புத்திசாலி ஜெரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,124 
 
 

அந்திமந்தாரை காட்டில் ஜெரி என்ற எலி சர்வ சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தது. அது நன்றாக விளைந்திருந்த தானியங்களையும், கனிகளையும், இளங்குருத்துக்களையும் தின்று தின்று கொழு கொழுவென்று வளர்ந்திருந்தது.

எந்நேரமும் விளையாட்டும். ஆட்டம் பாட்டமும் அதன் சொத்தாக இருந்தன. ஒரு சமயம் ஜெரி தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த பூனை டாம் பார்த்துவிட்டது.

அது கொழுகொழுவென்ற ஜெரியின் உடலைக் கண்டு மயங்கி, அதன் மேல் பாய்ந்தது. தற்செயலாக இதைக் கவனித்த ஜெரி, டாமை விட அதிவேகமாகப் பாய்ந்து சென்று, தன் வளையில் ஒளிந்து கொண்டது.

டாம், ஜெரியைப் பிடிக்கப் பாய்ந்த இடத்தில், பறவைகளைப் பிடிப்பதற்காக வேடன் ஒருவன் வலையைப் பரப்பி வைத்திருந்தான். இதைக் கவனிக்காத பூனை டாம் வலையில் சிக்கிக் கொண்டது. சிறிது நேரத்தில் நிலவரத்தைக் கவனிக்க வந்த ஜெரி எலி, டாம் பூனையானது வேடனின் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டது.

அது இப்போது வலையை விட்டு வெளியே வந்து, “”நீ என்னைப் பிடிக்க வலையை உன் பார்வையாலே போட்டாய். விதி உன்னை உண்மையான வலையில் சிக்க வைத்து விட்டது. பார்த்தாயா?” என்று கேலி பேசியது.
பூனை டாம் தலை குனிந்து கொண்டது. டாம் பூனையை பயங்கரமாக வெறுப்பேற்றியது. அந்த நேரத்தில் பருந்து கஜாவின் கண்களில் பட்டது எலி.

சரியான நேரத்தில் ஒரே தாவலாக அந்த ஜெரி எலி மீது பாய்ந்து அதை அமுக்கி விட வேண்டும் என்பது கஜாவின் திட்டம். இதை ஜெரி கவனித்துவிட்டது. அது தன் வளையை விட்டு வெகு துõரம் வந்துவிட்டதால் திரும்ப வளைக்குச் செல்வது சிரமம் என்று கண்டு கொண்டது.

மின்னல் வேகத்தில் ஜெரியின் மூளை வேலை செய்தது. அது டாமைப் பார்த்து, “”டாம் பூனையாரே, வானில் கழுகு கஜா வட்டமிடுகிறது. அது எந்நேரத்திலும் என் மீது பாய்ந்து விடலாம். நீ மட்டும் சம்மதித்தால் நான் உன் மடியில் வந்து உட்கார்ந்து கொள்கிறேன். இதற்கு நீ என்னை அனுமதித்தால் கஜா சென்றவுடன் இந்த வலையை என் கூர்மையான பற்களால் அறுத்து உன்னை விடுதலை செய்து விடுகிறேன். எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். எனக்கு உதவு!” என்றது.

டாம் சம்மதித்தது. கஜா ஜெரியைப் பிடிக்க இறங்கிய அதே வேளையில் ஜெரி துள்ளிக் குதித்துப் டாமின் மடியில் சென்று அமர்ந்தது.

இதைக் கண்ட கஜா, சரி, நமக்கு இன்று கொடுப்பினை அவ்வளவு தான் என்று எண்ணிக் கொண்டே, அங்கிருந்து பறந்து சென்றது. அது சென்றவுடன் டாம் பூனையின் மடியிலிருந்து இறங்கிய ஜெரி சொன்னது.

“”முதலில் நான் உன்னால் பயந்தேன். இரண்டாவதாகக் கஜாவினால் பயந்து போனேன். ஆகையால் நான் சாப்பிட்டவை எல்லாமே ஜீரணமாகிப் போய்விட்டது. பசியுடன் இருக்கும் என்னால் இந்த வலையைத் துண்டு துண்டாக வெட்ட முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆகவே, நான் முதலில் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து என் உடலில் வலு ஏற்றிய பின் இந்த வலையை வெட்டி உன்னை விடுவிக்கிறேன். அது வரை பொறு!” என்ற ஜெரி அங்கிருந்து கிளம்பியது.

அப்போது டாம் பூனை ஜெரியைத் திட்டியது.

“”அடேய், நம்பிக்கைத் துரோகி! உன் உயிரைப் போலத்தான் எல்லா உயிரும் என்று நினைத்துக் கூடப் பார்க்காமல், உதவி பெற்று முடித்தவுடன் ஓடி ஒளிகிறாயே! வெட்கமாக இல்லை!” என்று திட்டி தீர்த்தது.

ஆனால், ஜெரி அதைச் சட்டை செய்யவில்லை. அங்கிருந்து கிளம்பித் தன் வளைக்குச் சென்றது. ஒரு மணி நேரமாயிற்று. ஜெரி திரும்பி வரவேயில்லை!
“அடக் கடவுளே, ஒரு சிற்றெலிக்கு ஆசைப்பட்டு என் அருமையான இன்னுயிரைத் துறக்கப் போகிறேனே! ஜெரி என்னை ஏமாற்றி விட்டதே! ஆசை காட்டி மோசம் செய்து விட்டதே!’ என்று டாம் பூனை கதறி அழுதது.

துõரத்தில் வேடன் வந்து கொண்டிருந்தான்.

“வேடன் வந்து விட்டானே, நான் சாகப் போகிறேன்! என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையே! ஜெரியே, என்னைக் காப்பாற்று!’ என்று கூக்குரலிட்டது டாம்.

திடீரென அங்கே ஜெரி தோன்றியது. விறுவிறுவென அது வலையைச் சின்னச் சின்னதாகக் கத்தரித்துப் போட்டது. அதற்குள் வேடன் நெருங்கி விட்டான்.

“வேடன் வந்துவிட்டான். சீக்கிரம்… சீக்கிரம்…’ என்று நெஞ்சம் அதிரச் சொன்னது டாம். வேடன் இன்னும் சற்று நெருங்கி வரவும், பூனை வலையிலிருந்து தப்பிக்கவும் சரியாக இருந்தது. தலை தப்பியது என்ற பரபரப்பில் எத்திசையில் ஓடுவது என்று தெரியாமல் ஓட்டமாய் ஓடி மறைந்தது டாம்.

ஜெரியும் சீக்கிரமாக ஓடித் தன் வளையை அடைந்தது. வேடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. வளையிலிருந்து ஜெரி வெளியே வந்தது. வழக்கம் போல இரை பொறுக்கியது. அப்போது அங்கிருந்த மரத்தின் மேல் ஒரு குரங்கு கபீஷ் அமர்ந்திருந்தது. அது ஜெரியை அழைத்தது.
ஜெரி மரத்தை அண்ணாந்து பார்த்தது.

“”நேற்று நடந்த அத்தனை சம்பவங்களையும் நான் பார்த்தேன். எனக்கு ஓர் சந்தேகம். அந்தக் கழுகு அந்த இடத்தை விட்டுப் போனவுடனேயே, நீ ஏன் வலையை அறுத்து அந்தப் டாம் பூனையைக் காப்பாற்றவில்லை. டாம் எவ்வளவு பயந்து போனது தெரியுமா?” என்றது குரங்கு கபீஷ்.

இதைக் கேட்ட ஜெரி எலி “பக்’கெனச் சிரித்துவிட்டது.

“”என்னை என்ன அவ்வளவு பெரிய பைத்தியக்காரன் என்றா நினைத்து விட்டீர்கள்? . டாம் பூனை என் எதிரி. அதே சமயம் ஆபத்தில் உதவியதால் அது நண்பனாகவும் ஆனது. ஆகவே நானும் அதைக் காப்பாற்ற எண்ணினேன்.

“”கழுகு சென்றவுடன் நான் காப்பாற்றி இருந்தால், அந்தப் டாம் பூனை தப்பிப் போவதற்கு முன்னால் என்னையும் கொன்று தின்று விட்டுத்தான் போயிருக்கும். நானும் கழுகிடமிருந்து தப்ப வேண்டும். டாம் பூனையும் வேடனிட மிருந்தும் தப்ப வேண்டும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பூனை என்னை நினைக்காது அல்லவா? அதனால்தான் அப்படி செஞ்சேன்,” என்றது ஜெரி.

ஜெரியின் கூரிய அறிவை எண்ணி பாராட்டியது கபீஷ் குரங்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *