முன்னொரு காலத்தில் உபீர் என்ற பெயர் கொண்ட மனிதன் ஓர் ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சோம்பேறி. சோம்பலுக்கு உதாரணம் காட்ட வேண்டும் என்றால் அவனைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு சோம்பேறி. ஒரு கல்லைக்கூட தனது கையால் நகர்த்தி வைக்க மாட்டான்.
அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். அவனுடைய சோம்பேறித்தனத்தால் அவர்கள் வறுமையில் வாடினார்கள். பசிக் கொடுமை வேறு!
குழந்தைகள் பட்டினி கிடப்பதைத் தாள முடியாத அவனது மனைவி, அவனை வேலைக்குப் போய் சம்பாதித்து வரும்படி கெஞ்சிக் கொண்டே இருந்தாள்.
ஆனால், அவனோ நான் இப்படித்தான் இருப்பேன். நல்லது தானாக நடக்கும் என்று கூறிவிட்டு சும்மா இருப்பான்.
தனது விரலைக் கூட அசைக்காதவன், திடீர் பணக்காரன் ஆகிவிடுவோம் என்ற நினைப்பில் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான். இப்படியே பல நாட்கள், மாதங்கள் சென்றன.
ஆனால் அவன் நினைத்தபடி பணக்காரனாக முடியவேயில்லை.
அதனால் ஒருநாள் அவன் ஒரு முடிவெடுத்தான்.
யாராவது ஒரு மகானைச் சந்தித்து, எப்படிப் பணக்காரனாவது என்று யோசனை கேட்கலாம் என்ற நினைப்பில் வீட்டை விட்டுக் கிளம்பினான்.
மூன்று நாட்கள் நடந்தான். வெகுதூரம் வந்துவிட்டான்.
அப்போது வழியில் ஓர் ஓநாயைச் சந்தித்தான். அதுவும் பசியால் வாடியதால் மிகவும் மெலிந்து காணப்பட்டது.
அந்த ஓநாய் உபீரைப் பார்த்து, “”தம்பி, நீ எங்கே செல்கிறாய்?” என்று கேட்டது.
அதற்கு உபீர், “”ஒரு மகானைச் சந்தித்து யோசனை கேட்கப் போகிறேன்…” என்று பதில் கூறினான்.
உடனே, “”அப்படியானால் எனக்கு ஓர் உதவி செய். நான் மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். இதற்கு என்ன நிவாரணம் என்று அந்த மகானிடம் எனக்காகக் கேட்டு வா…” என்று அந்த ஓநாய் அவனை மன்றாடிக் கேட்டுக் கொண்டது.
உபீரும், சரியென்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
இன்னும் சில நாட்கள் நடையிலேயே கழிந்தது.
அப்போது ஓர் ஆப்பிள் மரத்தைச் சந்தித்தான்.
அவனைப் பார்த்ததும் அந்த மரம் பேசத் தொடங்கியது-
“”தம்பீ, நீ எங்கே போகிறாய்?”
உபீர், தான் மகானைச் சந்திக்கப் போகும் விஷயத்தைக் கூறினான்.
உடனே ஆப்பிள் மரம், “”அப்படியானால் எனக்கு ஓர் உதவி செய். வசந்தம் பிறந்ததும் நான் மொட்டுக்கள் விடுகிறேன். ஆனால் மொட்டுக்கள் கருகி விடுகின்றன. அவை பூத்துக் காயாகி கனி தருவதே இல்லை. இதன் காரணம் என்ன? என்று அந்த மகானிடம் எனக்காகக் கேட்டு வா..” என்று கெஞ்சியது.
உபீரும் சரியென்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான்.
இன்னும் மூன்று நாட்கள் நடந்த பிறகு, ஓர் ஆற்றங்கரைக்கு வந்தான்.
அந்த ஆற்றிலிருந்து ஒரு மீன் துள்ளிக் குதித்து வந்து, அவனைப் பார்த்து, “”எங்கே போகிறாய்?” என்று கேட்டது.
அதனிடமும் மகானைச் சந்திக்கப் போவது பற்றி விவரமாகக் கூறினான் உபீர்.
அதற்கு அந்த மீன், “”எனக்கு ஏழு ஆண்டுகளாகத் தொண்டை வலிக்கிறது. அதற்கு என்ன நிவாரணம் என்று கேட்டறிந்து வருவாயா?” என்று அவனிடம் கேட்டது.
உபீர் அதற்கு ஒப்புக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
இன்னும் சில நாட்கள் சென்றன. அவனுடைய பயணத்துக்கு முடிவு வந்து விட்டது போலும்.
ஓரிடத்தில் ஒரு கிழவரைச் சந்தித்தான்.
அவனைப் பார்த்ததும், அந்தக் கிழவர், “”வா, உபீர்!” என்றார்.
என்ன ஆச்சரியம்! என்னுடைய பெயர் இவருக்கு எப்படித் தெரிந்தது? என்று நினைத்தான்.
ஒருவேளை இவர்தான் தான் தேடிக் கொண்டிருக்கும் மகானோ என்ற எண்ணமும் அவனுக்குத் தோன்றியது.
அவன் யோசிப்பதைப் பார்த்த அந்தக் கிழவர், “”நீ தேடிக் கொண்டிருக்கும் மகான் நான்தான்.. என்னிடம் உனக்கு என்ன வேண்டும் என்பதைச் சீக்கிரம் சொல்…” என்றார்.
ஓநாயும் ஆப்பிள் மரமும் மீனும் கேட்டுத் தெரிந்து கொண்டு வருமாறு சொல்லியவற்றை அந்த மகானிடம் கூறினான். பின்னர் தனது கோரிக்கையையும் அவரிடம் சொன்னான்.
அதற்கு அந்த மகான், “”அந்த மீனின் தொண்டையில் ஒரு ரத்தினக்கல் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதனை அகற்றிவிட்டால் அதன் வலி குணமடைந்து விடும்! அந்த ஆப்பிள் மரத்தின் அடியில் மண்ணில் தங்கக்காசுகள் கொண்ட ஒரு பானை இருக்கின்றது. அதை எடுத்துவிட்டால், அந்த மரம் காய் காய்க்க ஆரம்பித்துவிடும்! அந்த ஓநாய், தான் சந்திக்கின்ற முதல் சோம்பேறியை அடித்துச் சாப்பிட்டால் அதனுடைய தீராத வலி குணமாகிவிடும்…” என்று கூறினார்.
உபீர், “”என்னுடைய வேண்டுகோள் குறித்து ஒன்றும் நீங்கள் கூறவில்லையே?” என்று கேட்டான்.
அதற்கு அந்த மகான், “”உனக்கு வேண்டியது அனைத்தும் உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.. நீ போகலாம்…” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.
உபீருக்கு ஒரே சந்தோஷம். தான் நினைத்தபடி திடீர் பணக்காரனாகி விடுவோம் என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவனுடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மீனிடம் வந்து சேர்ந்தான் உபீர்.
மீன் மிகுந்த ஆவலுடன், “”என்ன நிவாரணம்?” என்று கேட்டது.
“”உன்னுடைய தொண்டையில் ரத்தினக்கல் ஒன்று சிக்கியிருக்கிறது. அதை அகற்றிவிட்டால் உன் வலி குணமடைந்து விடும்…” என்றான்.
அதற்கு அந்த மீன், “”அப்படியானால், நீயே அதை அகற்றி எடு. உனக்கும் ரத்தினக்கல் கிடைக்கும். எனக்கும் வலி நீங்கிவிடும்” என்று கெஞ்சியது.
ஆனால் உபீர், “”நான் ஏன் இந்த வேலையைச் செய்ய வேண்டும். நான் விரலை அசைக்காமலேயே பணக்காரன் ஆகப் போகிறேன்” என்று பதில் சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிச் சென்றான்.
சில நாட்கள் நடைப்பயணத்துக்குப் பிறகு, ஆப்பிள் மரம் இருந்த இடத்தை வந்தடைந்தான் உபீர்.
ஆவலுடன் அவனை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ஆப்பிள் மரம், அவனைப் பார்த்து தன்னுடைய நிவாரணம் பற்றிக் கேட்டது.
அதற்கு உபீர், “”உனக்குக் கீழே மண்ணில் தங்கக் காசுகள் கொண்ட பானை ஒன்று இருக்கின்றது. அதனை அகற்றிவிட்டால் உனது மொட்டுக்கள் பூத்துக் காய்க்கத் தொடங்கிவிடும்..” என்று கூறினான்.
“”அப்படியானால், அந்தப் பானையை நீயே தோண்டி எடு. எனக்கும் பலன் கிடைக்கும். உனக்கும் தங்கக் காசுகள் கிடைக்கும்” என்றது ஆப்பிள் மரம்.
“”எனக்கு உன் தங்கம் வேண்டாம். நான் ஒன்றும் செய்யாமலேயே பணக்காரனாகப் போகிறேன்…” என்று திமிராகக் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நடையைக் கட்டினான்.
இன்னும் சில நாட்களுக்குப் பிறகு, அந்த ஓநாயைச் சந்தித்தான் உபீர்.
அதனிடம், “”நீ முதலில் சந்திக்கின்ற சோம்பேறியை அடித்துச் சாப்பிட்டால் உனது வலி குணமடையும்…” என்று கூறினான் உபீர்.
அதற்கு, அந்த ஓநாய், “”உன்னுடைய கதையைக் கொஞ்சம் சொல்லேன்… நான் கேட்டு, உனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்…” என்றது.
உபீர், வீட்டிலிருந்து தான் கிளம்பியது முதல் அந்த நிமிடம் வரை அவனுக்கு நடந்தவற்றையெல்லாம் கூறிவிட்டு, தான் ஒன்றும் செய்யாமலேயே பணக்காரனாகப் போவதைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டுக் கிளம்ப முற்பட்டான்.
அவனைத் தடுத்து நிறுத்திய ஓநாய், “”உன்னைவிட ஒரு சோம்பேறி எங்கு தேடினாலும் எனக்குக் கிடைக்கப் போவதில்லை.. நான் ஏன் வீணாகத் தேடி அலைய வேண்டும்…” என்று கூறியபடியே அவனை அடித்துச் சாப்பிட ஆரம்பித்தது.
அப்போது வானத்திலிருந்து மூன்று ஆப்பிள்கள் கீழே விழுந்தன. ஒன்று இந்தக் கதையைக் கூறியவருக்கு; இன்னொன்று கதையைக் கேட்டவருக்கு; மூன்றாவது மற்ற அனைவருக்கும்…
– சான்ட்ரா, பள்ளப்பட்டி (ஏப்ரல் 2012)