கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 3,219 
 

சென்டிரல் ரயில் நிலையக் கட்டடத்தில் சுதந்திரத் தினத் தீப அலங்காரம் மிகப் பிரமாதமாக இருந்தது. இரவு நேரத்தில் வான இருளின் பின்னணியில் தோரண வரிசையாக விளங்கும் மின்சார தீபங்கள் வண்ணமீன்கள் முளைத்தனவோ எனத் தோற்றமளித்தன.

எதிரே ஜெனரல் ஆஸ்பத்திரிச் சுவரில் சாய்ந்து கொண்டு ரயில்வே ஆபீஸின் அழகைப் பருகிக் கொண்டிருந்தபோது. பத்தாம் நம்பர் பஸ் நிற்குமிடத்தில் இருவர் பேசிக் கொண்டிருந்தனர். நான் விரும்பாவிடினும் அந்த வார்த்தைகள் என் செவிகளில் வீழ்ந்தன. நம்மைப் பற்றியோ, நாம் அறிந்தவரைப் பற்றியோ பேச்சு இருந்துவிட்டால் நாம் காதைத் தீட்டிக் கொள்வதில் ஆச்சர்யம் ஏது?

“அவனைப் போலீஸில் ஒப்படைப்பதுதானே ? இப்படிப்பட்டவர் களையெல்லாம் இலேசில் விட்டால் சமூகமே குட்டிச் சுவராக வேண்டியதுதான்” என்றது ஒரு குரல்.

“ராமு! போலீஸ் வரை போவது பெரிதில்லை. என்ன சொல்லிப் புகார் செய்வது? அப்படியே புகார் செய்தாலும் கோர்ட்டில் போய் நானும் அப்பாவும் சாட்சி சொல்ல வேண்டியிருக்கும். அதற்கும் மேலாக என் தங்கையைச் சாட்சிக் கூண்டில் ஏற்ற நான் விரும்பவில்லை. ஏற்கனவே உள்ளம் நொந்து, தவத்தின் கடுமையால் உடலும் நொந்திருக்கும் அவளைத் துன்புறுத்த விரும்பவில்லை. துன்புறுத்துவது இருக்கட்டும். கல்யாணத் தகராறில் கோர்ட் ஏறிய பெண்ணைப் பிறகு யார் தான் மணக்கத் துணிவார்கள்?”

இரண்டாவது நபரின் பேச்சுக்கு முதலில் பேசியவர் உடனே பதில் கூறவில்லை. அந்த இடைவெளி நேரத்தில் தான் சிந்தனை செய்தேன்.

‘கல்யாண தகராறு – போலீஸ் – கோர்ட்’ தெருவில் பேசிக் கொள்பவர்கள் பேச்சையெல்லாமா ஒன்றுக்கு ஒன்று முடிந்து விடமுடிகிறது? செவிமடுத்துக் கேட்பதே தவறு. கேட்டதைச் சிந்திப்பதே தவறு. சிந்தித்ததை இணைக்கப் பார்ப்பது அதைவிடத் தவறன்றோ.’

‘உம்… சரி – தவறு; நியாயம் – நியாயமில்லாதது என்று மனம் எண்ணுகிறதா? ஆனால், நியாயம் என்ற முடிவுக்கு மனம் வரக்கூடிய வகையில் அவர்கள் பேச்சு திரும்பியது. அதை நான் கேட்டிராவிடில் என் நண்பன் நடராஜனை நான் புரிந்து கொண்டிருப்பேனா? அவனைக் காப்பாற்றியிருப்பேனா?

அவர்கள் பேச்சிலிருந்து நான் உணர்ந்து கொண்டது இவ்வளவே… இருபத்தைந்து வயதாகியும் கல்யாணமாகாத பெண்ணுக்குப் பெற்றோர் அலைந்துத் திரிந்து வரன் தேடுகிறார்கள். தஞ்சாவூரில் உள்ள ஓர் உறவினர் வீட்டிற்கு நடராஜனும் அவன் அக்காவும் வந்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் தகப்பனார் தன் பெண்ணுக்கு நடராஜனை மணம் முடிக்க விரும்புகிறார்.

பெண்ணை உடனே முத்துப்பேட்டையிலிருந்து அழைத்து வருகிறார்கள். பெண் பார்க்கும் படலம் முடிந்து நூறு ரூபாய் அட்வான்ஸுடன் நடராஜனும் அவன் சகோதரியும் ஊருக்குப் புறப்படுகின்றனர். பிறகு சென்னையில் நடராஜனை அந்தப் பெண்ணின் சகோதரன் தேடி அலைகிறான். நடராஜன் குணத்தை அறிகிறான்.

நடராஜன் ஒரு போலி – புரியும்படியான வகையில் கூற வேண்டுமானால் ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்பதை அறிந்தவுடன் தன் சகோதரியைக் காப்பாற்றிய பெருமை அவனுக்கு.

நூறு ரூபாயை இழந்தால் ஆத்திரம் வராதா? ஆனால், எல்லாவற்றையும் விட அந்த நபருக்கு இப்பொழுது ஒரு திருப்தியே நிறைந்திருந்தது. கொஞ்சம்கூட நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாத, நாணயமற்ற, நிலையில்லாத, சாதாரண மனிதனுக்கு இருக்கக்கூடிய நற்பண்புகள் கொஞ்சமும் இல்லாத ஒரு மனிதன் தன் வீட்டு மாப்பிள்ளையாக வராமல் இருந்ததில் திருப்தி.

என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. அவர்களுடன் பேச்சுக் கொடுத்து, அவர்கள் குறிப்பிடும் நபரும் என் நண்பனும் ஒருவர் தானா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.

இதை எளிதாக எழுதிவிட்டேனே தவிர, எவ்வளவு சிரமப்பட்டு அவர்களிடமிருந்து செய்தியைக் கிரகித்துக் கொண்டிருப்பேன் என்று எனக்குத்தான் தெரியும்.

நடராஜனும் – அதிகப் பருமனுமில்லாமல், மெலிந்துமிராத தோற்றம், களையான முகம், வாரிவிடப்பட்ட கிராப்பு. அவன் எனக்கு நண்பனானதே ஓர் அதிசயம்!

சுலபமாக யாரையும் சிநேகம் பிடிக்கத் தயங்கும் நான், நடராஜனை எப்படியோ அறிமுகப்படுத்திக் கொண்டேன். கலகலவென்று சிரித்துப் பேசிப் பழகுவான். அவனைப் பார்க்கும் யாரும் அவன் உள்ளத்தில் கள்ளம் இருக்கும் என எண்ணமாட்டார்கள்.

ஒருவருடன் நட்பு உதயமாகும் போது அவருடைய குணதோஷங்களை ஆராய முடியுமா? சினிமா தியேட்டரில் அறிமுகமான அன்றே செலவு எல்லாம் நடராஜனுடையது.

“ஏன் ஸார்? இதெற்கெல்லாம் என்ன ஆச்சுன்னு சொல்லுங்கள். தந்துவிடுகிறேன்” என்றேன்.

கலகலவென்றுச் சிரித்த நடராஜன், “ஸார் ! பணம் இன்று வரும் போகும். பணம், பணம் என்று பணத்தை மையமாக வைத்துச் சுழன்று வரக்கூடாது ஸார்! சிநேகம்தான் பெரிசு” என்று அடித்துக் கூறியது இன்னும் ஒலிக்கிறது.

பணத்தைப் பற்றி அப்படிச் சொன்னவன் இன்று பணத்தினால் பெயர் கெட்டுப் போக நிற்கிறானே! என்னிடமும் கூட அவன் நடந்ததைக் கூறவில்லை .

‘ஸார் ஸார்’ என்று தொடங்கிய நட்பின் அளவு டேய்’ என்று கூப்பிட்டுக் கொள்ளும் அளவுக்குப் பிணைந்துப் பலப்பட்டது. அப்படிப் பலப்பட்டும் அவன் அந்தரங்கத்தை நான் அறியாமல் இருந்தேனே… இது என்ன வேடிக்கை!

அந்த நண்பரைச் சந்தித்த பிறகு எனக்கு மனவேதனை மிக அதிகமாகியது. கல்யாண நிச்சயதார்த்தம் என்பது வாய்ச்சொல்லின் மேன்மையை விளக்கும் அற்புதச் செயல் அல்லவா? அந்தப் புனிதத் தன்மைக்கே இழுக்கு விளைவித்து விட்டானே இந்த நடராஜன் என்று எனக்கு மிகக் கோபம்.

கடந்த ஒரு மாதமாகச் சந்திக்காததால் ஏற்பட்ட தாபத்தையும் கோபத்தையும் வைத்துக் கொண்டு ஆத்திரமும் கண்டிப்பும் நிறைந்த மனத்தோடு நடராஜன் வீட்டிற்கு விரைந்தேன். என் தெருவிற்கு அடுத்த தெருதான். இத்துடன் பத்து இடங்கள் மாறிவிட்டான் என்றாலும் இப்பொழுது வந்திருக்கும் இடத்தில் நிலைத்திருக்கும் நாள்களைப் பார்த்தால் அநேகமாக ஸ்திரம் என்றும் கூறலாம்.

அடிக்கடி போய் பழக்கப்பட்ட எனக்கு அந்த வீட்டினுள் நுழைவது ஒன்றும் சிரமமாக இல்லை . வழியில் குறுக்கிடும் சாக்கடைப் பாலங்களையும், முற்றத்து ஏற்றத்தாழ்வுகளையும் தாண்டி அவன் வசிக்கும் பகுதியை அடைந்தபோது அவனிருந்த பகுதியில் மினுக் மினுக் கென்று விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

நடராஜனின் அக்கா மட்டும் நிலைப்படியில் தலையை வைத்துப் படுத்து ஏதோ படித்துக் கொண்டிருந்தார். நடராஜன்’ என்று கூப்பிட்ட என் குரல் கேட்டு இன்னாரென்னத் தெரிந்து என்னை வரவேற்றார்.

“நடராஜன் இல்லையா?” “இன்னும் வரவில்லையே…” ‘இராமநாதன்?’ ‘அவன் இன்ஸ்டிட்யூட்டுக்குப் போயிருக்கான்.”

இராமநாதன் நடராஜனின் சகோதரன். இரண்டு வயது இளையவன் அண்ணனுக்குச் சகலவிதத்திலும் நேர்மாறானவன்.

நடராஜனைப் பற்றி அவன் அக்காளிடமே கேட்டு விடலாமா என ஒரு கணம் எண்ணினேன். அந்தக் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்திருக்கும் என்னிடம் நடராஜன் பெரிய பெரிய விஷயங்களை மறைத்திருக்கிறான் என்பதை எண்ணும்போது எனக்கு வருத்தமாகவே இருந்தது.

“எங்கோ ஊருக்கெல்லாம் போயிருந்தீர்கள் போலிருக்கிறதே…’ என்று பேச்சைத் தொடங்கினேன்.

நடராஜனின் சகோதரி வியப்புடன் என்னை நோக்கினார். வயதான அந்த அம்மாள் என்னை எப்போதும், வா, போ ‘ என்றே அழைப்பார்.

“ஏண்டா உனக்குத் தெரியாதோ? தஞ்சாவூருக்குப் போய்ப் பெண்ணைப் பார்த்துட்டு வந்தோம். நடராஜனுக்கு இந்த முறை எப்படியாவது கல்யாணம் செஞ்சுடணும். உனக்கு அவன் ஏதும் சொல்லவில்லையா?’ – எப்பொழுதும், போல்தான் அந்த அம்மாள் கேட்டாள்.

அவர் எதையோ மறைப்பது போல் எனக்குத் தோன்றியது. எனக்கு உண்டான ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, “அவனை நான் பார்த்து

ரொம்ப நாள்களாகின்றன! எனக்கு எங்கே அவன் சொல்கிறான்? முன் மாதிரி நடராஜனா? என்று நான் சொல்லிக் கொண்டே இருக்கும் போது யாரோ வரும் ஓசை கேட்டது.

மங்கிய ஒளியில் நடராஜன் வந்து நிற்பது தெரிந்தது. யார் நிற்பது என்று அறியவோ என்னவோ ஒருமுறை அவன் என்னை உற்றுப் பார்த்து விட்டு வரவேற்றான். அவன் குரலில் பழைய உற்சாகமில்லை.

“ஏண்டா நடராஜா! நாம் தஞ்சாவூர் போய் வந்தது ஒன்றும் ஒன் சிநேகிதனுக்குச் சொல்லலையாமே… அதிருக்கட்டும். இன்றைக்காவது பெண் வீட்டாருக்குக் கடிதாசு போடப் போறியா இல்லையா?” என்றார் நடராஜனின் சகோதரி.

நடராஜன் ஏதோ சொன்னான். நான் அவனுடன் நீண்ட நேரம் பேச விரும்பினேன். அதை வெளிப்படுத்த, அது சரி நடராஜா… நீ சாப்பிட்டாச்சா? உன்னுடன் பேச வேண்டியது நிறைய இருக்கிறது…’ என்றேன்.

‘பேச வேண்டியது நிறைய இருக்கிறது’ என்றவுடன் நடராஜன் முகம் மாறியதைக் கவனித்தேன். அவன் மன மாறுதல் எனக்கு நன்றாகப் புரிந்தது.

என்னிடமிருந்து அந்தச் சமயம் அவன் நழுவ முற்பட்டாலும் முற்படலாம். அப்படி அவன் என்னை ஒதுக்க விரும்பினால் நான் என்ன செய்யப் போகிறேன்?

நடராஜன் உடனே என்னுடன் கிளம்பினான். ‘பசிக்கவில்லை . இப்பொழுதுதான் ஹோட்டலில் சாப்பிட்டேன்’ என்று சகோதரியிடம் கூறிவிட்டான்.

அந்த அம்மாள் பழையபடியே நிலைப்படியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு சிம்னி விளக்கில் ஏதோ படிக்கலானார்.

நடராஜனும் நானும் பேசிக் கொண்டே நடந்தோம். இரவு மணி ஏறிக் கொண்டே வந்தது. ஒருவருடைய சொந்த விஷயத்தில் மற்றவர் தலையிட்டுப் பேசுவதென்பது இலேசானதன்று. முகம் கொடுத்துப் பேசுபவர்களாயிருந்தால் விஷயமே வேறு. ஆனால், நண்பன் நடராஜன் அன்று மனம் விட்டுப் பேச விரும்பினான் என்பது எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது.

“உனக்குத்தான் தெரியுமே… என் குடும்பம் ஆரம்பத்தில் எந்த நிலையில் இருந்தது என்று. என் அம்மா இரண்டு இடங்களில் சமையல் செய்து என்னைப் படிக்க வைத்தாள். அப்பொழுது அக்காவுக்குக் கல்யாணமாகியிருந்தது. அம்மா சமையல்காரி என்பதற்காக அக்காள் வீட்டார் அம்மாவிடம் அக்காவை அனுப்புவதே கிடையாது. தம்பி இராமநாதனுக்கு எப்பவும் ஏதாவது வியாதி இருந்து கொண்டேயிருக்கும். அந்தச் சிறு அறையில் நான் தங்குவது

அபூர்வம். நண்பர்கள் வீடுதான் கதி. ஊர் சுற்றுவது பழக்கமாகிவிட்டது. அதனால் படிப்பை விட்டுவிடவில்லை. இன்றுவரை நான் படித்த படிப்புதான், உதவி செய்து வருகிறது. இன்னும் மேலே காலேஜில் படிக்கலாம். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எங்கேயாவது வேலை பார்த்துக் கொண்டு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சோப்புக் கம்பெனி ஒன்றில் வெளியூர் விற்பனையாளராக எனக்கு வேலை கிடைத்தது. கிடைத்த வேலையைத் திறமையாகச் செய்து முன்னேறும் சமயத்தில்தான் அந்தத் துக்க கரமான சம்பவம் நேர்ந்தது.

“அக்காவின் கணவர் திடீரெனக் காலமானார். காலணா காசுகூடக் கிடையாது. அக்கா எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள். அக்காவின் மனம் உடைந்தது. அதே மன வியாதி அவளைப் படுத்த படுக்கையாக்கி விட்டது. இச்சமயங்களில் என்னால் அதிகமாக விடுப்பு எடுத்துக் கொள்ள முடியவில்லை. அலுவலகத்தில் என் பதவியைக் கைப்பற்ற இரண்டு மூன்று பேர் முயன்றது எனக்குத் தெரியும்.

“மனிதனுக்குப் பொறாமை எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னைச் சமயம் பார்த்துக் குழியில் தள்ளக் காத்துக் கொண்டிருந்தார்கள். என் முகராசியும், சலியாத உழைப்புமே காப்பாற்றி வந்தது. ஆனால், மனத்துயரால் படுத்த படுக்கையாயிருந்த அம்மா ஒரேயடியாகக் கண்ணை மூடி விட்டாள் என்ற செய்தி வந்தபோது நான் திருநெல்வேலியில் இருந்தேன். கையில் ஆயிரம் ரூபாய் விற்பனைப் பணம். அதைச் சக குமாஸ்தாவிடம் சொல்லி ஆபீஸ் ரொக்கப் பெட்டியில் வைத்து விட்டுக் கிளம்புவதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.

‘தாயின் காரியங்களை முடித்து விட்டுக் கவலையுடன் சோர்ந்து உட்கார்ந்திருந்த எனக்கு ஆபீஸிலிருந்து கடிதமொன்று வந்தது. விற்பனைப் பணம் ஆயிரம் ரூபாயைக் கையாடியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மூன்று தினங்களுக்குள் பணம் கட்டப்படாவிடில் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டிருந்த அந்தச் செய்தி என்னைக் கலங்க வைத்தது. ஆயிரம் ரூபாயில் காலணா கூட நான் எடுக்கவில்லை என்னும் உண்மையை யார்தான் நம்புவார்கள் ?

“ஓடினேன், ஓடினேன்… தலைமைக் காரியாலயத்தை நோக்கி ஓடினேன். என்னை வேலைக்கு அமர்த்திய சுந்தர மாமாவிடம் அழாத குறையாக விஷயத்தைக் கூறினேன். அவர் மனிதர் ! புன்முறுவல் பூத்தார். ஆயிரம் ரூபாய்க்குப் ‘பேரர்’ செக் கொடுத்து அதை மாற்றி அலுவலகத்தில் கட்டும்படிக் கூறினார். மாதம் இருபத்தைந்து ரூபாயாகத் திருப்பித் தருமாறும் கூறினார். தெய்வமெனக் கும்பிட்டேன். செய்யாத குற்றத்துக்கு ஏற்படவிருந்த தண்டனையிலிருந்துத் தப்ப வைத்தவர் என அவரைப் புகழ்ந்தேன்.

“ரூபாயைக் கட்டிவிட்டீர்கள். ஆனால், தொடர்ந்து வேலை கொடுக்க முடியாது என்று நிர்வாகத்தினர் கூறிவிட்டார்கள். சுந்தர மாமாவும் எவ்வளவோ சிபாரிசு செய்தார். முடியவில்லை. எனக்கு அழுகைப் பொங்கியது அழலாமோ? இது போனால் இன்னொரு வேலை’ என்று ஆறுதல் கூறினார். அதன்படியே வேறு வேலைக்கும் ஏற்பாடு செய்தார். இங்குதான் என் பெயர் மாசடையும் கட்டம் தொடங்கியது. உன்னிடம் இவை எதையும் நான் சொன்னது கிடையாது. கௌரவம் குறையாமல் நான் உன்னிடம் நடந்து கொண்டேன். எனக்கு ஏற்படும் பணத் தேவைகளை நான் கூறியது கிடையாது.

“புதிய ஆபீஸில் கிடைக்கும் சம்பளம் வீட்டுச் செலவில் பாதிக்குக்கூடக் காணவில்லை. இதில் சுந்தர மாமாவுக்கு எப்படிப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பது, அவர் என்னைத் தேடிப் பலமுறை வரத் தொடங்கினார். அவரிடமிருந்து நான் மறையலானேன். அப்படிச் செய்வது சரியன்று என எனக்குத் தெரியும். வேறு வழி?

“வீட்டுச் செலவைச் சரிப்படுத்த வெளியே கடன் வாங்கலானேன். ஒவ்வொருவரிடமும் கடன் வாங்கும்போதும் ஒவ்வொரு விதமாகக் கற்பனைக் காரணங்களைக் கூறுவேன். ஆனால், எல்லாம் ஒரே சமயத்தில் வந்து என்னைச் சூழ்ந்து கொள்ளும் என்னும் எண்ணமே எனக்கில்லை. எப்படியாவது தம்பி சம்பாதிக்கத் தொடங்கியவுடன் பணக் கஷ்டத்திலிருந்து தப்பி விடுவோம் என எண்ணினேன். தம்பி பாஸ் செய்துவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் நான் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.

‘கடன்காரர்கள் பலர் நான் வேலை செய்யும் காரியாலயத்திற்குக் கடிதம் எழுதத் தொடங்கவே, அவர்கள் தொல்லைப் பொறுக்க முடியாத கம்பெனி மானேஜர் என் வேலைக்குச் சீட்டுக் கொடுத்து விட்டார். இருபது நாள்கள் வேலையின்றி அலைந்தேன். அதன் விளைவு கடன் பளு ஏறியது.

“நல்லவேளையாக மற்றொரு பெரிய கம்பெனியில் நல்ல வேலை கிடைத்தது. சம்பளமும் போதுமானதாக இருந்தது. இடையே வேலையில்லாது தவித்ததை நீயும் அறிவாய். இப்பொழுது நான் வேலையில் இருக்குமிடமும் அறிவாய். ஆனால், மனிதனைத் தலையெடுக்க விடமாட்டேன் என்கிறார்களே…. கடன்காரக் கழுகுக் கண்கள் என்னை இங்கேயும் கண்டுபிடித்துவிட்டன.

‘இதற்கிடையே ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் என் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை என் அக்கா செய்ததுதான். கடன் தொல்லையையும் மனக் கவலையும் மறக்க நான் வீட்டில் தங்காததை அவள் தவறாக எண்ணி விட்டாள்.

“தஞ்சாவூரில் இரண்டொரு ஜாதகங்கள் பொருந்தியிருப்பதாகவும், ஆபீஸில் லீவு போட்டுவிட்டுப் பெண் பார்க்க வருமாறு அக்கா தொந்தரவு 6. தாள். நானும் ஆபீஸில் பத்து நாள்கள் லீவு போட்டு விட்டுக் கிளம்பினேன். பயணத்தின் போதே அக்காளிடம் கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லாததைத் தெரிவித்தேன். அதற்கு அக்கா , இப்பொழுதே உனக்கு வயது முப்பத்து மூன்றாகிவிட்டது நடராஜா! பெண்ணுக்கு வயது அதிகமானால் வரன் கிடைப்பது கஷ்டம் போல், பிள்ளைக்கும் அப்படித்தான் என்பது உனக்குத் தெரியாதா? இராமநாதனுக்குப் பெண் கொடுக்கறேன், வேலையும் பார்த்து வைக்கிறேன் என்று கூறுகிறார்கள். மூத்தவனுக்கு ஆகாமல் இளையவனுக்கு எப்படிச் செய்வது? எப்படியும் இந்தத் தை மாதத்தில் கல்யாணத்தை முடித்து விட வேண்டும்… நீ குடித்தனம் செய்து நான் பார்க்க வேண்டாமா?” என்றாள்.

“சகோதரியின் ஆசையை – கட்டளையை – என்னால் மீற முடியவில்லை. தஞ்சாவூரில் இரண்டு இடங்களில் பெண் பார்த்தோம். சொஜ்ஜி – பஜ்ஜி சாப்பிட்டோம். நான் இயந்திரம் போல் நடந்து கொண்டேன். இப்பொழுதே பெருகிவிட்டிருக்கும் கடன் பட்டியல் கல்யாணத்திற்குப் பிறகு இன்னும் பெருகிவிடப் போகிறதே என்ற கவலை எனக்கு பெண் பார்க்கும் படலம் முடிந்தது.

“அக்கா ஏதோ ஒரு வீட்டில் சம்மதம்’ என்று தலையசைத்தாள். நூறு ரூபாய் உறுதிப் பணமும் கிடைத்தது. அன்றே சென்னைக்குப் புறப்பட்டோம். ஆனால், நான் இந்த இடத்தில் தான் தவறு செய்துவிட்டேன். நடந்ததை நடந்தபடி கூறுவதில் எனக்கு இப்பொழுது வெட்கமேயில்லை. நூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு அதை அப்படியே ஈட்டிக்காரனு க்குக் கொடுத்துவிட்ட நான் அந்தக் கல்யாணத்தை எப்படியாவது தட்டிக் கழித்து விடுவது என எண்ணினேன். திருமணம் என்பது ஏதோ விளையாட்டு என்ற நினைவு எனக்கு…’ இதை அவன் சொல்லி வந்த போது எனக்கு ஆத்திரம் மேலிட்டது.

“நடராஜா” என்று கூவினேன். அவன் பயந்து விட்டான்.

“உனக்கு இதெல்லாம் விளையாட்டு. பெண்ணைப் பெற்றவர்களுக்கு இதெல்லாம் வேதனை. அவர்கள் நிலையில் இருந்தால் என்ன செய்வாய்? உன்னுடைய பெயர் எவ்வளவு தூரத்துக்கு மாசுபட்டு விட்டது தெரியுமா? எத்தனையோ விதமான ஏமாற்றுதலைப் பார்த்திருக்கிறேன். ஆனால், திருமணத்துக்கு உறுதிப் பணம் வாங்கி ஏமாற்றியவனைப் பார்த்ததில்லை” என்று நான் கர்ஜித்தேன்.

“நான் ஏமாற்றவில்லையே” என்று ஏதோ கூறத் தொடங்கிய அவனைத் தடுத்து, “ஷட்-அப் ஏமாற்றுதல் இல்லாமல் இது என்ன? நிச்சயம் செய்து முன் பணம் நூறு ரூபாய் கை நீட்டி வாங்கிக் கொண்டாளே உன் சகோதரி, பிறகு கல்யாண ஏற்பாடுகளை ஏன் ஒன்றும் செய்ய வில்லை?”

நடராஜன் சொன்னான்; “அக்காவை ஒன்றும் கூறாதே. தினமும் என்னைத் தொந்தரவு செய்துதான் வருகிறாள். பெண் வீட்டார் என்னைச் சந்திக்கவே இல்லை. சந்தித்திருந்தால் நான் அவர்களிடம் கூறிக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தியிருப்பேன்.”

“நிறுத்தியிருப்பாயோ… நிறுத்தி? நீ என்ன நிறுத்துவது? உன்னைத் தேடி உனக்கு மைத்துனனாக வர இருந்தவன் அலைந்துத் திரிந்து ‘உன் வண்டவாளம் முழுவதும் அறிந்துள்ளான் நல்லவேளையாக ஆபத்தில் சிக்காமல் இருந்தோம்’ என்று சுந்தர மாமாவை வாழ்த்தி விட்டுப் போய்விட்டான்.”

“என்னைத் தேடி வந்தானா? சுந்தர மாமா எல்லாவற்றையும் கூறி விட்டாரா?” – நடராஜன் திடுக்கிட்டுக் கேட்டான்.

நடராஜன் எனக்கு எந்தவிதமான தீங்கையும் செய்யவிலலை. ஓர் அணா கூட கைமாற்று வாங்கவில்லை. அதனால் அவன் மீது எனக்குக் கோபம் வர நியாயமில்லை. ஆனால், அவன் பெயர் கெடுவதைத் தடுக்க விரும்பினேன். முதலில் இந்தக் கல்யாண அட்வான்ஸ் ஏமாற்றுதலில் இருந்து அவனை மீட்க விரும்பினேன்.

சாந்தமான குரலில் கூறினேன்: “நடராஜா! உன்னுடன் பழகத் தொடங்கிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்றுவரை உன்னுடைய சொந்த விஷயத்தைப் பற்றி நான் அறிய முற்படவில்லை. தற்செயலாகப் பஸ் நிற்குமிடத்தில் உன்னைப் பற்றி இருவர் பேசிக் கொண்டதிலிருந்து உன்னிடம் விஷயம் தெரிவித்து உன்னை நல்வழி செலுத்த வந்தேன். எத்தனை கடன் வேண்டுமானாலும் நீ வாங்கியிருக்கலாம். ஆனால், கை நீட்டி வாங்கிய நூறு ரூபாயை நான் தருகிறேன். அவர்களுக்கு திருப்பிக் கொடுத்துவிடு.”

நடராஜன் முதலில் பதில் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, “இப்பொழுது இருபது நாள்களாக நான் இந்த ஆபீஸிலும் இல்லை . என் துரதிர்ஷடம் என்னைத் தொடருகிறது” என்று விம்மினான் நடராஜன்.

கிட்டத்தட்ட நடுநிசி வேளை நெருங்கிவிட்டது.

நடராஜனும் நானும் மறுநாள் மாலை சந்திப்பதாய்க் கூறிப் பிரிந்தோம்.

கால முள்ளில் ஒரு விநாடி நேரம் கூட எதிர்பாராத மாறுதலை ஏற்படுத்தி விடும்.

மறுநாள் நான் நடராஜன் வீட்டிற்குப் புறப்படுவதற்குள் நடராஜனே என்னைத் தேடி வந்துவிட்டான்.

அவன் முகத்தில் தெளிவு இருந்தது.

அவன் கையில் கடிதம் ஒன்று வைத்திருந்தான்.

அவன் கண்களில் நீர் தளும்பி நின்றது.

கடிதத்தை நீட்டினான்.

படித்தேன். படிக்கப் படிக்க வியப்பு மிகுந்தது.

நடராஜன் முதலில் வேலை செய்துவந்த சோப்புக் கம்பெனியிலிருந்து அந்தக் கடிதம் வந்திருந்தது. முன்பு தாய் இறந்த போது அவசரமாய்ப் புறப்பட்ட நடராஜன் மற்றொரு குமாஸ்தாவிடம் ஆயிரம் ரூபாயை ஒப்படைத்ததற்கு இப்போது ஆதாரம் கிடைத்ததால் நடராஜனை வேலையை விட்டு விலக்கியதற்கு அதில் வருத்தம் தெரிவித்து இருந்தது. அத்துடன் அவன் வேலையிலிருந்து விலக்கப்பட்ட நாள் முதல் சம்பளமும், அவன் மீண்டும் செலுத்திய ஆயிரம் ரூபாயும் கடிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.

என்னால் பேச முடியவில்லை. அவனுக்கும் அதே நிலைதான். கனவோ – நனவோ என்று வியந்தேன். கனவு இல்லை என்று புரிந்த பிறகு, “என்ன செய்யப் போகிறாய் நடராஜா?” என்றேன்.

நேற்றிரவு நிலை ஒன்று. இப்பொழுது….

“என்ன செய்யப் போகிறேனா? கடன்காரர் பட்டியல் பிரகாரம் பணம் பட்டுவாடா. சுந்தரமாமாவுக்கு வட்டியுடன் ஆயிரம் ரூபாயைத் திருப்பி விடப் போகிறேன்…”

“நூறு ரூபாய்…?”

“அதற்குத்தான் உன் யோசனை கேட்க வந்தேன். என்னைத் தேடி வீட்டிற்கும் ஆபீஸிற்கும் அலைந்தாரே அந்த நண்பர் விலாசம் உனக்குத் தெரியுமா?”

“நல்ல வேளையாகத் தெரிந்து வைத்திருக்கிறேன்.”

“அங்கே நேரே போய் அவரைப் பார்த்துப் பேசிப் பணத்தைக் கொடுத்து விடுவோம்.”

நான் அதற்கு மேல் பேசவில்லை. இன்னும் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் தான் இருக்கிறான்.

அந்தப் பெண்ணை நடராஜன் மணக்கப் போவதில்லையா? மறுநாள், முன் ஏற்பாட்டின்படி நானும் நடராஜனும் அந்த நண்பர் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

அந்தி வேளை. அந்த வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்கும் போது கோயில் மணி அடித்தது.

உள்ளேயிருந்து, அருள் புரிவாய் கருணைக் கடலே’ என்று யாரோ பாடும் குரல் கேட்டது. உணர்ந்துப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

“ஸார்” என்று கூப்பிட்டேன். சட்டெனப் பாட்டின் ஒலி நின்றது. ஒரு பெண் உள்ளே இருந்து வந்தாள். என் பின்னால் நடராஜன் நின்று கொண்டிருந்தான்..

“இவள்தானப்பா… அந்தப் பெண் தர்மு!” என்றான் ரகசியமாக .

தர்முவின் சகோதரன் வெளியே போயிருப்பதாக அறிந்தோம். சிறிது நேரம் வெளியே நின்றிருந்தோம். தர்முவின் சகோதரன் வந்து விட்டான். என்னை அடையாளம் கண்டு கொண்டான்.

“என்ன ஸார்… உங்கள் நண்பரைப் பார்த்தீர்களா? இதோ இவள்தான் என் சிஸ்டர். தினம் தினம் ஆண்டவனை நோக்கித் தவம் இருந்து வாழ்க்கைக் கடலைக் கடக்கப் படகைத் தேடுகிறாள். நல்ல வேளையாக ஓட்டைப் படகில் ஏற்றாமல் இருந்தோமே” என்றான். உள்ளே அழைத்தான்.

நுழைந்தோம். “இதோ இவர்தான் நடராஜன்” என்றேன் சட்டென நண்பனை அறிமுகப்படுத்தி.

கதவுக்குப் பின் இருந்த தர்முவும், முன்பே அறிந்திருக்க வேண்டும். எங்கள் எதிரே இருந்த அவள் சகோதரன் திடுக்கிட்டான். நடராஜனை நேரே பார்ப்பவர்கள் ஒருவரும் அவன் குணத்தைத் தவறாக எடை போட மாட்டார்கள்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. “ஸார்! நீங்கள் எதிர்பார்த்தது போல் எனது நண்பன் மோசக்காரன் இல்லை ஸார்! இதோ நேரிடையே வந்துவிட்டான். உங்கள் சகோதரியின் தவம் பலித்துவிடும். தெய்வ அருள் கூடிவிடும்” என்றேன்.

நண்பர் ஏதோ கூறத் தயங்கினார். நடராஜன் இப்போது பேசினான். “நீங்கள் தயங்குவது எனக்குப் புரிகிறது. பழைய சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்த வேண்டாம். உங்களிடம் நான் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவிக்க மட்டும் வரவில்லை. தட்டு கொண்ட வரச் சொல்லுங்கள்” என்றான்.

அவன் செய்கை வியப்பை அளித்தது. அமைதி நிலவிய அந்த அறையில் அனைவர் கண்களும் நடராஜனிடமே லயித்தன. பையிலிருந்து ரூபாய் நோட்டை எடுத்தான். கையில் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பழம், பூவுடன். ஒரு நூறு ரூபாய் மட்டுமன்று, இரண்டு, மூன்று…. ஓ ! இரண்டாயிரம் ரூபாய்க்கு இருபது நூறு ரூபாய் நோட்டுகள்!

“உங்கள் சகோதரியின் தவம் பலிக்க வேண்டாமா? சகோதரியின் கல்யாணத்திற்காக இதோ இரண்டாயிரம், அத்துடன் என் தம்பி இராமநாதனையே உங்கள் தங்கையை மணக்கவும் நீங்கள் விரும்பினால் ஏற்பாடு செய்திருக்கிறேன். நான் நாளை மறுநாள் வடக்கே போகிறேன், பழைய கம்பெனியின் புது வேலையை ஏற்க ! உங்கள் சகோதரியின் திருமணம் நன்றாக நடக்க வேண்டும். உங்கள் மனவேதனை தீர அருள் பிறக்கும் நாளை எதிர்பார்த்தீர்கள். நானும் என் சஞ்சலம் தீரும் வேளையை நோக்கினேன். எல்லாம் கூடிவிட்டது.” என்று நடராஜன் நிறுத்தினான்.

உள்ளேயிருந்து தர்முவின் குரல் கேட்டது, “அண்ணா ! சற்று இப்படி உள்ளே வாங்கோ” என்றாள் தர்மு . என்ன சொல்லப் போகிறாளோ என்ற கவலையுடன் தர்முவின் அண்ணன் அறைக்குள் சென்றான்.

நடராஜனும் நானும் அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தோம். ‘இந்த மாப்பிள்ளை வேண்டாம். இவர்கள் சம்பந்தமே வேண்டாம்’ என்று ஒருவேளை சொல்லிவிட்டால்?

மெதுவான குரலில் தர்மு சொன்னாள்: “என் தவம் பலித்தது. நான் வணங்கிய அம்பாள் அருள்புரிந்து விட்டாள். அருள் புரிவாய் கருணைக் கடலே’ என்று நான் பாடியதற்கும் அவர் வருவதற்கும் சரியாக இருந்தது. நான் இவரையே மணம் புரிவது என்று தீர்மானித்து விட்டேன். என்ன காரணத்தினாலோ தம்பிக்கு என்னைக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிடார். எனக்கு எல்லா செய்திகளும் தெரியும். சூழ்நிலைதான் மனிதனை நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றுகிறது. வடக்கே வேலைக்காகச் செல்வதை ஒரு வாரம் தள்ளி வைத்து என்னைக் கல்யாணம் செய்து கொண்டு செல்லட்டும். இல்லாவிட்டால் விடுமுறையில் இவர் வரும் வரையில் காத்திருக்கிறேன். கடவுளின் அருளை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்”

எதிரே இருந்த குத்து விளக்கு இன்னும் பிரகாசமாய் எரிவது போலிருந்தது. கோயில் மணியோசை மீண்டும் எங்கிருந்தோ கேட்டது.

நடராஜன் என் வரையில் மிக உயர்ந்தவனாகவே காணப்பட்டான்.

தவம் பலித்தது. அருள் கிட்டிவிட்ட மகிழ்ச்சி அந்தக் குடும்பத்தாரிடம் தெளிவாகத் தெரிந்தது.

– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *