கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 6,944 
 
 

முன்னொரு காலத்தில், சூரியன் தனக்கு கொஞ்சம் பணம் தேவை என்றும், அதை வெகு விரைவிலேயே திருப்பித் தந்து விடுவதாகவும், இராசாளியிடம் கடன் கேட்டது.

இராசாளியும், சூரியனுக்கு பணத்தைக் கொடுத்தது. ஆனால் வாரங்கள், மாதங்கள் என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தனவே தவிர, சூரியன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனால் இராசாளி சூரியன் இல்லத்திற்கு நேரில் சென்று, பணத்தைப் பெற்று வரலாம் என்று முடிவு எடுத்து, சூரியன் இல்லம் சென்றது. சூரியன் அது சமயம் வானத்தின் உச்சியில் இருந்தது.

“”நீ எனக்கு பணம் தர வேண்டும் என்பது உனக்கு நினைவு இருக்கிறதா?” என்று சூரியனிடம் இராசாளி கேட்டது.

“”ஆமாம். பணம் தர வேண்டும். நான் இப்போது வானத்தில் இருக்கிறேன். பணம் வீட்டில் அல்லவா இருக்கிறது. தயவு செய்து நீ வீட்டிற்கு வா, பணம் தருகிறேன்,” என்று சூரியன் பதில் தந்தது.

சரி என்று இராசாளியும் சென்றுவிட்டது. அடுத்த நாள் காலை, சூரியன் இல்லம் செல்ல இராசாளி தீர்மானித்திருந்தது. ஆனால் அது சற்று காலம் தாழ்ந்து தாமதமாகச் சென்றதால் சூரியன் வீட்டில் இல்லை. வானத்திற்குச் சென்று விட்டது. பல முறை இராசாளி, சூரியன் இல்லம் சென்றது. சூரியன் வீட்டில் இல்லாது போகவே வீட்டில் இருக்கும் போது இராசாளியினால் சூரியனைக் காண இயலவில்லை.

ஒரு நாள் இராசாளி, சூரியன் இல்லம் நோக்கி சென்றபோது, தனது நண்பன் சேவலைக் கண்டது.

“”நீ, தினமும் ஏன் சூரியன் இல்லம் செல்கிறாய்,” என்று சேவல் இராசாளியிடம் கேட்டது.

“நீண்ட நாட்களுக்கு முன் நான் சூரியனுக்கு பணம் கடனாகக் கொடுத்திருந்தேன். அதைப் பெற தினமும் சூரியன் இல்லம் செல்கிறேன். சூரியன் வீட்டிலிருக்கும் போது பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருக்கிறது. நான் சூரியன் வீட்டிற்கு செல்லும் போது, சூரியன் வீட்டில் இருப்பதில்லை,” என்று இராசாளி பதில் தந்தது.

“”நான் உனக்கு உதவி செய்கிறேன். நீ ஓர் இரவு என்னுடன் தங்கியிரு. நான் எப்பொழுதும் சூரியன் எழுவதற்கு முன் எழுந்துவிடுவேன். ஆகவே, நான் உன்னை விரைவிலேயே எழுப்பி விடுகிறேன். நீ, சூரியனிடம் ஓடிச் சென்று உன் பணத்தை பெற்றுக் கொள்,” என்று சேவல் தெரிவித்தது.

அன்று இரவு இராசாளி, சேவலுடன் தங்கியது. விடியற் காலையில் சேவல் விழித்து எழுந்து “கொக்கரக்கோ, கொக்கரக்கோ’ என்று கூவியவாறு, தனது நண்பன் இராசாளியை எழுப்பி, “”சூரியனிடம் ஓடு; சூரியன் இப்போது வீட்டில் இருக்கிறது; அது இன்னும் வானத்திற்கு செல்லவில்லை,” எனக் கூறியது.

இராசாளியும், படுக்கையிலிருந்து எழுந்து சேவலுக்கு நன்றி கூறிவிட்டு, சூரியன் இல்லம் சென்றது. சூரியன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது.

“”சூரியனே! வணக்கம். நீ எழும் நேரமாகிவிட்டது. நீ வீட்டிலிருக்கும் போது என் பணத்தை பெற்றுச் செல்ல வந்திருக்கிறேன்,” என்றது இராசாளி.

“”வணக்கம்! உன்னை இவ்வளவு அதிகாலையில் இங்கு வருமாறு உனக்கு யார் கூறியது?” என்று சூரியன் கேட்டது.

இராசாளி பதில் கூறாது மவுனம் சாதித்தது.

“”உனக்குப் பணம் தேவை என்றால், இங்கு இவ்வாறு அதிகாலையில் வருமாறு யார் கூறியது என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்,” என்று சூரியன் அதட்டிக் கேட்டது.

“”சேவல்தான் இவ்வாறு சொல்லியது!” என்று இராசாளி பதில் கூறியது.

சூரியனுக்கு சேவல் மீது கோபம் எழுந்தது. “”இதற்கான பணத்தை சேவல் தான் தரவேண்டும். இன்று முதல் எல்லா சேவலின் குஞ்சுகளும் உன்னைச் சார்ந்தது,” என்று கூறிவிட்டு, சூரியன் சென்று விட்டது.

அன்று முதல் இராசாளிகள் கோழிக் குஞ்சுகளை தூக்கிச் செல்லத் தொடங்கி விட்டன குட்டீஸ்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *