நீர்யானை வரைந்த ஓவியம்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,188 
 

அன்று காலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது!

அப்போது ஆற்றில் ஒரு நீர்யானை நின்று கொண்டிருந்தது. ஆகாயம் வெளிர் நீல நிறத்தில் குளிர்ச்சியாக இருந்தது. சூரியன் தகதகவென்று வெளிர் மஞ்சள் நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது!

அந்த நேரத்தில் திடீரென்று நீர்யானைக்கு ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

நீர்யானை வரைந்த ஓவியம்உடனே ஆற்றிலிருந்து வெளியேறி பக்கத்திலுள்ள ஊருக்குள் சென்றது. அங்கே ஒரு கடைக்குச் சென்று, ஓவியம் வரைவதற்காக தூரிகை ஒன்றும், பலகை, வெள்ளைத் தாள் மற்றும் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை என்று விதவிதமான வண்ணங்களையும் வாங்கிக் கொண்டது.

ஒரு தேர்ந்த ஓவியனைப் போல காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலைக்கு ஒரு தொப்பியையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியது.

தனது வீட்டுக்கு வந்ததும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டது.

பிறகு தனது தொப்பியை அணிந்து கொண்டு வீட்டுக்கு வெளியே உள்ள புல்தரைக்கு தனது உபகரணங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓவியம் வரையக் கிளம்பியது.

காலையிலிருந்தே ஓவியம் வரைய ஆரம்பித்தது.

பகல் பொழுது முடிவதற்குள் புல்தரை, மரம், குன்று, வானம் மற்றும் சூரியன் என்று தனக்குத் தோன்றியவற்றையெல்லாம் வரைந்தது.

மதிய உணவுக்குப் பிறகு, பூக்களை வரைவேன், அத்துடன் எனது ஓவியம் முற்றுப் பெறும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டு வீடு திரும்பியது.

அவசர அவசரமாக மதிய உணவை உண்டு முடித்தது. வேகமாகத் திரும்பவும் ஓவியப் பலகை இருந்த இடத்துக்கு வந்தது. பூக்களை வரைய ஆரம்பித்தது!

பூக்களை வரைந்து முடித்தவுடன் தனது ஓவியத்தை தானே ரசித்துப் பார்த்து சிரித்து மகிழ்ந்தது. “எல்லாம் சிறப்பாக முடித்துவிட்டேன்’ என்று கூறிக் கொண்டது.

அப்போது அந்தப் பக்கமாக ஒரு பாம்பு வந்தது. அது சற்றே நின்று, நீர்யானை வரைந்த ஓவியத்தை உற்றுக் கவனித்தது.

பிறகு நீர்யானையைப் பார்த்து, “இந்த ஓவியம் முழுமையாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.. ஏனெனில் இதில் மேகத்தைக் காணவில்லை’ என்று குறை கூறியது.

“நான் ஓவியம் வரைய ஆரம்பிக்கும்போது வானில் மேகங்கள் எதுவும் இல்லையே!’ எனறது நீர்யானை.

“இப்போது இருக்கிறதே!’ என்றது பாம்பு.

“அப்படியா, சரி மேகத்தை வரைந்து விடுகிறேன்…’ என்றபடியே, வெள்ளை நிறத்தைக் கொண்டு ஓவியத்தில் மேகத்தை வரைந்தது. “இப்போது ஓவியம் நிறைவு பெற்றுவிட்டதல்லவா?’ என்று பாம்பைப் பார்த்துக் கேட்டது நீர்யானை.

“ம்ஹூம்… இன்னும் முழுமை பெறவில்லை! அந்த மரத்தில் ஒரு அழகிய குருவி இருக்கிறதே, அதை உனது ஓவியத்தில் காணவில்லையே’ என்றது பாம்பு.

“சரி… சரி… அதையும் வரைந்து விடுகிறேன்..’ என்று சொல்லிக் கொண்டே தனது ஓவியத்திலிருந்த மரத்தில் குருவி ஒன்று அமர்ந்திருப்பது போல வரைந்து முடித்தது.

“இப்போது எனது ஓவியம் நிறைவு பெற்றுவிட்டது அல்லவா?’ என்று பாம்பிடம் கேட்டது நீர்யானை.

உடனே பாம்பு நீர்யானையிடம், “அது எப்படி நிறைவு பெறும். அந்த மரத்தில்தானே நானும் இருக்கிறேன். என்னை நீ வரையவே இல்லையே!’ என்று பாம்பு இப்போதும் குறை கூறியது.

நீர்யானைக்குக் கோபமாக வந்தது! “இங்கே வா..’ என்றது. பாம்பு கீழே இறங்கி வர மறுத்துவிட்டது. நீர்யானை எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பாம்பு மரத்தைவிட்டுக் கீழே இறங்க மறுத்துவிட்டது.

அப்போது அந்தப் பக்கமாக ஒரு சிங்கம் வந்தது. சிங்கம் வந்த பிறகு இன்னும் நிறைய விலங்குகள் அங்கே வந்தன. எல்லாம் அந்த மரத்தினருகே கூடி நின்றன.

“ஏதாவது உதவி வேண்டுமா?’ என்று நீர்யானையிடம் அந்த விலங்குகள் கேட்டன.

நீர்யானை எல்லா விலங்குகளையும் ஒருமுறை கவலையுடன் பார்த்தது. பிறகு தனது ஓவியத்தைப் பார்த்தது. இந்த விலங்குகளும் ஏதாவது குறை கண்டுபிடிக்க ஆரம்பித்துவிடப் போகின்றன என்ற எண்ணத்தில், “நான் ஓவியம் வரைவதை விட்டுவிடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டே தனது தூரிகையை வீசிவிட்டு, அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றது.

“நீர்யானை ஏன் ஓவியத்தைத் தொடராமல் விட்டுவிட்டுச் சென்றது?’ என்று சிங்கம் கேட்டது.

அதற்கு அந்தப் பாம்பு,”அவனுக்கு ஓவியம் வரைந்ததில் திருப்தி இல்லை போலிருக்கிறது.. மேலும் அதிக நேரம் எடுத்துக் கொண்டான் அல்லவா, அதனால்தான் விட்டுவிட்டுப் போய்விட்டான்’ என்றது.

விலங்குள் கூட்டத்திலிருந்த யானை, “இந்த ஓவியத்தை நாம் பார்ப்போமே!’ என்றது.

எல்லா விலங்குகளும் ஓவியத்தின் அருகில் சென்று அதை உற்றுப் பார்த்தன.

ஓவியத்தில் இருந்த புல்வெளியையும் பூக்களையும் குன்றையும் ஆகாயத்தையும் மரத்தையும் பறவையையும் உற்று உற்றுப் பார்த்து ரசித்தன.

“நீர்யானை ஏன் இங்கிருந்து போய்விட்டது என்று எனக்குப் புரியவில்லை. ஓவியம் வரைவது அவ்வளவு எளிதான வேலையில்லையே!’ என்று ஆச்சரியப்பட்டது யானை.

“இந்த ஓவியம் மிக அற்புதமாக இருக்கிறது. எல்லாம் மிகச் சரியாக வரையப்பட்டிருக்கிறது..’ என்று எல்லா விலங்குகளும் கூறின.

“இந்த ஓவியம் வரைந்ததில் நீர்யானைக்கு நிறைவு ஏற்பட்டிருக்கலாம்… ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில்தான் இதற்கு மேலும் வரையாமல் போய்விட்டது போலும். ஆனாலும் இந்த ஓவியம் என் பார்வையில் மிக அழகாக இருக்கின்றது. நீர்யானை மிகச் சிறந்த ஓவியன்தான்!’ என்று கூறியது சிங்கம்.

– அமெரிக்கச் சிறுகதை – ஆங்கில மூலம்: மைக் தேலர்
தமிழில்: முத்தையா வெள்ளையன் (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *