சுற்றுலா போன சுப்பு!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,835 
 
 

ஆற்றில் புதுநீர் நொங்கும் நுரையுமாக ஓடிக் கொண்டிருந்தது.

தோளில் தொங்கும் கனமான பையுடன் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தது குரங்கு சுப்பு.

எதிரில் வந்த பூனை மீனு, “”சுப்பு, எங்கேடா போறே?” என்று கேட்டது.

“”சுற்றுலா போறேன்…” என்றது சுப்பு.

“”பை கனமா தெரியுதே… உள்ளே என்ன இருக்கு?”

“”பல இடங்களைச் சுற்றிப் பார்க்கணும். திரும்பி வர பல நாட்கள் ஆகும்! அதுவரையிலும் போட்டுக் கொள்ள மாற்று உடைகளை எடுத்துக்கிட்டுப் போறேன்.”

“”இது சாகுபடி செய்ய வேண்டிய காலம். இப்போ சுற்றுலா போவது சரிதானான்னு சிந்தித்துப் பார்த்தியா?”

“”அதெல்லாம் வந்து பார்த்துக்கலாம். உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போடீ…” எரிச்சலுடன் கூறிவிட்டு நடையைத் தொடர்ந்தது சுப்பு.

சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தது சுப்பு.

சாலையின் இரு பக்கங்களிலும் வயல்கள்.

தன்னுடைய வயலின் மடையைத் திறந்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தது மான் மன்னாரு.

சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்த சுப்புவைப் பார்த்த மன்னாரு, “”சுப்பு, எந்த ஊருக்குப் போறே?” என்று கேட்டது.

“”திரும்பி வந்ததும், நான் போய்ட்டு வந்த ஊர்களையெல்லாம் பற்றிச் சொல்றேன்” என்றது சுப்பு.

”உன் வயலுக்குத் தண்ணி பாய்ச்சலையா?” கேட்டது, மன்னாரு.

“”நீ இப்போ பாய்ச்சு, நான் வந்து பாய்ச்சிக்கிறேன்” சொல்லிக் கொண்டே நடந்து கொண்டிருந்தது சுப்பு.

சற்று தூரத்தில், எந்திரக் கலப்பையால் வயலை உழுது கொண்டிருந்தது யானை அப்பு.

சுப்புவைப் பார்த்துவிட்ட அப்பு, “”உன் வயலுக்குத் தண்ணி வச்சிட்டியா? உழுதிட வரலாமா?” என்று கேட்டது.

“”ஆளை விடுங்கடா… நான் சுற்றுலா போய்விட்டு அப்புறமா சாகுபடி செஞ்சுக்கிறேன். இப்போ நீங்க செய்யுங்க…” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தது சுப்பு.

சுப்பு நகரத்தை அடைந்துவிட்டது. அங்கே வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது. வேகமாக வந்த ஒரு சிற்றுந்து, ஓரத்தில் நடந்து கொண்டிருந்த சுப்புவை உரசித் தள்ளிவிட்டுச் சென்றது.

“”ஆ!… தப்பித்தேன்!” என்று எழுந்து உடையில் இருந்த தூசியைத் தட்டி விட்டது சுப்பு.

“சர்…ர்….சர்…ச…ர்….’ என்று பாய்ந்து செல்லும் வாகனங்களைப் பார்த்த சுப்புவுக்கு பிரமிப்பாகவும் பயமாகவும் இருந்தது. ‘அடேங்கப்பா… சற்றுத் தவறினாலும் தரையிலேயே வச்சு நசுக்கிடுவானுங்க போலிருக்கே..!’

மிகவும் எச்சரிக்கையுடன் நடந்தது சுப்பு.

சுற்றுலா சென்ற சுப்பு,கொல்லி மலைக்குச் சென்று காட்டைச் சுற்றிப் பார்த்தது. ஊட்டிக்குச் சென்று மலர்ச் சோலைகளைப் பார்த்து வியந்தது. ஒகனேக்கல் ஆற்றில் படகில் பயணம் செய்து, ஆற்றைக் கடந்து சென்று பெரிய நீர் வீழ்ச்சியைக் கண்டு களித்தது! குற்றாலம் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தது. இப்படிப் பல இடங்கள் சுற்றியதில் நாட்கள் கடந்ததே தெரியவில்லை.

சுப்பு, பையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தது. திரும்பி ஊருக்குப் போய்ச் சேரத்தான் பணம் இருந்தது. எனவே, சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பியது.

சுப்பு ஊருக்குள் நடந்து கொண்டிருந்தபோது, சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள வயல்களில் அறுவடைப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தது.

யானை அப்பு, எந்திரத்தால் கதிரடித்துக் கொண்டிருந்தது.

சுப்புவைப் பார்த்த அப்பு, “”சுப்பு! சுற்றுலாவை முடிச்சுட்டு வந்துட்டீயா?” என்று கேட்டது.

“”வந்துட்டேன்…” மகிழ்ச்சியின்றி பதிலளித்துவிட்டு, நடந்தது சுப்பு.

மான் மன்னாருவின் வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல், சாக்குகளில் நிரப்பப்பட்டு, எடை போடப்பட்டு, மூட்டைகளாகத் தைத்து அடுக்கப்பட்டிருந்தன. நெல் வியாபாரியான கரடி கருப்பன், பணத்தை எண்ணி மன்னாருவிடம் கொடுத்துக் கொண்டிருந்தது.

சுப்புவைப் பார்த்த மான் மன்னாரு, “”சுப்பு… சாயந்திரம் உன் வீட்டுக்கு வர்றேன். நீ பார்த்துவிட்டு வந்த இடங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்” என்றது.

“”ஊம்…” என்ற சுப்புவின் நெஞ்சத்தில் ஏக்கம் இருந்தது. “நானும் சாகுபடி செய்திருந்தால் இப்படிப் பணம் கிடைத்திருக்கும்! நான்தான் இருந்த பணத்தையெல்லாம் செலவழித்துவிட்டு வந்திருக்கிறேனே…’ என்று தன்னைத் தானே நொந்தபடி நடந்து கொண்டிருந்தது சுப்பு.

பூனை மீனுவின் வயலில் அறுவடை நடந்து கொண்டிருந்தது.

அடுத்து இருந்த சுப்புவின் வயலில் காட்டுச் செடிகள் மண்டிக் கிடந்தன.

சுப்புவைப் பார்த்த மீனு, “”சுப்பு! ஊரிலே எல்லோரும் சாகுபடி செய்து, அறுவடை செய்துக்கிட்டு இருக்கோம். நீ இப்போதான் ஊருக்கு வர்றே… எப்போ சாகுபடி செய்யப் போறே?” என்று கேட்டது.

சுப்புவின் கண்களில் நீர் முட்டியது.

“”சாகுபடி செய்ய வேண்டிய காலத்திலே ஊர் சுற்றப் போகக்கூடாதுன்னு எல்லோரும் சொன்னீங்க… நான்தான் கேட்கலே…” என்றது சுப்பு.

“”உன் வயலைப் பார்… நல்லா விளையக் கூடிய நிலம் தரிசாக் கிடக்குது. அதைப் பார்க்க எனக்கே வருத்தமா இருக்கு!” என்ற மீனு, “”உழுகிற காலத்திலே ஊர் சுற்றப் போயிட்டு அறுவடைக் காலத்திலே வந்து பார்த்தால் அப்படித்தான் இருக்கும்…” என்றது.

“”என் தவறை உணர்ந்திட்டேன், என்னை எல்லோரும் மன்னிச்சுடுங்க…” என்று சொல்லிக் கண்ணீர் விட்டது சுப்பு.

“”அழாதேடா, சுப்பு… சம்பா சாகுபடியை நல்லா செய்யலாம்…” என்று ஆறுதல் கூறியது மீனு.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “”ஆமா… அடுத்த சாகுபடியைத் தீவிரமா செய்வேன்… இழந்ததை ஈடு கட்டுவேன்…” என்று சொன்ன சுப்புவின் முகத்தில் நம்பிக்கை ஒளி தெரிந்தது!

– புலேந்திரன் (ஏப்ரல் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *