கார்த்திகாவின் தவறு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 40,565 
 

கார்த்திகாவிடம் ஓரு பேனா இருந்தது. விலைகூடுதலான மசிப்பேனா@ கீழ்புறமைக்கூடு மேல்மூடி என்று பேனாவின் அனைத்து பாகங்களும் வெள்ளியால் ஆனது. அவளுடைய பத்தாவது பிறந்தநாளுக்கு அவளின் அப்பா பரிசாகத்தந்தது.

“நீ இதை ஸ்கூலுக்குக் கொண்டுபோகக்கூடாது! வீட்டுல வைச்சுதான் எழுதனும்!- என்றார் அம்மா@ கார்த்திகாவும் ‘சரி’ என்று தலைஆட்டினாள். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அதற்குக் காரணம் உண்டு@ அவளின் வகுப்புதோழி ஒருவள், ஏதேனும் விலைஉயர்ந்த பொருளை அவ்வபோது பள்ளிக்குக் கொண்டுவருவாள். அதை மற்றவர்களிடம் காட்டி பெருமைப்பட்டுக் கொள்வாள். அவளைப்போன்று தானும் ஏதாவது ஒன்றைக் கொண்டுபோய் அனைவரிடமும் காட்டவேண்டும் என்ற எண்ணம் வந்தது கார்த்திகாவிற்கு, அதனால் பேனாவைப் பள்ளிக்கூடம் கொண்டு போனாள்.

வகுப்புதோழிகள் அனைவரும் அந்ததப்பேனாவை வைத்தகண் வாங்காமல் பார்த்தார்கள். அதன் நேர்த்தியான வடிவமைப்பு, மென்மையான பிடிமானம், எழுதும்போது தாளில் சரளமாக நகரும்தன்மை ஒரு சாதாரணபேனாவிற்கும் விலைஉயர்ந்தபேனாவிற்கும் இடையே இருந்த வித்தியாசத்தை அந்தச்சிறுமியரால் நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. அன்றைக்குக் கார்த்திகாதான் வகுப்பின் நட்சத்திரமாக ஜொலித்தாள். பெருமிதம் தாளவில்லை அவளுக்கு.

ஒருநாள் வீட்டுப்பாடம் எழுத உட்கார்ந்தபோது அவளுக்கு பேனாவின் நினைப்புவந்தது. பையைப் பார்த்தாள். பேனா இல்லை@ அம்மாவிடம் ஓடினாள். “ஸ்கூல்பேக்ல வைச்சிருந்த என்பேனாவைக் காணும்மா! என் பிரெண்ட்ஸ்தான் யாராவது எடுத்துருப்பாங்கன்னு நினைக்குறேன்! நான் மிஸ்கிட்டபோயி சொல்லப்போறேன்!”- என்றாள் படபடப்புடன்.

“பேனா இங்கதான் எங்கயாவது இருக்கும்! நான் தேடிப்பாத்து எடுத்துத்தர்றேன்! நீ மிஸ்கிட்ட புகார் செய்யக்கூடாது!”- என்றார் அம்மா கண்டிப்பான குரலில். பேனா காணாமல்போன ஆற்றாமையில் அழுகை வெடித்தது கார்த்திகாவிற்கு. யார் எடுத்திருக்கக்கூடும்? மறுநாள் பள்ளிக்கூடம் போனதும் தனதுதோழிகள் அனைவரிடமும் கேட்டாள். தாங்கள் எடுக்கவில்லை என்று அவர்கள் சத்தியம் செய்தார்கள். வகுப்பு ஆசிரியையிடம் சொல்ல வாய்வரை வார்த்தைகள் வந்துவிட்டது. அவர் அனைவரையும் கூப்பிட்டு விசாரித்து வாங்கிக்கொடுப்பார்@ ஆனால் அம்மா கூடாது என்று சொல்லியிருந்ததால் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

கார்த்திகாவின் அம்மா வீடுகூட்டும் போது அங்கேஇங்கே தேடிப்பார்த்தார். பேனா கிடைக்கவில்லை. பேனா காணாமல்போய் கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆகியிருக்கும. ஒருநாள் படுக்கைஅறையைச் சுத்தம்செய்தபோது பேனா கிடைத்தது. கார்த்திகாதான் தவறுதலாக பேனாவை மெத்தைக்கடியில் விட்டிருக்கிறாள். பேனா திரும்பக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் கார்த்திகா துள்ளிகுதித்தாள். ஆனால் அவளின் அம்மாவோ அவளிடம் மெதுவாக “விநோதினி விஷயம் ஞாபகம் இருக்கா?”- என்று கேட்டார்.

விநோதினியும் கார்த்திகாவின் வகுப்புதோழிதான. அவள் ஒருநாள் யாருக்கும் தெரியாமல் தங்கமோதிரம் ஒன்றை பள்ளிக்குக் கொண்டுவந்துவிட்டாள். வந்த இடத்தில் மோதிரம் தொலைந்துவிட்டது. அவள் வகுப்பு ஆசிரியையிடம் முறையிட்டாள். ஆசிரியை அனைவரின் பையையும் சோதனையிட்டார். கார்த்திகா அம்மாவிடம்வந்து “நாமதான் அந்தப்பொருளை எடுக்கலியே! நம்ம பைய எதுக்கு சோதனை போடுறாங்கன்னு எனக்கு அழுகைஅழுகையா வந்துச்சுமா!”- என்றாள். அந்த சம்பவம் இப்போது ஞாபகத்திற்கு வந்தது.

“ஏன் கார்த்திகா! உனக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா? நீ மிஸ்கிட்ட சொல்லியிருந்தா அவங்க எல்லார் பையையும் சோதனைபோட்டிருப்பபாங்க! உன்பையை சோதனைபோட்டப்பம் உன்மனசு கஷ்டப்பட்ட மாதிரித்தான மத்தவங்க மனசும் கஷ்டப்படும்?”- என்றார் அம்மா. அவரே தொடர்ந்து “விலைஉயர்ந்த பொருட்களை ஸ்கூலுக்குக் கொண்டுவரக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு! அதையும் மீறி நீ கொண்டுபோனது முதல்தப்பு! பிரெண்ட்ஸ்கிட்ட நீங்க எடுத்தீங்களான்னு கேட்டது ரெண்டாவதுதப்பு! மிஸ்கிட்ட அவசரப்பட்டு கம்ப்ளெய்ன்ட் பண்ணபோனது அடுத்ததப்பு! நாளைக்கு ஸ்கூலுக்கு போனதும் முதல்வேளையா உன் பிரெண்ட்ஸ்கிட்ட மன்னிப்பு கேளு!”- என்றார் அம்மா. கார்த்திகாவிற்குத் தான்செய்த தவறுகள் அனைத்தும் இப்போது ஒவ்வொன்றாய் புரியவந்தது. “ஸாரிம்மா! நான் இனிமே இந்தத்தப்பைச் செய்யமாட்டேன்! நாளைக்கு ஸ்கூலுக்குப்போனதும் என் பிரெண்ட்ஸ்கிட்;ட மன்னிப்பு கேக்குறேன்!”-என்றாள் அவள்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “கார்த்திகாவின் தவறு

  1. அருமையான கதை, இரவில் குழந்தைகளுக்கு தூங்குவதற்கு முன்பு சொல்ல ஏற்ற கருத்தான கதை.
    நன்றி கதையாசிரியர்.

    1. சிறுவர்களின் மனம் உணர்த்தும் நல்லதொரு கரத்துள்ள கதையை கொடுத்துள்ளீர்கள் ஆசிரியருக்கு எமது மனமார்ந்த நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *