முன்னொரு காலத்தில் பெரும் புலவரான வாசஸ்பதி மிசிரர், காவியம் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார். எப்போதும் காவியம் பற்றிய நினைவிலேயே இருந்தார். உலக நினைவே அவருக்கு இல்லை. பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்ய நினைத்தனர். தங்கள் எண்ணத்தை அவரிடம் கூறினர்.
அவர்களை மறுத்துப் பேசாத அவர் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். அவருக்கும் பாமதி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. காவியம் எழுதும் சிந்தனையிலேயே ஆழ்ந்து இருந்தார் அவர். திருமணம் நடந்த நினைவே அவருக்கு இல்லை.
மனைவியாக வந்த மங்கை நல்லாளோ தன் கடமையில் சிறிதும் தவறவில்லை. அவர் எழுதுவதற்குத் துணையாக விளக்கு ஏற்றுவது, உணவு பரிமாறுவது என்று எல்லா வேலைகளையும் செய்து வந்தாள். இப்படியே பல ஆண்டுகள் சென்றன. இருவரும் முதுமை அடைந்தனர்.
காவியத்தை எழுதி முடித்த அவருக்கு உலக நினைவு வந்தது. தன் அருகே பெண்மணி ஒருத்தி நிற்பது அவருக்குப் புரிந்தது.
“”நீ யாரம்மா?” என்று கேட்டார்.
“”என்னை உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டாள் அவள்.
“”தெரியவில்லையே!” என்றார் அவர்.
“”நான்தான் உங்கள் மனைவி!” என்றாள் அவள்.
அப்போதுதான் தனக்குத் திருமணம் ஆனது அவர் நினைவிற்கு வந்தது. இல்லற வாழ்வில் ஈடுபடாமலே முதுமை அடைந்ததை அறிந்தார். மனைவியின் தியாக வாழ்க்கை புரிந்தது.
உணர்ச்சி வயப்பட அவர், “”அம்மணி! நான் உனக்குச் செய்ய வேண்டிய கடமை எதையும் செய்யவில்லை. ஆனால், நீயோ அதைப் பொருட்படுத்தாமல் எல்லாக் கடமைகளையும் பொறுமையுடன் செய்து வந்தாய். மாதர் குலத்திற்கே எடுத்துக்காட்டு நீ. உன் தியாகத்திற்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியவில்லை. நான் எழுதிய இந்தக் காவியத்திற்கு உன் பெயரையே வைக்கிறேன். இன்று முதல் இது “பாமதி காவியம்’ என்று வழங்கப்படும். இந்தக் காவியம் உள்ளவரை உன் பெயர் நிலைத்து நிற்கும்!” என்றார்.
– அக்டோபர் 29,2010