(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னாளிலே பொன்னண்டான் என்னும் பெயருடையவன் ஒருவன் பாண்டி நாட்டிலே இருந்தான். அவனுக்குக் கணக்கற்ற பொருள் இருந்தது. அவன் பிறர்க்கு உதவி செய்வதில் பரந்த நோக்கமுங் கொண்டவன். செல்வம் வளருவதற்குத் தகுந்த ஏற்பாட்டைச் செய்துகொள்ளாமல் பெருங்கொடை யாளனாகச் சிறந்து நின்றான். அதனால் அவனுடைய பொருள்வளம் மிகவும் குறைந்துவிட்டது. விரைவில் வறுமை அவனைப் பற்றிவிடும் போல் இருந்தது.
ஒருநாள் ஒரு புலவர் பொன்னாண்டானைப் புகழ்ந்து பாடிக்கொண்டு சென்றார். பொன்னாண்டான் தன்னுடைய செல்வப் பெருக்குச் சுருங்கி வரு தலை அப் புலவர்க்குக் கூறிச் சிறிது பொருள் கொடுத்தான். ‘கொடையினால் எனக்கு மிடி வரும் போல் இருக்கிறது’ என்று கூறினான்.
பொன்னாண்டான் புகன்றதைக் கேட்ட புலவர், நீ எவ்வழியில் பொருளைப் பெருக்குகிறாய்?” என்று கேட்டார். ‘நான் எவ்வழியாலும் பெருக்கவில்லை. செலவு மட்டுந்தான் செய்து கொண்டிருக்கிறேன்’ என்று பதிலுரைத்தான் பொன்னாண்டான்.
புலவர் பொன்னாண்டானைப் பார்த்துப், ‘பெருக்காத செல்வம் அழிந்துபோகும். நீ செல்வத்தைப் பெருக்குவதற்கு ஏற்பாடு செய்து கொள்ளாமல் செலவு செய்வதற்கு மட்டும் எவ்வாறு ஏற்பாடு செய்து கொண்டாய்? உனக்குள்ள செல்வத்தை வாணிகத் திலும், பிறவழிகளிலும் நன்கு பெருக்குவாயாக!’ என்று கூறிச் சென்றார். பொன்னாண்டான் தனக்கு எஞ்சியுள்ள செல்வத்தைப் பல வழிகளிலும் பெருக்கிக் கொடையிலே சிறந்து விளங்கினான்.
“பொருள்தனைப் போற்றி வாழ்” (இ – ள்.) பொருள்தனை – செல்வத்தை, போற்றி – மேன் மேலும் மிகும்படி காத்து, வாழ் – வாழ்வாயாக.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955