கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்  
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 44,764 
 
 

கதை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன். அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப் பொறுத்தவரை அன்று மட்டும்தான் பேத்தியோடு பேச முடியும், விளையாட முடியும். சனிக்கிழமை விடுமுறை நாளில் கூட ஆபீஸ் சென்று விடுவார் அவர். அதென்னவோ அப்படிப் போனால்தான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது அவருக்கு.

சபாஷ், பூக்குட்டி!

வாரா வாரம் ஏதேனும் கதைகளைத் தயார் செய்து விடுவார்தான். அல்லது நூலகத்திலிருந்து எடுத்து வரும் புத்தகத்திலிருந்து ஒன்றிரண்டு குழந்தைக் கதைகளைத் தேர்ந்து விடுவார். குறிப்பாகக் குழந்தை அஸ்வினிக்கு மகாபாரதக் கிளைக் கதைகளைச் சொல்லத் தவறுவதில்லை அவர். இராமாயணமும் சொல்லுவார். அடிக்கடி அதையே சொன்னால் போரடித்து விடுமோ என்று அன்றாட நடப்புக் கலந்த யதார்த்தக் கதைகளையும் சொல்ல யத்தனித்தார். கொஞ்சங் கொஞ்சமாக இந்த உலகமும் புரியட்டும் என்று நினைத்தார். அது அத்தனை சுருதி சுத்தமாக வரவில்லையோ என்று அவருக்கே அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.

வாசலில் கீரை விற்பவள், காய்கறி கொண்டு வருபவள், செருப்புத் தைப்பவன், தையல் மிஷினைத் தோளில் தூக்கிக் கொண்டு அலையும் தொழிலாளி, போஸ்ட்மேன், ஐஸ் விற்பவன், அயர்ன்காரர், கூரியர் சர்வீஸ்காரர் என்று வகைக்கு ஒன்றாக எப்படியோ திரித்து மறைத்து ஒரு கதையை உருவாக்கிச் சொல்லிக் கொண்டிருந்த அவருக்கு இன்று என்ன வந்ததோ மனதில் ஒன்று கூட உருவாகவில்லை.

சொல்லலாம்தான், நேற்று ஒரு டஜன் என்று பதினாறு பழத்தை ஏதோ கவனப் பிசகில் கொடுத்துவிட்டுப் போன வாழைப் பழக்காரனையும், அதைக் கவனித்தே கமுக்கமாய் வாங்கி வைத்த மனையாளையும் பற்றிச் சொல்லிவிடலாம்தான். பிறகு பாட்டியைப் பற்றித் தவறான எண்ணம் குழந்தை மனதில் விழுந்து விட்டால்? வேண்டாம் என்று மனசை அடக்கிக் கொண்டார்.

இன்று இருக்கும் இருப்பைப் பார்த்தால் கடைசியில் அதைத்தான் சொல்ல வேண்டி வருமோ என்கிற அச்சம் அவர் மனதில் புகுந்தபோதுதான் பளிச்சென்று அந்த நிகழ்வு அவர் மனதில் உதித்தது. அப்பாடா…! என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே ”கத வந்திருச்சி…..” என்று உற்சாக மிகுதியில் குழந்தையின் கன்னத்தைத் தடவிக்கொண்டே கத்தினார் ராமகிருஷ்ணன்.
சொல்லு தாத்தா…சொல்லு தாத்தா….சீக்கிரம் சொல்லு…..என்று மளார் என மடியில் வந்து படுத்துக் கொண்டது அஸ்வினி. ஆரம்பித்தார் ராம்கி.

“எப்டியோ கவனிக்காம, அந்த ஒன்வேல போயிட்டேன் தாத்தா…..என்று ஆரம்பித்தார். கதையைச் சரியான இடத்தில் ஆரம்பித்துவிட்டதாய் அவர் மனம் பெருமிதம் கொண்டது. ஒரு நேர்மையான கதையை குழந்தைக்குச் சொல்லப் போவதில் மகிழ்ச்சி. உற்சாகம்.
ஒன்வேன்னா….? உடனே விழுந்தது கேள்வி. குழந்தையைப் பொறுத்தவரை அது சரிதானே? எனவே ஒரு வழிப்பாதை என்றால் என்ன என்று விளக்கம் கொடுத்தார்.

“ஓ…!அப்டியா? அப்போ நீ அங்கயிருந்த போர்டைக் கவனிக்கலையா?”

இருக்கிற டிராஃபிக் உறரிபரில எனக்கு அது கண்ணுல படலடா…அதோட அந்தப்பக்கம்லா நா அடிக்கடி போனதில்ல….ஆகையினால எனக்குத் தெரிலன்னு வச்சிக்கயேன்…. – தன் தவறுக்கு குழந்தைக்கு ஏற்றாற்போல் சமாதானம் சொன்னார் ராம்கி.

குழந்தை இவரின் மூஞ்சியைப் பார்த்தது. என்னவோ கேட்க நினைப்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை.

என்னா சொல்லு…? என்றார் இவர்.

டிராஃபிக் போலீஸ் பிடிச்சிட்டானா தாத்தா….? –முகத்தில் கலவரம்.

பிடிச்சா என்ன? தெரியாமத்தானே போயிட்டேன்…வேணும்னேவா போனேன்….?

அதெப்படித்தாத்தா போலீசுக்குத் தெரியும்….குழந்தை விடாமல் கேட்டது.

தெரியாதுதான்…அதான் கூப்டுட்டான்……என்றார் இவர்.

ஐயைய்யோ…அப்றம்? – பயந்தவாறே அஸ்வினி இவரின் கையைப் பற்றிக் கொண்டது.

இங்குதான் குழந்தைக்கு நல்லது சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் ராம்கி. எப்படியாவது ஒரு நல்லதைப் புகுத்தி தன்னால் அதற்கு ஒரு கதை சொல்லிவிட முடிகிறது. அதன் மூலம் நல்ல எண்ணங்களை அதன் மனதில் விதைக்க முடிகிறது. சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல் இப்பொழுதே அதன் மனதில் நல்ல விஷயங்களாய்ப் போட்டு நிரப்பி விட்டால் பிறகு கெட்ட, தவறான விஷயங்களோ, எண்ணங்களோ மனதில் உதிக்க வாய்ப்பில்லையல்லவா? இந்த மட்டுக்கும் இம்மாதிரி ஒரு நல்லது செய்வதற்காவது பையனும், மருமகளும் தனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்களே என்று எண்ணி ஆறுதல் பட்டுக் கொண்டார்.

குழந்தை இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. தாத்தா மேற்கொண்டு சொல்லாமல் நிறுத்திவிட்டது அதை மேலும் கலவரப்படுத்தி விட்டதோ என்னவோ?

ஏன் தாத்தா பேசாம இருக்கே…? போலீஸ்காரர் திட்டினாரா? என்றது அஸ்வினி.

திட்டினாராவா? எதுக்காகத் திட்டணும்? நான்தான் தப்புதான், தெரியாம வந்துட்டேன்னுதானே சொன்னேன்…எதுக்காகத் திட்டறார்? முழிச்சிப் போனாராக்கும்…? என்றார் இவர்.

குழந்தை சிரித்தது. இவர் தொடர்ந்தார்.

எங்கயுமே உண்மையை ஒத்துண்டோம்னா அதுக்கு மதிப்பும் மரியாதையும் ஜாஸ்திடா கண்ணு….அடாவடி பண்ணினாத்தான் தப்பாக்கும்….அதை நல்லாத் தெரிஞ்சிக்கோ…
அடாவடின்னா…?

குழந்தை இப்படிக் கேட்ட பின்புதான் ஏன் அந்த வார்த்தையைச் சொன்னோம் என்றிருந்தது இவருக்கு. அந்தந்த வயது வரும்போது, சமூகத்தோடு கலக்கும்போது தானாகவே தெரிந்துவிட்டுப் போகிறது…எதற்காக இப்பொழுது? ஏதோ தப்புச் செய்துவிட்டதுபோல் உறுத்தல் …ஆனாலும் அதை மேற்கொண்டு காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தார்.

உண்மைக்கு எங்கயுமே மரியாதையும் மதிப்பும் அதிகம்டா ராஜாத்தி.. மகாத்மாகாந்தி உண்மையே பேசின அரிச்சந்திர மகாராஜாவைத் தானே தனக்கு வழிகாட்டியா எடுத்திண்டார்….உனக்குச் சொல்லியிருக்கேன்லயா…உண்மைக்கு இருக்கிற சக்தி அப்டி…அது நெருப்பு மாதிரின்னு வச்சிக்கயேன்…..நாம பேசுறது உண்மையாயிருந்தா நம்மகிட்டருந்து வார்த்தைகள் தடங்கல் இல்லாம, பளிச்சின்னு வெளிவரும்…இல்லன்னா, அதாவது பொய்யிருந்திச்சுன்னு வச்சிக்கோ, வாய் உளரும்….வார்த்தைகள் தடுமாறும்….அதுவே நாம பேசுறது பொய்யின்னு காண்பிச்சுக் கொடுத்திடும்…ஆகையினால எங்கயானாலும் நாம தப்பித் தவறி ஒரு தப்போ, தவறோ செய்திட்டாலும், அதை ஒத்துக்கணும்…தைரியமா ஒப்புத்துக்கிற மனசை நாம வளர்த்துக்கணும்…அது நேர்மையோட அடையாளம்…அந்த நேர்மைதான் நம்மை என்றைக்கும் வாழ வைக்கும்…மேற்கொண்டு தவறுகளச் செய்யமாட்டோம்…தெரிஞ்சிதா…? –சொல்லிவிட்டு குழந்தை முகத்தையே உற்றுப் பார்த்தார் ராம்கி.

இறுக்கமான முகத்தோடு அது இவரையே பார்த்துக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டது.

அப்புறம் என்ன தாத்தா செய்தே…?

என்னத்தச்செய்றது….ஸாரி சொல்லிட்டேன்ல…அதுக்கு மேல என்ன இருக்கு? யார் ஒத்துக்கிறா இந்தக் காலத்துல…? சரி போங்கன்னுட்டான்….வந்துட்டேன்…அவ்ளவுதான்…
விட்டுட்டானா…..நல்ல போலீஸ்….என்றது அஸ்வினி. கொஞ்ச நேரம் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தது குழந்தை. என்ன யோசனை என்று அதையே பார்த்துக்கொண்டிருந்தார் இவர்.
சரி, தாத்தா நா பால் குடிக்கப் போறேன்….என்றுவிட்டு எழுந்து அம்மாவைப் பார்த்து ஓடியது. அந்த அழகையே ரசிக்கலானார் இவர். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றியது ராம்கிக்கு. ஆனால் மனசில் ஒன்று உறுத்தியது.

அதென்ன, நல்ல தாத்தா என்று சொல்லும் என்று பார்த்தால் நல்ல போலீஸ் என்று விட்டுப் போகிறது. நான் சொன்ன கதையின் சாராம்சமான நேர்மை, உண்மை என்பவைகளைப் புரிந்து கொண்டதா இல்லையா? கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது இவருக்கு. கற்பனையில் திரித்துக் கூறும் கதைகள் சரியாகத் தனக்கு அமையவில்லையோ என்று நினைக்கலானார். இது தன்னின் அனுபவமாயிற்றே? அதனால்தானே பளிச்சென்று மனதில் தோன்றியதை அப்படியே சொன்னேன். ஒரு பிட்டுக் கற்பனை, மண்ணாங்கட்டி ஒன்று கிடையாதே…! குழந்தைக்கு ஏதாச்சும் புரிந்ததா இல்லையா? – சற்றுக் குழப்பத்துடனேயே படுக்கைக்குப் போனார் ராமகிருஷ்ணன்.

மறுநாள் காலையில் வழக்கம்போல் பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட அழைத்துச் சென்றபோது குழந்தை அஸ்வினி சாவகாசமாய்க் கேட்டது.

ஏன் தாத்தா, நேர்மை, உண்மைன்னு நேத்திக்கு சொன்னியே ஒரு கதை…அந்தக் கதைல போலீஸ்காரர் உங்களை சரி போங்கன்னு விட்டுட்டார் வந்துட்டேன்னீங்கல்ல…?

ஆமாம்….என் ஒரு ஆளையே கவனிச்சிட்டிருந்தாப் போதுமா…டிராஃபிக்கைக் கண்காணிக்க வேண்டாமா? எவ்வளவு கூட்டம்?

அது சரி தாத்தா…அவன் போகச் சொல்லிட்டான் நீங்க வந்துட்டீங்க…! ஆனாலும்….. – என்னவோ சொல்லத் தயங்குவது போல நிறுத்தியது குழந்தை.

ஆனாலும்….? சொல்லு……என்ன கேட்கிற…? தயங்காமச் சொல்லு…

தெரியாமப் போயிட்டாலும் நீங்க ஒன்வேல போனது தப்புதானே…?

தப்புதான்…..- குழந்தை என்ன சொல்ல வருகிறது என்று சற்று திடுக்கென்றே இருந்தது இவருக்கு.

அப்போ என்ன ஃபைனோ அதைச் சொல்லுங்கன்னு நீங்க கட்டிட்டில்ல வந்திருக்கணும்…..அப்போதானே அது உண்மையான நேர்மை? –

ராம்கிக்கு அவர் செவுணியில் யாரோ பளாரென்று ஓங்கி அறைந்தது போலிருந்தது அந்த நிமிடத்தில். பேருந்தில் ஏறி அமர்ந்து இவரையே பார்த்து அதன் பதிலுக்காக அந்தக் குழந்தை காத்திருந்தபோது, முகத்தில் ஈயாடாமல் வெல வெலத்துப் போய் நின்று கொண்டிருந்தார் ராம்கி என்கிற ராமகிருஷ்ணன்.

ஒன்று மட்டும் மேலும் அவருக்கு நன்றாக விளங்கியது. தான் அதுநாள்வரை சொல்லிக் கொடுத்த நேர்மையும் நாணயமும் உண்மையும் கலந்த கதைகள் எல்லாம் சேர்ந்து தன் பேத்தியை நன்றாகத் தெளிவு பெற வைத்திருக்கிறது என்பதே அது…!!

– தினமணி சிறுவர் மணியில் வந்தது (ஜூன் 2012)

Print Friendly, PDF & Email

2 thoughts on “சபாஷ், பூக்குட்டி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *