ஒரு ஊரில் சுந்தரம் என்ற உழவன் இருந்தான். தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம், “”எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது!” என்றாள். மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன்.
“இது மாம்பழம் பழுக்கும் பருவம் அல்ல. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம்பழம் கிடைக்கும். என்ன செய்வது?’ என்று சிந்தித்தான் அவன்.
நள்ளிரவில் யாரும் அறியாமல் அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைந்தான். நீண்ட நேரம் தேடி மாம்பழம் இருந்த மரத்தை கண்டுபிடித்தான். உயரமாக இருந்த மரத்தில் முயற்சி செய்து ஏறினான்; மாம்பழத்தை பறித்தான்.
பொழுது புலரத் தொடங்கியது. மரத்தைவிட்டு இறங்கினால் காவலர்களிடம் சிக்கிக் கொள்வோம். இருட்டும் வரை மரத்திலேயே ஒளிந்து இருப்போம் என்று நினைத்தான். மரத்தின் கிளைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டான். அவனுடைய கெட்ட நேரம், அரசர் தம் ஆசிரியருடன் அங்கே வந்தார். அவன் ஒளிந்திருந்த மரத்தின் நிழலில் அவர்கள் இருவரும் நின்றனர். அங்கிருந்த காவலர்கள் அரசர் அமர்வதற்காக நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்தனர். அதில் அமர்ந்தார் அவர்.
ஆசிரியரைப் பார்த்து, “”இப்போது நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன். நீங்கள் பாடம் நடத்தலாம்!” என்றார்.
“”அரசே! அப்படியே செய்கிறேன்!” என்ற ஆசிரியர் தரையில் அமர்ந்தார். அவருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார். மரத்தில் ஒளிந்து இருந்த அவன் இதைப் பார்த்தான். “இவர்கள் இருவரும் என்னைவிட முட்டாள்களாக இருக்கிறார்களே’ என்று நினைத்தான்.
“”இங்கே மூன்று முட்டாள்கள்!” என்றபடி கீழே குதித்தான். இதைக் கேட்ட அரசன், “இங்கே மூன்று பேர்தாம் இருக்கிறோம். இவன் என்னையும் முட்டாள் என்கிறானே…’ என்று கோபம் கொண்டார்.
அவனைப் பார்தது, “”எங்கள் இருவரையும் உன்னுடன் சேர்த்து முட்டாள்கள் என்று சொல்கிறாயா? நாங்கள் முட்டாள்களா? எங்களை முட்டாள்கள் என்று நிரூபிக்காவிட்டால் உன் உடலில் உயிர் இருக்காது!” என்று கத்தினார் மன்னர்.
நடுக்கத்துடன் அவன், “”அரசே! நான் ஏன் சொன்னேன் என்பதற்கு விளக்கம் சொல்கிறேன். மாம்பழப் பருவம் அல்லாத காலத்தில் என் மனைவி மாம்பழத்திற்கு ஆசைப்பட்டாள். அரண்மனைத் தோட்டத்தில்தான் மாம்பழம் கிடைக்கும். அங்கே சென்றால் உயிருக்கு ஆபத்து என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் மனைவியின் மீது கொண்ட ஆசையால் இங்கே வந்து ஆபத்தில் சிக்கிக் கொண்டேன். என்னை நீங்கள் முட்டாள் என்று ஒப்புக் கொள்வீர்கள்.
“”மதிப்பிற்கு உரியவர் ஆசிரியர். எப்போதும் அவர் உயர்ந்த இருக்கையில் அமர வேண்டும். மாணவர்கள் கீழே அமர்ந்து பணிவாகப் பாடம் கேட்க வேண்டும். ஆனால், நீங்களோ அரசர் என்பதால் ஆசிரியரை மதிக்கவில்லை. நாற்காலியில் அமர்ந்து உள்ளீர். ஆசிரியரை மதிக்காத நீங்கள் இரண்டாவது முட்டாள்.
“”எந்த நிலையிலும் ஆசிரியர் தன் பெருமையை விட்டுத் தரக்கூடாது. பொருளாசை காரணமாக இவர் தன் நிலையைவிட்டுக் கீழே அமர்ந்து உங்களுக்கு பாடம் சொல்லித் தந்தார். இவர் மூன்றாவது முட்டாள்!” என்றான் அவன்.
இதைக் கேட்ட அரசர், “”ஆசிரியருக்கு மதிப்பு அளிக்காதவன் முட்டாள் என்பதை உன்னால் அறிந்து கொண்டேன். இனி இப்படிப்பட்ட தவறு செய்ய மாட்டேன்!” என்றார்.
அவனுக்கு ஒரு கூடை மாம்பழமும், பரிசும் தந்து அனுப்பி வைத்தார்.
– நவம்பர் 12,2010