(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மணிவாசகம் என்று ஒரு செல்வன் இருந்தான். அவன் தன்னை நாடி வந்த ஏழை எளியவர்களுக்கு இல்லை என்னாது, கொடையீந்தான். பாரி முன்னனே மணிவாசகமாகத் திரும்பிப் பிறந்து விட்டான் என்று மக்கள் பேசிக்கொள்வார்கள். மணிவாசகம் கொடுத்துக் கொடுத்து ஏழையானான். ஏழையான பின் பல துன்பங்களுக்காளாகிக் கடைசி யில் பட்டினியாகவே கிடந்து இறந்து போனான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். மகன் பெயர் அருளரசன்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த அருளரசன் இளமைப் பருவத்தில் வறுமையினால் பெருந் துன்பத்திற்கு ஆளானான். ஏழை எளியவர் களுக்குத் துன்பம் ஒரு பொருட்டா என்று அவன் துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொண்டான். நாள்தோறும் உழைத்துப் பெறும் ஊதியத்தைத் தவிர அவனுக்கு வேறு வருமானம் இல்லை. அடி முதல் இல்லாததால் அவனால் வாணிகம் செய்து தன் தந்தையைப் போல் செல்வம் சேர்க்கவும் முடிய வில்லை. இருந்தாலும் தன்னை அண்டியவர் களுக்குத் தன்னால் ஆன மட்டும் உழைத்தும் பொருள் கொடுத்தும் உதவி வந்தான்.
தமிழ் நாட்டிலே இருந்த மணிவாசகத்தின் புகழ் வடக்கே கங்கைக்கரை வரை பரவியது. ஆனால் அந்தப் புகழ் கங்கைக் கரையை அடைந்த காலத்தில் மணிவாசகம் உலக வாழ்வை நீத்து விட்டான்.
காசியில் இருந்த ஒரு வடமொழிப் புலவர் திருக் குறள் படிப்பதற்காகத் தமிழைக் கற்றார். தமிழில் பற்று மிகவே அவர் அதைக் கசடறக் கற்றுப் பெரும் புலவரானார். அவர் மணிவாசகத்தின் புகழைக் கேட்டு, அவனைக் காணப் புறப்பட்டு வந்தார்.
ஊரில் வந்து அவர் மணிவாசகத்தைப் பற்றிக் கேட்டபோது, அவன் இறந்து விட்டதையறிந்து ஏமாற்றமும் துயரமும் அடைந்தார். மணிவாசகத் தின் மகன் அருளரசனையாவது பார்த்துப் போக லாம் என்று அவன் குடிசைக்குச் சென்றார்.
அருளரசன் அவரை அன்போடு வரவேற்றான். வந்த காரணத்தைக் கேட்டு அறிந்தான். தன் பிள்ளையின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி அவர் கையிலே கொடுத்தான். அவர் வாங்க மறுத்தார். அவனோ கட்டாயப்படுத்தி அவரை எடுத்துச் செல்லச் சொன்னான்.
தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு வெளி யில் வந்தார் புலவர். குடிசை முகப்பில் ஒரு பெரிய வாழை மரம் காய்ந்து கருகி நின்றது. அதன் அடியி லிருந்து கிளம்பி வளர்ந்து நின்ற சிறிய மரம் பழுத்து நின்றது.”தாய்மரம் கனி கொடுத்து மாண்டாலும், கன்று கனி கொடுக்க மறுக்கவில்லை. அது போலத் தான் அருளரசனும் கொடை கொடுக்கப் பின் வாங்கவில்லை” என்று கூறிக்கொண்டே நன்றி யுணர்ச்சியுடன் காசிக்குத் திரும்பினாரி, தமிழன்ப ராகிய அந்த வடநாட்டுப் புலவர்.
கருத்துரை :- நல்ல குடிப்பிறந்தவர்களின் அருட்குணத்தை எந்தத் துன்பமும் அழித்துவிட முடியாது.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.