குதிக்கும் இருப்புச் சட்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 7,209 
 

பொன்னி நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டைப் பூவேந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பூவேந்தனுடைய பட்டத்து அரசியின் பெயர் மலர்க்கொடி.

பூவேந்தன் நாட்டை நன்றாக அரசாண்டு வந்தான். நாடு முழுவதும் நல்ல வளம் நிரம்பியதாக இருந்தது. இயற்கை வளமும் நல்ல அரசாட்சியும் இருந்ததால் அந்த நாட்டு மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தார்கள்.

நாடு நன்றாக இருந்ததால் அரசனுக்கு வேலை யும் குறைவாகவே இருந்தது. திருட்டு என்றும், அடிதடி என்றும், மோசடி என்றும் வரும் வழக்குகள் மிகக் குறைவாகவே இருந்தன.

அரசன் அரண்மனையில் நிறைய ஆட்களை வேலைக்கு வைத்திருந்தான். அரசி மலர்க்கொடி ஒவ்வொரு புது ஆளைச் சேர்க்கும் போதும், தேவை யில்லாதபோது எதற்காக ஆள் சேர்க்க வேண்டும் என்று கேட்பாள்.

“வேலைக்கு ஆட்கள் நிறைய இருந்தால் நமக்கு வசதி தானோ என்று கூறுவான் அரசன்.

“அரசே! அது தவறு. தேவைக்கு அதிகமாக ஆட்கள் இருந்தால், வேலை சரியாக நடக்காது” என்று கூறுவாள் அரசி மலர்க்கொடி.

“இந்த ஆள் நமது அமைச்சரின் உறவுக்காரன். இருந்துவிட்டுப் போகட்டுமே” என்று வேலைக்குச் சேர்த்துக் கொள்வான்.

இப்படி யார் வந்து வேலை கேட்டாலும், தகுதி பார்க்காமலும் . திறமையை நோக்காமலும் பலரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். இதனால் அரண்மனையில் வேலைகள் சரிவர நடக்கவில்லை.

ஒருநாள், அரண்மனைப் பெட்டகத்தில் இருந்த பொன் நாணயங்கள் காணாமல் போய்விட்டன. முதல் நாள் இருப்பு வைத்துப் போன நாணயங்கள் மறுநாள் காலையில் காணாமற் போனது கண்டு நிதி அதிகாரி கலங்கிப் போனார்.

இது வெளியில் தெரிந்தால் பூவேந்தன் ஆட்சிக்கே கெட்ட பெயர் உண்டாகிவிடும், என்று நிதியதிகாரி அரசனிடம் வந்து பொன் நாணயங்கள் காணமல் போன செய்தியை மிகக் கமுக்கமாகக் கூறினார்.

யாரோ கள்ளச்சாவி போட்டுப் பெட்டகத்தைத் திறந்திருக்கிறார்கள். உறுதியாக அரண்மனையில் உள்ள யாரோதான் – திருடியிருக்கிறார்கள் என்று தோன்றியது. வெளியில் இருந்து யாரும் திருடர்கள் வந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் யார்மீதும் ஐயுறுவதற்குத் தோன்ற வில்லை. அரண்மனையில் வேலை செய்யும் அனை வருமே உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அமைச்சர்கள், படைத்தலைவர்கள், அதிகாரிகள் ஆகியவர்களின் உறவினர்களே எல்லா வேலையிலும் இருந்தார்கள்.

அதனால் யார் மீது குற்றம் சொன்னாலும் அது சரியாக இருக்காது.

இதை எப்படிக் கண்டு பிடிப்பது என்று சிந்தித்துப் பார்த்தால் குழப்பமாகவே இருந்தது.

அரசன் பூவேந்தன் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

அப்போது முதலமைசர் அரசனிடம் வந்தார். “அரசே! நம் நாட்டின் எல்லையில் தங்க வயல் என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே அறிவாளன் என்று ஒரு குடியானவன் இருக்கிறான். பக்கத்து நாடுகளில் நடக்கும் பல திருட்டுக்களை அவன் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறான். அவனை அழைத்து வந்தால் நாம் இந்தத் திருடனைக் கண்டு பிடித்து விடலாம்” என்று கூறினார்.

பூவேந்தன் இரண்டு காவல் வீரர்களை அழைத் தார் . தங்க வயலுக்குச் சென்று அறிவாளன் என்ற அந்தக் குடியானவனை உடனே அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

காவல் வீரர்கள் தங்க வயலுக்குச் சென்றார்கள். குடியானவனிடம் மன்னர் அழைத்துவரச் சொன்ன செய்தியைக் கூறினார்கள்.

நடந்த செய்திகளை அறிவாளன் அந்தக் காவல் வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். தன் வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துக் கொண்டான். காவல் வீரர்கள் கொண்டு வந்திருந்த குதிரை வண்டியில் ஏறிக் கொண்டான். அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.

அறிவாளன் ஒரு ஏழைக் குடியானவன் தான். ஆகையால் அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே அரசருக்கு அவன் மீது நல்ல நம்பிக்கை உண்டாயிற்று.

அய்யா அறிவாளரே! பொன்னி நாட்டில், அதுவும் அரண்மனையில் ஒரு திருட்டு நடந்திருப்பது பெரிய அவமானமாய் இருக்கிறது. இங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரும் உயர் குலத்தைச் சேர்ந்த வர்கள். பொய்யான குற்றச்சாட்டைக் கூறினால் அது அவர்கள் பிறந்த குலத்துக்கே அவமானமாகும். ஆகையால், இதில் நீங்கள் உண்மையான குற்றவாளி யைக் கண்டுபிடித்துத் தர வேண்டும். வெறும் அய்யத் தில் ஒருவரைக் குற்றம் சாட்டக்கூடாது, என்று மன்னர் விளக்கமாகக் கூறினார்.

“அரசே! நல்லவர்கள் மீது குற்றம் சாட்டக் கூடாது என்ற தங்கள் உயர்ந்த நோக்கத்தைப் பாராட்டுகிறேன். இவ்வளவு உயர்ந்த பண்புள்ள அரசரின் அரண்மனையில் திருட நினைத்த ஒரு கயவனும் நம் நாட்டில் இருக்கிறானே என்று நினைத்து வேதனைப்படுகிறேன்!” என்று கூறிய குடியானவன், அரசரைப் பார்த்து, “அரசே! மந்திர வித்தையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா!” என்று கேட்டான்.

மந்திரங்களில் எனக்குச் சிறிது கூட நம்பிக்கை கிடையாது. மந்திரம் மாயம் என்பதெல்லாம் ஏமாற்று வித்தை என்று கூறினான் அரசன் பூவேந்தன்.

“அதுதான் தவறு. அரசே! இப்பொழுது மாய மந்திரத்தின் மூலமாகவே நான் இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்கப் போகிறேன். நான் கண்டுபிடிக்கா விட்டால், தாங்கள் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள் நிறேன். ஆனால் நான் கண்டு பிடித்துக் கொடுத்தால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள்? என்று கேட்டான், அறிவாளன்.

அய்யா அறிவாளரே , நீங்கள் இந்தத் திருடனைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் குத்தகைக்கு உழும் நிலம் அத்தனையும் சொந்தமாக்கிப் பட்டா எழுதிக் கொடுக்கிறேன்” என்றான் பூவேந்தன்.

“மிக்க நன்றி! அரசே! மிக்க நன்றி. உங்கள் அரண்மனை வேலையாட்கள் அனைவரையும் வரச் சொல்லுங்கள். எனக்கு ஓர் அறை ஒதுக்கிக் கொடுங்கள். அந்த அறையின் மத்தியில் நான் கொண்டுவந்திருக்கும் இந்த மந்திர இருப்புச் சட்டியைத் தலை கீழாக வைப்பேன். ஒவ்வொருவரும்

இருப்புச்சட்டியின் மீது தம் உங்ளங்கையை வைத்து அழுத்த வேண்டும். நல்லவர்கள் கைப்படும் போது இருப்புச்சட்டி அசையாது. திருடியவர் கைப்பட்டவுடன் கூச்சலிட்டுக்கொண்டு குதித்தெழுந்து நிமிர்ந்துவிடும். இந்த மந்திர இருப்புச் சட்டியை இமயமலையிலிருந்து வந்த ஒரு தவ முனிவர் என்னிடம் கொடுத்துச் சென்றார். இதன் மூலம் நான் முப்பது திருட்டுக் களைக் கண்டு பிடித்திருக்கிறேன் என்று சொன் னான். அறிவாளன் சொன்ன இந்தச் செய்தி அரண் மனை முழுவதும் பரவிவிட்டது.

அரண்மனையில் வேலை பார்த்த வேலை யாட்கள் அறுபது பேரும் அறைவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். அறையின் மத்தியில் ஒரு மேசையின் மீது இருப்புச் சட்டி தலைகுப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. அறைச் சன்னல்கள் அனைத்தும் மூடி இருட்டாக்கப்பட்டது. கதவு திறக்கும் போது மட்டுமே உள்ளே மங்கலான வெளிச் சம் தெரிந்தது.

வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக அறைக்குள் சென்று வந்தார்கள்.

இருப்புச் சட்டி போடப் போகும் கூச்சலை எதிர் பார்த்துக்கொண்டு எல்லோரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.

ஒவ்வொருவராக அறைக்குள் போய் உள்ளங் கையால் இருப்புச் சட்டியைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்கள். இப்படி அறுபது பேரும் போய் வந்துவிட்டார்கள். இருப்புச் சட்டி கூச்சல் போடவும் இல்லை. எழுந்து குதிக்கவும் இல்லை. நிமிர்ந்து நிற்கவும் இல்லை.

அரசன் பூவேந்தனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அறிவாளன் என்ற இந்தக் குடியானவன் புரட்டுக்காரன் என்று முடிவு செய்தான்.

“மாயமாவது மந்திரமாவது? எல்லாம் பித்தலாட்டம்” என்று கூச்சலிட்டான்.

அறிவாளன், அரசன் எதிரில் வந்தான்.

“அவசரப்படாதீர்கள் அரசே! இதோ ஒரு நொடி யில் திருடன் அகப்படப்போகிறான். பாருங்கள்!” என்றான்.

அறுபது வேலையாட்களையும் மீண்டும் வரிசை யாக நிற்கச் சொன்னான்.

“எல்லோரும் இருப்புச் சட்டியைத் தொட்டீர்கள் அல்லவா? கையை நீட்டுங்கள்” என்றான்.

எல்லோரும் கையை நீட்டினார்கள். அறிவாளன் ஒவ்வொருவர் கையாகப் பார்த்துக் கொண்டு வந்தான்.

வரிசையில் நின்ற ஒருவரைப் பிடித்து இழுத்தான். அரசர் முன் கொண்டுவந்து நிறுத்தினான்.

“அரசே ! இவர் இருப்புச் சட்டியைத் தொடாமலே வந்திருக்கிறார். அதனால் தான் இருப்புச்சட்டி குதிக்கவில்லை; கூச்சல் போடவில்லை” என்றான்.

“இந்தக் குடியானவன் பொய் சொல்கிறான். நான் தொட்டேன்’ என்றான் அந்த ஆள்.

“சரி, மறுபடி தொடு பார்க்கலாம்” என்றான் அறிவாளன்.

அவன் தயங்கினான். பிறகு உண்மையை ஒப்புக் கொண்டான்.

அரசன் பூவேந்தனுக்கு இருப்புச் சட்டி குதிப்பதைப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.

திருடியதாக ஒப்புக் கொண்ட ஆளை இருப்புச் சட்டியைப் போய்த் தொடும்படி ஆணையிட்டான்.

அவன் இருப்புச் சட்டி என்ன தண்டனை கொடுக்குமோ என்று பயந்தான். “வேண்டாம் அரசே, நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். அதைத் தொட வேண்டாம்” என்று வேண்டிக் கொண்டான்.

“அறிவாளரே. இவன் இருப்புச் சட்டியைத் தொடவில்லை என்பதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்று பூவேந்தன் ஆர்வத்தோடு கேட்டான்.

“அரசே! தங்களைப் போலவே எனக்கும் மாய மந்திரத்தில் நம்பிக்கை கிடையாது. இது நான் செய்த தந்திரமோ இருப்புச் சட்டியின் அடிப்புறத்தில் கரியைப் பூசி வைத்தேன். அதன் மீது, உள்ளங்கையை வைத்தவர்கள் கையில் கரி பிடித்திருந்தது.

இந்த ஆள் மட்டும் பயந்து கொண்டு இருப்புச் சட்டியைத் தொடாமலே வந்திருக்கிறார். அதனால் இவர் கையில் கரி படியவில்லை. எனவே, இவர் தான் திருடர் என்று முடிவு செய்தேன்” என்றான்.

திருடியவனிடமிருந்து பணம் திரும்பப் பெறப் பட்டது. அவனுக்குச் சிறைத் தண்டனை கொடுத்தார் அரசர். வாக்களித்தபடி அறிவாளனுக்கு அவன் குத்தகைக்கு உழுத நிலம் முழுவதையும் விலை கொடுத்து வாங்கி உரிமையாக்கிக் கொடுத்தார்.

அறிவாளிகள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள்.

– ஒரு ஈயின் ஆசை, சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *