(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இராமபிரான் அயோத்தியில் அரசாட்சி செய்து கொண்டிருக்குங் காலத்திலே ஓர் ஊரில் ஒரு பார்ப்பனன் இருந்தான். அவனுடைய மனைவி மிகவுங் கொடியவள். அவள் தான் சொன்னவாறே நடக்குமாறு தன் கணவனை ஆட்டிவைத்துக்கொண்டிருந்தாள். தான் கூறியதைக் கேட்காவிடின் சமயத்தில் கணவனை அடித்தும் விடுவாள்.
பார்ப்பான் அவளுக்கு அடிமையாக அமைந்து காலந்தள்ளிக்கொண்டிருந்தான். அப்போது அயோத்தியில் குதிரைவேள்வி (அசுவமேத யாகம்) நடைபெற்றது. இராமபிரான் வேண்டிய வேண்டியாங்கு இரவலர்களுக்குப் பொருள் வழங்கினார். அச்செய்தி பார்ப்பனனுக்குத் தெரிந்தது. அச்செய்தியைத் தன் மனைவிக்குக் கூறித் தானுஞ் சென்று வருவதாக வேண்டிக்கொண்டான். பார்ப்பனி, ‘சென்று வா’ என்று உடன்பாடு தெரிவித்தாள். தான் இராமபிரானிடத்திலே எப்பொருளினைக் கேட்டுப் பெற்று வருதல் வேண்டும் என்று கேட்டான் பார்ப்பனன்.
பார்ப்பனி, அப்பேதைப் பார்ப்பனனைப் பார்த்து, “நீ இராமபிரானைக் கண்டால், அகல நின்று பல்லைக் காட்டிக்கொண்டிராதே. கஞ்சி வைப்பதற்குக் கலப்பயறு வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டு வா. வேறொன்றையுங் கேட்காதே,” என்று கூறி யனுப்பினாள். அப்பேதைப் பார்ப்பான் அயோத்தியை அடைந்தான். இராமபிரான் பேதைப்பார்ப்பானைக் கண்டார். அவனைப் பார்த்த அளவில் அவனுடைய வறியநிலைமை நன்கு புலனாகியது. மிகுந்த பொருளும் ஆக்களும் அளித்தார்.
பார்ப்பான் அவைகள் தனக்கு வேண்டாமென்று மறுத்தான். “வீட்டில் கஞ்சி வைத்தற்கு யாதுமில்லை; கலப்பயறுதான் வேண்டும்,” என்று வேண்டிக்கொண்டான். அவன் அவ்வாறு கேட்டதற்குக் காரணம் யாதென்று இராமபிரான் கேட்டார். “என்னுடைய மனைவியின் கட்டளை பயறு வாங்கிக்கொண்டு வர வேண்டுமென்பது தானே தவிரப் பொருள் வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்பது அன்று. நான் அவள் கட்டளையை மீறி இவைகளை வாங்கிக்கொண்டு செல்வேனேயானால், என்னை அவள் துன்புறுத்துவாள். ஆகையால் நான் இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று கூறினான்.
அங்குக் கூடியிருந்தவர்கள் அனைவரும் பேதைப் பார்ப்பானுடைய மடமையையும், அவன் மனைவிக்கு அஞ்சி நடத்தலையும் எளிதில் உணர்ந்து கொண்டு, எள்ளி நகையாடினார்கள். அப்பார்ப்பான் தன் மனைவி சொல்லைக் கேட்டு நடந்தபடியால், எல்லோருக்கும் முன்பு மிகுந்த இழிவையடைந்தான். ஆகையால் எவரும் மனைவி சொல்லைக்கேட்டு அதன்படி நடத்தல் கூடாது.
“தையல் சொற் கேளேல்” (இ-ள்.) தையல் – மனைவியுடைய; சொல் – சொல்லை ; கேளேல் – கேட்டு அதன்படி நடவாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,