அன்றைக்கு சரஸ்வதி பூஜை. நான் அலங்காரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் அம்மா, தேவையான புத்தகம், நோட்டுகளையெல்லாம் எடுத்துவரச் சொன்னார்கள். நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்றேன். சாமியருகில் புத்தகங்களை வைத்து, பூஜைகளைச் செய்து முடித்தோம்.
எனது அறைக்குத் திரும்பி வந்து, தேவையற்ற நோட்டுகளை பழைய பேப்பர்காரரிடம் போடுவதற்காக, எனது ரஃப் நோட்டுகளையெல்லாம் காலி அட்டைப் பெட்டி ஒன்றில் போட்டேன்.
அப்போது, “ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா..!’ என்று யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. எல்லா இடங்களிலும் பார்த்தேன். யாருமில்லை.
மறுபடியும் “ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா..!’ என்ற குரல் கேட்டது.
அட்டைப் பெட்டியிலிருந்து சத்தம் வந்தது புரிந்தது. உள்ளே பார்த்தால் எனது ரஃப் நோட்டு. அதுதான் என்னைக் கூப்பிட்டிருக்கிறது! நான் அதிர்ச்சியடைந்தேன்.
ரஃப் நோட்டு பேச ஆரம்பித்தது –
“”என்னை யாரும் மதிக்க மாட்டேங்கிறாங்கள்! என்னை ஏன் சாதாரண நோட்டு என்று கருதுகிறீர்கள்? இன்றைக்கு நீங்கள் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறதுக்குக் காரணம் நான்தான்…” என்று கூறியது.
“”எப்படி?” என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.
அதற்கு அது, “”தினந்தோறும் மற்றும் பரீட்சைக்கு முன்னாலும் படித்ததை எழுதிப் பார்க்கிறது நீங்கள். அதை எதில் எழுதிப் பார்க்கிறீர்கள்? என்மீது தானே? நீங்கள் ரஃப் நோட்டான என் மீது எழுதிப் பார்ப்பதால்தான் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுக்குறீங்க? அது மட்டுமா… ஏதாவது தொலைபேசி எண்கள், முக்கியமான தகவல்கள், முகவரிகள், முக்கியமான பெயர்கள் எல்லாவற்றையும் என்மீதுதானே எழுதுகிறீர்கள்?” என்று கேட்டதும் எனது கண்கள் கலங்கின.
உடனடியாக, அதனிடம் மன்னிப்பு கேட்டேன். ரஃப் நோட்டுகளை எடுத்துக் கொண்டு மீண்டும் என் அறை அலமாரியில் வைத்தேன்.
அவற்றிடம், “”சரி, இனி நான் உங்களையெல்லாம் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன். என்னுடைய நண்பர்களிடமும் உங்களைப் பற்றிச் சொல்கிறேன்…” என்று உறுதி கூறினேன்.
எனது வார்த்தைகளைக் கேட்ட அவை சிரித்தது போல இருந்தது.
திடீரென்று அம்மாவின் குரல்! திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன்.
“”ஐஸþ… எழுந்திரு. இன்னிக்கு சரஸ்வதி பூஜை. போய் குளிச்சிட்டு, புது நோட்டுகளையெல்லாம் எடுத்துக்கிட்டுப் பூஜையறைக்கு வா…” என்று அம்மா கூறினாள்.
“அட! நான் கண்டதெல்லாம் கனவா? இந்தக் கனவும் ஒரு நல்ல அர்த்தத்தைத்தான் கொடுத்திருக்கிறது, ரஃப் நோட்டு மூலம்!’ என்று நினைத்துக் கொண்டே, எனது புதிய புத்தகங்கள், நோட்டுக்களுடன் ரஃப் நோட்டுகளையும் எடுத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்றேன்.
– ர.லாரா ஐஸ்வர்யா ரேன், (செப்டம்பர் 2012)