(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாரிவளம் என்ற ஓர் ஊர் இருந்தது. அவ்வூரில் சாத்தப்பர் என்று ஒரு வணிகர் இருந்தார். சாத்தப்பர் பரம்பரைச் செல்வர்.தம் பாட்டன்மார் ஈட்டிய பொருளுக்கு மேல் தம் உழைப்பால் பெரும் பொருள் ஈட்டினார். மாரிவளத்திலேயே, ஏன் அந்த வட்டத்திலேயே அவர்தான் பெரிய செல்வர். அவருக்கு இருந்த நிலபுலன்களையும், கட்டடங் களையும் நகைகளையும் பிற சொத்துக்களையும் சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஐந்து கோடிக்கும் மேல் தேறும் என்று கூறுவார்கள்.
நாடெங்கும் அவருக்குப் பல தொழில்கள் நடை பெற்று வந்தன.
அவரிடம் முருகன் என்ற ஓர் ஏழைப் பையன் எடுபிடியாக வேலை பார்த்து வந்தான். அவனுக்குச் சாத்தப்பர் மாதம் இருபது ரூபாய் சம்பளம் கொடுத்து வந்தார்.
அந்த முருகன் நல்ல பையன். எனவே சாத்தப்பர் அவனைத் தொடர்ந்து வேலைக்கு வைத்துக் கொண்டார்.
ஒருநாள் முருகன் வேலைக்கு வரவில்லை. சாத்தப்பர் அன்று கவனிக்கவில்லை.
இரண்டாவது நாளும் அவன் வேலைக்கு வராமற் போகவே சாத்தப்பர் ஓர் ஆளை முருகன் வீட்டுக்கு அனுப்பி விவரம் கேட்டு வரச் சொன்னார்.
முருகன் நோயுற்றுப் படுத்திருப்பதாக அந்த ஆள் வந்து சொன்னார். ‘மருத்துவரிடம் காண்பித் தானா, மருந்து வாங்கி உட்கொண்டானா?’ என்றெல்லாம் சாத்தப்பர் அந்த ஆளை வினவினார். அந்த ஆள் அவ்விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு வரவில்லை. பெரும்பாலான வேலைக் காரர்கள் அப்படிப்பட்டவர்கள் தாமே !
சாத்தப்பர் தாமே முருகன் வீட்டுக்குச் சென்றார். பணமில்லாததால் அவன் மருத்துவரிடம் உடம்பைக் காட்டவில்லை என்று அறிந்தார். அங்கிருந்து மருத்துவர் வீட்டுக்குச் சென்றார். அவரை அழைத்துக் கொண்டு போய் முருகனைப் பார்க்கச் செய்தார்; மருந்தும் கொடுக்கச் செய்தார்.
“முதலாளி, இதற்கெல்லாம் தாங்கள் அலைய லாமா? ஓர் ஆளை அனுப்பினாலே போதாதா?” என்று முருகனுடைய அம்மா கேட்டாள்.
“அம்மா, இது உயிரைப் பொறுத்த செயல் உள்ளத்தின் உணர்வைப் பொறுத்த செயல். இதற் கெல்லாம் வேலைக்காரர்களை விடக்கூடாது” என்று சொல்லிச் சென்றார் சாத்தப்பர்.
அவருடைய அன்பை எண்ணி அவளும் முருகனும் உருகினார்கள். முருகன் விரைவில் நலம் பெற்றான்.
கருத்துரை:- பெரியோர் தம்மை அண்டியவர்கள் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவர்களானாலும், தம் மதிப்பை மறந்து, அவர்கள் இருப்பிடம் சென்று, துன்பத்தை நீக்குவார்கள்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.