மழை நல்லதுதானே ஃப்ரெண்ட்ஸ்?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 4,019 
 

அம்மா அவ்வளவு நேரம் சமாதானப்படுத்தியும்கூட, மழை நல்லதுதான் என்பதை மீனா ஒப்புக்கொள்ளவே இல்லை. காலையில் சீக்கிரமாகவே எழுந்து, களிமண்ணில் தண்ணீர் கலந்து, கால், கை, உடை என அனைத்தையும் அழுக்காக்கி, ரசித்து ரசித்து ஒரு காண்டாமிருகப் பொம்மையைச் செய்து, வெயிலில் காயவைத்துவிட்டுப் பள்ளிக்குச் சென்றிருந்தாள் மீனா. கொம்பு மட்டும் சரியாக வளராத அந்தப் பொம்மைக்கு பீம் என்று பெயரும் வைத்திருந்தாள்.

ஆனால், அவள் வீடு திரும்புவதற்குள் காண்டாமிருகத்தை மீண்டும் களிமண்ணாகவே மாற்றி வைத்திருந்தது மழை. பிறகு எப்படி மீனாவுக்கு மழை பிடிக்கும்? அதனால்தான் அந்தக் கோபம்.

அதனால் இரண்டு நாள்கள் கழித்துப் பள்ளியில் நடக்கவிருக்கும் கட்டுரைப் போட்டியில், இந்தச் சோகக் கதையைச் சொல்லி ‘மழை ரொம்ப கெட்டது மிஸ்’ என எழுதவிருப்பதாக, தன் அம்மாவிடம் கோபமாகச் சொன்னாள் மீனா. இரண்டு நாள்கள் சென்றன. அந்த இரண்டு நாள்களும் மீனாவிடம் மன்னிப்புக் கேட்பதற்காகவோ என்னவோ, இரவு முழுக்க தூறிக்கொண்டே இருந்தது மழை.

தினமும் காலையில் பள்ளி செல்வதற்கு முன் தோட்டத்துக்குச் செல்வது மீனாவின் வழக்கம். போட்டி நடக்கவிருக்கும் அன்றைய தினமும் அப்படித்தான் தோட்டத்துக்குச் சென்றாள். செம்பருத்தி, மல்லி, ரோஜா என அத்தனை செடிகளும் அவளைப் புன்னகையுடன் வரவேற்றன. எப்போதும் இல்லாத அளவுக்குத் தேனீக்கள் தோட்டத்துக்கு வந்திருந்தன. ஓரமாக இருந்து இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது செடிகளுக்கு நீர் தெளிக்கும் பூவாளி.

சில நாள்களுக்கு முன்னர் வீசியெறிந்த மாம்பழ விதையும் லேசாகத் துளிர்விட்டிருந்தது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த மீனா, காண்டா மிருகத்துக்கு வைத்த பீம் என்ற பெயரை மரத்துக்கு வைத்து மகிழ்ந்தாள். பின்னர் பள்ளி சென்ற மீனா, தன் கதைக்கு இப்படித் தலைப்பு வைத்துவிட்டு எழுத ஆரம்பித்தாள்.

‘மழை ரொம்ப நல்லது ஃப்ரெண்ட்ஸ்…’

காதோரம் அமர்ந்துகொண்டு அந்தக் கட்டுரையை ரசித்து வாசித்துக்கொண்டிருந்தது, தோட்டத்தில் அன்று மலர்ந்திருந்த மீனாவின் ரோஜா.

– டூடுல் கதைகள், ஜூன் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *