தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 18,528 
 

செல்வந்தர் ஒருவர், ஒரு ஞானியைச் சந்தித்து, “”நான் இத்தனை ரூபாய் செலவழித்து இந்த இந்த தானங்கள் செய்துள்ளேன். இதற்கு என்ன பலன் கிடைக்கும்?” என்று கேட்டார்.

செல்வத்தால் புண்ணியத்தையோ மோட்சத்தையோ விலைக்கு வாங்க முடியாது என்பதை செல்வந்தருக்கு உணர்த்த எண்ணிய ஞானி, அவரைப் பகல் வேளையில் தன்னைப் பார்க்க வருமாறு சொன்னார்.

மறுநாள் மதியவேளை, செல்வந்தர் அவரைப் பார்க்க வந்தார். அவருடன் ஞானியும் நடக்க ஆரம்பித்தார். வெயில் அதிகமாக இருந்த நேரம் அது. செல்வந்தருடைய கால்களுக்கு வெயிலைத் தாங்கும் சக்தியில்லை. மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார்.

செல்வந்தரின் நிலையைக் கண்ட ஞானி, “”அன்பரே, தங்கள் நடையில் ஏன் வேகம் குறைகிறது?” என்று கேட்டார்.

“”வெயில் காலைச் சுடுகின்றது. சூடு தாங்க முடியவில்லை…” என்றார் அவர்.

உடனே ஞானி, “”உங்களது நிழல் தரையில் விழுகிறதே, அதிலேயே நடக்கலாமே…” என்றார்.

செல்வந்தரும் தனது நிழலின் மீது கால்களை ஊன்றி நடக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் நிழல் நகர்ந்து நகர்ந்து சென்றதால் அவரால் முடியவில்லை. பலவாறு முயன்றும் அவரால் தனது நிழலில் நடக்க முடியவில்லை.

ஞானி சிரித்தார். செல்வந்தர், “”எதற்காக சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“”உங்களின் நிழலே உங்களுக்கு உதவவில்லை. நீங்கள் சேர்த்துள்ள செல்வம் எப்படி உங்களுக்குப் புண்ணியம் கிடைக்க உதவும்?” என்று கேட்டார் ஞானி.

உண்மையை உணர்ந்து கொண்டார் செல்வந்தர்.

-த.ஜெகன், சரலூர். (பெப்ரவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *