போட்டோவில் தொங்க விடும் உறவா அது?

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 9,026 
 
 

“ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?….எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..”

“ தினசரி இதே உங்களுக்குப் பொழப்பாப் போச்சு!…..ராத்திரியானா என் உசிரை எடுக்கிறீங்க!….உங்களுக்கு இந்த ஜவுளிக்கடை சேல்ஸ் மேன் உத்தியோகம் வேண்டாம்!….இந்த தீபாவளி போனஸை வாங்கிட்டு நின்னுடுங்க! …..வேற ஏதாவது வேலையை நாம தேடிக் கொள்ளலாம்! …காத்தாலே இருந்து ராத்திரி வரை நின்னு நின்னு தினசரி கால்கள் சுரத்துப் போகுது!…..எனக்குப் பார்க்கவே கஷ்டமா இருக்கு!….” என்று சொல்லி விட்டு,இந்துமதி எழுந்து போய் வேலு கேட்ட தைலத்தை கொண்டு வந்து தந்தாள்.

அதை வாங்கி வீங்கியிருந்த இரண்டு கெண்டைக் கால்களுக்கும் தடவினான் வேலு.

“ஐய்ய்யோ!…என்னங்க கால்கள் இப்படி வீங்கிப் போய் இருக்கு?….எனக்குப் பார்க்கவே பயமா இருக்குதுங்க!…..அங்காடித் தெரு சினிமாவிலே வருகிற மாதிரி ஏதாவது ஆகி விடப் போகுதுங்க!…”

“ நீ வேறு!…உன் வாயை வச்சிட்டுப் பேசாம இரு….நானே வலியிலே வேதனைப் படறேன்!….நீயும் உயிரை வாங்காதே! !…”

அதற்குள் பக்கத்து ரூமிலிருந்து ‘ லொக்கு லொக்கு’என்றும், ‘கர் புர்’ என்ற சத்தமும் கலந்து, அது இருமலா, உறுமலா என்று சந்தேகப் படும் படி, ஒரு விசித்திரமான சத்தம் வந்தது!…கூடவே வாந்தி எடுக்கும் ‘ஓய்!’ என்ற பலத்த ஓசையும் வந்தது!

“ ஏண்டி!…..அங்கே போய் அம்மாவைப் பாரு….வாந்தி எடுக்கும் போலிருக்கு…..முதலில் அதைப் போய் சுத்தம் பண்ணு…மூத்திரம் போய் பெட்ஷீட் எல்லாம் நனைஞ்சிருக்கும்………அப்படியே அதையும் மாற்றி விட்டு வா!…”

“ என்னை ஏனுங்க உயிரை எடுக்கிறீங்க…..இங்கே வீட்டு வேலைக்கு ஆளா வச்சிருக்கிறீங்க?…பெட்ஷீட், போர்வை எல்லாம் தூக்கித் தொவைத்து எனக்கு தோள்பட்டை கழண்டு போய் விட்டது….உங்க அம்மாவுக்கு வயசுதான் ஆச்சு… வயசு ஆக ஆக சாப்பிடுவதற்குப் பறக்கிறாங்க!…கண்டதைச் சாப்பிட்டு விட்டு, நடு ராத்திரியிலே இப்படி வாந்தி எடுக்கிறாங்க…மூத்திரம் போவது கூட அவங்களுக்குத் தெரிவதில்லே!..என்னால் வர வர சமாளிக்க முடியலைங்க!…”..

“சரிதாண்டி!…பின்னே யார் செய்வாங்க?..வாயை மூடிட்டு எழுந்து போய் வேலையைப் பாரு…எழுந்து வந்தேனா பல்லைப் பேத்திடுவேன்!…..”

“ ஆமா…உங்களுக்கு அது ஒண்ணுதான் தெரியும்!….” என்று சொல்லிக் கொண்டே இந்துமதி எழுந்து போய் மூத்திரம் பெய்த பெட்ஷீட், போர்வை எல்லாம் தூக்கிக் கொண்டுபோய் பாத் ரூமில் போட்டு விட்டு, நாத்தம் வெளியில் வராம இருக்க பாத் ரூம் கதவை இழுத்துத் தாள்பாள் போட்டு விட்டு வந்தாள். ஏற்கனவே தயாராக துவைத்து வைத்திருந்த பெட்ஷீட், போர்வைகளைக் கொண்டு போய் மாமியார் கட்டிலில் போட்டு படுக்கையை புதியதாக மாற்றினாள். கையோடு மாமியாருக்கு சேலையையும் மாற்றினாள். ஒரு பாத்திரத்தை முகத்திற்கு நேராக கீழே பிடித்துக் கொண்டு,முகத்தையும் கழுவி விட்டாள். பின்னர் மெதுவாக கைதாங்கலாகப் படுக்க வைத்து விட்டு வந்தாள்.

இரவு மணி ஒன்றிருக்கும்!

“ டேய்! வேலு!…. வேலு!….”என்று அம்மா சத்தம் போட்டாள்.

“என்னம்மா சமாச்சாரம்?…என்னை கொஞ்சம் தூங்க விட மாட்டாயா?..நான் காலையில் எழுந்து வேலைக்குப் போகணுமா…..”

“ கொஞ்சம் இங்கே வந்திட்டுப் போடா!…உங்கட்ட கொஞ்சம் பேச வேண்டுமடா!….”

வேறு வழியில்லாமல் வேலு எழுந்து போய் அம்மா கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்தான். வேலு ஜவுளிக் கடைக்குப் போய் விட்டால் காலையிலிருந்து இரவு வரை உட்கார முடியாது!

“ என்னம்மா!…சொல்லு!…”

“ உன்னைப் பார்த்தா எனக்குப் பாவமா இருக்கு! இந்துவை ஏண்டா ரொம்பத் திட்டறே?… அவளும் விடிஞ்சு எழுந்ததிலிருந்து ஓயாம வேலை செய்திட்டே தான் இருக்கா!…உன்னோட சம்பளப் பணம் வேறே இப்ப பத்தறது இல்லே!..எனக்கு மருந்து மாத்திரைனு ஏகப் பட்ட செலவு…அவளும் படாத பாடு படறா…எனக்கும் வர வர ரொம்ப முடியலே…என்னவோ தெரியலையடா… சாகப் போற நேரத்திலே என் வாயை அடக்க முடியலே!….என்னை மன்னிச்சிடடா…..வீதியிலே மாம்பழம் வித்திட்டுப் போற சத்தம் கேட்டுது…ஆசையா இருந்தது…இந்துமதிகிட்டே சொன்னேன்…அவளும் வாங்கி வந்து வஞ்சகமில்லாம அரிந்து தந்திட்டா…நானும் காணாததைக் கண்ட மாதிரி நிறைய சாப்பிட்டு விட்டேன்!…அது தான் ஜீரணமாகலே!…”

“ உன்னை இப்ப அதை யாரம்மா கேட்டாங்க?…அவ வந்து உனக்கு படுக்கையை மாற்றிக் கொடுத்து வேறு சேலையை மாற்றி விட்டுத் தானே போனா…பிறகு பேசாம படுத்து தூங்க வேண்டியது தானே?..”

“ அதற்கு இல்லையடா!…உங்கிட்ட கொஞ்சம் பேச வேண்டும்!..இனி நான் ரொம்ப நாள் தாங்க மாட்டேன்..எனக்கு ரொம்ப நல்லாத் தெரியுது!..நான் கும்பிடற சாமி உன்னை கை விடாது….எப்படியும் இதே கோயமுத்தூரிலே நீ சொந்தமா ஒரு ஜவுளிக் கடை வைத்து முன்னுக்கு வந்திடுவே!…எனக்குத் தான் பார்க்க கொடுத்து வைக்காது!……கடைசியா என் மக சாந்தியை ஒரு முறை நான் பார்த்திட்டாப் போதும்! எனக்கு நாள் நெருங்கிட்டு இருக்கு!…அவளை ஒரு முறை என்னை வந்து பார்க்கச் சொல்லுடா!…”

“ அம்மா!…போன மாசமே நான் அக்காவுக்கு நாலு தடவை போன் பண்ணிட்டேன்! அம்மா படுத்த படுக்கையா ஆகிட்டா!…இப்ப நடமாட்டம் கூட இல்லே!….இப்ப மருந்தும் மாத்திரையும் சரியா வேலை செய்யறதில்லே!.

டாக்டரிடம் கேட்டேன் ‘வயசாகி விட்டது இனி அப்படித்தான்!’ என்று சொல்லிட்டார்…உன்னையும் பேத்தி ஆர்த்தியையும் பார்க்க அம்மா ரொம்ப

ஆசைப் படறா! நீ ஒரு வாட்டி ஆர்த்தியைக் கூட்டிட்டு வந்திட்டுப் போ!….என்று சொன்னேன்….அவ வராததற்கு நான் என்னம்மா செய்யட்டும்?..”

“ டேய்!..நான் அதற்கு மட்டும் சொல்லையடா…இந்துமதி ரொம்ப கஷ்டப் படறா…..அவளுக்கும் சுகர் வேறு இருக்கு!..வீட்டு வேலையே தலைக்கு மேலே கிடக்கு….நான் படுத்த படுக்கையான பிறகு, அவ என்னையும் கவனிக்க வேண்டி இருக்கு!..செலவுக்கும் பணம் பத்தறது இல்லே!….அவ பாவமடா…சாந்தி இங்கே வந்தா அவளுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும்…..எதற்கும் நீ நாளைக்கு காலையில் அவளுக்குப் போனைப் போட்டு நான் கட்டாயம் வரச் சொன்னேன் என்று சொல்லடா…அவ வருவாடா!…”

“ சரியம்மா நீ பேசாம படுத்து தூங்கு…நான் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையா உங்க அருமை மகளுக்கு போன் செய்திட்டுத் தான் மறு வேலை!..போதுமா?…” என்று சொல்லி விட்டு வேலு தன் படுக்கையில் விழுந்தான்.

பக்கத்து வீட்டுக் கடிகாரம் இரவு இரண்டு மணி அடித்தது!

மறு நாள் காலை எட்டு மணி.

டெலிபோன் மணி விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது.

“அம்மா!…ரொம்ப நேரமா போன் அடிக்குது…நீ எடுத்து யாருனு கேளம்மா!..”

“ஏண்டி நீ எடுத்துக் கேட்டா குறைந்தா போயிடுவே?…நான் சமையறையில் வேலையா இருக்கேன்!…” என்றாள் சாந்தி.

சாந்தியின் ஒரே மகள் ஆர்த்தி கையில் இருந்த வாரப் பத்திரிகையை டேபிளின் மேல் போட்டு விட்டு, ஓடிப் போய் போனை எடுத்தாள்.

“ ஹலோ!..”

“மறுமுனையில் வேலுவின் குரல் கேட்டது.

“ யாரது?…ஆர்த்தியா? நான் மாமா வேலு பேசறேன்!…அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா…”

“ சரிங்க மாமா!..”

“ அம்மா!…அம்மா!…கோயமுத்தூரிலிருந்து மாமா பேசறாங்க!…சீக்கிரமா வாங்க!..” என்று ஆர்த்தி கத்துவது மறுமுனையில் இருந்த வேலுவுக்கு நன்றாகக் கேட்டது. சில நிமிடங்களில் சாந்தி ரிஸிவரை வாங்கிப் பேசினாள்..

“ ஹலோ!…வேலு என்னப்பா சமாச்சாரம்?..”

“ அக்கா!…அம்மாவுக்கு சுத்தமா முடியலே!….ரொம்ப நாளைக்குத் தாங்க மாட்டா போலிருக்கிறது..கடைசி கடைசியா உன்னை ஒருமுறை பார்க்க வேண்டுமென்று ரொம்ப ஆசைப் படறா!……நிலைமையும் அப்படித் தானிருக்கு!…டாக்டரும் நம்பிக்கையாச் சொல்லலே!… எதற்கும் நீ ஒரு வாட்டி ஆர்த்தியைக் கூட்டிட்டு வந்து போனா பராவாயில்லே!…”

“ திடீரென்று அப்படியே வீட்டை விட்டுட்டு என்னால் வர முடியாதடா!…..அவரும் டூர் போயிருக்கிறார்…அவர் வந்தவுடன் சொல்லிட்டு வாரேன்!…..நீ அப்ப அப்ப இந்துமதியை லேசாத் தட்டி வை… அப்பத்தான் அவ அம்மாவை நல்லா கவனிச்சுப்பா!….என்ன இருந்தாலும் அவ வேற வீட்டுப் பெண் தானே!…..”

“அதெல்லாம் சரியக்கா!….அம்மா நிலைமை சுத்தமா சரியில்லே!…ரொம்ப நாளைக்குத் தாங்க மாட்டா!…”

“ அட போடா!…பைத்தியகாரா!…..அவ திடீரென்று நாலு நாளிலே’ஜிங்’னு எழுந்து உட்கார்ந்துக்குவா!…..நீ வீணா கவலைப் படாதே!….நான் அடுத்த வாரம் வாரேன்!…” என்று சொல்லி விட்டு போனை வைத்தாள் சாந்தி.

“ ஏம்மா!……இப்படி பொய் சொல்லறே?….அப்பா அடுத்த ரூமிலே பேப்பர் படித்துக் கொண்டு தானே இருக்கார்….மாமா காரணமில்லாம நம்மை வரச் சொல்ல மாட்டார்!…”

“ உங்க பாட்டிக்கு ரொம்ப முடியலையாம்!…என்னைப் பார்க்க ஆசையா இருக்காம்!….ஒரு தடவை கோயமுத்தூருக்கு வந்திட்டுப் போகும்படி உன் மாமன் சொல்றான்!…”

“ அம்மா!….எனக்கும் ஸ்கூல் லீவு தானே?….ஒரு முறை நாம கோயமுத்தூருக்குப் போய் வரலாமா?…”

“ போடி அறிவு கெட்டவளே!….உங்க மாமன் பெரிய அரண்மனையிலே வாழறான்….நாம குடும்பத்தோட போய் நாலு நாள் தங்கலாம் பாரு!…..அதெல்லாம் உங்க அத்தை வேலையா இருக்கும்!…நாம அங்கே போனா உங்க பாட்டியை நம்ம தலையில் கட்டி விட திட்டம் போட்டிருப்பா……உங்க பாட்டி இங்கே வந்தா யார் பீ, மூத்திரம் அள்ளி கழுவி விடறது?….அப்பா..அம்மா கடைசி காலத்திலே பெத்த பசங்க வீட்டிலே தான் இருக்கணும்!..அது உலக நடைமுறை…கடைசி காலத்திலே மாமியாரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மருமகளுக்குத்தானிருக்கு!..நீ சின்னப் பொண்ணு உன் வேலையைப் பார்த்துட்டுப் போ!…உனக்கு இதெல்லாம் புரியாது!…”.

“ ஏம்மா!….முன்பெல்லாம் ஒவ்வொரு லீவுக்கும் பாட்டி சேலத்திற்கு நம்ம வீட்டிற்குத் தானே வருவாங்க?…..அவங்க வந்தா நீங்க வீட்டில் ஒரு துரும்பைக் கூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் எடுத்துப் போட மாட்டீங்க…..ராணி மாதிரி உட்கார்ந்திட்டு பாட்டியை நல்லா வேலை வாங்குவீங்க!…இங்கு இருக்கும் வரை பாட்டிதானே எல்லா வேலைகளையும் செய்வாங்க! நீ இருக்குற எடத்திற்கே பாட்டி காப்பி கொண்டு வந்து தருவாங்க!…”

“ பெத்த அம்மாவாலே எனக்கு வேற என்னடி உபயோகம்?…….சீர், சிறப்புனு எதையும் செய்ய வக்கு இல்லே!…..அந்த உறுத்தல் தாங்காம தான் இங்கே வந்தா வேலை வெட்டியாவது செய்வாங்க!…..நல்ல காலம் அப்பா காலத்திற்குள்ளே கடனை உடனை வாங்கி எனக்கு கல்யாணத்தை செய்து வைச்சிட்டாங்க!…நான் தப்பிச்சிட்டேன்!… அப்பா போன பிறகு வேலு படிப்பை பாதியிலே நிறுத்து விட்டு, வயிற்றுப் பொழப்புக்காக ஜவுளிக் கடை வேலைக்குப் போக வேண்டி வந்திட்டது… உங்க அப்பா கமர்சியல் டாக்ஸ்

ஆபிஸிலே வேலை செய்யறதாலே நமக்கு நாலு விதத்திலே வருமானம் வருது..நாம சொந்த வீடு வாசல் என்று இருக்கிறோம்!….எனக்கு பிறந்த வீட்டாலே ஒரு பைசாவுக்குப் பிரயோசனம் இல்லே!…உனக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போகுது?..”

“ மாமாவாலே எப்படி அம்மா உனக்கு சீர், சிறப்பு செய்ய முடியும்?..அவரே பாதியிலே படிப்பை நிறுத்திட்டு ஜவுளிக்கடை வேலைக்குப் போறாரு..சம்பளமும் குறைச்சல்….அதிலும் அவர் தான் வயசான பாட்டியையும் கடைசி காலத்திலே வைத்துப் பார்த்துக்கிறார்……”

“ ஆம்பிள்ளைனா சும்மாவா? அது அவங்க கடமையடி!….எந்த சூழ்நிலையிலும் தன் பெற்றோரை வச்சு காப்பாத்துகிறவன் தான் ஆம்பிள்ளையடி!…”

“ சரியம்மா!…உங்கிட்டே பேசி என்னாலே ஜெயிக்க முடியாது…எனக்கும் பாட்டியைப் பார்க்க ஆசையா இருக்கு!…நாம ஒரு தடவை கோயமுத்தூர் போய் விட்டு வரலாம்!…”

“ நீ வாயை மூடிட்டு இரு….எப்ப கோயமுத்தூர் போக வேண்டுமென்று எனக்குத் தெரியும்!..அப்ப அவசியம் உன்னையும் கூடக் கூட்டிக் கொண்டு போறேன்…இப்ப நீ போய் உன் வேலையைப் பாரு!….”

பதினைந்து வயசு ஆர்த்தி படுசுட்டி…அவளுக்கு தன்னுடைய அம்மாவைப் பற்றி நன்றாகத் தெரியும்! அதனால் மறு பேச்சு பேசாமல் ஒரு வாரப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு, அவள் ரூமிற்குப் போனாள்.

பத்துநாட்கள் கடந்து விட்டன.

விடியற்காலை நான்கு மணி.

சாந்தி வீட்டுப் போன் விடாமல் அடித்தது

இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று தூக்கக் கலக்கத்தில் யோசித்துக் கொண்டே எழுந்து போய் போனை எடுத்தாள் சாந்தி “ அக்கா!…நான் தான் வேலு பேசறேன்!…..நம்ம அம்மா நம்மை விட்டுப் போயிட்டாங்க!…”என்று சொல்லிக் கொண்டே அழுதான் வேலு.

“ சரி!….நான் உடனே புறப்பட்டு வருகிறேன்…நீ அங்கு ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்துக் கொண்டிரு…” என்று போனை வைத்து விட்டுப் போய், ஆர்த்தியை அவசர அவசரமாக தட்டி எழுப்பினாள் — பாட்டிக்கு நெய் பந்தம் பிடிக்க!.

அம்மாவின் ஈமச் சடங்குகள் நல்லபடியாகவும் சிறப்பாகவும் முடிந்தன..

வேலு ஒரு முன்னெச்சரிக்கைப் பேர்வழி. அம்மா நிலமையைப் புரிந்து கொண்டு, ஏற்கனவே ஒரு கவரிங் செயினை வாங்கி வந்து, இந்துமதியின் கழுத்தில் மாட்டி விட்டு, அவள் போட்டிருந்த தங்கச் சங்கிலியை கொண்டு போய் அடகு வைத்து, அம்மாவின் ஈமச் சடங்கிற்கு தாராளமாக பணம் வைத்திருந்தான். அதனால் எந்த சிரமமும் இல்லாமல், யார் கையையும் எதிர் பார்க்காமல் எல்லாச் சடங்குகளையும் முறையாகச் செய்தான்..

மூன்றாம் நாள் காரியமும் நல்லபடியாக முடிந்தது எல்லா உறவுகளும் போய் விட்டன.

இந்த மூன்று நாட்களும் ‘அம்மா எத்தனை நாட்கள் படுத்திருந்தா…என்ன நோய்,..எப்படி செத்தாங்க…கடைசியா என்ன ஆசைப் பட்டாங்க….’ என்று பல தரபட்ட கேள்விகளுக்கு மூத்தவள் என்ற முறையில், துக்கத்திற்கு வந்த

உறவினர்களுக்குப் பதில் சொல்லிச் சொல்லியே சாந்தி களைத்துப் போய் விட்டாள்.

சாந்தி தனக்கு துணையாக சேலத்திலிருந்து கூட்டி வந்த ஒன்று விட்ட சின்னம்மா தவிர எல்லா உறவுகளும் போய் விட்டன “ வேலு!…நான் கூட வீட்டில் போட்டது போட்டபடி உன் போன் வந்ததும் அலறியடித்துக் கொண்டு ஓடி விட்டேன்!….அதனால் நானும் இன்றைக்கு ஊருக்குப் புறப் படுகிறேன்!…” என்றாள் சாந்தி.

“ சரியக்கா!…” என்றான் வேலு.

“ அம்மா ஞாபகார்த்தமா பூஜை ரூமில் வைத்து கும்பிட ஏதாவது வேண்டுமடா!…அப்பத் தான் அவள் தெய்வமாக நின்று நம்மை ஆசிர்வாதம் செய்வாள்!..”

“ அப்படியா அக்கா… நம்ம வீட்டில் அம்மா ஞாபகார்த்தமா வைத்து வழி படத் தக்க முக்கியமான பொருள் எதுவும் இல்லையே அக்கா!….” என்றான் வேலு யதார்த்தமாக.

அவர்கள் பேச்சில் நடுவில் குறுக்கிட்டு ஒன்று விட்ட சின்னம்மா கேட்டாள்.

“ ஏண்டா வேலு!…எங்க அக்கா ரொம்ப நாளா ஒரு மூன்று பவுன் கொத்தமல்லிச் செயின் வச்சிருந்தா..அது என்னாச்சு?…அம்மா நகை எல்லாம் அம்மா காலத்திற்குப் பிறகு அவ பெற்ற பெண்களுக்குத் தான் சேர வேண்டும்!.உனக்கு அந்த வழக்கம் கூட தெரியாது போலிருக்கு!..அது இருந்தா அக்காவிடம் கொடுத்து விடு!..அதை அவ அம்மா நினைவா வச்சுக்கிட்டும்!..”

“ அப்படியா…சின்னம்மா…எனக்கு அதெல்லாம் தெரியாது…ஏய்!..இந்து அம்மா கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு செயினை உங்கிட்டே கொடுத்துப் பத்திரமா வைக்கச் சொன்னாங்களே…அது எங்கேடி?..”

“அது பெட்டியில் பத்திரமா இருக்கு!..”

“ சரி ..அதை எடுத்துக் கொண்டு வந்து அக்காவிடம் கொடு!..அதை அவங்க அம்மா நினைவா வச்சுக் கொள்ளட்டும்!..”

“ ஏனுங்க!…நாம அத்தை தெவசத்திற்கு சாமி கும்பிடும் பொழுது, அத்தை பொருள் எதையாவது வைத்துக் கும்பிட வேண்டாமா?”

“ ஏண்டி அறிவு கெட்டவளே! ….முந்தா நா அம்மா வாந்தி எடுக்கும் பொழுது கீழே விழுந்து உடைந்த மூக்குக் கண்ணாடியை நான் எடுத்து பத்திரமா வைத்திருக்கேன்!….அதைத் தான் அம்மா கடைசி வரை போட்டிருந்தா….அதோட அம்மா நல்லா இருந்தப்ப எடுத்த போட்டோவும் இருக்கு!…அவைகளை வச்சு நாம சாமி கும்பிட்டாலே நிறைவா இருக்கும்”

பதில் பேசாமல் இந்துமதி பெட்டியிலிருந்த தன் மாமியாரின் செயினைக் கொண்டு வந்து நாத்தனார் வசம் ஒப்படைத்தாள்!

வந்த வேலை முடிந்த அக்கா ‘துணைக்கு’ கூட்டி வந்த சின்னம்மாவோடு சேலத்திற்குப் புறப்பட்டாள்!

வேலுவுக்கு அம்மா நினைவு வரும் பொழுதெல்லாம் அவள் வாந்தி எடுத்ததும், படுக்கையில் மூத்திரம் பெய்ததும், கடைசியா சாகும் முன், தான் பெற்ற ஒரே பெண்ணைப் பார்க்கத் துடித்ததும் தான் நினைவுக்கு வரும்!

அம்மா மறைந்து இரண்டு மாதங்கள் ஓடி விட்டன.

வேலு வேலை செய்யும் ஜவுளிக் கடை கிளை சேலத்தில் இருக்கிறது ஏதோ வேலையாக வேலுவை சேலத்திற்கு அனுப்பியிருந்தார்கள். அப்படியே அக்கா வீட்டிற்கும் போயிருந்தான் வேலு. அக்கா வீட்டு பூஜையறையில் பிரமாண்டமாக என்லார்ஜ்மெண்ட் செய்த அம்மா போட்டோ அப்பா போட்டோவுக்குப் பக்கத்தில் ஜோடியாக மாட்டப் பட்டிருந்தது! அப்பா, அம்மா போட்டோக்களைச் சுற்றிலும் சிறிய சீரியல் பல்புகள் கலர் கலராக சுற்றிக் கொண்டு வருவது பார்க்க மிக அழகாக இருந்தது! அப்பா அம்மா படங்களுக்கு கீழே தான் மற்ற எல்லா சாமி படங்களும் பூஜைக்கு வைக்கப் பட்டிருந்தன!

இந்தக் காலத்தில் தாய், தந்தை உறவு கூட நைந்து போய் விட்டன! சுவரில் ஆணியடித்து பெருமைக்காக தொங்க விடத் தான் பயன் படுகின்றன! போட்டோவில் தொங்கும் உறவா அது?

– பாக்யா டிசம்பர்9-15

Print Friendly, PDF & Email

1 thought on “போட்டோவில் தொங்க விடும் உறவா அது?

  1. அன்புடையீர்,
    வணக்கம். சிறுகதை அருமை. நாட்டில் நடப்பதை யதார்த்தமாக கதாப்பாத்திரங்கள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். கதாசிரியருக்கு பாராட்டுக்கள். சிறுகதைகள் இணையதள ஆசிரியருக்கு நன்றி !

    பூ.சுப்ரமணியன், பள்ளிக்கரணை,சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *