(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கொப்பாட்டும்-இந்தப் பெயர் உங்களுக்குப் புதிதாக இருக்கும். ஆம், இது ஒரு பர்மாக்காரரின் பெயர்.
அந்த பர்மாக்காரர் மிகவும் கெட்டிக்காரர். எவ்வளவு கெட்டிக்காரத்தனம் இருந்தால்தான் என்ன, அதை நல்ல வழியில் உபயோகப்படுத்தினால்தானே பிரயோஜனம்?
பிறரை எப்படி ஏமாற்றுவது, பிறருடைய பொருளை எப்படி எடுத்துக் கொள்வது – இந்த மாதிரி வழிகளிலேயே தமது கெட்டிக்காரத் தனத்தை உபயோகப்படுத்தி வந்தார், அவர்.
அவருக்குச் சொந்தமாகப் பத்துப் படகுகள் இருந்தன. அந்தப் படகுகள் ஐராவதி நதியில் ஒடிக்கொண்டிருக்கும். அடிக்கடி மரம், நெல் மூட்டை முதலியவற்றை ஏற்றிக்கொண்டு கீழ் பர்மாவிலிருந்து மேல் பர்மாவிற்கும், மேல் பர்மா விலிருந்து கீழ் பர்மாவிற்கும் செல்லும்.
அந்தப் படகுகளை ஒட்டுவதற்குப் பத்துப் படகோட்டிகள் இருந்தார்கள். அவர்களுக்கு மாதம் இவ்வளவு சம்பளம் என்ற கணக்கில்லை. ஒவ்வொரு தடவையும் வேலை முடிந்த பிறகு கொப்பாட்டும் அவர்களுக்குக் கூலி கொடுப்பார். ஒருவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் கூலி.
கொப்பாட்டும், படகோட்டிகளுக்கு எப்போதுமே கூலியைச் சரியாகக் கொடுப்பதில்லை.
ஏதாவது அவர்கள்மேல் குறை கூறிக் கூலியைக் குறைத்துவிடுவார்.
“உங்களுக்கு ஒரு ரூபாய் வீதம் கூலி தர முடியாது நீங்கள் இரவு பகல் 24 மணி நேரமுமா படகோட்டிக் கொண்டிருந்தீர்கள்? தினசரி இரவிலே 8 மணி நேரம் நன்றாகத் தூங்கினீர்களே! அந்த 8 மணி நேரத்திற்கு நான் கூலியைக் குறைத்துக்கொண்டுதான் கொடுப்பேன். சரியாகப் பார்த்தால், உங்களுக்கு நாள் ஒன்றுக்கு முக்கால் ரூபாய்கூட வரவில்லையே!” என்று அவர்களிடம் வீண் வழக்குப் பேசுவார்.
இப்படி ஒவ்வொரு தடவையும், ஏதாவது தகராறு செய்து கூலியைக் குறைத்துவிடுவார். படகோட்டிகள் எவ்வளவோ சொல்லிப் பார்ப்பார்கள். ஆனாலும் கொப்பாட்டும் பிடிவாதமாகவே இருப்பார். வேறு வழியில்லாததால் கொடுத்த கூலியை அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.
சாமான்களை ஏற்றிக்கொண்டு படகு செல்லும் போது கொப்பாட்டும் கூடவே செல்வார். ஒவ்வொரு நாள் இரவிலும், படகுகளை ஏதாவது ஒரு கிராமத்தின் அருகேயுள்ள கரையில் நிறுத்தி வைப்பார்கள். அந்த இரவுகளில் கொப்பாட்டும் சும்மா இருக்கமாட்டார். படகோட்டிகளிடம் ஏதாவது பந்தயம் பேசுவார். பந்தயத்தில் அவர்களைத் தோற்கடிக்கப் பார்ப்பார். அவர்கள் தோல்வி அடையாது போனலும், ஏதாவது வீண்வழக்குப் பேசி, அவர்கள் தோற்றுவிட்டதாகவே முடிவு கட்டுவார். அவருடைய குணம் நன்றாகத் தெரிந் திருந்ததால், அவர்கள் அநேகமாக அவருடன் பந்தயம் பேசுவதில்லை. ஒரு நாள் இரவு, ஒரு கிராமத்தின் அருகேயுள்ள கரையில் தங்கியிருந்தார்கள். அப்போது ஜனவரி மாதம், நல்ல குளிர். தண்ணீரில் கையை வைத்தால் பனிக்கட்டி போல் ‘ஜில்’ லென்று. இருக்கும்,
கொப்பாட்டும் அப்போது படகோட்டிகளிடம் “ஏ படகோட்டிகளே! நீங்கள் ஒவ்வொருவரும் நல்லபலசாலிகளாக இருந்து என்னபிரயோஜனம்? நான் சொல்லுகிறபடி செய்ய முடியுமா? ஒரே ஒரு சிறு துணியை மட்டும் கட்டிக்கொண்டு இந்தத் தண்ணிரில் இறங்க வேண்டும்; இறங்கி நாளைக் காலை சூரியன் உதயமாகும் வரை தண்ணிருக்குள்ளேயே இருக்கவேண்டும். அப்படி எவணாவது. இருந்துவிட்டால், நான் அவனுக்கு இரண்டு. மடங்கு கூலி தருகிறேன். அவன் தோற்றுப் போய்விட்டால், நான் பைசா கூடக் கூலி தரமாட்டேன். இதற்கு யார் தயார்?” என்று கேட்டார்
ஒருவரும் பதில் பேசவில்லை. ஒவ்வொரு பட கோட்டியாக அவர் கேட்டுக்கொண்டே வந்தார்,
‘என்னால் முடியாது’, ‘என்னால் முடியாது’ என்று ஒவ்வொருவரும் கூறிவிட்டார்கள். ஆனால், பத்துப் படகோட்டிகளும் அப்படியே கூறிவிட்டார்களா? இல்லை; ஒன்பது படகோட்டிகளே அப்படிக் கூறினர். பத்தாவது படகோட்டியை அவர் கேட்டதும், அவன் “ஓ! நான் தயார்” என்று தைரியமாகக் கூறினான்.
உடனே சில படகோட்டிகள், “டேய், உன்னால் முடியாது. வேண்டாம்” என்றார்கள். இன்னும் சிலர் மெதுவாக, “டேய், உனக்குத் தான் கொப்பாட்டும் குணம் தெரியுமே! எதற்காகப் பங்தயத்தில் இறங்க வேண்டும்? வேண்டாமடா!” என்று புத்தி கூறினார்கள்.
ஆனால், கொப்பாட்டும் அவர்களைப் பேசவிடவில்லை. “அதெல்லாம் முடியாது. அவன் பந்தயத்துக்கு ஒப்புக் கொண்டுவிட்டான். அவன் உடனே தண்ணிரில் இறங்க வேண்டியதுதான்” என்று கத்தினார்.
உடனே, பத்தாவது படகோட்டி சிறிதும் தயங்கவில்லை. பேசாமல் ஒரு சிறு துணியைக் கட்டிக்கொண்டு கதியில் இறங்கிவிட்டான். இரவு முழுவதும் அவன் பல்லைக் கடித்துக் கொண்டு தண்ணீருக்குள்ளேயே இருந்தான்.
காலை மணி 4 இருக்கும். அப்போதும் அவன் குளிரைத் தாங்கிக்கொண்டு தைரியமாகவே உள்ளே இருந்தான்.
கொப்பாட்டும் பார்த்தார். “சரி, இவன் நம்மிடம் இரண்டு பங்கு கூலி வாங்கினாலும் வாங்கி விடுவான். இவனுடன் எப்படியாவது தகராறு செய்யவேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெறலாம்” என்று திட்டமிட்டார்.
உடனே, அவர் கிராமத்துப் பக்கம் திரும்பிப் பார்த்தார். பிறகு, தண்ணிருக்குள் இருக்கும் பத்தாவது படகோட்டியைப் பார்த்தார்.
“டேய் திருட்டுப் பயலே, நீ இவ்வளவு குளிரிலும் இந்தத் தண்ணிருக்குள் கவலையில்லாமல் இருப்பதன் மர்மம் எனக்குத் தெரியும். யாரை ஏய்க்கப் பார்க்கிறாய்?” என்று கேட்டார்.
இதைக் கேட்டதும் பத்தாவது படகோட்டிக்கு தூக்கி வாரிப்போட்டது. “என்ன எஜமான், நீங்கள் சொல்லுவது ஒன்னும் புரியவில்லையே! மர்மமா! அது என்ன?”
(படம்) என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
“ஆம். அதோ பார், அங்கே நெருப்பு ‘குபு குபு’ என்று எரிந்து கொண்டிருப்பதை! அந்த உஷ்ணம் உன்மேல் படுகிறது. அதனால்தான் இந்தக் குளிரிலும் இவ்வளவு தைரியமாக நீ உள்ளே இருக்கிறாய்” என்று கூறினார், கொப்பாட்டும். உடனே எல்லோரும் அந்தப் பக்கம் பார்த்தனர். அரை மைல் தூரத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.
செம்படவர்கள் மீன் பிடிக்கப் போவதற்கு முன்னால் குளிர் காய்வது வழக்கம். மட்டைகளையும், இலைகளையும் வைத்து எரிப்பார்கள். அதைப் பார்த்துவிட்டுத்தான் கொப்பாட்டும் அப்படிக் கூறினர்.
உடனே, பத்தாவது படகோட்டி, “இது என்ன எஜமான், நீங்கள் சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறதே! நெருப்பு எங்கோ எரிகிறது; நான் இங்கே இருக்கிறேன்! எப்படி அந்த உஷ்ணம் என்மேல் படும்?” என்றான்.
“அதெல்லாம் இல்லை. அந்த உஷ்ணம் உன் மேல் படுவதால்தான், உன்னால் இந்த நேரத்திலும் இப்படி இருக்க முடிகிறது. இல்லாவிட்டால் யாரால் இருக்க முடியும்? யானையால் கூட இருக்க முடியாதே” என்று கோணல் வழக்குப் பேசினார், கொப்பாட்டும்.
பத்தாவது படகோட்டி எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். பலன் இல்லை; உடனே, மற்றப் படகோட்டிகள், “ஏண்டா, சொன்னால் கேட்டால்தானே! ஏன் பந்தயத்திற்குப் போனாய்?” என்றார்கள.
பத்தாவது படகோட்டிக்கு வெட்கமாகப் போய்விட்டது. பேசாமல் எழுந்து வெளியே வந்துவிட்டான். வரும்போதே கொப்பாட்டுமுக்கு எப்படியாவது புத்தி கற்பிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.
சிறிது நேரம் யோசித்தான்.
பிறகு, “நான் இதில் தோற்றுப்போனது உண்மைதான். இப்படி எத்தனையோ தடவைகள் நான் தோற்றுப் போயிருக்கிறேன். ஆனாலும், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் என்னைத் தோற்கடிக்கவே முடியாது!” என்று மற்றப்படகோட்டிகளிடம் சப்தம் போட்டுக் கூறினான்.
“என்ன! முடியாதா? அது என்ன விஷயம்?” என்று கொப்பாட்டும் ஆத்திரத்துடன் கேட்டார்.
“இரண்டு நாள் முன்பு, நான் பன்றிக் கறி வறுவல் செய்திருந்தேன். அது எப்படி இருந்தது? அதேபோல் அரைமணி நேரத்துக்குள் வறுவல் செய்ய உங்களால் முடியுமா? முடியவே முடியாது!”
“ஏன் முடியாது? என்ன பந்தயம்!”
“நான் தோற்றுப் போனால், உங்களிடம் ஏழு வருஷம் அடிமையாக இருக்கிறேன். நீங்கள் தோற்றுப் போனால், உங்களுடைய பத்துப் படகுகளையும் எனக்கே தந்து விடவேண்டும்”
“சரி, அப்படியே. ஆனால், நீ வாக்குத் தவறக் கூடாது. பந்தயம் நன்றாக ஞாபகத்தில் இருக்கட்டும்.”
“சரி, நெருப்பு எங்கே?” என்று கேட்டார், கொப்பாட்டும். நெருப்பா அது எதற்கு? அது தான் அதோ, அங்கே தெரிகிறதே! இங்கிருந்து கொண்டே அந்த உஷ்ணத்தில் வறுவல் செய்யலாம். சும்மா செய்யுங்கள்” என்று தூரத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் காட்டிக் கூறினான் படகோட்டி.
“என்னடா இது! முட்டாள், அது எப்படி முடியும்? நெருப்பு எங்கோ இருக்கிறது! நாம் இங்கே இருக்கிறோம்; அந்த நெருப்பில் எப்படி வறுவல் செய்ய முடியும்?” என்று கேட்டார் கொப்பாட்டும்,
“ஏன் முடியாது, எஜமான்? அந்த உஷ்ணம் இங்கு நன்றாகப் படுவதாக நீங்கள்தானே சொன்னீர்கள்! அதில் நீங்கள் தாராளமாக வறுவல் செய்யலாம். உம், ஆரம்பியுங்கள்” என்றான் படகோட்டி,
கொப்பாட்டுமுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆயினும், தோல்வியை அவர் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொண்டு விடுவாரா? ஏதேதோ வம்பு பேசினார். ஆனால், மற்றப் படகோட்டிகள் அப்போது சும்மா இருக்கவில்லை. பத்தாவது படகோட்டியுடன் அவர்களும்சேர்ந்து கொப்பாட்டுமை மிரட்டி, தோல்வியை ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். வேறுவழி இல்லாததால் கொப்பாட்டும் தம்முடைய பத்துப் படகுகளையும் பத்தாவது படகோட்டியிடம் கொடுக்கும்படி ஆகிவிட்டது.
பத்தாவது படகோட்டி அந்தப் பத்துப் படகு களையும் தானே எடுத்துக்கொண்டானா? இல்லை, இல்லை. தன் நண்பர்கள் பத்துப் பேருக்கும். ஆளுக்கு ஒரு படகாகக் கொடுத்துவிட்டான்.
இப்போது, ஒவ்வொரு படகோட்டியும் ஒவ்வொரு படகுக்குச் சொந்தக்காரன்!
– பர்மியக் கதை – வேட்டை நாய், முதற்பதிப்பு: ஜனவரி 1987, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை.