காதல் அல்ல காதலி!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 4,292 
 
 

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3 

லிங்க் வெளியே வந்தான். 

கமிஷனர் ஆபீஸ் பக்கத்தில்தான் இருந்தது. 

ஸ்கூட்டரை உதைத்தான். 

உறுமிக் கொண்டு கிளம்பினான். 

ஸ்கூட்டர் சாலைக்கு வந்ததும் சட்டென திரும்பியது! 

அந்தப் பல்மாடி விழுந்த இடத்திற்கு ஸ்கூட்டரை அவன் திருப்பி இருந்தான். 

பத்தாவது நிமிடத்தில் அங்கே இருந்தான். 

அவனுக்கு மனத்தில் அடங்கா ஆவல்! 

அவனும் ஏதாவது செய்து சிங்கை அதிசயிக்க வைக்க வேண்டும். 

தவிர சிங் எப்போதும் சொல்லுவார். “லிங்க்! நான் சொல்லித்தான் எப்போதும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்காதே! நீயாக சிலவற்றைக் கண்டுபிடிக்கலாம்!” 

அந்தப் பேச்சில் உந்தப்பட்டுதான் அவன் பல்மாடிக் கட்டிடப் பகுதிக்குப் போனான். 

இடிபாடுகளை இன்னும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

ஏற்கனவே சேகரித்த பல பொருள்களை போலீஸ் சிப்பந்திகள் பத்திரமாக வைத்திருந்தார்கள். 

பல பொருட்கள் எரிந்தும், தீய்ந்தும் காணப்பட்டன அவற்றைப் பார்த்துவிட்டு, இடிபாடுகளிடையே காலை வைத்து வெளியே வந்தான். 

இப்போ சுற்றிவரக் கூட்டங்கள் இருக்கவில்லை. 

ஏதாவது உதிரியாக ஜனங்கள் மட்டும் தென்பட்டார்கள். 

ஸ்கூட்டர் அருகில் போயிருப்பான். 

“ஸார்!” என்று குரல். 

அவனைப் பொறுத்தவரையில் அது மோகனமான குரல்! 

திரும்பினான். 

நித்யா! 

உடனே அவன் முகத்தில் குறுநகைகளாக ஒழுகின. 

“என்ன மேடம்! இங்கே…”

“ஸார்! ஏதாவது பார்த்தீங்களா?”

“எது?” என்று புருவத்தை உயர்த்தினான்.

“இடிபாடிலேர்ந்து எடுத்து வைக்கிறாங்களே அது!” 

“ஓ! பார்த்தேன். ஒன்றும் முக்கியமில்லை. ஏன் மேடம் உங்களுக்கு…” என்று இழுத்தான். 

“ஒண்ணுமில்லை! காகிதம் கீகிதம் ஏதாவது கிடைச்சதோன்னு…” 

“முக்கியமான காகிதமா?” 

“இல்லை ஸார்! என்னென்னமோ வச்சிருந்தோம்! ஏதாவது கிடைச்சதோன்னு…” 

“எப்படிக் கிடைக்கும் மேடம்! எல்லாம் தீய்ந்து கருகிக் கிடக்குது! நீங்க அதைப் பார்க்கத்தான் தினமும் வர்றீங்களா?” 

“அப்படியில்லை ஸார்! வந்து… என் அம்மாவை இழந்தது எனக்குத் தாங்க முடியலை! அதுவும் எனக்கு ஊகம் கிடைச்சு, அவளை வெளியில் அழைத்து வந்த பிறகும் விதி அவளை உள்ளே பிடித்து இழுத்து கொன்னிருச்சு! நான் அவளை விட்டிருக்கக் கூடாது! கையோட இழுத்து வந்திருக்கணும்னு மனசு ரொம்ப துடிக்குது ஸார்! ராத்திரி எல்லாம் தூக்கம் இல்லை!” 

கண்களைத் துடைத்தாள் அவள். 

‘இவளுக்கு வந்த லவ் லெட்டராக இருக்குமோ?’ என்று நினைத்தான். 

“என்னம்மா செய்யறது? விதிதான்…”

“ஸார்! எனக்கு எதுவும் ஓட்றதில்லை ஸார்! ஆபீஸ் போகலை. லீவு போட்டு தினமும் இங்கே வந்து அம்மாவுக்காக அழறேன்…”

திரும்பவும் கண்களைத் துடைத்தாள். 

“அழாதீங்க! ஒவ்வொருத்தரும் உங்களைவிட அதிகமாக இதிலே இழந்திருக்காங்க! யார் இந்த பயங்கர குண்டை வச்சாங்கன்னு தெரியணும். நான் வரேன். நேரமாயிடுத்து!” 

லிங்க் அவளைக் கனிவோடு பார்த்தான். 

அவளது கவலையிலும் அவளது களையான முகம் மெருகோடு தெரிந்தது. 

மனசில் அதனால் சின்னதாகச் சிலும்பல். 

அந்த அனுபவத்தை ரசித்துக் கொண்டே ஸ்கூட்டரைக் கிளப்பி விட்டுப் பறந்தான். 

ஐந்தே நிமிடங்களில் கமிஷனர் ஆபீஸ் வந்தான்.

உள்ளே கம்ப்யூட்டர் பகுதி சென்று ஃபாக்ஸ் செய்ய ஒரு கடிதத்தை நீட்டினான். 

தெற்குப் பிராந்திய ஐ.ஜி.க்கு அது பறந்தது. 

அடுத்த சில நிமிடங்களில் பதில் வந்து விட்டது.

காகிதத்தில் துல்லியமான போட்டோ! 

நாகசாமியின் படம்! 

எடுத்துக் கொண்டு வெளியே விரைந்தான்.

ஃபாக்ஸ் படத்தை சிங்கிடம் லிங்க் நீட்டினான்.

தீர்க்கமாக அதை அவர் ஒரு பார்வை பார்த்தார்.

உடனே எழுந்தார். 

“வா லிங்க்! உடனே மார்ச்சுவரி போறோம்!” என்றார்.

ஜீப்பில் பறந்தார்கள். 

மார்ச்சுவரி குட்டி அதிகாரி ஜனார்த்தனம் ஒரு கும்பிடு போட்டார். 

உள்ளே போனார்கள். 

முதல் ச்டலத்தின் பெட்டியை வெளியே இழுத்தார். சிப்பந்தி. 

துணியை விலக்கினார். 

உள்ளே சிங் பார்த்தார். 

ஆண் சடலத்தின் முகம் சரியாகத் தெரியவில்லை. அநேக இடங்கள் சிதைந்து கிடந்தது. 

“உயரம் குறிச்சிருக்கீங்களா?” 

“ஆமாம் ஸார்! இதோ வரேன்.” 

சிப்பந்தி திரும்பி வந்தார். “ஸார் அஞ்சடி நாலு அங்குலம்! எடை 96 கிலோ! இடது காது கீழே மச்சம்” என்று கூறிக்கொண்டே முகத்தைப் பார்த்தான். 

“எங்கேப்பா இடது காது?” 

“அது இல்லாமத்தான் வந்தது ஸார்!” என்றார் சிப்பந்தி. சிங் கூர்ந்து பார்த்தார். அந்தப் பகுதியே சிதைந்து போயிருந்தது. 

வலது காதும் பாதி காணவில்லை. 

சிங் தமது பாக்கெட்டுக்குள் கைவிட்டார். 

நாகசாமியின் போட்டோவை வெளியே எடுத்தார். சுத்தமான கூர்மைக் கண்ணால் சோதித்தார். 

“நோ! லிங்க்! இது அந்த ஆள் இல்லை!” என்றார்.

லிங்க் அவர் அருகில் வந்து போட்டோவை எட்டிப் பார்த்தான். 

“இந்த போட்டோவிலே இருக்கிறவன் 96 கிலோ இருக்க முடியாது புரியுதா?” என்றார். 

ஆச்சரிய மிகுதியில் லிங்கின் கண்கள் விரிந்தன. சிப்பந்தி இப்போது இடை புகுந்தார். 

“ஸார்! சொல்ல மறந்துட்டேனே! இன்னிக்குக் காலையிலே இந்தப் பிரேதத்தைப் பார்க்கிறதுக்கு ஒரு ஆள் வந்தார்.” 

சிங் சட்டென்று திரும்பினார். 

“பிரேதத்தைத் திறந்து காண்பிச்சேன்! கொஞ்ச நாழி நின்னான். அப்புறம் அடையாளம் தெரியலைன்னு போயிட்டான்!” · 

“இந்தா ஜனார்த்தன்! நான்தான் யார் வந்தாலும் போன்லே சொல்லச் சொன்னேனே!” என்று அதிகாரியை நோக்கித் திரும்பி கூறினார் சிங். 

“மன்னிக்கணும் ஸார். அந்த நேரத்திலே அது நினைவுக்கு வரல்லை. தவிர ஸார்! அவர்தான் சொந்தக்காரர் இல்லைன்னு தெரிஞ்சுட்டுதே!” 

மீண்டும் சிங்கின் பருத்த கை அவரது பாண்ட் பாக்கெட்டுக்குள் சென்றது. 

அடுத்த விநாடி அந்த போட்டோ வெளியே வந்தது.

“மிஸ்டர்!” என்றார் சிங். “காலையிலே வந்த ஆள் இவர்தானா?’ என்றார். 

ஜனார்த்தனம் துள்ளாத குறை! 

“ஆமா ஸார்!” என்றான் அழுத்தமாக. 

சிங் முகத்தில் ஒரு புன்னகை மெல்லிசாக உட்கார்ந்தது.

“லிங்க்! புரியுதா?” என்றார். 

லிங்க் மனசில் எங்கேயோ போயிருந்தான். 

திடுக்கிட்டு நிலைக்கு வந்தான். 

“புரியுதா? இல்லையா?” 

இன்னும் லிங்கிற்குப் புரியவில்லை. விழித்தான். 

“இந்தப் பாரப்பா! விபத்து நடந்த அன்னிக்கு நாகசாமி கட்டிடத்து வெளியிலே இருந்திருக்கான். நாகசாமி கட்டிடம் விழுந்தாச்சு. பல பேர் செத்தாச்சு. இதிலே ரெண்டு பேர் பெயர் தெரியாமல் போயாச்சு.” 

“ஓ! புரியுது சார். அந்தப் பிரேதத்தை நாகசாமின்னு போலீஸ் அடையாளம் சொல்லிக்குமான்னு பார்க்க வந்திருக்கான்.”

“ஆமாம்!” என்றார் சிங். 

அடுத்த சடலத்தையும் பார்த்தார்கள். அது முழு உருவமாக இல்லை. இருக்கிற உறுப்புகளைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க ஊனக் கண்ணால் முடியாது. 

சிப்பந்தியிடம் விடைபெற்றுக் கிளம்பினார்கள்.

அத்தியாயம்-4

ஆபீசில் அமர்ந்து, ஒரு கப் காப்பி அருந்தியதும், “லிங்க்! இந்த நாகசாமி போட்டோவை காப்பி எடுத்து எல்லா போலீஸ் நிலையத்துக்கும் அனுப்பு. ஆளைப் பார்த்தா பிடிக்கச் சொல்லு.” 

“எஸ் ஸார்! அவனை நான் இங்கே தேடலாமா ஸார்?” 

“தேடலாம் லிங்க்! அதுக்கு முன்னாடி இன்னும் சில வேலைங்க இருக்கு. இந்த கட்டிடத்தில் இன்னும் ரெண்டுபேர் தனியாக இருந்திருக்காங்க.” 

ஆள் யமகாதர் என்று நினைத்தான் லிங்க்! 

அவனுக்கு அந்த விஷயம் தோன்றவில்லையே! 

“மார்க்கபந்து என்று ஒருத்தன். அவன் மூணாவது தளத்திலே தனி ப்ளாட்லே இருந்திருக்கான்.” 

“எஸ். ஸார்.” 

“கன்னிங்ஹாம் ஹோட்டல்லே கேடரிங் சூபர்வைசராக வேலை செய்திருக்கிறான். இந்த ஆள் உயிர் தப்பிச்சானா தெரியணும். அதை முதல்லே கவனி!” 

“எஸ் ஸார்!” 

“அடுத்து சந்திரமதின்னு ஒரு பெண்மணி! 38 வயது! இரண்டாவது தளத்திலே ப்ளாட்லே தனியா இருந்திருக்கிறாங்க. என். எஸ். கே. ஸ்கூல்லே மியூசிக் டீச்சரா இருந்திருக்காங்க! அவங்க உயிரோடு இருக்காங்களா?” 

“அவங்க இறந்தாச்சு. சடலத்தை சொந்தக்காரங்க அடையாளம் காட்டிட்டாங்க.” 

“அப்படியா?” என்று யோசனையில் சிங் ஆழ்ந்தார். “அப்புறம் லிங்க்! இன்னொரு விஷயம் நாசூக்கா விசாரிக்கணும்.’ 

“எஸ் ஸார்.” 

“இங்கே எத்தனையோ பேர் இறந்துட்டாங்க. இதிலே யார் செத்துப் போனா யாருக்காவது சொத்துக்கித்து கிடைக்கிறதான்னு பார்க்கணும். அதுக்கு லிஸ்ட்!” 

“செய்துடறேன். அப்புறம் நித்யா!” 

லிங்க் பேசவில்லை. 

“ரைட்! என்னவோ காதல் இருக்கலாம்னு சொன்னே! அதை விசாரிச்சுக்க..” 

“எஸ் ஸார்!” 

லிங்க்கின் மனம் உள்ளே மறுகியது. 

லிங்க் போய்ச் சிறிது நேரம் இராது. சிங்கைத் தேடி யாரோ வந்திருப்பதாக அறிவித்தார்கள். 

“உள்ளே அனுப்பு!” என்றார் சிங்! 

கதவு திறந்த போது நிமிர்ந்து பார்த்தார். ஒரு யௌவனப் பெண்மணி கண்ணில் கலக்கத்துடன் உள்ளே வந்தாள். 

“உட்காருங்கம்மா!” என்றார். 

“என் பேரு பார்வதி!” என்றாள் உட்கார்ந்து கொண்டு. முகம் வட்டமான சிவப்பு. கண்களில் உறைய வைக்கும் குளிர்ச்சி! உதடுகள் சின்னதாக அடங்கி இருந்தன.

“என் தங்கை ஒருத்தி! மதனான்னு பேரு! அவளைப் பற்றி உங்ககிட்டே கேட்கணுமின்னு வந்திருக்கேன்.” 

“என்ன கேட்கணும்?” 

“அந்தக் கட்டிடம் இடிஞ்சு விழுந்திச்சே! அன்னியிலேர்ந்து அவள் வீட்டுக்குத் திரும்பலை!” 

“ஓ! ஏன் என்ன காரணம்?” 

“அந்த விழுந்த கட்டடத்திலேயே நாகசாமின்னு ஒரு நடிகர் இருந்தாரு! டி.வி., ரேடியோவிலே நடிப்பாரு. நாடகமும் எழுதுவாரு. அவர் மேலே அவளுக்கு மனசு போயிட்டுது.”

“அவருக்கு என்ன வயது?” 

“40 இருக்கும். மதனா ரெண்டு டி.வி. நாடகத்திலே நடிச்சா. அதிலேர்ந்து ரெண்டு பேருக்கும் பாசம் வந்துட்டுது”. 

“சரி!” 

“இப்போ எனக்கு மதனா இறந்துட்டாளான்னு தெரியணும்.” 

டக்கென்று சிங் மேஜை மீது கையை வைத்தார். 

“அன்னிக்கு நாகசாமியைத் தேடி அவள் போனாளா?”

“ஆமாம் ஸார்!” 

“சொல்லிட்டுப் போனாளா?”

“இல்லை. அக்கவுன்ட்ஸ் கிளாசுக்குன்னு கிளம்புவா. கொஞ்சம் அதிகம் மேக்-அப் பண்ணிக்கிறது தெரிஞ்சா, இந்த நாகசாமியைத் தேடித்தான் போயிருப்பான்னு தெரியும்.” 

“போனவள் திரும்பலையா?” 

“இல்லை. அக்கவுண்ட்ஸ் கிளாசுக்கும் போகலை! அதை விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்.” 

“சரி! அந்தக் கட்டிடம் இடிஞ்சு விழுந்துட்டுதே! அங்கே போயிருந்தா இனிமே பிழைக்க மாட்டா.” 

“அது தெரிஞ்சதுதான். யாரும் பிழைக்கலைன்னு பேப்பர்லே போட்டாச்சு. ஆனா எக்ஸ்ட்ரா பாடி கிடைச்சதாக போட்டிருந்தாங்க! அது அவளாத்தான் இருக்கணுமின்னு நினைக்கிறேன்.” 

“ஒரு சடலம் மார்ச்சுவரியிலே இருக்கு. நீங்க வேணுமின்னா அடையாளம் கண்டுபிடியுங்க. சடலத்தின் சைஸ் கண்டுபிடிக்கிறதே கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டாங்க டாக்டருங்க. அந்த அளவு சிதைஞ்சு போயிருக்கு.” 

“அப்படியா?” என்று அந்தப் பெண்மணி யோசித்தாள். “வாயிலே பல்வரிசை இருக்குதா?” என்றாள். 

சிங்குக்குப் பார்த்த நினைவு! “ஏன் மேடம் அதை வச்சுக் கண்டுபிடிப்பீங்களா?” 

“ஆமாம். முன்வரிசையிலே ரெண்டு பல்லு பொய்ப் பல்லு! அதைப் பார்த்தவுடனே…” 

“சரி மேடம்! இப்போ அந்தச் சடலம் உங்க தங்கைன்னு தெரிஞ்சா என்ன செய்யப் போறீங்க?” 

பார்வதி கண்களைத் துடைத்தாள். “ஸார்! அவளை அனாதையாக விடறதை விட நல்ல முறையிலே தகனம் செய்யலாமில்லே?” 

அவள் சிறிது நேரம் விசித்தாள். பிறகு முகத்தை துடைத்து “அப்புறம் வேறு ஒண்ணு ஸார்!” 

“என்ன?” 

“அன்னிக்குப் பார்த்து கழுத்திலே நெக்லஸ் போட்டுக்கிட்டுப் போயிருக்கிறா. அது பத்து வருஷம் முந்திய விலையே லட்ச ரூபாய்.” 

சிங்கின் கண்கள் ஒரு கணம் சுருங்கின. எங்கேயோ ஒரு ஸ்விட்ச் அடிச்சது. “என்ன? லட்ச ரூபாய் மதிப்பா?” என்றார்.

“ஆமாம்! அதையும் தேடத்தான் வந்திருக்கேன். கிடைச்சுதா?” 

சிங்குக்குப் புரிந்து விட்டது. 

“இதை முன்னாடி ஏன் சொல்லலை?” 

“ஸார்! அந்தப் பெண் செஞ்சது எங்களுக்கு அவமானமா இருந்திச்சு. வேற எங்கேயாவது போயிட்டு திரும்பி வந்து விடுவாளோன்னு ஒரு நப்பாசையிலே இருந்தோம். நாள் ஆக ஆக அது சரியில்லைன்னு தோணிப் போச்சு. நெக்லஸ் கிடைச்சுதா?” 

“நீங்க என்ன புதுக் கேஸ் உண்டாக்குறீங்க போல இருக்கே! நாங்க இங்கே நெக்லெஸ்ஸையே பார்க்கலை!” 

உதடுகள் நடுங்க, அவள் நிமிர்ந்தாள். “அப்போ!” என்றாள்.

“முதல்லே நீங்க பிரேதத்தை அடையாளம் கண்டு பிடியுங்க! வாங்க என்னோடு!” என்றார் சிங். 

திரும்பவும் மார்ச்சுவரிக்கு சிங் இவ்வளவு சீக்கிரம் வருவார் என்பது தெரியாது. 

ஜனார்த்தனம் அவருக்காக அந்த இரண்டாம் சடலத்தை இழுத்துக் கொடுத்தார். 

பார்வதி சிறிது நேரம் கண்களை மூடினாள். 

பிறகு திறந்து இரண்டாவது முறை பார்த்த போது பிரேதத்தின் முகம் பூராவும் சிதைந்து கிடப்பதையும், பற்களின் முன் வரிசை மட்டும் வெளியில் தெரிவதையும் பார்த்தாள். 

“பாரம்மா சரியாய்ப் பாரு. முன் வரிசைப் பல்லைப் பாருங்க…”, பார்த்தாள். 

“ம்! கண்ணை மூடாதீங்க! நல்லாப் பாருங்க!” பார்த்தாள்.

“அவள்தாங்க!” 

சிப்பந்தி உடனே டிராயரை மூடினான். 

வெளியே அவளை நடத்தி அழைத்து வருவது கஷ்டமாகி விட்டது. 

வாசல் முகப்புக்கு வந்ததும், “மேடம்!” என்றார். 

இன்னும் அவள் அழுகை அடங்கவில்லை. “உங்க தங்கை, பல் விஷயமா டாக்டர்கிட்டே போனாளா?” 

“ஆமாம்! போயிருக்கிறா!” 

“அவர் விலாசம் தர முடியுமில்லே!” 

“முடியும்!” 

“கேஸ் ஒரு மாதிரி புரியுது ஸார்!” என்றான் லிங்க். சிங் கண்ணாடிக் குமிழைச் சுற்றிக் கொண்டே வெறுமையாய்ப் பார்த்தார். 

“அந்தப் பெண் மதனாவைத், தன் பிளாட்டுக்கு நாகசாமி வரச் சொல்லி இருக்கான் ஸார். வந்ததும் நெக்லசைக் கழற்றி வாங்கிட்டு வெளியிலே அவன் போயிட்டான். அதுக்குப் பிறகு குண்டு வெடிச்சிருக்கு சார்! அவள் இறந்து போயிட்டாள்.” 

“குண்டை யாரு வெடிச்சா?” 

“அவன்தான் ஸார்! ஏதோ வழி பண்ணி அதை வெடிச்சிருக்கணும். அது மூலம் நெக்லஸ் அவனுக்குச் சொந்தமாயிருக்கணும்! என் தியரி எப்படி ஸார்?” 

சிங் மெல்லிதாகப் புன்னகை விடுத்தார். இதுவும் நடக்கக் கூடியதுதான். ரெண்டு ரூபாய்க்காக கொலை செய்த ஆட்கள் உண்டு. ஒரு நெக்லசுக்காக ஒரு வீட்டையே குளோஸ் பண்ணி இருக்கலாம். 

“ஆனா, இங்கே ஒரு சிக்கல் இருக்கு! இந்த நாகசாமி மூணாவது மாடியிலே இருந்திருக்கிறான். குண்டு அவன் வீட்டிலே வச்சா மேலே நோக்கித்தான் வெடிக்கும். இங்கே அடித்தளத்திலேர்ந்து வெடிச்சிருக்கு!” 

“அதைத்தான் நானும் யோசிக்கிறேன். யார் வெடி வைச்சாலும் கீழே போய் வைச்சிருக்காங்க. அது எங்கே வச்சாங்க?”

– தொடரும்…

– காதல் அல்ல காதலி!, முதற் பதிப்பு: 2006, பூம்புகார் பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *