கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,353 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

அழியாமல் நிற்கும் கீர்த்தி

சிதம்பரத்தில் வாழும் அம்பலவர் இவ்வுலகில் அழியாது என்றும் நிலைத்திருப்பது புகழே என்று அறிந்தார். “புகழ் தரும்படியான எச்செயலைச் செய்யலாம்” என்று எண்ணினார். பலநாள் காத் திருந்து மாணிக்கவாசகர் சிதம்பரம் வந்தபொழுது ஒருநாள் பெரியவர் வடிவமாகப்போய் அவர் பாடிய பாடலைக் கூறச்செய்து அவற்றைத் தம் கையால் எழுத்தாணிகொண்டு ஏட்டில் எழுதினார். தாம் எழுதியவை என்று அனைவரும் தெரிந்து தம்மைப் புகழ்ந்து கொண்டாடவேண்டும் என்பதற்காக அவ்வேடுகளைத் தன் சபைக்கு முன்னால் வைத்து உள்ளே சென்றார். மறுநாள் விடிந்து கதவைத் திறந்து பார்க்க, இவ்வேடுகள் இருப்பதைக் கண்டார்கள். கண்டு மாணிக்கவாசகரிடம் காட்ட அவர் நடந்தவற்றைச் சொன்னார். “தமிழ் வேத மாகிய திருவாசகம், திருக்கோவையாரைக் கேட்டு அம்பலவாணரும் அவற்றை ஏட்டில் எழுதித் தமி ழுலகிற்கு அளித்தார்” என்ற புகழை எல்லோரும் சொல்லக் கேட்டு அம்பலத்தரசர் மகிழ்ந்தார். இவ் விதம் தனக்குச் சமம் இல்லாததாகிய உயர் புகழ் அல்லாமல் உலகத்தில் அழியாது இருப்பது வேறு எதுவும் இல்லை என்று வள்ளுவரும் கூறினார்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றது நிற்பது ஒன்றில்.

ஒன்றா = தனக்குச் சமானம் இல்லாத
உயர்ந்த = மேலான
புகழ் அல்லால் = கீர்த்தி இல்லாமல்
உலகத்து = நிலஉலகின்கண்ணே
பொன்றாது = அழியாது
நிற்பது = என்றும் நிலைத்திருப்பது
ஒன்று இல் = வேறு எதுவும் இல்லை.

கருத்து: உலகில் அழியாது நிற்பது புகழைத்தவிர வேறொன்றுமில்லை.

கேள்வி: உலகில் என்றும் நிலைநிற்பது எது?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *