டாடி சொன்ன அட்வைஸ்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 6,750 
 
 

ஒரு காட்டில் பெரிய ஆண் புலி ஒன்று வசித்து வந்தது. ஒரு நாள் மதிய வெயிலில் மிகப் பெரிய காட்டுமானை அடித்துக் கொன்று, பிறகு மெதுவாக மான் இறைச்சியை ரசித்து உண்ண ஆரம்பித்தது. வயிறு முட்ட உண்ட பிறகு தாகம் எடுத்தது. நேராகக் குட்டையை நோக்கிச் சென்றது. சிறிது தொலைவில் மரங்கள் அடர்ந்த பகுதியில் குட்டைத் தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த இடத்திற்கு புலி சென்றபோது, ஒரு பன்றிக் குட்டி குட்டையில் குளித்து, நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது.

புலியைப் பார்த்த பன்றிக் குட்டிக்கு பயம் ஏற்பட்டது. குலை நடுங்கியது. தண்ணீரில் இருந்து வெளியே வந்து கரையில் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றது.

புலி அந்தப் பன்றிக் குட்டியை கண்டு கொள்ளவே இல்லை. அதற்கு தாகம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்கும் ஆர்வத்தோடு குட்டையை நெருங்கியது.

தலையைக் குனிந்து குட்டைத் தண்ணீரில் வாய் வைத்தது. தண்ணீர் பன்றிக் குட்டியின் குளியலால் நாற்றம் எடுத்தது.

துர்நாற்றம் வீசுவதைப் புலியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, வேண்டா வெறுப்பாக ஒரு முறை தண்ணீரை நாக்கால் நக்கியது. ஆனால், குடிப்பதற்கு அதற்கு மனமே வரவில்லை. எனவே, அது பன்றிக் குட்டியைப் பார்த்து உறுமிவிட்டு, வேறு நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்ல ஆரம்பித்தது.

புலி வந்ததையும், தன்னைக் கண்டதையும், பிறகு தண்ணீர் குடிக்காமல் திரும்பிச் செல்வதையும் பார்த்தது பன்றிக் குட்டி.

“ஓகோ, இந்தப் புலி என்னைப் பார்த்து பயந்து போய்விட்டது. அதனால்தான் தண்ணீர் குடிக்காமல் வந்த வேகத்திலேயே திரும்பிச் செல்கிறது’ என்று தப்புக் கணக்குப் போட்டது பன்றிக் குட்டி.

“இளங்கன்று பயம் அறியாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப,ஒரே தாவாகத்தாவி புலியின் முன்னே சென்று நின்றது.

“”என்னைப் பார்த்து ஏன் ஓடுகிறாய்? வா, நாம் இருவரும் சண்டை செய்யலாம்,” என்று அழைத்தது.

பன்றியின் வார்த்தைகளைக் கேட்டு பக்கத்து மரக்கிளைகளில் இருந்த குரங்குகள் ஆச்சரியம் அடைந்தன. பன்றிக் குட்டிக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று பயத்தோடு பார்த்தன.

“”இனிமேல் பன்றிக் குட்டியின் உயிரை யாராலும் காப்பாற்ற முடியாது. அது எமலோகத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்ததுவிட்டது!” என்றது ஒரு செம்முகமந்தி.

மான் கறியை வயிறு முட்டத் தின்று விட்டதால் பசி, அடங்கிப் போன புலி, பன்றிக் குட்டியை அலட்சியத்தோடு பார்த்து, “”இன்றைக்கு வேண்டாம், நாளை இதே இடத்திற்கு வா. நாம் பலப்பரிட்சை செய்து பார்க்கலாம்,” என்று சொல்லிவிட்டுச் சென்றது.

“”இந்தப் புலி சரியான பயந்தாங்கொள்ளியாக இருக்கிறது. அதனால்தான் இன்று வேண்டாம், நாளைக்கு வருகிறேன் என்றது,” என்று நினைத்த பன்றிக் குட்டிக்கு கர்வமும், சந்தோஷமும் தாங்க முடியவில்லை.

அது கத்திக் கொண்டே தன் இருப்பிடத்திற்குச் சென்றது. தாயிடம், உறவினரிடம் புலியுடன் தான் சண்டை செய்யப் போவதைச் சொன்னது.

இதைக் கேட்ட பன்றி குடும்பத்திற்குப் பயம் பிடித்துக் கொண்டது. “”வீண் வம்பை விலை கொடுத்து வாங்கி வந்து விட்டாயா? புலி ஓர் அறை கொடுத்தால் அதற்குப் பிறகு நீ இருக்கமாட்டாய் தெரியுமா?” என்றது அதன் தாய்.

மற்ற பன்றிகள் எடுத்துச் சொன்ன பிறகுதான் தன் உடல் வலிமை புலியின் ஆற்றலை விட எவ்வளவு குறைவானது என்பது பன்றிக் குட்டிக்கு தெரிய ஆரம்பித்தது. உடனே பயம் பிடித்துக் கொண்டது. அதன் தலையில் இருந்து கால் வரையில் நடுங்கியது. காய்ச்சல் அடிப்பதைப் போல உடம்பு கொதித்தது. சாப்பிடக் கூட முடியாமல் அது சுருண்டு படுத்துவிட்டது.

பன்றிக் குட்டியின் பயத்தைப் பார்த்தது டாடி பன்றி. “”நாளை நீ புலியோடு சண்டை செய்யப் போகிறாயா?” என்று கேட்டது.

“”ஆமாம், ஆனால், நான் போகப் போவது இல்லை,” என்றது பன்றிக் குட்டி.

“”நீ போகாவிட்டால் புலி சும்மா இருக்குமா? அதனிடம் சவால் விட்டு விட்டு வந்திருக்கிறாயே? உன்னை தேடிக் கொண்டு, இங்கேயே வந்துவிடும். அப்படி வந்தால் நம் குடும்பத்தினர் அத்தனை பேரையும் ஆத்திரம் கொண்டு கிழித்து எறிந்து விடும்.’

“”ஐயோ, அது கூடாது டாடி. நான் சண்டைக்குப் போய் செத்தாலும் சாகிறேன்,” என்றது பன்றிக் குட்டி பயத்தோடு.

“”நீ புலியோடு சண்டைக்கு போ. ஆனால், போகும் போது உன் உடம்பு முழுவதும் எவ்வளவு சேற்றையும், சாணத்தையும் பூசிக் கொள்ள முடியுமோ, அவ்வளவு பூசிக் கொண்டு போ,” என்றது டாடி பன்றி.

பன்றிக் குட்டி அதற்கு சம்மதித்தது.

மறுநாள் காலையில் எழுந்த பன்றிக்குட்டி காட்டில் இருக்கும் யானை சாணத்திலும், காட்டெருமை சாணத்திலும் புரண்டு புரண்டு எழுந்தது. நாற்றம் சகிக்க முடியவில்லை. அப்படியே அது குட்டைய அடைந்தது. அங்கே புலி தயாராக காத்திருந்தது.

தானாகவே வந்து இரையாக விரும்பும் பன்றிக் குட்டியை விட்டு விட அதற்குப் பைத்தியமா என்ன? ஆகவே, அது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்து காத்திருந்தது.

பன்றிக் குட்டி வருவதைப் பார்த்த புலி, உதடுகளை நாக்கால் நக்கிக் கொண்டது அருமையான பன்றிக்கறி விருந்து வருகிறது அல்லவா? ஆனால், பன்றிக் குட்டி புலியின் எதிரே வந்ததும், புலிக்கு, சாணத்தின் நாற்றம் தாங்க முடியவில்லை. புலிக்கு பன்றி உடம்பில் ஒட்டியிருந்த யானைச் சாணத்தின் நெடி தும்மலை வரவழைத்தது. அது ஒரு அடி பின் வாங்கி நின்றது. பிறகு பன்றிக் குட்டியை பார்த்து, “”சே, அருகே வராதே! நாற்றம் சகிக்கவில்லை,” என்றது.

“”அப்படியானால் என்னுடன் சண்டை செய்ய வரமாட்டாயா?” என்றது பன்றிக்குட்டி

“”முதலில் நீ இங்கே இருந்து கிளம்பு. எனக்குக் குடலைப் பிரட்டிக் கொண்டு வாந்தி வருவதைப் போல இருக்கிறது,” என்ற புலி, மேலும் இரண்டு அடிகள் பின்னால் தள்ளி நின்றது.

அது போதும் என்று நினைத்த பன்றிக்குட்டி தலைதெறிக்கும் வேகத்தில் அங்கே ஓடி மறைந்தது. டாடி பன்றி சொன்ன யோசனையினால் பன்றிக்குட்டி புலியிடம் சிக்கி உயிர் விடாமல் தப்பியது. டீன் ஏஜ்ஜர்ஸ், குட்டீஸ் நீங்கள் இருவரும் எப்போதுமே உஷாரா இருக்கணும். உங்கள் பலத்தை உணராமல் வீம்பு செய்யக்கூடாது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *