கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 716 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்பா அழைத்து வந்த அந்தச் சிறுமியைக் கண்கொட்டாமல் பார்த்தான் கண்ணன். மின்மினி மாதிரி அவள் கண்கள் மின்னின. சிவப்பான உடம்பு; சுருட்டை முடி: குங்குமச் சிமிழ் மாதிரி அடக்கமான முகம். கண்ணன் அவளையே பார்த்தான். மலையாளச் சிறுமி என்பதை அவள் முகம் சொல்லியது.

“…இவள் தான் சாந்தி” என்றார் அப்பா.

அசையாமல் நின்றாள் சாந்தி. புதிய இடம்; இப்போதுதானே எல்லோரையும் பார்க்கிறாள்?

“உள்ளே வா, சாந்தி. இனிமேல் இது உன் வீடு” என்றாள் கண்ணனின் அம்மா.

ஆசையோடு அவள் கரத்தைப் பற்றினாள் அம்மா. கண்ணனுக்குப் பிடிபடாத மகிழ்ச்சி. அந்த வீட்டுக்கு அவன் ராஜா. என்றாலும் அவனுக்குக் குறை. அவனோடு வீட்டில் விளையாட யாருமில்லையே. இப்போது மகிழ்ச்சி தான். நாள் முழுதும் சாந்தியோடு விளையாடலாம்; படிக்கலாம்: பாடலாம்.

சாந்தியை அவனுக்கு நிரம்பப் பிடித்துவிட்டது. எத்தனை அழகாக இருக்கிறாள்! மின்மினியாக மூடித் திறக்கும் சின்னக் கண்கள்: குறும்பு முகம். கண்ணனின் உள்ளம் துள்ளிக் குதித்தது.

கண்ணனின் அப்பாவுக்கு டாக்டர் பிரபாகரன் நெருங்கிய நண்பர். பக்கத்து நகரில் பிரபலமான டாக்டர் அவர். சாந்தியை அவர் வீட்டில்தான் பார்த்தார் அப்பா. காந்தமாக அவரைக் கவர்ந்து விட்டாள் சாந்தி. ஆர்வத்தோடு அந்தச் சிறுமியைப் பற்றி விசாரித்தார்.

சாந்தி ஏழைப் பெண். அவள் அம்மா டாக்டர் வீட்டில் வேலை பார்த்து வந்தாள். சாந்தியின் அப்பா எங்கேயோ போய்விட்டாராம். அப்புறம் கொல்லங்கோட்டை விட்டு அவர்கள் வந்துவிட்டார்கள் பிரபாகரன்தான் ஆதரவு காட்டினார். சாந்திக்கு ஓர் அண்ணன், தாமோதரன் என்று பெயர். நீலுக்குட்டி அவள் தங்கை. இரண்டு வயது இருக்கும். மூன்று பேரையும் காப்பாற்றக் கஷ்டப்பட்டாள் தாய். தாமோதரன் அம்மாவுக்குத் துணையாக எல்லா வேலையும் செய்வான். படிக்கக்கூடிய வயது. காசு பணம் இருந்தால்தானே படிப்பு? சின்ன வயதிலேயே படிக்காமல் வீணாகிறார்களே என்று அம்மா வேதனைப்படுவாள். அவளால் என்ன செய்ய முடியும்?

அம்மாவிடம் சாந்திக்குப் பயம். சிறு தவறு செய்து விட்டாலும் கணக்கில்லாமல் அடி கிடைக்கும். அழுவதற்கும் அஞ்சுவாள். மேலும் அடிப்பாள் அம்மா என்று. பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று ஒரே ஆசை. ஏக்கமாக இருக்கும். அம்மாவிடம் சொல்ல மனம் துடிக்கும். அச்சத்தால் அடங்கிவிடும் அவள் மனம்.

டாக்டரின் பெண் சுசீலாவை வியந்து போய் பார்ப்பாள் சாந்தி. சுசீலா அழகாக அணிந்துகொண்டு பள்ளிக்கூடம் போவாள். சாந்திக்கு எப்போதாவது சாக்லேட் கொடுப்பாள். பாட்டு சொல்லித்தருவாள். சுசி அணிந்து போட்ட துணி சாந்திக்குக் கிடைக்கும்.

சாந்தியைப் பற்றி அறிந்ததிலிருந்து அப்பாவுக்கு ஓர் ஆசை. எப்படியாவது சாந்தியைத் தன் வீட்டிற்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று விரும்பியது மனம். துடியான சிறுமி படிக்காமல் கெட்டுப் போகிறாளே என்ற பரிவு, டாக்டரிடம் சொன்னார் கண்ணனின் அப்பா. பிரபாகரன் ஆதரவான பதிலைக் கேட்டுச் சொன்னார். சாந்தியின் அம்மா சம்மதித்து விட்டாளாம்.

எப்படியோ சாந்தி புதிய இடத்திற்கு வந்து விட்டாள்.

***

நான்கு நாட்கள்கூட ஆகவில்லை.

சாந்தி மலர்ச்சியோடு இருந்தாள். மெல்லிய சிரிப்பில் அலாதியான கவர்ச்சி. மின்னும் கண்களில் என்னவோ ஒருவித எழில். முன்பெல்லாம் பரட்டைத் தலையோடு திரிவாள். கருகருவென்று பளபளத்த குழல் கண்ணனின் அம்மாவுக்கு சாந்தியைப் பிடித்துவிட்டது. தோட்டத்தில் ரோஜாவும் மல்லிகையும் உண்டு. இரட்டைப் பின்னல் போட்டு விட்டாள். அழகாக ஒன்றிரண்டு மலர்களைச் சூட்டுவாள். சாந்திக்குப் பெருமையாக இருக்கும். பெண் குழந்தை அந்த வீட்டில் இல்லை. அந்தக் குறை நீங்கி விட்டது என்று அம்மா பூரித்துப் போனாள்.

சாந்தி வந்த மறுநாளே பள்ளிக்கூடத்திற்கு அப்பா அனுப்பினார். கண்ணனும் அவளுமாகப் படிக்கப் போய் வந்தார்கள். வண்ண வண்ணமாகப் பாவாடையும் சட்டையும் வாங்கித் தந்தார்கள்.

பிரமித்துப் போனாள் சாந்தி. அவள் அம்மா ஒருமுறைகூட இப்படி அழகாகத் துணி வாங்கித் தந்ததில்லை. புதிய அம்மா எவ்வளவு நல்லவள்! எத்தனை ஆசையோடு எல்லாம் கொடுக்கிறாள்!

“சாந்தி, எல்லாம் உனக்குத்தான். என்னவெல்லாம் வேண்டுமோ, கேள்… வாங்கித் தருகிறேன். சமர்த்தாகப் படிக்க வேண்டும். இது உன் வீடுதான்” என்பாள் கண்ணனின் அம்மா.

சாந்தி பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பாள். மழலையாகத் தமிழ் பேசுவாள். அழகாக இருக்கும்.

கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். சாந்தியின் சின்ன நெற்றியில் பொட்டு வைத்தாள் அம்மா. ஒரு நிமிடம் அந்தப் பூ முகத்தைப் பார்த்தாள். மின்னி மின்னிப் புரண்ட விழிகளில் விளங்காத வனப்பு, கழுத்திற்கு ஒரு ‘நெக்லஸ்’ வாங்கிப் போட வேண்டும் என்று அம்மா நினைத்துக் கொண்டாள்.

“பத்திரமாகப் போய் விட்டு வா, சாந்தி” என்றவாறு அவளை அனுப்பினாள். புன்னகை செய்தவாறு சாந்தி புறப்பட்டாள்.

சாந்தியை ஏழைப் பெண் என்று யாராவது சொல்வார்களா? ஏழை வீட்டில் பிறக்கக் கூடிய குழந்தையா அவள்? இருந்தாலும் சாந்தி அதிர்ஷ்டக்காரி. எப்படியோ பணக்காரர் வீட்டிற்கு வந்துவிட்டாள். செல்வ மகளாகக் கண்ணனின் அம்மா மதிக்கிறாள். எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய பாக்கியமா இது?

“சாந்தி சாந்திதான்! பட்டுப் பூச்சி மாதிரிப் பார்க்கும் கண். பார்க்க விரும்பும் அழகு. சாந்தியின் அம்மா மட்டும் அவளிடம் ஏன் அன்பு காட்டுவதில்லையாம்? கண் மண் தெரியாமல் சாந்தியை அடிப்பாளாம், அம்மா. யாருக்காவது மனம் வருமா? சாந்தமான அந்த முகத்தைப் பார்த்த பிறகு கோபம் வருமா? அடிக்கக் கைகள் நீளுமா? சாந்தியின் அம்மா நிரம்பக் கொடுமையுடையவளாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் சின்னக் குழந்தையைக் கண் கலங்க விடுவாளா?

கண்ணனின் அம்மா இப்படித்தான் நினைத்துக் கொள்வாள். சாந்தி எப்படியோ தப்பினாள். இனி மேல் அவளுக்குத் துன்பம் இல்லை. கண்ணனுக்குத் தங்கை! அம்மாவுக்குப் பெண்!

***

சன்னல் வழியே வெளியே பார்த்தாள் சாந்தி. மாலைக்காற்று அசைந்து குலுங்கியது. தென்னை ஓலைகள் சலசலத்தன. எதிரே சற்று தூரத்தில் தென்னைமரம்; கண் கொட்டாமல் அதைப் பார்த்தாள் சாந்தி. அவள் மனம் பறக்கத் தொடங்கியது.

தென்னை மரக் கூட்டத்தில்தான் அவள் அம்மாவுக்கு குடிசை. பக்கத்தில் குளிர்ந்த புனல் ஓடை. ஓடைக் கரையில் உயர்ந்து வளர்ந்த தென்னை மரத்தருகே சாந்தி உட்கார்ந்திருப்பாள். அவள் ஆசையோடு நீலுக்குட்டியை வைத்துக் கொண்டு அங்கே உட்கார்ந்திருப்பாள். அம்மா வீட்டில் இல்லாத நேரங்களில் அவள்தான் காவல். பள்ளிக்கூடம்தான் கிடையாதே அவளுக்கு!

நீலுக்குட்டி குறும்புக்காரி. பல் இல்லாத வாயால் பச்சைச்சிரிப்புச் சிரிப்பாள். சாந்திக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நீலுவின்மேல் அம்மாவுக்கு அன்பு அதிகம்.

புதுப்புது சட்டை தைத்து வருவாள். சின்னவள் மட்டும் அவளுக்கு உயர்வு, அம்மாவுக்கு நிரம்ப ஓர வஞ்சனை. நீலுவுக்கு மட்டும் புதிது. அவளுக்குச் சுசீலாவின் பழைய துணிகள். புதிதாகத் தைத்துக் கேட்க மனம் ஆசைப்படும். எப்படிக் கேட்பது? தோலை உரித்து விடுவாளே! தென்னை மரத்தோடு கட்டி வைத்து அடிக்காததுதான் குறை. தன்னிடம் அம்மாவுக்குத் துளிகூட அன்பு இல்லை என்று நினைத்தாள் சாந்தி. சாந்தியை அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. இருந்தால் ஏன் எங்கேயாவது ஓடிப்போ என்று அம்மா அடிக்கடி சொல்ல வேண்டும்? எங்கேயாவது போய்விட வேண்டும் என்று நினைப்பாள் சாந்தி நீலுவை அப்புறம் யார் தூக்கி வைத்துக் கொள்வார்கள்? அப்படிச் செய்தால்தான் அம்மாவுக்குப் புத்தி வரும் என்று பூ மனம் நினைக்கும்.

ஒருநாள் சாந்திக்கு நல்ல அர்ச்சனை கிடைத்தது.

நீலுவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே போயிருந்தாள் அம்மா, நீலுக்குட்டி உறங்கிக் கொண்டிருந்தாள். வாசலில் உட்கார்ந்திருந்த சாந்தியைப் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் விளையாடக் கூப்பிட் டார்கள். சாந்திக்கு நிரம்ப ஆசை. நேரம் போனதே தெரியாமல் விளையாடினாள். மாலையில் அம்மா வந்தாள். நீலுக்குட்டி தனியே அழுதாள், தூங்கி எழுந்ததும். கோபம் வந்துவிட்டது அம்மாவுக்கு. சாந்தியைப் பற்றி இழுத்துக் கொண்டு போனாள். அவ்வளவுதான் மற்றவர்களுக்குத் தெரியும்.

சாந்தி சுருண்டு விழுந்துவிட்டாள். நன்றாக அடித்து விட்டாள் அம்மா. அழுவதற்குக் குரல் இல்லை. பாவம், அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறாள். வந்ததும் வராததுமாக நீலு அழுதால்? குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத்தானே அம்மா போனாள்?

விம்மி விம்மி அழ வேண்டும் போல் இருந்தது சாந்திக்கு. தென்னை மரத்தருகே போய் சாய்ந்தாள். கன்னத்தில் கை பதிந்தது. எத்தனை நேரம் உட்கார்ந்திருந் தாளோ அவளுக்கே தெரியாது. உறங்கிப் போனாள்.

வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தபோது அம்மா நின்றிருந்தாள். கையில் காடா விளக்கு இருந்தது. சுற்றுப்புறமெல்லாம் இருட்டு. குளுகுளுவென்று காற்று வீசியது. தவளைகள் ஒன்றிரண்டு குரல் கொட்டின.

“எங்கேயெல்லாம் தேடுவது?” என்றாள் அம்மா. தூக்கக் கலக்கம். சாந்தியால் பேச முடியவில்லை. பேசுவ தற்கு அச்சம். மெல்ல அவள் கையைப் பற்றித் தூக்கினாள் அம்மா. வீடு வரும் வரை இருவரும் பேசவில்லை.

நீலுக்குட்டி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அண்ணனும் நித்திரை போயிருந்தான். பகல் முழுவதும் அவனுக்கு வேலை. பாவம், சின்ன வயதிலேயே அவனுக்கு எத்தனை பொறுப்பு?

அம்மா சோற்றுத் தட்டைக் கொண்டு வந்தாள் சாந்தியிடம்.

பிசைந்த சோற்றைச் சாந்திக்கு ஊட்டினாள். சாந்திக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லாம் கனவா? ஒரு நாளாவது இந்த விசித்திரம் நடந்திருக்கிறதா? நீலுவுக்குத்தான் அந்த அதிர்ஷ்டம், தினமும் அம்மா தானே சோறு ஊட்டுவாள்? இன்றைக்கு அம்மாவுக்கு என்ன வந்தது?

ஓர விழியால் அம்மாவைப் பார்த்தாள் அவள். சாந்திக்கு அழ வேண்டும் போல் இருந்தது. இந்த அம்மாவைச் சாயங்காலம் ஏன் சபித்தோம் என்று மனம் கலங்கியது. அம்மாவுக்குத் தெரியாமல் ஓடிப்போய் விட வேண்டும் என்று நினைத்தாளே!

“சாந்தி…!” என்றாள் அம்மா.

“சமர்த்தாக இருக்கணும்.”

தலையசைத்தாள் அவள்.

நெஞ்சு முழுவதும் அம்மா நின்றாள். அன்றைக்கு நித்திரை வர நேரமாயிற்று சாந்திக்கு.

நினைவில் மூழ்கி உட்கார்ந்திருந்தாள் சாந்தி.

“கோயிலுக்குப் போகலாம், கிளம்பு, சாந்தி” என்றவாறு நின்றான் கண்ணன்.

கண்கள் மருள மருள எழுந்தாள் அவள்.

***

இரண்டு நாட்களாகவே சாந்தி என்னவோ போல் இருந்தாள். முகம் கூம்பிய அல்லியாக இருந்தது. மின்மினிப் பூச்சி மாதிரி பளபளக்கும் விழிகளில் குறுகுறுப்பே இல்லை. சாந்திக்கு என்ன வந்துவிட்டது?

நேற்று பள்ளிக்குப் போய் வந்ததிலிருந்து அவளுக்கு உடம்பு சரியில்லை. காய்ச்சல் கண்டவள்போல் இருந்தாள். எதற்கோ ஏங்குவது போல் இருந்தாள். அம்மாவுக்கு வருத்தமாக இருந்தது. சாந்திக்கு என்ன குறை? அவள் அம்மாவைப் போல் அடிப்பதற்கு யாருமில்லையே! ஏன் இப்படி மருள வேண்டும்? நித்திரையில் புலம்பினாள். ‘நீலுக்குட்டி’ என்று முணுமுணுத்தாள். மங்கலான குரலில் ஏதோ பாடுவாள். குழந்தைக்குப் பாடிக் காட்டும் பாட்டுதான். ‘அம்மா… அம்மா’ என்று தீனக்குரல். “இனி மேல் தப்புச் செய்ய மாட்டேன். நல்லவளா நடந்து கொள்வேன்’ என்ற மொழிகள்.

கண்ணனின் அம்மா கலங்கினாள். ஏன் இந்தப் புலம்பல்? அவளுக்கு என்ன குறை?

***

சாந்தி உட்கார்ந்திருந்தாள்.

தாயில்லாப் பிள்ளை மாதிரி பரிதாபமாக இருந்தது முகம். முகத்திலே இருட்டு. சாந்திக்கு என்னவோ வேண்டும் போல் இருந்தது. என்னவாக இருக்கும் என்றுதான் அம்மாவுக்குப் புரியவில்லை.

“சாந்தி, உனக்கு என்னம்மா வேணும்?”

“ஒன்றும் வேண்டாம்” என்று தலையசைத்தாள்.

“பழம் சாப்பிடுகிறாயா?”

“வேண்டாம்.”

“சாந்தி, உனக்கு நெக்லஸ் செய்து தரப் போகிறேன். நாளை மறுநாள் போட்டுக் கொள்ளலாம், சரிதானே?”

“வேண்டாம்.”

அப்புறம் அம்மா ஒன்றிரண்டு கேட்டாள்.

“என்னதான் வேண்டும். சாந்தி? சொல்லேன்!’ தயங்கியவாறு அவள் முணுமுணுத்தாள்.

“அம்மா… அம்மாதான்! அப்புறம் நீலுக்குட்டி”

“நிஜமாகவா?”

தலையசைத்தாள் சாந்தி. அதிர்ந்து போனாள் அம்மா. “என்ன?” என்றவாறு அப்பா வந்தார்.

***

புரிந்தது. ஆயிரம் அடித்தாலும் அன்னையின் கரத்திற்கு இணையேது? அந்த அணைப்பு! குழந்தைக்கு வேறென்ன வேண்டும்? செல்லக் குழந்தையாக மற்றவர் வீட்டில் இருந்தாலும் அது சிறை வாழ்வு தானோ?

சாந்தியை வெறித்துப் பார்த்தாள் அம்மா. பார்வையில் ஏக்கம்! அப்பா பார்த்தார். சொன்னார்:

“சாந்தி, அம்மாதானே வேண்டும்? போகலாம்; நாளைக்கே போகலாம். அம்மாவிடமே நீ இருக்கலாம்!”

ஒளி மேகத்தில் மின்னலிட்டது போல் அவள் முகத்திலும் நெளிந்தது.

– 1960 – ‘கண்ணன்’ இதழில் பிரசுரமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *