கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 17,722 
 

ஒரு நகரத்தில் வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சூதாடும் பழக்கம் இருந்தது. ஒருமுறை சூதாட்டத்தில் தன் சொத்துக்கள் அனைத்தையும் அவன் இழந்துவிட்டான். அனைத்தையும் இழந்ததால், தன் மனைவியைக் காப்பாற்ற முடியாத நிலையை எண்ணி மனம் நொந்து, நோய்வாய்ப்பட்டு ஒருநாள் இறந்துபோனான். அவன் இறந்த சமயத்தில் அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள்.

தங்க எலிகணவன் இறந்த சில நாள்களுக்குப் பிறகு அவள் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். குழந்தையை வைத்துக்கொண்டு அவள் வறுமையில் வாடினாள். பல இடங்களில் வேலை செய்து தன் மகனை ஐந்து வயது வரை வளர்த்து விட்டாள்.

மகனுக்கு ஐந்து வயதானவுடன் அவளுக்குக் தெரிந்த சேட் ஒருவரிடம் அவனை அழைத்துச் சென்று, “”சேட்ஜி! என் மகனுக்கு நீங்கள்தான் படிப்பு தரவேண்டும். அப்போதுதான் அவன் தன் சொந்தக்காலில் நிற்க முடியும். தயவு செய்து அவன் படிப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்து தாருங்கள்” என்று வேண்டிக் கொண்டாள்.

அவள் மீது இரக்கம் கொண்ட சேட், அவளுடைய மகனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க தன் சொந்த செலவில் ஓர் ஆசிரியரை நியமித்தார். அந்தச் சிறுவனும் எழுத, படிக்கக் கற்றுக்கொண்டான்.

ஒரு நாள் அச் சிறுவன் தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தனது எதிர்காலத்தை நினைத்து யோசித்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த அவனுடைய தாய், மகன் கண்ணீர் சிந்துவதைப் பார்த்து, தனது முந்தானையால் அவன் கண்களைத் துடைத்துவிட்டு, “”மகனே! ஏன் அழுகிறாய்? கவலைப்படாதே! நாம் ஏதாவது தொழில் செய்ய ஆரம்பிக்கலாம். பக்கத்து தெருவில் இன்னொரு சேட் இருக்கிறார். அவர் வியாபாரம் செய்வதற்கு வட்டியில்லாமல் கடன் தருகிறாராம். அவரிடம் சென்று தொழில் தொடங்க கொஞ்சம் பணம் வாங்கி வா” என்றாள்.

மறுநாள் காலை அவன் அந்த சேட் வீட்டிற்குச் சென்றான். அவன் சென்ற நேரம் பார்த்து சேட் யாரையோ கோபமாகத் திட்டிக்கொண்டிருந்தார். அவர் கூறுவதை சற்று தூரத்தில் நின்று அவன் கேட்டான்.

“”உழைக்காத மனிதனும் ஒரு மனிதனா? அதோ பார், ஓர் எலி இறந்து கிடக்கிறது. செயல் திறமை உள்ள, முயற்சி உடைய எந்த வியாபாரியாக இருந்தாலும் அந்த செத்த எலியைக்கூடப் பணமாக்கிவிடுவான். எதிரே உள்ள நிலத்தில் மண்ணும், நிலக்கரியும் உள்ளன. அதிலிருந்துகூட அவனால் தங்கம் எடுக்கமுடியும். நான் உனக்கு இதுவரை எவ்வளவு பணம் தந்திருக்கிறேன். ஆனால், நீ வெறும் கையோடு வந்தது மட்டுமல்லாமல், மேலும் பணம் வேண்டும் என்று என்னிடம் கேட்கிறாய்! என்ன நியாயம்? போ… போ… உழைக்காத உனக்கு இனி நான் பணம் தருவதாக இல்லை” என்று கோபமாகப் பேசினார்.

அவரிடம் பணம் கேட்ட அந்த நபர், தலை குனிந்தபடி வந்தவழியே திரும்பிச் சென்றார்.

அதுவரை சேட் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த வியாபாரியின் மகன், சேட்டின் அருகில் சென்று, “”ஐயா, இங்கு இறந்து கிடக்கும் இந்த எலியை உங்கள் சொத்தாக நினைத்து நான் எடுத்துச் செல்ல விரும்புகிறேன், அனுமதி தருவீர்களா?” என்றான். அவனை வியப்புடன் பார்த்த சேட் அதற்கு சம்மதிக்க, அந்த எலியை எடுத்துச் சென்றான் அந்த வியாபாரியின் மகன்.

சேட், தனது கணக்குப்பிள்ளையைப் பார்த்து, “”இந்தப் பையன் மிகுந்த அறிவாளியாகத் தெரிகிறான். பார், நிச்சயம் ஒரு நாள் இவன் லட்சாதிபதியாவான்” என்று கூறினார்.

அந்தச் சிறுவன் இறந்துபோன எலியை எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் எதிர்ப்பட்ட ஒருவன், பசித்த தனது பூனைக்கு இறந்துபோன அந்த எலியைப் பேரம்பேசி வாங்கிக்கொண்டு அந்தச் சிறுவனிடம் சிறிது பணம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

அதை வாங்கிய அவன், அந்தப் பணத்தில் சிறிது வேர்க்கடலையும், ஒரு மண் பானையும் வாங்கினான். அந்தப் பானையில் தண்ணீரை நிரப்பினான். நகரில், நான்கு சாலைகள் கூடும் இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மர நிழலில் உட்கார்ந்து கொண்டான். அவ்வழியே வருவோர் போவோருக்கெல்லாம் கடலையையும் தண்ணீரையும் கொடுத்தான்.
சிறுவனின் இந்தச் சேவையைக் கண்ட, அவ்வழியே சென்று கொண்டிருந்த மக்கள் சிலர் அவனுக்குப் பணம் தரத்தொடங்கினர். இதைப் பார்த்த சிலர் விறகுக் கட்டைகளைத் தந்தனர். இப்படியாக அந்தச் சிறுவனுக்கு நிறைய விறகுக் கட்டைகள் சேர்ந்தன.

ஒருநாள் விறகு வியாபாரி ஒருவரிடம் அந்த விறகுகளை எடுத்துச்சென்று விற்றான். விற்ற பணத்தில் மேலும் நிறைய வேர்க்கடலை வாங்கினான். முன் போலவே அவ்வழியே செல்வோருக்குக் கடலையும், தண்ணீரும் தந்தான். இதனால் நாளடைவில் அவனிடம் பணமும் விறகும் நிறைய சேரத்தொடங்கின. பணம் நிறைய சேரச் சேர அனைத்துக்கும் நிறைய விறகுகளை வாங்கி விற்றான். அப்படி விறகு விற்றதில் கிடைத்த லாபம் பலமடங்கானது.

மழைக்காலம் வந்தது. இதனால், விறகு வியாபாரம் மந்தமாகத் தொடங்கியது. மக்கள் தண்ணீர் குடிப்பதும் குறைந்து போனது. எனவே, கிடைத்த விறகுகளைக் கொண்டு அவன் சொந்தமாக ஒரு கடை வைத்தான். சிறிது நாள்களுக்குப் பிறகு வியாபாரம் தொடர்ந்து நடந்தது. சிறிது நாள்களிலேயே அவன் பெரிய வியாபாரி ஆகிவிட்டான்.

அவன் வாலிபப் பருவத்தை அடைந்தான். தானும் தன் தாயும் வசிப்பதற்காக ஓர் அழகான வீடு ஒன்றைக் கட்டினான். அதில் தன் தாயோடு சுகமாக வாழ்ந்து வந்தான்.

ஒருநாள் தன் கடையில் உட்கார்ந்திருந்தபோது, அவனுக்குத் திடீரென்று அந்த சேட்டின் ஞாபகம் வந்தது. “இந்தக் காசு, பணம், வீடு, சுகமான வாழ்வு எல்லாம் யாரால் கிடைத்தது? அந்த சேட்ஜியால்தானே!’ என்று நினைத்துக் கொண்டவன், அவரைக் காண நினைத்தான்.

உடனே அந்த சேட்டுக்கு அன்பளிப்பாகத் தருவதற்காக தங்கத்தால் செய்யப்பட்ட ஓர் எலி பொம்மையை வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றான்.

“”சேட்ஜி! என்னை நினைவிருக்கிறதா? நீங்கள் தந்த இறந்துபோன எலி என்னை லட்சாதிபதி ஆக்கிவிட்டது. அந்த எலியால்தான் எனது வாழ்க்கை திசை மாறிப்போனது, வறுமை காணாமல் போனது” என்றான்.

ஆனால் சேட், அன்று நடந்த சம்பவத்தை முற்றிலும் மறந்திருந்தார். அதை அவருக்கு நினைவுபடுத்தினான் அந்த வியாபாரியின் மகன். அவன் கூறியதைக் கேட்ட அந்த சேட், மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவனது முயற்சியையும் உழைப்பையும் பாராட்டினார். தன் ஒரே மகளை அவனுக்கு மணம் செய்தும் கொடுத்தார்.

அறிவாற்றலும், முயற்சியும், உழைப்பும் ஒருவனுக்கு இருந்தால், ஒன்றுக்கும் உதவாத பொருளால்கூட ஒருவர் வாழ்க்கையில் முன்னேற முடியும் – உயரமுடியும் என்பதையும் உழைப்பின் உயர்வையும் அவன் புரிந்து கொண்டான்.

பிள்ளைச் செல்வங்களே! உழைப்பு ஒன்றுதான் நம்மை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை இக்கதை மூலம் புரிந்து கொண்டிருப்பீர்களே…! “உழைப்பே உயர்வு தரும்’ என்கின்ற தாரகமந்திரத்தையும் அடிக்கடி நினைவில் நிறுத்துங்கள்!

வடமாநில நாடோடிக் கதைகள் தமிழில்: இடைமருதூர் கி.மஞ்சுளா

– கி.மஞ்சுளா (நவம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *