குதிரப்பனன உலகப்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,720 
 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊங்கனூர் என்னும் ஊரிலே உலகப்பன் என்னும் பெயருடைய சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அகவை பதின்மூன்று. அவன் கண்ட உணவுகளை அளவு கடந்து உண்டுகொண்டிருந்தான். அதனால் அவனுடைய உடம்பு தடித்துக் கொழுத்துப் போய்விட்டது. கை கால்கள் அளவுகடந்து பருத்துப் போனபடியால் நடப்பதற்கும், எக்காரியத்தையா வது செய்வதற்கும் முடியாதவனாகிவிட்டான். அவனைப் பள்ளிக்கூடத்தில் வைத்திருந்தபோதிலும் அவன் உண்டியைக் கண்டபடி உண்பதிலேயே முழுக் கருத்தையுஞ் செலுத்தியிருந்தபடியால், கல்வி ஒரு சிறிதும் வரவில்லை.

பள்ளிக்கூடத்திலே உலகப்பனோடு படித்த பிற மாணவர்கள் உலகப்பனுக்குக் குதிரப்பன் என்று பெயர் வைத்திருந்தார்கள். அவனுக்குக் கல்வி ஒரு சிறிதும் வராததைக் கண்ட பிற மாணவர்கள் அவனைப் பார்த்து, “நீ எதற்குப் பயன்? உன்னுடைய தலையைக் கிள்ளிவிட்டால், நெல் கொட்டி வைப்பதற்குத்தான் பயன்படுவாய்” என்று கேலி செய்துகொண் டிருந்ததுடன், அவனுக்கு யானைக்குட்டி என்றும் மற் றொரு பெயர் வைத்திருந்தார்கள்.

உலகப்பன் மிக விரைவில் தானே பள்ளிக்கூடம் போவதை நிறுத்திவிட்டான். அவனுக்குச் சிறிது செல்வம் இருந்தபடியால், உண்டியைமட்டும் கண்டபடி தின்றபடியே இருந்தான். நாளடைவில் அவனுடைய உடல் மேலும் பருத்துவந்தது. அவன் தன்னுடைய பின் பக்கத்தைத் திரும்பிப் பார்க்கவேண்டுமானால் தலையை மட்டுந் திருப்பிப் பார்க்க முடியாது. உடல் முழுவதையுந் திருப்பினால் தான் பார்க்கலாம். அவன் உட்காருவதும் எழுந்திருப்பதும் படுப்பதும் மிகவும் தொல்லை.

உலகப்பனுக்குச் சிறிது பொருள் இருந்போதி னும், அவன் பெரும் பூதமாகக் குண்டோதரன் போல் ஆகிவிட்டபடியால், திருமணத்திற்குத் தகுதியான பெண் கிடைக்கவில்லை. மேலும் சிறிது நாள்வரை தடித்துப் பெருத்துக்கொண்டேயிருந்தான். ஒருநாள் இரவு வீட்டு வாயிற்படியால் தடுக்கி வீழ்ந்தான். அதனால் நல்ல அடிபட்டது. பிறகு பிழைக்காமல் இறந்து போனான். ஆகையால் அதிகமாக உணவு தின்பதிலே யாரும் விருப்பங்கொள்ளுதல் கூடாது. விருப்பங் கொண்டால் உலகப்பனைப்போல , நடைப் பிணமாக இருந்து காலமல்லாத காலத்திலே இறக்கும் படியாக நேரிடும்.

“மீதூண் விரும்பேல்” (இ – ள்.) மீதூண் – மிகுதியாக உண்ணுதலை, விரும்பேல் – நீ விரும்பாதே.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *