ராமுவின் துப்பறியும் மூளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 7,733 
 
 

உக்கடம் பெரிய கடைவீதியில் உள்ள “கணபதி ஆயில் ஸ்டோர்” எண்ணெய் கடையில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த சாமியப்பண்ணன் உடல் நிலை சரியில்லாமல் ஒரு மாதம் விடுமுறை எடுத்து விட்டார். கணபதி ஆயில் ஸ்டோரில் மேலும் ஒரு பணியாளர் உண்டு, அவருடன் முதலாளி கணபதியப்பனும் இருப்பதால் இந்த ஒரு மாதம் சமாளித்துக்கொள்ளலாம் என முடிவு செய்து விட்டார்கள். ஆனால் கூட்டம் அலை மோத கண்டிப்பாக ஒரு ஆள் தேவை என்று ஆகிவிட்டது. தெரிந்தவ்ரகளிடம் சொல்லி வைத்தார் கணப்தியப்பன்.

அடுத்த நாள் ஒருவர் வந்து கடையில் வேலை கேட்டார். இதற்கு முன்னால் ஒரு “ஆயில் கடையில்” வேலை பார்த்த்தாகவும், சம்பளம் கட்டுபடியாகாமல் இங்கு வருவதாகவும் சொல்ல மேற்கொண்டு விசாரிக்காமல் நாளை வேலைக்கு வர சொல்லி விட்டார்கள்.

மறு நாள் வந்தவர் கையோடு நல்ல் வெளுத்த துணிகள் பத்து பதைனைந்து கையோடு கொண்டு வந்திருந்தார்.அதனைக்கொண்டு முதலில் எண்ணெய் பிசுக்குகளை சுத்தமாக துடைக்க ஆரம்பித்தார். எண்ணெய் வாங்க ஆட்கள் வ்ரும்போது, அவர்களுக்கு எண்ணெய் ஊற்றி விட்டு மற்ற நேரங்களில் சுற்றி உள்ள ஆயில் டின் களில் உள்ள எண்ணெய் பிசுக்குகளை துடைத்ததால் அந்த இடம் “பளிச்” என்று ஆனது.இப்பொழுது எண்ணெய் கடையா? என்று கேட்கும் அளவுக்கு கடை இருக்கவும் கணபதியப்பனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஆகி விட்டது.

ஒரு வாரம் ஓடியது, வழக்கமாக விற்றது போக கடையில் மிச்சமுள்ள எண்ணெய் வழக்கமான அளவை விட குறைவாக இருந்தது. கணப்தியப்பன் தலையை பிய்த்துக்கொண்டார். கண் முன்னால் தான் எண்ணெய் ஊற்றுகிறார்கள், இவர் கண் கொத்தி பாம்பாய் பார்த்து கொண்டிருக்கிறார், அப்படியும் எண்ணெய் குறைய என்ன காரணம் என்று புரியவில்லை.புதிதாக வந்த ஆளும் ஒழுங்காக எண்ணெய் ஊற்றுகிறார்.இடைப்பட்ட நேரங்களில் வழியும் எண்ணெய் பிசுக்குகளை துடைத்து,அதனை ஒரு பாலித்தீன் கவரில் வைத்து கட்டி வெளியே கொண்டு போய் வைத்து விடுகிறார். தினமும் குப்பை பொறுக்கும் ஒரு அம்மாள் அதனை எடுத்து சென்று விடுகிறது. முன்னைக்கு கடை இப்பொழுது சுத்தமாக இருக்கிறது. எல்லாம் சரி ! எண்ணெய் மட்டும் அடிக்கடி குறைந்து போகிறதே? அது எப்படி என்று மண்டையை பிய்த்துக்கொள்கிறார்.

“ராமு” கணபதியப்பனின் ஒரே பையன்.அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.நல்ல புத்திசாலி.அவ்வப்பொழுது அப்பாவுக்கு துணையாக கடை கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்வான்.

அப்பா கொஞ்ச நாட்களாக யோசனையில் இருப்பதை பார்த்த ராமு அப்பாவிடம் “என்னப்பா எப்ப பார்த்தாளும் யோசனையாகவே இருக்கிறீர்கள்? கணபதியப்பன் ராமுவிடம் கொஞ்ச நாளாகவே கடையின் எண்ணெய் அளவு குறைஞ்சுகிட்டே வருது. என் முன்னாடிதான் எல்லாரும் வேலை செய்யறாங்க, அப்புறம் எப்படி எண்ணெய் குறையும்னு தெரியலயே? ராமு யோசித்தவன் நாளைக்கு எனக்கு ஸ்கூல் லீவுதான், கடைக்கு நானும் வர்றேன், அப்புறம் பார்க்கலாம் என்று அப்பாவிடம் சொன்னான்.

மறு நாள் இவன் அப்பாவுக்கு முன்னால் கடைக்கு சென்ற்போது புதிதாக சேர்ந்தவர் கடையில் எண்ணெய் டப்பாக்களில் வழிந்து கொண்டிருந்த எண்ணெய் பிசுக்குக்களை துடைத்து எடுத்து ஒரு கவரில் போட்டுக்கொண்டிருந்தார். “வாங்க தம்பி”என்று சொல்லிவிட்டு இந்த அழுக்கு மூட்டை கவரை வெளியில போட்டுட்டு வந்துடறேன் என்று சொல்லி விட்டு வெளியே கடைக்கு எதிர்புறம் உள்ள குப்பை கூடையில் போட்டு விட்டு வந்தார்.

கடைக்கு கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. ராமு அப்பாவுடன் பேசி கொண்டே வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டு, வெளியே குப்பை கூடையில் இருந்த பொருட்களை மாநகராட்சி வண்டி வந்து எடுத்து செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான்.

இரவு ஏழு மணிக்கு மேல் கூட்டம் குறைந்தவுடன் கணபதியப்பன் ராமுவை வீட்டுக்கு போக சொல்ல, உங்களுடனே நானும் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டான். கடை சாத்த அரை மணி நேரம் முன்பு புதிதாக வந்தவர், எல்லாவறையும் துடைத்து வைத்து ஒரு பாலிதீன் பையில் வைத்து விட்டு நான் சென்று வரட்டுமா என்று கேட்டார். ராமு நீங்கள் தினமும் சுத்தமாக துடைத்துவிட்டுத்தான் கிளம்புவீர்களா என்று கேட்டான். ஆமாம் தம்பி அப்பொழுதுதான் காலையில் வந்து வேலை செய்ய நமக்கு சுலபமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.கணப்தியப்பனும், ராமுவும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு கிளம்பினர்.

மறு நாள் காலையில் வெளியே எங்கோ சென்று விட்டு வந்த ராமு, அப்பாவிடம் அப்பா புதிதாக வந்து சேர்ந்த ஆளை வேலையை விட்டு நிறுத்தி விடுங்கள் என்று சொன்னான்.ஏன் ராமு, அந்த ஆள் பொறுப்பாத்தானே வேலை எல்லாம் செஞ்சுகிட்டு இருக்காரு, அவரை எப்படி வேலையை விட்டு நிறுத்தறது? ராமு பதில் சொல்லாமல் இவர்கள் கடையில் புதிதாக வந்தவர் எண்ணெய் பிசுக்கை துடைத்து மூட்டையாக வைத்திருந்த்தை எடுத்துக்காட்டினான். அதை திறந்து பார்த்த கணபதியப்பன் அதில் எண்ணெயில் ஊறிக்கிடந்த நான்கைந்து துணிகள் இருந்தன.

அப்பா இந்த துணிகளை கொண்டு போய் பிழிந்தால் குறையாமல் ஒரு லிட்டர் எண்ணெய் கிடைக்கும். இவர் தினமும் துடைப்பது போல் எண்ணெயில் முக்கி பிளாஸ்டிக் பையில் போட்டு எதிரில் உள்ள குப்பைக்கூடையில் போட்டு விடுவார். அடுத்த அரை மணி நேரத்தில் இவர் ஏற்பாடு செய்திருந்த அம்மாள் வந்து பொறுக்கிக்கொண்டு போய் விடுவார்.நான் எப்படி இதை கண்டு பிடித்தேன் என்றால் மாநகராட்சி வண்டி வந்து நம் கடை எதிரில் உள்ள குப்பைகளை அள்ளும் பொழுது இவர் போட்டிருந்த எண்ணெய் பை அங்கில்லை.அப்படியானால் அந்த பை யாராலோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்து காலையில் நானே நம் கடை ஓரத்தில் காத்திருந்து அவர் இந்த மூட்டையை வெளியே குப்பை கூடையில் போட்டுவிட்டு சென்ற பின்னால் எடுத்து வந்து விட்டேன். உங்களுக்கு நாளொன்றுக்கு இரு வேளையும் ஒரு லிட்டர் எண்ணெய் இப்படி போனால் அளவு குறைவாகத்தானே இருக்கும் என்று சொன்னான். கணபதியப்பன் ராமுவின் துப்பறியும் மூளையைக்கண்டு வியப்புடன் அவனை தழுவிக்கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *