லாத அ ஆ போன்ற அந்தப் பெண்ணுக்காக.

கோ என் பக்கத்தில் வந்து என் தொண்டையை அவன் நீண்ட பற்களால் பதம் பார்க்க வந்தான். காட்டு ஆட்டுத் தோலில் செய்யப்பட்ட அவன் இடையில் இருந்த உறையில் அவன் வைத்திருந்த கோடரியை மறந்து விட்டிருந்தான் கோ. நானும் என் கையில் இருந்த கத்தியையும் மறந்திருந்தேன். இது போன்ற ஒரு சண்டையில் கோ நிச்சயம் என்னை வென்று விடுவான் என்று நானும் ஒத்துக் கொள்கிறேன், லிஸ் எனக்குச் சட்டென நினைவு படுத்தாமல் இருந்திருந்தால். அவள் கூச்சல் ஒரு கணம் மரத்துப் போயிருந்த என் மூளையை உலுக்கித் தர்க்க அறிவுள்ள ஒரு மனிதனின் தந்திரத்தையும் திறமையையும் வெளிக் கொணர்ந்தது.

“போவென்” என்று கத்தினாள். “உன் கத்தி உன் கத்தி”

அது போதும். மறந்து போயிருந்த ஒரு யுகத்திற்குச் சென்ற என் மூளைக்குச் சட்டென நினைவு திரும்பி மீண்டும் ஒரு தற்கால மனிதனாகி விகாரமான பயிற்சி இல்லாத ஒரு மிருகத்திடம் சண்டையிட வைத்தது. நான் அவனது முடி நிறைந்த தொண்டையைக் கடித்தேன். பின் சட்டென எனது கத்தி அவனது இதயத்திற்கு அருகில் இருந்த இரண்டு விலா எலும்புகளுக்கு நடுவில் பாய்ந்தது. கோ ஒரே ஒரு முறை பயங்கரமாக அலறினான். பிறகு வலிப்பு வந்தது போல் விறைத்துக் கீழே விழுந்தான். உடன் லிஸ் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். கடந்த காலத்தின் சோகங்களும் பயங்களும் துடைக்கப்பட்டு விட்டன. திரும்பவும் நான் மகிழ்ச்சியான மனிதனாகி விட்டேன்.

நான் மேலே இருந்த எனது குகையின் முன் இருந்த நிலையற்ற வழியின் மேல் கண் பதித்தேன். அந்தப் பயங்கரமான பாதையில் ஏறுவதற்கு லிஸ் போன்ற ஒரு மெலிந்த பெண்ணால் முடியுமா என்று யோசனை செய்தபடி இருந்தேன். அவளிடம் கேட்டேன் உன்னால் இந்த மலையில் ஏற முடியுமா என்று. அதற்கு அவள் சிரித்து விட்டாள்.

“கவனி” என்று கத்திக் கொண்டே மலை அடிவாரத்தை நோக்கிச் சென்றாள். ஒரு அணில் போல் வேகமாக மேலே ஏறத் தொடங்கினாள். அவள் பின்னால் அவளுக்கு ஈடு கொடுத்து ஓட வேண்டியதாகி விட்டது. முதலில் என்னைப் பயமுறுத்தி விட்டாள். பின் என்னைப் போல் அவளும் இங்கே பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தி விட்டாள். இறுதியில் எனது குகைக்கு வந்தவுடன் திரும்பவும் அவளது கரங்களைப் பற்றி கொண்டேன். அதன் பின் அவள் பல வாரங்களாக அந்தக் கோடரி மனிதர்களுடன் குகையில் வாழ்ந்ததைப் பற்றி எண்ண ஆரம்பித்தாள். இன்னொரு மனித இனம் அங்கே வந்து பலரைக் கொன்று பாதிப் பெண்களைக் கவர்ந்து வேறொரு இடத்துக்குச் சென்றது. அந்த மலை இன்னும் செங்குத்தாக இருந்ததால் வேறு வழியில்லாமல் தான் மலையேற்றம் கற்றுக் கொள்ள வேண்டியதாய்ப் போய் விட்டது என்று சொன்னாள்.

அவனுடைய அத்தனை பெண்களும் களவாடப் பட்டதால் கோவின் விருப்பத்தை என்னிடம் சொன்னாள். அவளது வாழ்க்கை தினந்தோறும் அந்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க எப்படி நரகமாய்க் கழிந்தது என்று சொன்னாள். கொஞ்ச காலம் நாப்ஸ்தான் தனக்குத் துணை இருந்ததாகத் தெரிவித்தாள். ஒரு நாள் அதுவும் காணவில்லை. அதன் பின் எங்கும் அது தென்படவேயில்லை. அதையும் யாரோ வேண்டும் என்றே கொன்றிருக்க வேண்டும் என்று சொன்னாள். அதை நானும் மறுக்கவில்லை. எங்கள் இருவருக்கும் தெரியும் அது எப்போதும் எங்களை விட்டுச் செல்லாது என்று. அவளது பாதுகாப்பு முழுவதும் சென்ற பிறகு கோடரி மனிதர்களின் கதியில்தான் அவள் இருந்தாள். இந்த மலை அடிவாரத்தில் சில மணி நேரங்களுக்கு முன்தான் அவளை அவன் கைப்பற்றி இருந்தான். அவன் வெற்றிகரமாக அவளைத் தூக்கிச் சென்று கொண்டிருந்த போது எப்படியோ அவனிடம் இருந்து தப்பித்து விட்டாள்.

“மூன்று நாட்களாக அவன் என்னைத் தொடர்ந்தான்.” என்றாள். “இந்தக் கொடூரமான உலகில். எப்படித்தான் தப்பித்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை. எப்போதும் அவனை முந்திச் சென்றதும் எப்படி என்று தெரியவில்லை. எப்படியோ செய்து விட்டேன் நீ என்னைப் பார்க்கும் வரையில். விதி நம்மிடம் அன்பாய் இருக்கிறது, போவென்” என்றாள்.

நான் ஆமோதிப்பது போல் தலை ஆட்டி அவளை இறுக்கி அணைத்தேன். அதன் பின் பேசிக் கொண்டே அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிட்டுக் கொண்டே நான் இருக்கும் நெருப்பில் மறி மானின் இறைச்சியைச் சுட்டுக் கொண்டிருந்தேன். இங்கிருந்து நம்மைக் காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள். கேப்ரோனாவில் வாழ்ந்து மடியத்தான் வேண்டும் என்று இருவரும் ஒத்துக் கொண்டோம். இல்லை, அதை விட மோசம்தான். இங்கே லிஸ்ஸுடன் வாழ்வதே சிறந்தது அவள் இல்லாமல் வேறெங்கும் வாழ்வதை விட. அவளும், என் காதலும், அதையேதான் சொல்கிறாள். ஆனால் அவள் இங்கு வாழும் வாழ்வை நினைத்து எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. இது கடினமான மோசமான ஆபத்தான வாழ்க்கை. நான் எப்போதும் அதில் இருந்து மீண்டு விட இறைவனைப் பிரார்த்தித்தபடி இருப்பேன் அவளுக்காக.

அன்றிரவு வானம் கிழிந்தது. எங்களது சின்னக் குகையில் நிலவு மின்னியது. அங்கே இருவரும் கைகோர்த்தபடி எங்களது நிச்சயதார்த்தத்தைக் கடவுளின் முன் வானத்தை நோக்கியபடி தெரிவித்தோம். எந்தவொரு மனித நிறுவனமும் எங்களுக்கு இதைவிடப் புனிதமாகத் திருமணம் செய்து வைத்திருக்க முடியாது. நாங்கள் இருவரும் கணவன் மனைவி. அதில் எங்களுக்கு முழு சந்தோசம். கடவுள் விரும்பினால் நாங்கள் இங்கேயே வாழ்வோம். அப்படி இல்லையென்றால் கடலின் பிரமாண்ட ஆற்றலிடம் ஒப்படைக்கப்பட்ட எனது இந்தச் சரித்திரம் யாராவது நல்லவர் கைகளில் கிடைக்கும் என்று நம்புகிறேன். இருந்தாலும் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்தச் செங்குத்துப் பாறைகளுக்குப் பின்னால் இருக்கும் உலகத்திற்கு இந்த இறுதிச் செய்தியின் மூலம் விடை சொல்கிறோம்.

கையொப்பங்களை இட்டவர். போவென் ஜே டைலர் ஜூனியர், லிஸ் லா ர்யூ டைலர்.

– முற்றும் –

அருஞ்சொற்கள்

கேம்பிரியன் யுகம் – Cambrian period. 541 million years ago.
வெடிக்கண்ணி – Torpedo
சூழிட நோக்கி – Periscope
எக்கி – Pump
யூ 33 – ஜெர்மானிய நீர் மூழ்கிக் கப்பல்
இரும்பு கந்தகக்கற்கள் – Iron Pyrites
இருவிழிநோக்காடி – Binocular
பாவொளி – Search light
படிமம் – Fossil
வடிசாறு – Soup
புதைபடிமவியல் – Paleontology
மறிமான் – Antelope
வெற்றிடக் குடுவை – Thermos flask
மீகாமன் – Captain
யூனியன் ஜாக் – British flag

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *