(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
கற்றற்குரிய நூல்களைக் கல்லாமை
எழுத்து வாசனையே இல்லாத ஆறு பேர்கள் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவைக் காண இரவில் வழிநடந்து சென்றார்கள். செல்லும் வழி யில் பெரிய ஆற்றைக்கடந்து செல்லவேண்டியிருந் தது. அவர்களில் ஒருவன் இரவில் ஆறு தூங்கும் என்று சொல்வார்கள்; ஆறு, தூங்குதா? விழித் திருக்கிறதா? என்று பார்த்து இறங்க வேண்டும் என்றான். மற்றவர்களும் அதுவே சரி என்றார்கள். சோதனை பார்ப்பதற்காக, வழிப்போக்கர்கள் சமைத்துக் கரையில் போட்டுப்போன கொள்ளிக் கட்டையை எடுத்து ஆற்றில் நனைத்தார்கள். நனைத்ததும் ‘சுரீர்” என்ற சத்தம் கேட்டது. ஆறு விழித்துக்கொண்டிருக்கிறது. “போகலாம்” என்று ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அறுவரும் மறுகரையை அடைந்தனர். அடைந்து சரியாய் வந்து சேர்ந்தோமா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்று ஒருவன் சொன்னான். அவ்விதம் ஒவ்வொருவரும் தன்னை விட்டு எண்ண ஐந்து பேர்கள் வந்தோம். “ஒரு வரை ஆறு விழுங்கிவிட்டது” என்று பொழுது விடியுமளவும் புலம்பிக்கொண்டே இருந்தார்கள். அவ்வழியே ஒரு வழிப்போக்கன் வந்தான். ஏன் அழுகிறீர்கள்? என்றான். அப்போது அவர் கள் நாங்கள், “ஊரில் இருந்து அறுவர் வந்தோம், ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது. ஐந்து பேர் இருக் கிறோம் ஒருவரை இழந்தோமே” என்று “அழுகிறோம்” என்றார்கள். வழிப்போக்கன், எண்ணிப் பார்த்து, “இவர்கள் தனக்கும் பிறர்க்கும் உதவி இல்லாமல் இருக்கும் உவர் நிலத்திற்கு ஒப்பாவர், இப்பூமிக்குச் சுமையாக உள்ளவர்” என்று அவர் களை நோக்கிப் பயப்படாதீர்கள். ஆறு விழுங்கிய வனை அழைத்துத் தருகிறேன் வாருங்கள் என்றான். அனைவரும் எழுந்து வர, தன் கையில் உள்ள கழியால் அடித்து எண்ணிக்கொள்ளச் செய்தான் அறுவரும் இருப்பதாக அறிந்தார்கள். “ஆற்றில் சென்றவனை அழைத்துத் தந்த நீரே கடவுள்” என்று அவனை வணங்கினார்கள். அவன் நீங்கள் ஊர் சென்று கல்வி கற்றுக்கொள்ளுங்கள். அதன் பின் வெளியூர் செல்லலாம் என்று அவர்களைத் திரும்பவும் ஊர் செல்லச் செய்தான். வள்ளுவரும், “கல்லாதவர் உலகில் எண்ணப்படும் மக்கள் கணக் கைப் பெருக்க வாழ்கிறார்கள் அல்லாமல் உதவி செய்யாத உவர் நிலத்திற்கு ஒப்பாக இவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லாதவர்.
கல்லாதவர் = படியாதவர்கள்
உளர் என்னும் = (பார்க்கப்படுதலால்) உளர் என்று சிலராலே சொல்லப்படும்
மாத்திரையர் அல்லால் = அளவினராதல் அன்றி
பயவா = (தமக்கும் பிறர்க்கும் பயன் படாமையால்) விளையாத
களர் அனையர் = உவர் நிலத்தோடு ஒப்பாவர்.
கருத்து: – கல்லாதவர், விளையாத உவர் நிலத்திற்கு ஒப்பாவர்.
கேள்வி: உவர் நிலத்திற்குச் சமமானவர் எவர்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.