கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 2,151 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

கற்றற்குரியவற்றைக் கற்றல்

கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் விளங்கின வர், சிவப்பிரகாசர், இவர் செய்யுள் செய்தலில் வல்லவர்; துறைமங்கலம் அண்ணாமலை ரெட்டியார் என்ற பெருஞ்செல்வரின் அன்பைப் பெற்றவர்; கவிபாடுதலில் வல்லவராயினும் தொல்காப்பியம் என்ற இலக்கண நூலைப் பாடம் கேட்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது. பாடங்கேட்கும் பொருட்டு அச்செல்வர் அளித்த பண உதவியால், தாமிரபர்ணி ஆற்றங்கரையில் உள்ள சிந்து பூந் துறையை அடைந்தார். அங்குத் தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த வெள்ளியம்பலத் தம்பிரான் சுவாமிகள் இருந்தார்கள். அவர் திருவடிகளை வணங்கித் தமக்கு இலக்கணக் கல்வியைச் சொல்லுமாறு வேண்டினர். சிவப்பிரகாசரின் ஆற்றலை அறிந்த அவர், ஐந்து இலக்கணங்களையும் 15 நாட்களில் கற்பித்தார். கற்பிக்கும்போது செல்வம் இல்லாத வறியவர், செல்வர் முன் பணிந்து நின்று, கடன் கேட்டல் போல் இவர் வாய் பொத்திக் கை கட்டிப் பணிவுடன் எதிரில் நின்று சொன்னவற்றில் யாதொன்றையும் விடாமல் கேட்டுத் தம் உள்ளத் தில் அமைத்துக்கொண்டார். இவ்விதம் இருந்து கற்றதால் இவரே இலக்கணத்தில் சிறந்தவர் என்ற பெயர் பெற்றார்; கற்பனைக் களஞ்சியம்’ என்ற பட்டமும் பெற்றார். இவ்விதம் கல்லாதவர்கள் எவ்வித சிறப்பும் இல்லாமல் இழிந்தவர்கள் ஆனார்கள். பின் வரும் குறளும் இக்கருத்தை வற்புறுத்து கிறது.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லாதவர்.

உடையார் முன் = செல்வருக்கு முன்னே
இல்லார் போல் = செல்வமில்லா தார் (நிற்பது) போல
ஏக்கற்றும் (தாமும் ஆசிரியர் முன்) விரும்பிக் கீழ்ப்படிந்து நின்றும்
கற்றார் = படித்தவர் (உயர்ந்தவர் ஆவார்)
கல்லாதவர் = (அவ்வழிபாடு செய்யும் நிலைமைக்கு நாணிக்) கல்வி கல்லா தவர்
கடையரே = எப்பொழுதும் இழிந்தவரே ஆவர்.

கருத்து: ஆசிரியர்முன் கீழ்ப்படிந்து நின்று கற்றவர் உயர்ந்தவர் ஆவர். அவ்விதம் கல்லாதவர் இழிந்தவராவர்.

“தலையாயினார்” என்ற சொல் வருவிக்கப்பட்டது.

கேள்வி : உயர்ந்தவர், தாழ்ந்தவராக மதிக்கப்படுபவர் எவரெவர்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *