திருமணம் செய்து கொள்வது ஏன்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,666 
 
 

ஒரு ஊரில் ஒரு பணக்காரர் மகளுக்குத் திருமணம் நிகழ்ந்தது. அந்தப் பணக்காரரின் உறவினர் ஒருவர் தம்முடைய ஐந்து வயதுச் சிறுமியை அழைத்துக் கொண்டு திருமணத்துக்குச் சென்றிருந்தார்.

திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மேள வாத்தியங்கள் முழுங்கின. மணமகனும், மணமகளும் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். ஏராளமானவர்கள் வந்து மணமக்களை வாழ்த்தி, பரிசுகள் அளித்துச் சென்றனர்.

அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதற்கு முன், திருமண நிகழ்ச்சியையே அந்தச் சிறுமி பார்த்ததில்லை.

“பாப்பா! நீ பெரிய பெண் ஆனதும் உனக்கும் இதேபோல் மிகப் பிரமாதமாகத் திருமணம் நடைபெறும் என்று சிறுமியிடம் பெருமையாகக் கூறினார் பணக்காரர்.

“அப்பா! திருமணம் செய்து கொண்டால், கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?” என்று கேட்டாள் சிறுமி.

“ஏன் அப்படிக் கேட்கிறாய்? திருமணம் செய்து கொண்டு, கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக, ஒற்றுமையுடன் இருந்து, வாழ்க்கை நடத்தி குழந்தைகளைப் பெறுவதற்காகவே திருமணம் செய்து கொள்வது” என்றார் அந்தப் பணக்காரர்.

“அப்பா ! நீங்களும் அம்மாவும் ஒற்றுமையாக இல்லையே? இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள். நீங்கள் cஅம்மாவை திட்டுகிறீர்கள். அம்மா அழுது கொண்டிருக்கிறாள். அதைக் காணும் போது, எனக்கு அழுகை வருகிறது. அந்த மாதிரியான திருமணம் எனக்கு வேண்டவே வேண்டாம்” என்றாள் சிறுமி.

சிறுமியின் சொல்லைக் கேட்ட பணக்காரர் பதில் ஒன்றும் சொல்லாமல் வெட்கப்பட்டார்.

குழந்தைகள் எதிரில், பெற்றோர் சச்சரவிட்டுக் கொள்வது அவர்களுடைய மனதைப் பாதிக்கும் என்பதை உணர்ந்தார் அவர்.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *